சார்பட்டா படத்தில் இடம்பெற்றிருந்த எல்லா கதாபாத்திரங்களும் நம் மனதில் “நச்” என நிற்கின்றன. அதில் மிக முக்கியமான கதாபாத்திரம் பீடி ராயப்பன் கதாபாத்திரம். அவருடைய சில பேட்டிகளை யூடியூப்பில் பார்க்க முடிந்தது. பீடி ராயப்பனின் இயற்பெயர் கஜபதி. பத்தொன்பது வயதில் இருந்து பாக்ஸிங் ஆடி வருகிறார். படிக்கும் மாணவர்களுக்கு பாக்ஸிங் கற்றுத் தந்து வருகிறார். பா. ரஞ்சித்திற்கு பாக்ஸிங் கற்றுத்தந்தவர் அவர் தான். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக பா. ரஞ்சித் பீடி தாத்தாவிடம் பாக்ஸிங் கற்றுக்கொண்டு பாக்ஸிங் பற்றி முழுமையாக அறிந்த பிறகே சார்பட்டா படம் எடுத்துள்ளார்.
கஜபதி என்கிற அவர் ஒரு பேட்டியில், “படிப்பு தான் படிக்கட்டு வாழ்க்கைல… படிக்கறவனுக்கு தான் நான் பாக்ஸிங் கற்றுக் கொடுப்பேன்… பாக்ஸிங் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும்…” என்று சொன்னார். நிஜத்திலும் கஜபதி, பீடி தாத்தா போலவே பேசுகிறார் என்று வியப்பாக இருந்தது. சினிமாவில் ஒரு வாழ்க்கை, நிஜ உலகில் வேறு வாழ்க்கை என்று அவர் வாழவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. சார்பட்டா படத்தில் வரும் அவருடைய காட்சிகளை மீண்டும் பார்க்க தோன்றியது. அந்தக் காட்சிகளை வசனங்களை அப்படியே இங்கு விவரிக்கிறேன்.
சார்பட்டா படத்தில் ரங்கன் வாத்தியார் கைது செய்யப்பட்டதும் கபிலன் யார் பேச்சையும் கேட்காமல் கபிலன் வெற்றிச் செல்வன், மாஞ்சா கண்ணன் போன்றோருடன் சேர்ந்துகொண்டு சாராயம் காய்ச்ச தொடங்குவான்.
“எனக்கு பாக்ஸிங் ஆட வரல… எனக்கு விஷத்த வச்சு கொன்னுடு… எனக்கு எதுவுமே பிடிக்கல… அம்மா நான் உன் வயித்துக்குள்ள போயிடுறன்ம்மா… உன் வயித்துக்குள்ள திரும்ப எடுத்துக்கம்மா…” என்று அம்மாவின் காலை பிடித்து கெஞ்சி அழுவான் கபிலன்.
“நீ பாக்ஸிங்னால ரவுடி ஆக கூடாதுனு தான் சொன்னேன்… ஆனா இப்ப உனக்கு பாக்ஸிங் தான் தேவை…” என்று சொல்லும் கபிலனின் அம்மா பாக்யம் “ஹே டாடி பீடி தாத்தா இப்ப எங்க இருப்பாரு…” என்ற கேள்வியின் மூலம் பீடி தாத்தா கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார்.
“where else? கடல்ல தான் இருக்கும் அந்த old bugger…” என்று டாடி சொன்னதும் “You take him there” என்பார் பாக்யம் அம்மா.
“கடல் எங்களுக்கு பல நாள் இரை கொடுத்தது இல்ல தான்… அதுக்காக நாங்க கடல பளிச்சது இல்ல…”, “உப்பு கடல்ல தான் இருக்குது… ஆனா அத எடுக்கனும்னா தண்ணிய உன் இடத்துக்கு எடுத்துட்டு வரனும்…”, “எது உன்ன தடுக்குது… ஏன் தடுமாற்ற… உன் மனசுல நம்பிக்கை இல்ல… உன்ன தோக்கடிச்சிடுவாங்கன்னு பயப்படுறியா நீ…
டேய் நீ எதுக்கு திரும்ப ஆடனும்னு நெனைக்குற… உன்ன வேணாம்னு சொன்னானே அந்த ரங்கன் வாத்தியாருக்காகவா… முதல்முறையா ஆடுன்னு சொல்லுச்சே உங்கம்மாக்காகவா… ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிடும்னு காத்துட்டு இருக்குற உன் பொண்டாட்டிக்காகவா… உன்ன அடிச்சே ஆகனும்னு வெறில இருக்குற வேம்புலிக்காகவா… நீ எழுந்திருக்கவே கூடாதுன்னு தடுக்கறானுங்களே அவனுங்களுக்காகவா… உன் வெற்றிக்காக காத்திட்டு இருக்குற ஜனங்களுக்காகவா… இல்ல உனக்காகவா…”,
“வீசுற வலைலலாம் மீன் மாட்டுறது இல்லப்பா… காத்துட்டு இருக்கனும்…”, “வெற்றிங்கறது ஒரு ஆட்டம் கெலிக்கறதுல இல்ல… ஆடினே இருக்கறதுல இருக்கு…”, “ஓடு ஓடு ஓடு… ஒருத்தரும் உன் கூட இல்லனாலும் ஓடு… கூட இருக்கறவனே தள்ளிவிட்டாலும் ஓடு… உன்ன வேணாம்னு ஒதுக்குனான்ல அவன் முன்னாடி ஓடு… உன்ன ஆடவே கூடாதுன்னு தடுத்தானுங்கள்ல அவனுங்களுக்காக ஓடு… உன்ன சுத்தியிருக்கற எல்லாத்தயும் மாத்தனும்னா நீ ஓடு… ஓடு ஓடு ஓடினே இரு…” – இவை பீடி தாத்தா கபிலனுக்கு ஒவ்வொரு நாளும் பயிற்சியின்போது சொல்லும் மோட்டிவேட் வசனங்கள்.
இப்படிபட்ட வசனங்கள் பேசும் பீடி தாத்தா பத்து நிமிடங்களுக்கும் குறைவாகவே படத்தில் வந்தாலும் நம் மனதில் நறுக்கென நின்றுவிட்டார். அதனால் தான் இறுதிக்காட்சியில் வேம்புலியை அடித்து வீழ்த்தி வெற்றிபெற்றதும் ரங்கன் வாத்தியார் சிஷ்யன்டா… சார்பட்டா பரம்பரைடா… என்று சொன்ன கபிலன், அந்த நேரத்தில் ஏன் பீடி ராயப்பனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று ரசிகர்கள் பலரும் வருந்தினர். தொப்பையோட இருந்த கபிலனுக்கு தீவிரமான பயிற்சி கொடுத்து மறுபடியும் பழைய நிலைமைக்கு கஷ்டப்பட்டு கொண்டு வர வச்சது பீடி தாத்தா தான்… ஆனா கபிலனோ கிளைமேக்ஸில் “ரங்கன் வாத்தியார் சிஷ்யன்டா” என்று சொன்னதை பல மீம் கிரியேட்டர்களும் கலாய்த்தனர்.
நம்மை சுற்றி பீடி தாத்தாக்கள் போன்ற கிங்மேக்கர்களும் இருக்கின்றனர். பரியேறும் பெருமாள் படத்தில் காட்டப்பட்டதை போன்ற கொலைகார தாத்தாக்களும் இருக்கிறார்கள். இவர்களை கண்டறியும் அறிவு நமக்கு இருக்கனும். அப்போதுதான் நம் குழந்தைகளை சரியான மனிதர்களுடன் பழக வைக்க முடியும்.
நம் வீட்டில் இருக்கும் பெருசுகளை பத்திரமாக பார்த்துக் கொள்வோம். நாம் என்ன தான் கூகுள் உலகில் வாழ்ந்தாலும் தாத்தாக்களின் பாட்டிக்களின் உதவிகள் அவசியம் தேவைப்படுகிறது. ஒரு பிறந்த குழந்தையிலிருந்து சாக கிடக்கும் பெரியவர்கள் வரை அவர்களுக்கு தேவையான வீட்டு மருத்துவ முறைகளை நம் பெரியவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வது அவசியமாகிறது. இதுபோல எல்லா தொழில் உலகிலும் பெரியவர்களின் அனுபவ அறிவுரைகள் நமக்கு தேவைப்படுகிறது. ஆனால் ஆண்ட்ராய்டு உலகில் நாம் அவர்களுக்கு நேரம் ஒதுக்குவதில்லை.
பீடி தாத்தாக்களை கண்டறிவோம், பீடி தாத்தாக்களாக வாழ்வோம்! (பீடி பிடிப்பதை தவிர்த்துவிட்டு!)
Be the first to comment on "நமக்கொரு பீடி தாத்தா கிடைத்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்?"