இந்திய விமானப்படையின் ரகசியங்களைக் கசிய விட்ட குற்றத்திற்காக இந்திய விமானப்படையில் குழு கேப்டனாக பணியாற்றி வரும் அருண் மர்வாஹா என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ என்னும் உளவு அமைப்புக்கு அவர் இந்திய விமானப்படையின் ரகசியங்களைக் கசிய விட்டு இருக்கிறார். அவரது வயது ஐம்பத்து ஒன்று.
சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொண்டிருந்த அருண் மர்வாஹா, தன் திறன்பேசியின் மூலம் இரகசிய ஆவணங்களையும், இந்திய விமானப்படை தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வந்த போர் பயிற்சிகளின் நிழற்படங்களை வாட்சப் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாக்கில், இரண்டு பெண்கள் பேஸ்புக் மூலம் அருண் மர்வாஹாவுக்கு அறிமுகம் ஆகியிருக்கின்றனர். பாலுணர்வைத் தூண்டும் வகையில் தொடர்ந்து அவரிடம் இணையத்தில் பேசி அவரிடம் இரகசிய ஆவணங்களை அனுப்பச் சொல்லி கேட்டிருக்கின்றனர். இதை ஆங்கிலத்தில் ஹனி டிராப்பிங் என்று அழைக்கின்றனர். அவரிடம் போலியான பேஸ்புக் கணக்கில் இருந்து பேசிய அந்த இரண்டு பெண்களும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிற்காக வேலை பார்த்து வருபவர்கள்.
புது டெல்லி லோதி காலணி காவல் நிலையத்தில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்டம் 3 / 5 / 9 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டு இருக்கிறது.
அவரிடம் இரகசிய ஆவணங்களை பெற்ற அந்த இரண்டு பெண்கள் பற்றியும், அந்தப் போலியான இரண்டு பேஸ்புக் கணக்குகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Be the first to comment on "ரகசிய ஆவணங்களைக் கசியவிட்ட இந்திய விமானப்படை அதிகாரி கைது"