“ஹோம் ஸ்கூலிங்” முறை சிறந்ததா? அல்லது பள்ளிக்கு சென்று படிப்பது சிறந்ததா?

Home School vs Netural School

பிள்ளையை படிக்க வைக்கணும், என்ன படிக்க வைக்கலாம்? எங்க படிக்க வைக்கலாம்? என்ற
கேள்விக்கு இந்த சமூகத்தில் சமச்சீர்ல, சிபிஎஸ்சி ஸ்கூல்ல, இன்டர்னேஷ்னல் ஸ்கூல்ல, அட
அதெல்லாம் வேணாம் ஹோம் ஸ்கூலிங்கே போதும் என்று பல விடைகள் உள்ளது. இதில் எது
சிறந்தது? எதில் படித்தால் பிள்ளைகள் நன்றாக சம்பாதிக்கும் திறனை பெறுவார்கள் எந்தப்
பள்ளியில் கட்டணம் குறைவு என்ற பல கேள்விகளால் மண்டை சூடாகி தலைமயிர்கள் எரிந்து
சாம்பலாகாத குறையாக குழப்பத்தில் இருக்க வேண்டிய சூழல் இன்றைய பெற்றோர்களுக்கு.

இப்படி குழப்பத்தில் இருக்கும் பெற்றோர்களை மேலும் குழப்ப சமீப காலமாக “ஹோம் ஸ்கூலிங்”
என்ற முறை பற்றி தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

ஹோம் ஸ்கூலிங்:

கற்றல் என்பது ஒரு கூடத்தில் அமர்ந்து குறிப்பிட்ட சில புத்தகங்களை மட்டுமே படித்து அதை
மனப்பாடம் செய்து மார்க் எடுத்து சர்டிபிகேட் வாங்குவது இல்ல என்பது ஹோம் ஸ்கூலிங்
செய்பவர்களின் விளக்கம். கற்றல் என்பது ஒருவன் வாழ்நாள் முழுக்க செய்ய வேண்டிய காரியம்.
அது அவன் மீது யாராலும் திணிக்கப்படாமல் அவனாகவே தன் ஆர்வத்தினால் ஆராய்ந்து தேடி
கண்டுபிடிக்கும் திறனை வளர்த்துவிடுவதாக இருக்க வேண்டும். அது தான் கற்றல். அதை தான்
ஹோம் ஸ்கூலிங் முறையில் நாங்கள் செய்து வருகிறோம் என்கிறது ஹோம் ஸ்கூலிங் பெற்றோர்
தரப்பு.

மேலை நாடுகளில் பெரும் அளவில் பின்பற்றுவது போல் ஹோம் ஸ்கூலிங் என்ற பெயரில்
வாழ்க்கைக் கல்வியை, பொருளாதாரக் கல்வியை நேரடியாகப் பயணங்களின் வழியாக கற்றுத்
தருவதே மிகச் சிறந்த கல்வி என்கிறார்கள் இவர்கள்.

வாழ்க்கைக் கல்வி? பொருளாதாரக் கல்வி?

வாழ்க்கையை கற்றுத்தர முடியுமா? வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டும் தானே அது என்ன என்று
புரிந்துகொள்ள முடியும் என்று வினா எழுப்பினால், வாழ்க்கை அனுபவங்களை
பகிர்ந்துகொள்வதன் மூலமாக இது தான் வாழ்க்கை இந்த மாதிரியான சம்பவங்கள் நடந்தால்
அதற்கு என்ன எதிர்வினை புரிய வேண்டும் எப்படி தீர்வு காண வேண்டும் என்று புரிந்துகொண்டு
வாழ்க்கையை அவர்களால் வாழ முடியும் என்கிறார்கள் ஹோம் ஸ்கூலிங் பெற்றோர்கள்.

பொருளாதாரக் கல்வி?

கல்வி நிறுவனங்கள் பொருளாதாரக் கல்வியை மாணவர்களுக்கு சொல்லித் தருவது இல்லை.
அவர்கள் சொல்லி தருவது எல்லாம் வெறும் தியரிகளும் பார்முலாக்களும் மட்டுமே. அது
பிள்ளைகளின் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் உபயோகமாக இருப்பதில்லை. காலம் முழுக்க
அவர்களுக்குத் தெரிந்தது என்னவோ வெறும் கூட்டல், கழித்தல் மட்டுமே. அதை
வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும். தங்களுடைய உடல் எவ்வளவு ரூபாய்க்கு
உழைக்கிறது? அந்த உழைப்பு அவர்களுடைய உடலுக்கு தீங்கு விளைவிக்காதவையாக
இருக்கிறதா? மன உளைச்சலை உண்டாக்காமல் குடும்பத்தில் சலசலப்பை உண்டாக்காமல்
இருக்ககூடிய உழைப்பாக இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல
முடியாது. காரணம் பொருளாதார அறிவு குறைபாடு. இதை எந்த ஆசிரியர்களும் கற்றுத்தருவது
இல்லை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் பார்முலா, பைனல் ஆன்ஸர், குட், வெரிகுட், பூவர்
மட்டுமே.

பொருளாதாரக் கல்வியை கற்ற மாணவர்கள் மட்டுமே வாழ்க்கையில் உயர்கிறார்கள்.
பெருநிறுவன முதலாளிகளாக உயர்ந்து நிற்கிறார்கள். இன்றைக்கு வளர்ந்து நிற்கும் பெரிய
பெரிய கம்பெனிகளின் முதலாளிகளை விசாரித்தால் அவர்கள் அனைவரும் சொல்லும்
பெரும்பான்மையான பதில்

“ஸ்கூல் ட்ராப்அவுட் அல்லது காலேஜ் ட்ராப் அவுட்” என்பதாக தான் இருக்கும். அவர்கள்
எல்லோரும் பயணங்களின் வழியாகவும் தன் தந்தையிடம் இருந்தும் பொருளாதாரக் கல்வியைப்
பெற்றதாக கூறுகிறார்கள். அல்லது தானாக நூலகத்தில் அமர்ந்து பல புத்தகங்களை அலசி
ஆராய்ந்து, இன்டர்நெட்டை அலசி ஆராய்ந்து பல முன்னோடிகளை நேரில் சந்தித்து அவர்களிடம்
கற்றுக்கொண்டதாக சொல்கிறார்களோ தவிர எந்தக் கல்வி நிறுவனமும் அதை கற்றுத்தந்ததாக
சொல்லவில்லை. உலகின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்கள்கூட நான்
கல்லூரியில் கற்றுக்கொண்டதைவிட நண்பர்களுடன் சுற்றித்திரியும் போது கற்றுக்கொண்டது
தான் அதிகம் என்று கூறியிருக்கிறார்கள். தன்னுடைய திறமை என்ன என்பதை தனியாகப்
பயணிக்கும்போதும் தனியாகப் பிரச்சினைகளை சந்திக்கும்போதும் தனியாகப் போட்டியில்
கலந்துகொள்ளும் போதும் தான் தெரிந்துகொள்ள முடிகிறது. தனித்திரு என்ற கொள்கையுடன்
இந்த உலகை வேறு பார்வையுடன் பார்த்து தனித்திறமையை கண்டறிந்து தன்னம்பிக்கையுடன்
விளங்கியவர்களே ஜாம்பவான்களாக முதலாளிகளாக கண்டுபிடிப்பாளர்களாக
சாதனையாளர்களாக மாறி இருக்கிறார்கள். ஆக ஹோம் ஸ்கூலிங் முறை தான் சிறந்தது
என்கிறார்கள் அதை ஆதரிக்கும் பெற்றோர்கள்.

ஹோம் ஸ்கூலிங் என்பது முட்டாள் தனம்:

பள்ளிக்கூடம் வீட்டைப் போல் இருக்க வேண்டும் என்று காந்தியடிகள் சொல்லி இருக்கிறார்.
ஆனால் வீடே பள்ளிக்கூடமாகவும் தாய்தந்தையரே ஆசிரியராகவும் மாற வேண்டும் என்று யாரும் கூறியது இல்லை. மதா, பிதா, குரு, தெய்வம் என்ற நிலையில் குரு என்ற உறவு அவர்களுக்கு கிடைக்காமலே போய்விடுகிறது. வீடு வேறு வெளியுலகம் வேறு என்று தெரிந்துகொள்ளாமல் வீட்டிற்குள்ளயே இருந்துகொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொள்வதன் மூலம் அரைத்த மாவையே அரைத்துக்கொள்கிறார்களே தவிர புதிதாக ஒன்றும் கற்றுக்கொள்வது இல்லை. வாழ்க்கை கல்வி, பொருளாதார கல்வி என்று வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். வாழ்க்கையில் சில நாட்கள் மட்டுமே பயணத்திற்காக செலவிட வேண்டும். பயணம் மனதை ரிலாக்ஸ் செய்ய மட்டுமே. மாறாக பயணத்தில் கற்றல் என்பது சாத்தியமில்லை.

அவர்களாகவே ஒரு புத்தகத்தை வாங்குவதாக இருக்கட்டும், அல்லது பரிந்துரையின் பேரில்
வாங்கிய புத்தகங்களாக இருக்கட்டும் புத்தகத்தை படித்த உடனே யாருக்கும் எதுவும் விளங்கப்
போவது இல்லை. அதை இன்னும் எளிதாக விளக்க ஆசிரியர் தேவை படுகிறார். அந்த
விளக்கத்தை பெற்றோரால் கற்றுத்தர முடியுமா? பள்ளிக்குச் சென்றால் ஆசிரியரிடம் கேட்கலாம், நண்பனிடம் கேட்கலாம். ஆனால் வீட்டில் முகத்தை மாற்றி மாற்றி மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்க முடியும்.

வாய் பேச இயலாத குழந்தைகள் கூட பள்ளியில் சக மாணவர்களோடு கூடித்திரிந்து பேசும்போது
நன்கு பேச கற்றுக்கொள்கின்றன. நாற்பது பேர் மத்தியில் எழுந்து துணிச்சலாக கேள்வி கேட்கும்
தைரியத்தை மேடையில் பேசும் தைரியத்தை பள்ளி வகுப்பறைகளால் மட்டும் தான் தர முடியும்
என்பது பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என்பவர்களின் கருத்தாக இருக்கிறது.

ஹோம் ஸ்கூலிங் யாருக்கெல்லாம் சிறந்தது?

சமூகத்தின் முதல் பள்ளிக்கூடம் குடும்பம். முதல் ஆசான் அம்மா, அப்பா. குடும்பம் எதை
விதைக்கிறதோ அது தான் அவன் வாழ்நாள் முழுக்க அவனுக்குள் இருக்கும். இன்றைய பள்ளிகள்
மாணவர்கள் சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே பழியை அம்மா அப்பா மீது தூக்கி
வீசிவிடுகிறது. பையனுக்கு என்ன சொல்லி குடுக்கறிங்க படிக்கவே மாட்டிங்குறான் என்று
பெற்றோர் கேட்க வேண்டிய கேள்வியை ஆசிரியர்கள் கேட்டு தோசையை திருப்பி போட்டு
தப்பித்துக் கொள்கிறார்கள்.

அப்படி இருக்கையில் நான் எதற்கு பள்ளிக்கூடம் அனுப்ப வேண்டும். வீடு வேறு வெளியுலகம்
வேறு அல்ல. இந்த உலகமே ஒரு வீடு தான். உலகில் இருப்பவன் அனைவரும் குரு தான். கற்றல்
என்பது கூடத்தில் கிடைப்பதைவிட பயணத்தின் போது கிடைப்பது தான் மகிழ்ச்சியை தருகிறது
என்கிறார்கள் பெற்றோர்கள். உண்மையில் இது ஏற்றுக்கொள்ள கூடிய விஷியம் தான்.

ஆனால் இது எல்லா பெற்றோர்களுக்கும் சரி வருமா? என்றால் கண்டிப்பாக டவுட் தான். சில
பைத்தியக்கார பெற்றோர்கள் பிள்ளைகளை நூடுல்ஸ் ஆக்கிவிடுவார்கள். மாறாக
குலத்தொழிலை கற்றுக்கொடுத்து குழந்தை தொழிலாளர்கள் ஆக்கிவிடும் வாய்ப்பும் இருக்கிறது. ஆரம்ப கால கட்டங்களில் உயர்ந்த சமூகத்தினர் மட்டுமே பெற்று வந்த கல்வியை இன்று அனைவருமே பெறும் வகையில் மாற்றி இருக்கிறார்கள். இந்த நிலைமைக்கு வர எத்தனையோ பேர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆனால் இன்று அந்த கல்விக் கூடங்களே வேண்டாம் என்று கூறுவது அபத்தமான செயல் என்கிறார்கள் சிலர். ஆனால் சமூகம் ஒவ்வொரு காலத்திலும் அடுத்தகட்டத்தை நோக்கி நகரும். அடுத்தகட்டமாக தான் ஹோம் ஸ்கூலிங் முறை உள்ளது. ஆனால் இது வீட்டில் நிறைய சம்பாதித்யம் இருக்கும் ஆட்களுக்குப் பொருந்துமே தவிர கூலி வேலை செய்யும் பெற்றோர்களுக்கு சரி வராது. மேலும் பள்ளிக்கல்வி ஏன் பலருக்கு
பிடிக்கவில்லை என்பதற்கு திரைப்படங்களில் உதாரணங்கள் இருக்கிறது. தங்கமீன்கள் படத்தில்
W என்ற வார்த்தை எழுத தெரியாத மகளுக்கு அப்பா சொல்லிக் கொடுக்கும் மங்கி மேல இருக்கும்
மேல நோக்கி எழுதுனா அது M , நாமலாம் கீழ இருக்கோம் கீழ இருந்து எழுதுனா அது W என்ற
சின்ன விஷியம் தான் மகளுக்குப் பிடித்திருந்தது. அது மட்டுமில்லாமல் அப்பா படத்திலும்
கிட்டத்தட்ட ஹோம்ஸ்கூலிங் தான் சிறந்தது என்கிறார்கள். கனவு வாரியம் படத்திலும் அதே
தான். ஊரில் ஒரு பிரச்சினை வந்ததும் பட்டம் படித்த யாராலும் தீர்வு காண முடியாத போது
பள்ளியை பாதியில் நிறுத்திவிட்டு சுயகற்றலில் ஈடுபட்ட கனவு வாரியம் நாயகன் அதற்கு தீர்வு
கண்டுபிடிப்பான். ஓகி, கேரளா வெள்ளம் என்று எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை
கண்டு அழுகிறோமே தவிர, அதற்கெல்லாம் தீர்வுகள் கண்டுபிடிக்க முயல்வதில்லை. ஜப்பான்
போன்ற நாடுகளில் எவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டாலும் அடுத்த சில நாட்களில் பழைய
நிலைக்கு திரும்புகிறார்கள், பெரிய சேதம் இல்லாமல் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கிறார்கள்.
இது போன்ற நாடுகளில் ஒவ்வொருவரும் தனித்தன்மையுடன் ஒழுக்கத்துடன் இருக்கிறார்கள்.
அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பள்ளிகளில் படிக்காதவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆக அறிவியலை கற்றல் என்பதும் ஒழுக்கத்தை கற்றல் என்பதும் வெறும் கூடத்தில் மட்டுமே
கிடைப்பது இல்லை என்பது மட்டும் உறுதி.

Related Articles

நவுத்துப்போன பட்டாஸ் – பட்டாஸ் விம... தயாரிப்பு: சத்ய ஜோதி பிலிம்ஸ்இயக்கம்: ஆர் எஸ் துரை செந்தில் குமார்இசை: விவேக் மெர்வின்நடிகர் நடிகைகள்: தனுஷ், சினேகா, நாசர், சதீஷ், முனீஷ்...
மக்களுக்கு விசம் கொடுத்து சம்பாதிக்கிறது... (TASMAC - Tamilnadu Anaiththu Samooga Makkalum Arundhum Cool Drinks) சமூக வலை தளங்களில் உலவிக் கொண்டிருக்கும் வரிகள் இது. உண்மை தான். தெருவுக்கு தெரு ...
இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது! வைரமு... கடந்த ஜனவரி 25ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. அதனையடுத்து இளையராஜாவுக்கு பலர் வாழ்த்து ...
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செய்தி, கட்டுரை ... இந்த மாதிரி இணையதளங்களை நம்பி சம்பாதிக்க ஆசைப்படும் இளைஞர்கள் இளைஞிகள் எல்லாம் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இல்லை. அவர்களெல்லாம் இந்த பக்கம் எட்டி...

Be the first to comment on "“ஹோம் ஸ்கூலிங்” முறை சிறந்ததா? அல்லது பள்ளிக்கு சென்று படிப்பது சிறந்ததா?"

Leave a comment

Your email address will not be published.


*