கே. என். சிவராமனின் உயிர்ப்பாதை புத்தகம் எவ்வளவு முக்கியமானது?

How important is K N Sivaram's "Uyirpathai" book?

ஆளப்போறான் தமிழன் என்று இன்றைய காலகட்டத்தில் நாம் பெருமை பேசித் திரிகிறோம். வாட்சப்பிலும் பேஸ்புக்கிலும் தமிழ் தமிழ் என்று கொந்தளிக்கிறோம். இவர்களில் எத்தனை பேர் உண்மையான தமிழ்ப் பற்றுடன் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

உண்மையான தமிழ்ப்பற்றுடன் இருப்பவர்கள், தமிழர்களின் பெருமையை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், தமிழர்களின் துன்பகரமான வாழ்க்கை சம்பவங்களையும் படிக்க வேண்டியது அவசியமாகிறது.

ஏன் படிக்க வேண்டும் ?

ஏழாம் அறிவு படத்தில் தமிழன மலேசியால அடிச்சான்… இலங்கைல அடிச்சான்… இப்ப தமிழ்நாட்டுக்கே வந்து அடிக்குறான்… நம்மளால அவன்ட்ட இருந்து ஓட மட்டும் தான் முடியுதுல்ல… என்ற வசனம் இடம்பெற்றிருக்கும். படம் ரிலீசான சில நாட்களிலயே அந்த வசனத்தை தூக்கிவிட்டார்கள். காரணம் சில உண்மைகள் வெளியே தெரிந்தால் சிலருடைய வண்டி ஓடாமல் போய்விடும் என்ற அரசியல் உள்நோக்கம்.

அந்தக் கால தமிழர்கள் உலகின் முன்னோடியாக இருந்தார்கள் என்றாலும் மன்னராட்சிகளின் இறுதிகாலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அயல்நாட்டினரிடம் மன்னர்களின் ராஜ்யங்கள் தோற்றுப்போய் நாட்டுமக்கள் அனைவரும் அயலானுக்கு அடிமையாகும் சூழல் வந்தது.

அப்படிப்பட்ட காலத்தில் தமிழர்களை கொத்துக் கொத்தாக இழுத்துச் சென்று அடித்து துன்புறுத்தி நம் முன்னோரை படாதபாடு படுத்தியிருக்கிறார்கள் அயல்நாட்டு மிருகங்கள். இதை வெளிப்படையாக ஆணித்தரமாக சொன்ன ஒரு படம் பாலாவின் பரதேசி. வெள்ளையன்களுக்கு அடிபணிந்து சலாம் போட்டு ஒரு ஊரே அவன் காலடியில் கிடந்து புழுவைப் போல துடித்துடித்து சாகும். இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் கண்கள் கலங்கி வெளியேறினார்கள். படம் பார்த்ததற்கே இப்படி என்றால் எரியும் பனிக்காடு புத்தகத்தை முழுமையாகப் படித்திருந்தால் என்ன ஆயிருப்பார்களோ? அந்தப் புத்தகத்தைப் படிக்க படிக்க நிச்சயம் பல இடங்களில் நம் கண்கள் நம்மையறியாமல் கலங்கும்.

அதைப் போன்றதொரு புத்தகம் தான் உயிர்ப்பாதை. எரியும் பனிக்காடு நாவல். உயிர்ப்பாதை கட்டுரைத் தொகுப்பு. இந்தக் கட்டுரைத் தொகுப்பில் ஆசிரியர் சொல்லியிருக்கும் விஷியங்களைப் படிக்க படிக்க… ச்சை என்ன மனுசங்கடா ஜப்பான்காரனுங்க… கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம நம்ம முன்னோர்கள இந்தப் பாடு படுத்திருக்காங்க… என்று நினைக்கத் தோன்றும்.

நானூற்று பதினைந்து கிலோமீட்டர் தூரம் உள்ள  ரயில்பாதை அமைக்க திட்டம் போட்டிருந்தார்கள் ஜப்பானியர்கள். இந்தப் பாதையின் நோக்கம் மலாயா ( மலேசியா ), சயாம் ( தாய்லாந்து ), பர்மா ஆகிய மூன்று நாடுகளையும் இணைப்பதே. இந்த மூன்று நாடுகளையும் இணைக்கும் பாதை சமதளம் அல்ல. பல மலைகளை உள்ளடக்கிய பாதை. இப்படி பல தடைகள் இருக்க கூடிய இடத்தில் மிக சொற்ப காலத்தில் பாதை அமைக்க வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட ஒரு மலேசியாவுக்கு கூலி வேலைக்குச் சென்றிருந்த ஒரு லட்சம் தமிழர்களை ஜப்பான் ராணுவம் கொத்தோடு அழைத்துச் சென்று கொடுமை மேல் கொடுமை படுத்தி வேலை வாங்கி இருக்கிறது.

சில கொடுமைகளை இங்கு பார்ப்போம்.

  1. வேலை செய்யும் போது தண்ணீர் குடுக்க மாட்டார்கள்.
  2. சிறுநீர் கழிக்க நேர்ந்தால் இரண்டு நிமிடங்களுக்குள் திரும்பி வர வேண்டும். சில நொடிகள் தாமதமானாலும் காட்டு அடி அடிப்பார்கள்.
  3. வேலை செய்யும் தமிழர்களின் உடல் உறுப்பு எதாவது பழுதானால் அந்த உறுப்புக்கு மருத்துவம் கிடையாது. அப்படியே ரம்பத்தை வைத்து அறுத்து வெட்டி எடுத்துவிடுவார்கள்.
  4. பதினேழு பேர் மட்டுமே செல்லும் ரயில் பெட்டியில் எண்பது பேர் அடைக்கப்பட்டு நான்கு நாட்களாக அவர்களை வெளியே விடாமல் மூச்சுத்திணற மூச்சுத்திணற அவர்களை வேலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதே பயணத்தில் வேலையாட்களான தமிழர்கள் மலம் கழிக்க கூடாது என்பதற்காக ஆண் பெண் வித்தியாசமின்றி அவர்களின் மலத்துவாரத்துக்குள் மலம் வெளியேறாமல் தடுக்கும் வேதிப்பொருளை உருண்டையாகப் பிடித்து அதை மலத்துவாரத்துக்குள் திணித்திருக்கிறார்கள்.

இங்கு குறிப்பிட்டு இருக்கும் கொடுமைகள் எல்லாம் மிக குறைவானவை. புத்தகத்தைப் படிக்க படிக்க நம் இதயத்துடிப்பு சத்தியமாக சீராக இருக்காது. பல இடங்களில் பெருமூச்சு விட வேண்டிய சூழல் வரும். ரத்தம் சிந்திய மக்களின் துன்பத்தை தெரிந்துகொள்ள விரும்பும் நபர்கள், தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் உண்மையான பற்று உள்ளவர்கள் நிச்சயமாக ஒரு முறையாவது இந்தப் புத்தகத்தைப் படித்திட வேண்டும்.

வரலாற்றை மறைத்தல் :

பத்மாவதி படத்தில் ஒரு சீன் மிக முக்கியமானவை. அலாவுதீன் கில்ஜி தனது சாம்ராஜ்யத்தின் முந்தைய வரலாற்று காகிதங்களை ஒவ்வொன்றாக தீயில் இட்டு எரிப்பார். அதற்கு காரணம், எதிர்காலம் என்னைப் பற்றி மட்டுமே படிக்க வேண்டும், என்னுடைய புகழை மட்டுமே பேச வேண்டும் என்று சொல்வார். அதைப் போல தான் நிஜத்தில் நடந்த பல சம்பவங்களை பலர் திட்டமிட்டு மறைத்திருக்கிறார்கள். அப்படி மறைக்கப்பட்ட ஒரு நிஜ சம்பவத்தை பத்திரிக்கையாளர் கே. என். சிவராமன் தோண்டி எடுத்து எதையும் மிகையாக கூறாமல் நிஜத்தில் நடந்ததை ரத்தம் சொட்ட சொட்ட எழுதி இருக்கிறார்.

தினகரனில் தொடராக வெளிவந்த இந்த தொடர் தற்போது தொகுப்பாக கிடைக்கிறது. ஒரு முறையாவது படித்து விடுங்கள். படித்தால் இரண்டு நாட்களாவது தூங்க மாட்டீர்கள். நெருங்கியவர்களிடம் இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டீர்கள்.

பதிப்பகம் : சூரியன் பதிப்பகம்

விலை : 200

Related Articles

ஜி.வி.பிரகாஷ்குமார் – நா.முத்துக்க... இசையமைப்பாளர் ஜிவி சிறுவயது மற்றும் குடும்பப் பின்னணி போன்றவற்றை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. கிட்டத்தட்ட சினிமா ரசிகர்கள் அத்தனை பேருக்கும்...
சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாக இர... பிரபல தமிழ் யூடுப் சேனலான Blacksheep குடும்பம் நாங்கள் அடுத்தகட்ட நிலையை அடையப் போகிறோம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தனர். இவ்வ...
டெல்லியில் ஒரு நாளைக்கு ஐந்து பெண்கள் பா... டெல்லி காவல்துறையின் தரவுகளின் படி, 2018 ஆம் ஆண்டின் முதல் 3.5 மாதங்களில் ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார...
இந்திய கல்விமுறை குறித்து நடிகர் சூர்யாவ... முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்? மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக...

Be the first to comment on "கே. என். சிவராமனின் உயிர்ப்பாதை புத்தகம் எவ்வளவு முக்கியமானது?"

Leave a comment

Your email address will not be published.


*