பல எதிர்ப்புகளை சந்தித்து 2013ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம் முதல் பாகம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அப்போதே பாகம் இரண்டு வருகிறது என்று அறிவித்தார் கமல். ஐந்து ஆண்டுகள் கழித்து இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. சென்சாரில் இருபதுக்கும் மேற்பட்ட காட்சிகளுக்கு கத்தரி வாங்கிய இந்தப் படம் எப்படி இருக்கு?
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பார்ட் 2 என்பது ராசியில்லாத ஒன்று. முனி பார்ட் 2வும் பாகுபலி பார்ட்2வும் மட்டும் அந்த வரிசையில் இருந்து தப்பியது. விஸ்வரூபம் 2 தப்பியதா? அல்லது ராசியில்லாத வரிசையில் சிக்கியதா? என்றால் இரண்டுக்கும் நடுவில் நிற்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
விஸ்வநாத் எப்படி விசாம் ஆனார்? எதற்கு உமரைத் தேடி போனார்? அவிஸ்தாவுக்கும் விசாமுக்கும் என்ன தொடர்பு? விஸ்வநாத் இந்துவா? முஸ்லிமா? இவர் எங்கே கதக் கற்றுக்கொண்டார்? இந்தக் கேள்விகளுக்கு மிகத் தெளிவாக விளக்கமளிக்கிறது பார்ட்2. அஸ்விதாவாக வந்த ஆண்ட்ரியாவும் விஸ்வநாத்தாக வந்த கமலும் இராணுவ முகாமில் நெருக்கமாகும் காட்சியும், ஈஸ்வர் ராவ்விடம் கமல் சாதி மதத்தைப் பற்றி நக்கலாகப் பேசும் காட்சியும், கடலுக்கு அடியில் நடக்கும் சண்டைக் காட்சியும், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட அம்மாவுக்குத் தான் யார் என்று புரிய வைக்க முயலும் காட்சியும் மட்டுமே படத்தில் நன்றாக இருந்த காட்சிகள். மற்ற இடங்களில் அயற்சி வருகிறது. முதல் பாகத்தில் வருவது போன்ற அட்டகாசமான சண்டைக்காட்சிகள் இந்தப் படத்தில் எதுவும் இல்லை. பல ஹாலிவுட் படங்களில் பார்த்து சலித்த காட்சிகளையே மீண்டும் எடுத்து வைத்தது போல் இருக்கிறது.
“பொம்பளைங்க மாதிரி பேசாத… பொம்பளைங்க கூட அதிகமா பேசாத… ” ” சாகப் போறவன் அதிகமா பொய் சொல்வான்… பொய் சொல்றவனுக்கு ஞாபக சக்தி அதிகமா இருக்கணும்… ” போன்ற சில வசனங்கள் கைதட்ட வைக்கிறது. எதிரி சுடும்போது இரும்பு டேபிளுக்குப் பின்புறம் ஒளிந்துகொண்ட கமல் ஆறு புல்லட்கள் தீர்ந்துவிட்டது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக ஆறு விரல்களைக் காட்டிக்கொண்டு மேலே எழுந்து நிற்கும் காட்சியில் விசில் பறக்கிறது. அதே போல, ” ஆண்டவரே… இத எந்தப் படத்திலிருந்து சுட்டிங்க… ” என்ற கமெண்டும் எழுகிறது.
மொத்தத்துல பில்லா 2 வாகவும் இல்லாமல் பாகுபலி2 வாகவும் இல்லாமல் நடுவில் நிற்கிறது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் முதல் பாகத்தின்போதே எடுக்கப்பட்டது என்பதாலும் ( முதல் பாகம் போட்ட முதலைவிட நல்ல லாபம் ஈட்டித்தந்தது ) இரண்டாம் பாகத்திற்கான செலவு மிகக் குறைவு தான் என்பதாலும் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற இடங்களில் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் ரிலீசான இடங்களில் சில நாட்கள் இந்தப் படம் ஓடினாலே போதும் போட்டதை எடுத்துவிடுவார்கள்.
படத்தின் தொடக்கத்தில் மக்கள் நீதி மையம் குறித்த காட்சிகளை இணைத்தது குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதுதான் கமலின் கடைசி படமா? அப்போ இந்தியன்2 என்ன ஆனது? இந்தியன்2 படத்திலும் தனது கட்சியைப் பற்றிய இணைப்பு வீடியோக்கள் இருக்குமா? என்னாச்சு கமலுக்கு? பயங்கர குழப்பத்தில் இருக்கிறாரா? என்று பல கேள்விகள் கேட்ட வண்ணம் தியேட்டரை வெளியேறினர் பலர்.
Be the first to comment on "சென்சாரில் இருபதுக்கும் மேல் கட் வாங்கிய விஸ்வரூபம் 2 படம் எப்படி இருக்கு?"