லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கையைப் பற்றி அலுவலகங்களில் பணிபுரியும் சாமானியர்களான நாம் யாருமே அவ்வளவாக தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. நமக்குத் தெரிந்தது எல்லாம் லாரி டிரைவருக்கு பொண்ணு தரமாட்டாங்க, உயிருக்கு உத்தரவாதம் இல்லாத தொழில், எதாச்சும் நோய வாங்கிட்டு வந்துடுவாங்க என்ற மேம்போக்கான தகவல்கள் மட்டுமே. ஆனால் லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கையைப் பற்றி ஓரளவு தெளிவான தகவல்களை தெரிந்துகொள்ள நாம் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் ” நெடுஞ்சாலை வாழ்க்கை”.
லாரி டிரைவர்களுடன் பயணம் செய்து அவர்களுடைய நிஜ வாழ்க்கை அனுபவங்களை எந்த மிகைப்படுத்தலும் கற்பனையும் இல்லாமல் எழுதியிருக்கிறார் ஆசிரியர் கா. பால முருகன். மோட்டார் விகடனில் தொடராக வந்து தற்போது முழு புத்தகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாம் ஏன் இந்த ” நெடுஞ்சாலை வாழ்க்கை ” புத்தகத்தை படிக்க வேண்டும்?
ஏன் படிக்க வேண்டும்?
நாம் அன்றாடம் இருசக்கர வாகனத்திலோ மகிழுந்துவிலோ தார் சாலையில் பயணம் செய்கிறோம். அப்படி பயணிக்கும்போது ஏகப்பட்ட லாரிகளை நம்மால் கடந்துசெல்ல முடியும். ஏகப்பட்ட லாரிகள் நம்மை கடந்துசெல்லும். அப்போதெல்லாம் நாம் லாரியை எதோ எமவாகனம் என்பது போல கேவலமான மிரட்சியான பார்வையை உதிர்த்து செல்கிறோம். இந்த லாரிக்காரனுங்க இருக்காங்களே… அவனுங்கனால தான் ரோடே நாசமா போவுது… என்று ஏகப்பட்ட இளக்காரச் சொற்கள் அவர்களை நோக்கி அசால்ட்டாக வீசிச் செல்கிறோம். அப்படிப்பட்ட பார்வை “நெடுஞ்சாலை வாழ்க்கை” புத்தகத்தை படித்ததும் முற்றிலும் மாறிவிடும்.
லாரி ஓட்டுனர்கள் வீட்டிலிருந்து கிளம்பி மீண்டும் வீட்டிற்குத் திரும்புவதற்குள் என்ன துன்பங்களை சந்திக்கிறார்கள் என்பதை பட்டியலிடுகிறார் ஆசிரியர். சேலம் டூ கொல்கத்தா, சேலம் டூ டெல்லி, சேலம் டூ நாக்பூர் போன்று பல ரூட்களில் லாரி ஓட்டுனர்களுடன் ஆசிரியர் பயணித்து ஒவ்வொரு மாநிலத்தைக் கடக்கும்போதும் லாரி ஓட்டுனர்கள் என்னென்ன மனநிலையில் இருக்கிறார்கள்? டோல்கேட் எனும் அரசாங்க வழிப்பறி ஒருபக்கம், போலீஸ் வேடமணிந்து வரும் கொள்ளையர்கள் ஒருபக்கம், வடிவேலு காமெடியில் வருவது போல் விபத்தே ஆகவில்லை என்றாலும் திருட்டுக்கும்பல்கள் ஒன்று சேர்ந்து கொண்டு நடக்காத விபத்தை நடந்ததாக பொய் சொல்லி காசை பறித்துச் செல்லும் கொடுமை ஒருபக்கம், ஒவ்வொரு வேகத்தடையில் ஏறி இறங்கும்போதும் எங்கே திருடர்கள் லாரியில் தாவிவிட்டார்களோ என்ற பயம் ஒருபக்கம், எந்த நேரத்தில் எவன் வந்து குறுக்கே விழுவானோ என்ற பயம் ஒருபக்கம் என்று பூஜை போட்டு சரக்கை எடுத்துச் செல்வதில் இருந்து சரக்கை உரியவரிடம் எந்த சேதமும் இல்லாமல் எண்ணிக்கையில் எந்த மாறுபாடும் இல்லாமல் கொண்டு சேர்ப்பது வரை அவர்கள் இதயத்துடிப்பு சீராக இருப்பதில்லை.
லாரி ஓட்டுனர்கள் எந்தெந்த பாதையில் தனியாக செல்லக்கூடாது அப்படி தனியாக லாரியை ஓட்டிச் சென்றால் என்ன நடக்கும், லாரி ஓட்டுனர்களுக்கு இடையே உள்ள பந்தம், மற்ற மாநிலங்களில் தமிழக லாரி ஓட்டுனர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள், இடை இடையே குளித்து உடல்கழிவுகளை வெளியேற்றி புத்துணர்வு பெற அவர்களுக்கு எப்படிபட்ட இடங்கள் கிடைக்கிறத? லாரிக்கு உள்ளேயே சமைப்பது பயனா? ஹோட்டலில் சாப்பிடுவது பயனா? அடிக்கடி ஹோட்டலில் சாப்பிட்டால் அவர்களுக்கு என்ன நேரும், தூக்கத்தை சமாளிக்க என்ன செய்வார்கள், கிளீனர்களின் வேலை என்ன, சுயக் கட்டுப்பாட்டை மீறி விபத்து நடந்துவிட்டால் லாரியில் இருந்து தாவி ஓட்டுனரும் கிளீனரும் சடாரென்று அருகே இருக்கும் காட்டுக்குள் எட்டிக்குதித்து ஓட்டம் பிடித்து போலீஸ் ஸ்டேசன் சென்று அடைவது ஏன்? லாரியின் பாகங்களில் பழுது ஏற்பட்டால் பழுது பார்க்க எவ்வளவு செலவு ஆகும், அந்த செலவுக்கு யாருடைய காசு செலவாகிறது போன்ற தகவல்கள் அனைத்தும் இந்தப் புத்தகத்தில் கொட்டிக் கிடக்கிறது.
இந்தப் புத்தகத்தை படிக்க படிக்க நாமளும் லாரி டிரைவர்களுடன் இந்தியா முழுக்க சுற்றி வந்ததைப் போல உணர்வோம். பயணங்களை, வித்தியாசமான அனுபவங்களை, ஓட்டுனர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் நிச்சயமாக இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.
இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணாவின் ” நெடுஞ்சாலை ” படத்தைப் பார்த்தால் லாரி ஓட்டுனர்களிடம் இருந்து திருடர்கள் எப்படி பொருளை கடத்துகிறார்கள் என்பதையும், பிக்பாஸ் ரித்வாகாவும் நடிகை சதாவும் நடித்த ” டார்ச்லைட் ” படத்தை பார்த்தால் லாரி ஓட்டுனர்களை நம்பி பிழைப்பு நடத்தும் விலைமாதுக்களைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.
Be the first to comment on "லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கை எப்படிபட்டது? – நெடுஞ்சாலை வாழ்க்கை புத்தக விமர்சனம்!"