அறச்சீற்றம் கொண்ட இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் ” பெரியோர்களே தாய்மார்களே!” – பெரியோர்களே தாய்மார்களே புத்தகம் ஒரு பார்வை!
அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்ட ஒருவரால் தான் இப்படிப்பட்ட புத்தகதை எழுத முடியும். ஒவ்வொரு வரியும் ஒரு புதிய செய்தியை சொல்கின்றன, நியாயத்தை முன் வைக்கின்றன, மக்களின் அறியாமையை தவறுகளை சுட்டிக் காட்டுகின்றன. ஆசிரியர் எழுப்பும் கேள்விகள் நம்மை சாட்டையால் வெளுப்பது போல் உறுத்தலை உண்டாக்குகின்றன. மன்னராட்சி காலத்தில் இருந்து ஜனநாயக ஆட்சி வரை உள்ள அரசியல் தலைவர்கள், அரசியல் நிகழ்வுகள், மக்கள் மனமாற்றம் என்று கவனத்தில் கொள்ள வேண்டிய விஷியங்கள் பற்றி பேசுகிறார் ஆசிரியர். நீதிக் கட்சியின் பெயர் வரலாறு, சென்னை பட்டணத்தின் பெயர் வரலாறு, சென்னை தி. நகர் பெயர் வரலாறு என்று தெரியாத பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
அரசியல்ல நம்ம தலையிடனும், இல்ல அரசியல் நம்ம வாழ்க்கைல தலையிடும் என்று உறியடி பார்ட் 2வில் ஒரு வசனம் வரும். அப்படிப்பட்ட வசனத்திற்கு ஏற்றார்போல் உள்ளது இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தை படித்த இளைஞர்கள் நிச்சயம் அரசியல் பக்கம் ஆர்வம் கொண்டு சமூக அக்கறை கொண்டவர்களாக அறச் சீற்றம் கொண்டவர்களாக சீர்திருத்த வாதிகளாக உயர்வார்கள் என்பது உறுதி.
அடிக்கோடிட்டு படிக்க வைத்த சில வரிகள் :
- அயோக்கியனின் முதல் புகலிடமே அரசியல் தான்!
- – கண்ணதாசன்
- அரசியல் என்பதே மூளையற்ற மந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது – ஜெயகாந்தன்
- கடந்த காலம் தெரியாதவர்க்கு நிகழ்காலம் புரியாது, நிகழ்காலம் புரியாதவர்க்கு எதிர்காலம் இல்லை!
- 100 பேர் விலகி நின்று வேடிக்கைப் பார்த்தால் ஒருவன் கையில் கத்தி மினுங்கும். ஐந்து பேர் சேர்ந்து அவனை பிடிக்க பாய்ந்தால் கத்தி கீழே பறக்கும். இந்த ஐந்து பேர் ஒன்று சேரமாட்டார்கள் என்பது அந்த கத்திக்காரனுக்குத் தெரியும். அதுதான் தப்பு செய்யும் தைரியத்தை வர வைக்கிறது.
- இங்கே நாம் ஒவ்வொரு தேர்தலுக்கும் அடமானம் வைத்துக் கொண்டு இருப்பது மானத்தை!
- மன்னர் ஆட்சியில் ஓர் இளவரசியின் கொடுமையைக் காட்டிலும் பொதுநலனுக்கு கெடுதல் ஏற்படுத்தக் கூடியது என்ன தெரியுமா? மக்களாட்சியில் வாக்களிக்கும் மக்கள் அதில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது தான் – பிரான்ஸ் மான்டெக்ஸ்யூ
- மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவது தான் மக்களாட்சி – ஆபிரகாம் லிங்கன்
- ஜனநாயகம் என்பது மக்களின் குண்டாந்தடியால் மக்களால் மக்களுக்காக அடிப்பது – ஆஸ்கார் வைல்டு
- எந்த நாட்டு இளைஞனுக்கு எஃகைப் போன்ற இதயம் இருக்கிறதோ அந்த இளைஞனுக்கு வாள் தேவையில்லை – கவிஞர் இக்பால்
- ரத்தத்தை தாருங்கள். நான் உங்களுக்கு விடுதலையை வாங்கித் தருகிறேன் – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
- அவரவர் மூச்சுக்காற்றை அவரவரே விட வேண்டும் என்பது எவ்வளவு இயற்கையோ அழுதாலும் அவளவள் தான் பிள்ளை பெற வேண்டும் என்பது எவ்வளவு இயற்கையோ அதைப் போல உங்களுக்கான உரிமைகளுக்காக கோரிக்கைகளுக்காக நீங்களே போராட வேண்டும்.
- கைகட்டி வேடிக்கை பார்ப்பவன் கையில் பூக்கள் விழுவதில்லை. மூடிக் கொள்பவன் உடலை தென்றல் தொடுவதில்லை. துன்பப்படாதவனுக்கு இன்பம் இனிப்பதே இல்லை.
- தரையை உதைப்பதனால் புழுதி கிளம்புமே தவிர பயிர் முளைக்காது – இரவீந்தரநாத் தாகூர்
- பணக்காரர்களையும் ஏழைகளையும் ஒருவரிடமிருந்து மற்றவரைக் காப்பாற்றுவதாகச் சொல்லி பணக்காரர்களிடம் இருந்து பணத்தையும் ஏழைகளிடம் இருந்து ஓட்டுகளையும் பெறுகின்ற நளினமான கலைதான் அரசியல் என்பது – ஸ்டெப்ஃபோர்டு கிரிப்ஸ்
- உனக்குப் பிடித்த கருத்துக்களைப் படிப்பதில் காலத்தை வீணாக்காதே. உனக்குப் பிடிக்காத கருத்துக்களைப் படி, அதிலிருந்து தான் இதுவரை உன்னால் புரிந்துகொள்ள முடியாத உண்மையின் கூறுகளை உணர முடியும் – பிராட்லா
- நண்பர் வசை பாடினால் அது வாழ்த்தொலி தான் – திரு. வி. க
- அரசியலுக்கு வரும் பெண்களை எல்லாம் பாஞ்சாலிகளாக கொச்சைப்படுத்துவார்கள். அரசியலுக்கு வரும் ஆண்கள் எல்லாம் ஸ்ரீராமர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்.
- இங்கே வசைச் சொற்கள் அனைத்தும் யாரையோ திட்டுவதன் மூலமாக அவரது தாயை, மனைவியை திட்டுவதாகவே வடிவமைக்கப்பட்டு உள்ளன.
- பெண் போலீஸ் சுட்டாலும் துப்பாக்கி சுடத்தான் செய்யும். மதுரை சட்டக் கல்லூரி மாணவர்களை போலீஸ் உதவி கமிஷ்னர் ஜெயஸ்ரீ அடித்த அடியை பொன்மாணிக்கவேல் நினைத்தாலும் அடிக்க முடியாது. லத்தியிலும் துப்பாக்கியிலும் ஆண் என்ன, பெண் என்ன?
- தமிழ்நாடு சட்டமன்றம் கல்லாலும் மணலாலும் கட்டப்பட வில்லை. சட்டங்களாலும் விதிமுறைகளாலும் கட்டி எழுப்பப்பட்டது.
படித்து முடித்த பிறகு ஒரு பயனுள்ள புத்தகத்தை படித்து உள்ளோம் என்று உணர்வீர்கள்! இதன் விலை கொஞ்சம் அதிகம் போல் தோன்றும். ஆனால் அத்தகைய தொகைக்கு முழு தகுதியும் உள்ள புத்தகம் இது. விகடன் பிரசுரத்தில் கெட்டி அட்டையுடன் கிடைக்கிறது. மாணவர்களை இளைஞர்களை அரசியல் பக்கம் கவனம் செலுத்த வைக்கும், சமூக போராட்டங்களில் கலந்து கொள்ள வைக்கும் தமிழ் புத்தகங்கள் மிக குறைவே. அந்த வகையில் ப. திருமாவேலன் எழுதிய பெரியோர்களே தாய்மார்களே புத்தகம் தமிழக இளைஞர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.
Be the first to comment on "ப. திருமாவேலன் எழுதிய பெரியோர்களே தாய்மார்களே புத்தகம் ஒரு பார்வை!"