தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?
பல்வேறு நாடுகளில் தமிழர்கள், தமிழ் வம்சாவளிகள் முக்கிய பதவியில் இருந்தாலும் அந்நாடுகளில் வாழும் சாமான்யனின் நிலைமை மட்டும் என்றும் பரிதாபத்துக்குரியதாகவே இருக்கிறது. இந்த நிலைமை தூரதேசங்களில் மட்டும் நடப்பதில்லை. காலங்காலமாக கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் பகுதிகளிலும் நடக்கின்றது. சில நாட்களுக்கு முன்பு கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியாமலே போனது. இந்த வரிசையில் தற்போது சேலம் தமிழர்கள் ஐந்து பேர் ஆந்திர ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ள செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
யார் இந்த 170 பேர்?
கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த 170 பேர். இது சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளடங்கிய பகுதி. சேலம் மாவட்டத்தில் 98 மலை கிராமங்கள், விழுப்புரம் பகுதியில் 180 மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்களை மைசூருக்கு கூலி வேலைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி, சில மாதங்களுக்கு முன்பு தொழிலதிபர்கள் சிலர் இந்த மக்களை கூலி வேலை செய்வதற்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில் ஆந்திரா மாநில கடப்பா மாவட்டம் ஒண்டிமிடா பகுதியில் உள்ள ஏரியில் கருமந்துறையை சேர்ந்த கருப்பண்ணன், முருகேசன், ஜெயராஜ், முருகேசன், சின்னபையன் ஆகிய ஐந்து பேர் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.
கடப்பா ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 பேரின் சடலங்களுக்கு நேற்று பிரேத பரிசோதனை நடைபெற்றது. ஆனால் பரிசோதனை அறிக்கை வெளியாவதற்கு 20 முதல் 30 நாட்களுக்கு மேலாகலாம் என்று போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு 2015ம் ஆண்டு செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக கூறி ஒரே நாளில் இருபது தமிழர்களை எண்கவுன்டர் செய்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல இப்போது இந்த ஐந்து பேரை ஆந்திரா போலீஸே அடித்து ஏரியில் வீசிவிட்டு இன்வெஸ்டிகேட் பண்ணுவது போல் நாடகமாடுகிறது என்று சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
கல்வராயன் மலைகிராம மக்களோ, மிஞ்சிய 165 தமிழர்களின் நிலை குறித்து கலக்கத்தில் உள்ளனர். உயிரிழந்த தங்கள் உறவினர்களின் குடும்பத்துக்கு ஆந்திர அரசும் தமிழக அரசும் என்ன பதில் சொல்ல போகிறது என்று தெரியவில்லை. இழப்புத்தொகை எவ்வளவு கொடுக்கும் என்பதும் தெரியவில்லை.
Be the first to comment on "165 தமிழர்கள் என்ன ஆனார்கள்? ஒட்டுமொத்த சேலம் மாவட்டமே கலக்கத்தில் உள்ளது!"