இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும்
செல்பவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து அதைப் படிக்க
வைக்க, வேலை வாங்கித் தர, திருமணம் செய்து வைக்க என்று பல்வேறு நிகழ்வுகளுக்காக தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தியாகம் செய்து பிள்ளைகளுக்காக வாழ்பவர்கள் இந்திய பெற்றோர்கள். எல்லாக் கிராமங்களிலும் மகனுக்காகவோ அல்லது மகளுக்காகவோ தங்களது நிலங்களை விற்ற விவசாயிகளின் கதைகள் நிறையவே இருக்கும்.
700 பேருக்குத் தடபுடல் விருந்து
மேற்கு வங்க மாநிலம் மூர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஜாப் அலி. இவரது மகன்
பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத இருப்பதை அடுத்து, சுற்றுவட்ட கிராமங்களைச் சேர்ந்த 700 பேரை
அழைத்து தடபுடலாக விருந்து வைத்துள்ளார் ரஜாப் அலி. இதற்காகக் கடந்த ஓராண்டு காலமாக
சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்து வந்துள்ளார்.
எதற்காக விருந்து
இந்த விருந்துக்குப் பின் ஒரு கதை இருக்கிறது. ரஜாப் அலி தான் ஒரு மருத்துவராக
விரும்பியதாகவும், ஆனால் குடும்ப சூழ்நிலைச் சரியில்லாத காரணத்தால் தான் மூன்றாம்
வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தங்கள்
தலைமுறையில் முதன்முதலாக பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதப் போகும் தனது மகனுக்கு ஊர் கூடி வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினார். வெறுமனே வாழ்த்து தெரிவிக்க யார்
வருவார்கள்? அதனால் ஒரு விருந்தை ஏற்பாடு செய்து 700 பேருக்குப் பத்திரிகை அடித்துத் தேர்வு
எழுதப் போகும் தன் மகனை வாழ்த்த வைத்திருக்கிறார்.
அஜாப் அலியின் மகன் ஷமீம் ஷேக் வரும் திங்கட்கிழமை அன்று மதராசா போர்டுக்கு கீழ்
இயங்கும் மத்யமிக் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத இருக்கிறார். விருந்துக்கு வந்தவர்கள் தேர்வு
எழுத இருக்கும் அலியின் மகனுக்குப் பேனா, பென்சில், புத்தகங்கள் மற்றும் கை கடிகாரங்கள்
போன்றவற்றை தாராளமாகப் பரிசளித்து இருக்கிறார்கள்.
மதிய விருந்தில் சாதம், கோழிக்குழம்பு, பருப்பு, வறுத்த காய்கறிகள், இனிப்பு வகைகள் மற்றும்
தயிர் விருந்தாளிகளுக்குப் பரிமாறப்பட்டன.
தனது ஏழ்மையான சூழ்நிலையிலும் கல்விக்காக ரஜாப் அலி செய்திருக்கும் இந்த முயற்சி
பாராட்டுக்குரியது. ஆனால் தனது படிப்புக்காகத் தந்தை செய்யும் செலவுகள் நிச்சயம் ஷமீம்
சேக்கின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். விவசாய கடன் போன்ற பிரச்சனைகள் இருக்கும்
போது சிறிய அளவிலான பூர்விக நிலத்தை வைத்துப் பிழைக்கும் ஒரு விவசாயி இதையெல்லாம்
செய்ய வேண்டியது அவசியம் தானா என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை.
Be the first to comment on "மொய் வாங்க விருந்து வைக்கலாம், பரீட்சைக்கு முன்னாடி ஆசீர்வாதம் வாங்கக் கூடவா விருந்து வைக்கிறாங்க?"