நூறு நாட்களை தொட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்ப்புப் போராட்டம் பல இழப்புகளை சந்தித்து ஓரளவுக்கு வெற்றி கண்டு உள்ளது. மற்றொரு போராட்டம் பல தலைமுறைகளாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. பல தலைமுறை என்றாலே தெரிந்து இருக்கும் அது காவிரி பிரச்சினை என்று. பல தலைமுறைகளாக தொடர்கிறது என்றால் தவறு யார் மீது? நம் மீது தானே? நாம் தேர்ந்து எடுக்கும் ஆட்சிகள் மூலமாக தொடர்ந்து தவறுகளை செய்வது மக்கள் தானே?
எலக்சன் காலத்தை தவிர மற்ற காலங்களில் இந்த அரசை காரி உமிழும் மக்கள் எலக்சன் சமயத்தில் மனம் மாறி மீண்டும் அதே அரசை தேர்ந்து எடுப்பது எதனால்? விடை பண மோகம். எலக்சன் நெருங்கும் சமயங்களில் பண மோகம் பிடித்த மக்களுக்கு வெறி ஊட்டும் வகையில் பணம் மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தும் வாரி இறைக்கப் படுகிறது. மறதி அதிகமாகிவிடுகிறது மக்களுக்கு. இதில் இருந்து மீண்டு வர இன்றைய தலைமுறை முயன்றாலும் அதை சில பெருசுகள் பெற்றோர்கள் விடுவதில்லை. பணம் வாங்க மறுக்கும் புதிய வாக்காளர்களை மனம் மாற்றம் செய்ய வைப்பது எவ்வளவு பெரிய தேசத் துரோகம்.
இந்த தேசத் துரோகம் செய்வது பெரும்பாலும் பெற்றோர்கள் தான். தனித்திரு விழித்திரு என்ற கொள்கையை எந்தப் பெற்றோரும் பின்பற்ற முன்வருவது இல்லை. எல்லோரும் இதை தானே செய்கிறார்கள் நாமும் இதையே செய்வோம், எல்லோரும் செய்கிற போது தவறு ஆகாது இந்த செயல் நாம் செய்யும்போது மட்டும் தவறு ஆகி விடுமா ( அந்நியன் பட வசனம் ) என்று தவறு செய்வதை சகஜப்படுத்திவிடுகிறார்கள். இந்த மனநிலை தான் தூத்துக்குடியில் பல உயிர்களை இழக்க வைத்து இருக்கிறது. இறந்தவர்களில் பலர் இருபதுகள் வயதினர். வாழ்க்கையை இன்னும் முறையாக வாழவே தொடங்காதவர்கள். அவர்களை படுகொலை செய்தது எவ்வளவு பெரிய தேசத் துரோகம். இந்த தேசத்துரோகத்தில் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்ட அத்தனை பேருக்கும் இதில் பங்கு உண்டு தானே. இந்த தலைமுறை பெற்றோர்களே நீங்களும் இதே தவறை தொடர்ந்து செய்யாதீர்கள்.
Be the first to comment on "எல்லோரும் செய்றதனால தப்பு சரின்னு ஆகிடாது! – தெரிந்தே தவறு செய்வதை சகஜப்படுத்திவிடும் பெற்றோர்கள்!"