“ருத்ர தாண்டவம்” படத்தால் உண்டான நன்மைகள்! 

  1. எந்தெந்த பத்திரிக்கைகள்”அறம்” தவறாமல் நடந்து கொள்கின்றன… எவையெல்லாம் ஜால்ட்ரா அடிக்கும் பத்திரிக்கைகளாக இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. தமிழில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் சாதி எனும் விஷச்செடியை வளர விடாமல் தடுப்பதில் கவனமாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. பெரும்பாலானோர் “ஆபத்தான படம்” என்றே குறிப்பிட்டு வருகின்றனர். அதே சமயம் சில பத்திரிக்கைகள் இந்தப் படத்தை கொண்டாடுவதை பார்க்கும்போது ஊடகத்துறையிலும் சாதி வேறுபாடு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

 

  1. என்னுடைய முகநூலில் சரியாக பழக்கமில்லாத நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் யார் யார் சாதிவெறிக்கு ஆதரவாக… காதல் திருமணத்துக்கு எதிராக… பெரியாரிய கொள்கைகளுக்கு எதிராக… ரொம்ப பிற்போக்குத் தனமாக…  இருக்கிறார்கள் என்பதை அடையாளம் காண முடிந்தது. அவர்களை நட்பு பட்டியலில் இருந்து நீக்கிவிட ஏதுவாக இருந்தது. 

 

  1. முகநூலில் உள்ள பல மீம் பேஜ்களை கஜாமுஜானு லைக் செய்து வைத்திருந்தேன். அந்த பேஜ்களில் இருந்து அவ்வப்போது எரிச்சல் ஊட்டும் பதிவுகள் வரும். இப்போது இந்த படத்தை ஆதரித்து மீம் போடும் மீம் பேஜ்களை அடையாளம் காண முடிந்தது. அந்த மீம் பேஜ்களை புறக்கணிக்க ஏதுவாக இந்தப் படம் இருந்தது. 

 

  1. சினிமா நடிகர்களின் ரசிகர்கள் இப்போது பனைவிதை நடுவது, முதியோர் இல்லங்கள் குழந்தை இல்லங்களுக்கு ஆதரவு கரம் நீட்டி நல்லது செய்து வருகிறார்கள். அவர்களின் நல்ல மனதை புரிந்துகொள்ள முடிந்தது. இந்தப் படத்தின் மூலம் உண்மையான சினிமா ரசிகர்களையும் மது அருந்திவிட்டு அரசு பஸ் மீது ஏறி ஆடும் கொழுப்பெடுத்த சாதி வெறியர்களையும் தனியாக பிரித்து அடையாளம் காண முடிந்தது. 

 

  1. படைப்பாளிகளில் எந்தெந்த படைப்பாளிகள் சமூக நீதிக்கு எதிரான இந்தப் படத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. திரைக்கதை மன்னன், பச்சான் இயக்குனர், ஊர் பெயரை படத்தின் டைட்டிலாக வைக்கும் இயக்குனர் போன்றோர் இந்த படத்தை வெகுவாக பாராட்டி இருந்தார்கள். தமிழ் பத்திரிக்கைகள் “ஆபத்தான படம்” என்று சொன்ன இந்தப் படத்தை மேற்கண்ட நபர்கள் பாராட்டி இருக்கிறார்கள் என்றால் சினிமா துறையில் சாதி பாகுபாடு எப்படி உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. அப்பாவி சினிமா தொழிலாளர்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என்று அவர்களுக்கு அறிவுறுத்த தோன்றுகிறது. 

 

  1. “துப்பட்டா போடுங்க தோழி” என்ற டைப்பில்… அக்கறை என்ற பெயரில் பெண்களின் சுதந்திர சிறகுகளை வெட்டி எரியும் கருத்துள்ள இந்தப் படத்தை சில பெண்கள் பார்த்துவிட்டு சிலாகித்து பேசுவதை பார்க்கும்போது “நம் தமிழ் சமூகத்தில் உள்ள பெண்கள் சிலர்  இவ்வளவு அப்பாவித்தனமாய் இருக்கிறார்களே… அவர்கள் மீது திணிக்கப்படுவது அடிமைத்தனம் என்பது கூட தெரியாமல் இருக்கிறார்களே…” என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. சீரியலில் மூழ்கி கிடக்கும் பெண்களுக்கு “தரமணி”, “கருத்தம்மா” போன்ற படங்களை போட்டுக்காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. தோழிகளின் பிறந்தநாளிலோ திருமணத்திலோ சு. தமிழ்ச்செல்வியின் “கண்ணகி”, பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” போன்ற புத்தகங்களை பரிசாக கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. 

 

  1. சினிமா இயக்குனர்களை போல சில எழுத்தாளர்களும் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்கள். அவர்களிடம் இருந்து விலகி நிற்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

 

  1. “இந்தக் காலத்துல சாதி வேணாம்னு ஒதுங்கி இருக்குறியே மாப்ள… இப்படி இருந்தின்னா யாரும் உன்ன கண்டுக்க மாட்டாங்க… ஓரியா தான் இருக்கனும்…” என்று சொல்லி சாதிசங்க வாட்சப் குரூப்பில் என்னை இணைத்துவிட சில உறவினர்கள் முயன்றுள்ளனர். தியேட்டர்களுக்கு முன்பு கூடியிருந்த சாதி சங்க டீசர்ட் அணிந்த இளைஞர்களை பார்க்கும்போது நல்ல வேளை அது போன்ற குரூப்களில் இணையவில்லை என்று இப்போது பெருமிதமாக இருக்கிறது.  இப்படிப்பட்ட ஊர்க்காரர்களோடு ஒத்து வாழ்வதை விட ஒரு ஓரமாய் தனியனாய் வாழ்ந்து மடிவதே மேல் என்று தோன்றியது. 

 

  1. யூடியூப் சினிமா விமர்சகர்களில் யாரெல்லாம் “சமூக நீதி – சமூக அநீதி” என்ற வார்த்தையின் அர்த்தம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றும் யாரெல்லாம் எல்லாம் தெரிந்தது போல… நடுநிலையாக இருக்கிறேன் என்ற பெயரில் மழுப்புகிறார்கள் என்றும் புரிந்துகொள்ள முடிந்தது. இனி அவர்களுடைய விமர்சனங்களை பார்க்காமல் இருப்பது நமக்கு நல்லது என்று உணர முடிந்தது. 

 

  1. சாதிப்பற்று இல்லாமல் இருக்கிறோமே இது சரி தானா… பெரியவர்கள் சொல்வது போல் நாம் ஓரியாய் போய் விடுவோமோ என்ற பயம் அவ்வப்போது எழாமல் இல்லை. ஆனால் இந்தப் படத்தை எதிர்க்கும் சில இளைஞர் இளைஞிகளை நினைக்கும் போது நம்மை போன்ற இளைஞர்களும் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள் என்று சற்று ஆறுதலாக இருக்கிறது. 

 

Related Articles

குழந்தை தொழிலாளர்கள் பற்றி சொன்ன வாகை சூ... 1.குழந்தைத் தொழிலாளர்கள் –குட்டி, வாகை சூடவாஇந்தியாவில் பல ஆண்டுகளாக மாறாமல் சில விஷியங்கள் உள்ளது. அவற்றில் முதன்மையானது குழந்தைத் தொழிலாளர்கள் ப...
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு – இது ... காஞ்சித்தலைவன், தென்னாட்டு காந்தி, தென்னாட்டு பெர்னாட்ஷா, பேறிஞர், நூற்றாண்டு தலைவர் என்று பலவாறு  போற்றப்படும் தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் அண்ணா என்கி...
“நம்மள மாதிரி பசங்களாம் ஒவ்வொரு வா... தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்இசை : இமான்எடிட்டிங் : ரூபன்ஒளிப்பதிவு : நீரவ் ஷாகதை திரைக்கதை வசனம் இயக்கம் : பாண்டியராஜ்நடிகர்கள் : சிவ...
ஒழுக்கமில்லாதவர்களால் தமிழகம் ரத்தக்காடா... வாழ்க்கை மிக எளிதான ஒன்று ஒழுக்கத்தை கடைபிடிப்பவனுக்கு. அது இல்லாமல் இருப்பவர்களால் வாழ்க்கையில் நேரும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் மன உளைச்சலால...

Be the first to comment on "“ருத்ர தாண்டவம்” படத்தால் உண்டான நன்மைகள்! "

Leave a comment

Your email address will not be published.


*