ZEE5 தளத்தில் வெளியான சிகை, களவு திரைப்பட விமர்சனங்கள்!

Sigai and Kalavu movie reviews are released on the ZEE5 site

சிகை: 

மதயானைக் கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் கதிர். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரையும் அந்தப் படத்தில் இடம்பெற்ற கோன கொண்டகாரி பாடல் அவரை பிரபலம் என்ற நிலையையும் அடைய வைத்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடித்த கிருமி படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்திற்கு பிறகு அவர் திருநங்கையாக நடித்த சிகை படம் வெளியாவதாக இருந்தது. 

ஆனால் அந்தப் படம் சில காரணங்களால் வெளியாக தாமதமானது. இந்நிலையில் தான் பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படம் கதிருக்கை நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தினால் விஜயுடன் சேர்ந்து பிகில் படத்தில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார். 

ஆனால் அவர் மிகவும் சிரமம் எடுத்து நடித்த சிகை படம் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்தது. அந்தப் படத்திற்கு தியேட்டர்களும் பெரிதாக கிடைக்கவில்லை. இதனால் ZEE 5 ஆப்பில் வெளியானது சிகை படம். பிரபல விமர்சகர்கள் யாரும் இந்தப் படத்தை கண்டுகொள்ளவில்லை. ஓரிரு விமர்சகர்கள் படம் சுமார் என விமர்சித்திருந்தார்கள். இருந்தாலும் கதிருக்காக அந்தப் படத்தைப் பார்த்தேன்.

மாமா தொழில் பார்க்கும் நாயகன் நிர்மலா (நிம்மி) என்ற விலைமகளை புதிய நபர் ஒருவருக்கு பேரம் பேசி அனுப்பி வைக்கிறார். போன இடத்தில் நிம்மியை அனுபவிக்க அழைத்தவன் இறந்துகிடக்க அந்த மாமா நிம்மியை தேடி அலைகிறான். பிறகு தான் தெரிகிறது நிம்மியும் இறந்துவிட்டாள் என்று. நிம்மியை கொன்றது யார் ஏன் கொல்லப்பட்டார் என்பதை விவரிக்கும் கதை தான் சிகை. படத்தின் இரண்டாம் பாதியில் தான் கதிர் வருகிறார். நிம்மியை கொன்றது கதிர் தான். காரணம் அவர் பெண்ணாக மாறிவிட்டதால் நிம்மியை விலைக்கு அழைத்த நண்பன் மீது காதல் கொள்கிறார். தன் கண் முன்னே தன் காதலன் வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் நிம்மியையும் தன் நண்பனையும் கொன்றுவிட்டு முழுவதுமாகப் பெண்ணாக மாறி நிம்மியின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வாழ்ந்து வருகிறார். இதுதான் படத்தின் கதை. 

விலைமகள்களின் குடும்ப சூழல், அக உலகம், புற உலகம் போன்றவற்றை மிக உண்மையாக காட்டியிருந்தார்கள். மற்றபடி படத்தில் எதுவும் ரசிக்கும்படி இல்லை. திருநங்கைகளுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்று இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே திருநங்கைகளின் முன்னேற்றம் பற்றி தமிழ் சினிமாகாரர்கள் பேசியதை தான் இவர்களும் பேசி உள்ளார்கள். ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்திற்கு முன்பு இந்தப் படம் வந்திருந்தால் ஓரளவுக்குப் பேசப்பட்டிருக்கும். 

படத்தில் மெட்ராஸ் புகழ் ரித்திகா விலைமகளாக நடித்திருந்தார். டார்ச்லைட் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் நன்றாக நடித்துள்ளார். ரித்திகாவின் காதலனாக தொழில் மாமாவாக நடித்தவரும் நன்றாக நடித்துள்ளார். 

களவு

இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கி மெட்ராஸ் அன்பு கலையரசன் ஹீரோவாக நடித்த படம் களவு. இந்தப் படம் தியேட்டரில் ரிலீசாகவில்லை. மாறாக ZEE 5 ஆப்பில் நேரடியாக ரிலீஸ் ஆனது. திரையரங்கில் ரிலீசாகாததால் இந்தப் படம் பிரபல விமர்சகர்களால் பெரிதாக கண்டுகொள்ளப் படவில்லை. திரை விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் மட்டும் 3.5/5 மதிப்பெண்கள் கொடுத்திருந்தார். அவர் கொடுத்த அந்த மதிப்பெண் தான் அந்தப் படத்தை பார்க்க தூண்டியது. உண்மையிலயே அந்த மதிப்பெண்ணுக்கு தகுதியான படம் தான் களவு. 

கலையரசன் தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கிறார். குடித்தவுடன் வீட்டுக்குச் சென்றால் அம்மா அப்பாவிடம் மாட்டிக்கொள்வோம் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து தியேட்டருக்குச் செல்கிறார் கலை. அவர்கள் படம் முடிந்து வெளியே ஒரு கருப்பு பல்சரில் டிரிபிள்சாக செல்கிறார்கள். அதே நேரத்தில் கள்ளக்காதல் பெண் ஒருத்தி அந்த தியேட்டர் அருகே தன் கள்ளக்காதலன் காரிலிருந்து இறங்கிச் செல்கிறாள். அதை தியேட்டரில் ஊழியராக இருக்கும் சின்னி ஜெயின்ந்த் கவனிக்கிறார். சிறிது தூரம் சென்றதும் அந்தப் பெண் கத்த மூன்று இளைஞர்கள் ஒரு பைக்கில் ஏறி தப்பிக்கிறார்கள். அந்த மூன்று இளைஞர்களும் அந்தப் பெண்ணின் கழுத்தில் உள்ள செயினை பறிக்க வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வாக்கி டாக்கி வழியாக போலீசுக்குச் செல்ல போலீஸோ மூன்று இளைஞர்களாக வரும் நம் ஹீரோ கலையின் வண்டியை பிடிக்க முயல்கிறார்கள். டிரிங் அண்ட் டிரைவ் மற்றும் டிரிபிள்ஸ் என்பதால் கலை போலீஸிடம் வண்டியை நிறுத்தாமல் வேகமாக செல்கிறார். கலை போலீசிடம் எப்படி சிக்கினார்? அந்தப் பெண்ணின் கணவன் மனைவியையும் அவளுடைய கள்ளக் காதலனையும் என்ன செய்தான்? என்பதே பின்பாதி கதை. 

படத்தில் இன்ட்ரோ சாங், டூயட் சாங், சோக சாங் என்ற எந்த தொந்தரவுகளும் இல்லை. குறிப்பாக லூசுத்தனமான ஹீரோயின் இல்லை. 

கருணாகரன் கணவனாக நன்றாக நடித்துள்ளார். சின்னி ஜெயிந்த் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களையெல்லாம் விட மிக முக்கியமாகப் பாராட்டப்பட வேண்டியவர் இயக்குனர் வெங்கட் பிரபு. ஜாலியான வெங்கட் பிரபுவை ஒரு அதிகாரத் திமிர் பிடித்த போலீசாக புதுமையாக இருந்தது. குறிப்பாக கலையரசனின் அப்பாவை போலீஸ் ஸ்டேசனில் மகன் முன்பே ஜட்டியோடு உட்கார வைக்கும் காட்சியில் மிரட்டி இருக்கிறார் வெங்கட் பிரபு. 

“நல்லவனா இருந்தா நல்லவன்ற பேரு மட்டும்தான் சம்பாதிக்க முடியும்… கெட்டவனா இருந்தா நல்லவன்ற பேர தவிர மீதி எல்லாத்தையும் சம்பாதிக்க முடியும்!” என்ற வசனம் மனதை கவர்ந்தது. இந்த எளிமையான படத்தில் அனைத்து டெக்னீக்கல் வேலைப்பாடுகளும் நன்றாக இருந்தன. கண்டிப்பாக ஒருமுறை பார்க்க கூடிய சுவாரஸ்யமான திரைப்படம். 

Related Articles

பேட்ட – மரண மாஸ் பாடல் வரிகளும் இச... கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. ரஜினி படத்தில் விஜய் சேதுபதி வில்லன் என்பதாலும் அனிருத் இசை என்பதாலும் படத...
ஜல்லிக்கட்டு! தமிழரின் அடையாளம் – ... கடந்த வருடம் இதே மாதத்தில் ஜல்லிக்கட்டு என்பது எங்களின் வாழ்வுரிமை என்று அதனை மீட்டெடுக்க ஒன்றுதிரண்டு போராடி வெற்றிகண்டார்கள் தமிழர்கள். வேலை இல்லாமல...
இதற்கெல்லாமா நம்ம அரசாங்கம் செலவு செய்யு... ஒரு அரசாங்கம் செயல்படுவதற்கு அடிப்படை மக்களின் வரிப்பணம். அனைத்து வகைகளிலும் மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணம் முறையாகத் தான் செலவு செய்யப்படுகிறதா...
வைரமுத்துவின் “திருத்தி எழுதிய தீர... இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1979ல் நடந்துள்ளது. இதுவரை இருபத்திமூன்றாம் பதிப்புகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்தப் புத்தகம் தான் வைரமுத்துவி...

Be the first to comment on "ZEE5 தளத்தில் வெளியான சிகை, களவு திரைப்பட விமர்சனங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*