கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா – காங்கிரஸ் கட்சியின் மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

இன்று (வியாழக்கிழமை) காலை ஒன்பது மணிக்குக் கர்நாடக மாநில முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா. மிக எளிமையாக நடந்த இந்தப் பதவியேற்பு விழா அந்த நிமிடங்களில் முடிந்தது. முன்னதாக இந்தப் பதவியேற்பு விழாவைத் தடைசெய்ய கோரிய காங்கிரஸ் கட்சியின் மனுவை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாகக் கூறிய உச்சநீதிமன்றம், எடியூரப்பா பதவியேற்க தடையேதும் இல்லையென்று அறிவித்தது. இதையடுத்து இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார் எடியூரப்பா. காங்கிரஸ் கட்சியின் மனுவை நள்ளிரவு இரண்டு மணி வாக்கில் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் அதிகாலை 05 : 30 மணிவாக்கில் எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்கத் தடையேதுமில்லை என்று அறிவித்தது.

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கர்நாடக அரசுக்கும், எடியூரப்பாவுக்கும் காங்கிரஸ் கட்சியின் மனுவுக்குப் பதிலளிக்கும் படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர்

கர்நாடக மாநிலத்தில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சிக்கு 104 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்களும், மதச் சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு 37 இடங்களும், சுயட்சைகள் 2  இடங்களிலும் வென்றனர். தேர்தல் நடந்த 222 தொகுதிகளில் ஆட்சியமைக்கத் தேவையான 112 இடங்கள் என்ற பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத காரணத்தால், காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்க முனைந்தன. இந்நிலையில் தனி பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாரதிய ஜனதாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தார்.

 

பெரும்பான்மையை நிரூபிக்க பதினைந்து நாட்கள் கெடு

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 112 சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை நிரூபிக்க அந்தக் கட்சிக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் வழங்கி இருக்கிறார். இது அரசியல் கட்சிகளிடையே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை சார்ந்த கே.சி.வேணுகோபால் இது குறித்து பேசும்போது ‘நள்ளிரவில் விசாரித்து அவர்களுக்குச் சார்பாக தீர்ப்பளித்து, அடுத்த நாள் காலையிலேயே பதவி ஏற்கச் செய்து, பதினைந்து நாள் அவகாசம் தருவது என்பது அனைத்து ஜனநாயகக் கோட்பாடுகளையும் மீறிய ஒரு செயலாகும்’ என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கூறியதாவது ‘மனு போட்டது தவறான செயலாகும். காங்கிரஸும், மதச் சார்பற்ற ஜனதா தள கட்சியும் பெரும்பான்மையை பாரதிய ஜனதா கட்சி நிரூபிக்கும் வரை காத்திருந்திருக்க வேண்டும்’ என்றார்.

இந்திய பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளியின் பேராசிரியரான பாபு மேத்யூ கூறும் போது ‘பெரும்பான்மை இருக்கும் கூட்டணியையே ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும். ஆனால் தனி பெரும் கட்சி என்ற அடிப்படையில் பெரும்பான்மை இல்லாத போதும் ஆளுநர் பாரதிய ஜனதா கட்சியை அழைத்திருப்பது குதிரை பேரத்திற்கே வழிவகுக்கும்’ என்றார்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் இந்தியாவில் அவர்கள் ஆட்சியமைக்கும் 21 மாநிலமாகக் கர்நாடகம் இருக்கும். இப்போதைக்கு காங்கிரஸ் வசம் பஞ்சாப், மிசோரம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களே உள்ளன.

அடுத்து என்ன நடக்குமென்பதை வெள்ளிக்கிழமை வரை காத்திருந்து அறியலாம்.

Related Articles

எழுத்தாளர் சரவணன் சந்திரன் எழுதிய அன்பும... * தள்ளாடி மேலெழும் தலைமுறை,* எங்கே தொலையக் கொடுத்தோம்?,* கூட்டாஞ் சோற்றுக் கணக்கு,* வியாபார மந்திரம்,* கூண்டுப் புறாக்கள்,* அ...
கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டி விகி... இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா marginal cost of funds based lending rate (MCLR) எம்சிஎல்ஆர் எனப்படும் கடன் திட...
செந்தில்பாலாஜி vs செந்தில் நாதன் –... வருகிற மே 19ம் தேதி அரவக்குறிச்சி தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு  கூட்டம் கூட்டுதல் பணப்பட்டுவாடா செய்தல் போன்ற பணி...
சதுரங்க வேட்டைப் பட பாணியில் டெல்லி தொழி... அறிவியல் ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் உலோக தகட்டை விற்க இருப்பதாகச் சொல்லி, டெல்லி தொழிலதிபரிடம் 1.43 கோடி வாங்கி ஏமாற்றிய தந்தை, மகன் கைது செய்யப்பட்ட...

Be the first to comment on "கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா – காங்கிரஸ் கட்சியின் மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்"

Leave a comment

Your email address will not be published.


*