ஆதார் வழக்கில் கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி இருந்தது. அதன்படி வங்கி
கணக்கு மற்றும் கைப்பேசி எண்களுடன் ஆதாரை இணைக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 31
என்ற இலக்கை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவைத்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (Unique
Identification Authority of India (UIDAI)) தலைமை நிர்வாக அதிகாரி(Chief Executive Officer)
அஜய் பூஷன் பாண்டே ‘ வங்கி கணக்கு தொடங்க, தட்கலில் கடவுச்சீட்டு பெற, பரஸ்பர நிதியில்
முதலீடு செய்ய, தொலைத்தொடர்பு சேவைகள் பெற என இன்னமும் ஆதார் கட்டாயம்’ என்று
தெரிவித்துள்ளார்.
தீர்ப்பில் குழப்பம்
கடந்த வாரம் ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இரண்டு விஷயங்கள்
முக்கியமானவை.
1 ) ஏற்கனவே வங்கி கணக்கு, கைப்பேசி எண் வைத்திருப்பவர்கள் அதை ஆதாருடன் இணைக்க
நிர்ணயம் செய்யப்பட்டிருந்த மார்ச் 31 என்ற கால வரையறை மட்டும் தான் மறு உத்தரவு வரும்
வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2 ) புதிதாக வங்கி கணக்கு தொடங்குபவர்கள், கைப்பேசி எண் பெறுபவர்கள் கட்டாயம் ஆதார்
எண் இருந்தால் மட்டுமே பெற முடியும்.
சில ஊடகங்கள் இனி ஆதார் எண் தேவையே இல்லை போன்ற செய்திகளை வெளியிட்டு
இருந்தன. ஆனால் புதிதாக வங்கி மற்றும் தொலை தொடர்பு சேவைகளை பெற விரும்புவார்கள்
கட்டாயம் ஆதார் விபரங்களை அளிக்க வேண்டும்.
தட்கல் முறையில் கடவுச்சீட்டு பெற
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தட்கல் முறையில் கடவுச்சீட்டு பெறும் முறையில்
எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தட்கல் முறையில் கடவுச்சீட்டு
பெற விரும்புவோர் கட்டாயம் ஆதார் எண் மற்றும் இதர ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்
என்று தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.
‘ஆதார் தகவல்கள் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கின்றன, அந்தத்
தகவல்களை ஊடுருவி எடுக்க ஒருவருக்கு இந்தப் பிரபஞ்சத்தின் வயது ஆகலாம். ஆதார் இல்லை என்ற காரணத்தால் ஒருவருக்குச் சேவைகள் மறுக்கப்படாது என்பதை மத்திய அரசு உறுதி
செய்திருக்கிறது’ என்று ஆதார் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷன் பாண்டே தெரிவித்தார்.
மத்திய அரசின் சார்பில் ஆதார குறித்து பல்வேறு விளக்கங்களும், அறிவுறுத்தல்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆதாரை பெறவும் அதைத் தேவைப்படும் சேவைகளுடன் இணைக்கவும் பொது மக்கள் நிறையவே சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆதாரின் பெயரால் பொது மக்கள் யாரும் இன்னலுக்கு உள்ளாகக் கூடாது என்பதே உச்ச நீதிமன்றம் உட்பட நம் அனைவரது விருப்பமும்.
Be the first to comment on "வங்கி கணக்கு தொடங்க ஆதார் அவசியம் என்கிறார் அஜய் பூஷன் பாண்டே"