சினிமாவில் டைரக்டர் ஆக வேண்டும் என்று ஆர்வம் உள்ள இளைஞர்கள் சினிமா குறித்த கண்ட கண்ட புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். உள்ளே விரித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. சினிமா அப்படி பட்டது இப்படி பட்டது… என்று ஓவர் பில்டப் கொடுக்க கூடிய புத்தகங்களாக இருக்கும். ஆனால் அப்படிபட்ட புத்தகங்களையே இளைஞர்கள் தேடிச் செல்கிறார்கள்.
ஆனால் வெறும் 80 ரூபாயில் சினிமா என்றால் என்ன ? அதற்கு தேவையான தொழில் நுட்பங்கள் என்னென்ன ? அவை எப்படி இருக்க வேண்டும் ? உலக சினிமாக்களில் அவை எப்படி இருக்கிறது ? தமிழ் சினிமாவில் எப்படி இருக்கிறது ? என்று தேவையான தகவல்களை நறுக்கென்று தரக் கூடிய புத்தகம் ஒன்று இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் செழியன் எழுதிய ” முகங்களின் திரைப்படம் ” புத்தகம் தான் அது. வழவழ கொழகொழ வென்று பக்கங்களை நிரப்பி வாசகர்களை கடுப்பேற்றும் புத்தகமாக இல்லாமல் எது தேவையோ அதை தெளிவாக எழுதி உள்ளார் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் செழியன்.
1. பேசும்படம் : சப்தங்களின் வழியே நிகழும் வன்முறை
2. நமது தமிழ்ப்படம்
3. முகங்களின் திரைப்படம் காட்சி மொழிக் குறிப்புகள்
4. தொலைக்காட்சியும் விளம்பரங்களும்
5. சிறந்த திரைப்படம்
6. புதிய அலையின் துவக்கம்
7. கதையும் திரைக்கதையும்
8. சாலையில் வரும் ஆசிரியர்
என்று மொத்தம் எட்டு தலைப்புகளில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ள ஒவ்வொரு வரியும் நல்ல சினிமா எடுக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அடிக்கோடிட்டு படிக்க வேண்டும். அவ்வளவு நுணுக்கமாக இயற்கையை சினிமாவை ரசித்து எழுதி இருக்கிறார்.
புத்தகத்தில் உள்ள வரிகளில் சில வரிகள் இங்கே,
* காட்சித் துல்லியத்திலும் ஒலிப் பரிமாணத்திலும் ஒரு விஷேச அனுபவத்தைப் பார்வையாளனுக்குத் தர வேண்டிய கட்டாயம் திரையரங்கிற்கு இருக்கிறது.
* தொடர்ந்த வன்முறைப் படங்களின் வருகையும் தான் பார்த்ததையே திரும்பிப் பார்க்க விரும்பாத தன்மையும் ஒரு பார்வையாளன் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வருவதைத் தவிர்க்கிறான்.
* அடுத்தடுத்த படங்களில் புதுமை அவசியப் படுகிறது. அது போல் சண்டையில் அடிபடுபவர்கள் அடி பொறுக்காமல் கொடுக்கிற சத்தம் அதனினும் கொடுமையானது.
* உலகின் சிறந்த இயக்குனர் எவரும் அவரது படத்திலிருக்கும் வசனங்களால் அறியப் படுவதில்லை. பல நேரங்களில் நம் மௌனம் தான் நம் பேச்சையே அர்த்தப் படுத்துகிறது.
* கதைகளைப் பொறுத்த வரை உலகில் நான்கு விதமான கதைக் கருக்களே இருக்கின்றன எனும் கருத்து உண்டு. ஆனால் நம் தமிழ்ப்படங்களைப் பொறுத்த வரை கதை ஒன்றே ஒன்று தான். அதே கள்ளன் போலீஸ் கதை. நல்லது செய்யும் ஒருவன் கெடுதல் செய்யும் ஒருவன். யாரை யார் அழிப்பது என்ற போராட்டம் இடையே காதல். காதலுக்காக பாடல் அவ்வளவு தான்.
* இனிமையான இசையுடன் தேர்ந்த காட்சியின் வழியே நிதானமாகக் கதை சொல்ல முயற்சிக்க வேண்டும்.
* சிறகுகள் முளைக்காமல் நடந்து திரிந்து குப்பைகள் பொறுக்கும் ஒரு பறவை யாகவே நம் திரைப்படம் ( தமிழ்ப் படம் ) இருக்கிறது.
* ஒரு திரைப்படம் காட்சியைப் புறம் தள்ளி அதன் வசனத்திற்காகப் பாராட்டுப் பெறுவது பரிதாபமானது. ஆனால் இன்றும் அந்த நிலையே தொடர்கிறது.
* ஒரு திரைப்படத்தைப் பொழுதுபோக்கிற்காக மட்டும் பார்க்க முடிந்தவர்கள் பாக்கியசாலிகள். காட்சி முடிந்ததும் அங்கேயே அதன் இருப்பும் முடிந்து விடுகிறது. ஆனால் படம் முடிந்த பிறகு அது மனதில் ஓடத்துவங்கினால் அதன் படைப்பு ரகசியங்களோடு நாம் விளையாடத் துவங்குகிறோம். பிறகு, அது நம்மை அன்புடன் அருகில் அழைக்கும். கண்ணாடியைக் கொத்திப் பார்க்கிற சிட்டுக் குருவியைப் போல அருகிலிருந்து தொட்டுப் பார்க்கலாம். மீன்கொத்தி போல உயரத்தி லிருந்து குதித்து தன் பிம்பத்துக்குள்ளேயே நுழைந்து விடலாம். குரோசோவாவின் கனவில் வான்கோவின் ஓவியத்துக்குள் நுழைந்து கோதுமை வயல்களைப் பார்ப்பது போன்ற பரவசம் தான் இதுவும்.
நல்ல இயக்குனர் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் அடிக்கடி படிக்க வேண்டிய புத்தகம் ” முகங்களின் திரைப்படம் “.
விலை : ரூ. 80
பதிப்பகம் : உயிர் எழுத்து
இவருடைய மற்ற புத்தகங்கள் :
1. உலக சினிமா 1, 2, 3 – விகடன் பிரசுரம்
2. தி மியூசிக் ஸ்கூல்
3. பதேர் பாஞ்சாலி அகாந்தக் சத்யஜித்ரேயின் திரைக் கதைகளின் மொழிபெயர்ப்பு
4. வந்த நாள் முதல் ( கவிதைத் தொடர் )
5. பேசும் படம் – கடைசி இருக்கைப் பார்வையாளனின் குறிப்புகள் ( திரைப்படக் கட்டுரைகள் )
Be the first to comment on "தேசிய விருதுபெற்ற இயக்குனர் செழியனின் ” முகங்களின் திரைப்படம் ” புத்தகம் ஏன் படிக்க வேண்டும்?"