நமது மாநில மரமான பனை மரங்களின் சிறப்பம்சங்கள்!

special characteristics of our state trees

கோடை காலம் வந்துவிட்டது. சாலையோரங்களில் நுங்கு விற்பனையாளர்களை காண முடிகிறது. ஒரு நுங்கின் விலையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. இளம் பருவத்தில் நண்பர்களுடன் சுற்றித்திரிந்த போது போட்டி போட்டுக்கொண்டு மரத்தில் ஏறி கட்டை விரல் நோக நோண்டித் தின்ற நொங்கு இன்று விலைக்கு வந்துகிடக்கிறது! சுட்டுத்தின்ற பனங்காய், முளைக்கப் போட்டு எடுத்த பனங்கிழங்கின் நினைவுகள் அனைத்தும் இன்றைய நுங்கின் விலையைக் கேட்டதும் கண்முன் வந்து செல்கிறது.

எத்தனை பயன்கள் கொண்டது நம் பனை மரம். நமது மாநில மரமான இந்த பனை மரத்தை கற்பகத் தரு என்று அழைக்கிறார்கள். ஏன் தெரியுமா… ஏன் என்றால் இதன் வேரிலிருந்து கடைசி குருத்து ஓலை வரை அத்தனையும் அற்புதமான பலன்களை தரவல்லது.

இலக்கண இலக்கியங்களை சுமந்தவை

அந்தக் கால கட்டத்தில் இயற்றப்பட்ட இலக்கண நூல் தொல்காப்பியத்திலும், பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களிலும் பனைமரங்கள் பற்றிய பாடல்கள் இடம் பெற்று உள்ளது. அது மட்டுமின்றி இலக்கண இலக்கிய நூல்கள் அனைத்தையும் சுமந்தவை இந்த பனை ஓலைகள்.

எல்லா மண்ணிலும் வளரும்

கடற்கரை பகுதி உட்பட அனைத்து பகுதிகளிலும் வளரக் கூடிய மரங்களில் இதுவும் ஒன்று. வறட்சியை தாக்குப் பிடிக்கும் தன்மை உடையது. நம்ம ஊர் குளத்துக் கரை ஓரங்களில் பனைமரங்கள் வளர்ந்திருப்பதை பார்த்திருப்போம். அதன் நோக்கம், குளத்துக் கரை மண் அரிக்காமல் தடுக்க பனை மரத்தின் சல்லி வேர் உதவும் என்பதே.

கோழிக்குஞ்சுகள் பறிபோகாது

கோழிக்குஞ்சுகள் வளரும் காலத்தில் காக்கைகள் உள்பட பல பறவைகள் அதனை வேட்டையாடத் தொடங்கிவிடும். அப்படி வேட்டையாடும் பறவைகளை வெறித்தனமாகப் பல அடி தூரம் பறந்து விரட்டியடிக்கும் கோழிகளை நாம் பார்த்திருப்போம். இப்படி கோழிக்குஞ்சுகள் இழக்காமல் இருக்கவும் பனைமரங்கள் உதவி புரிகிறது.

பனைமரத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அந்த மரத்தில் கரிக்குருவிகள் கூடுகட்டுவது. பல ஆண்டுகளாக கோழிக்குஞ்சு வளர்க்கும் விவரம் தெரிந்தவர்கள் தங்கள் பகுதிக்கு அருகே இருக்கும் பனைமரங்களில் ஓலை வெட்டமாட்டார்கள். காரணம் அடர்ந்த பனைமரங்களில் மட்டுமே கரிக்குருவிகள் கூடுகட்டும். அது கூடு கட்டத் தொடங்குவது முதல் முட்டையிட்டுக் குஞ்சுகள் பொரிப்பது வரைக்கும் அப்பகுதியில் அந்த மரங்கள் இருக்கும் பக்கத்திற்கு வேறு எந்தப் பறவைகளும் வராது. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் வரை ஆண் குருவி அல்லது பெண் குருவி என்று இரண்டில் எதோ ஒன்று மாற்றி மாற்றி எப்போதும் காவல் இருக்கும். வேறு எதாவது பறவைகள் வந்தால் கொத்தி விரட்டி அடித்துவிடும். கைக்குள் அடங்குவது போலக் கரிக்குருவி மிகச்சிறியது. ஆனால் அதன் வலிமை பெரியது. பெருங்கழுகையே விசையோடு கொத்தி விரட்டி அடிக்கும் திறன் வாய்ந்தது. அப்படி கரிக்குருவி கூடு கட்டும் தருணத்தில் கோழிக்குஞ்சுகளை இறக்கி விட்டுவிட்டால் ஒன்றும் பிரச்சினையே இல்லை. குஞ்சுக்கு காவல் காக்கும் வேலையை கரிக்குருவி பார்த்துக்கொள்ளும்.

தூக்கணாங் குருவிகளின் வசிப்பிடம் – மழைக்கான அறிகுறி

பனை ஓலை எவ்வளவு வழுவழுப்பாக இருந்தாலும் அதில் கூடு கட்டும் திறன் உடையது தூக்கணாங் குருவி. ஓலைகளின் இணுக்குகளில் குருவி ஒரு வகையான பசையை தடவி கிழித்த தோகையைக் கொண்டு வந்து கூடு பின்னுகிறது.

பனைமரங்கள் கோடை காலத்தில் மட்டுமே குலை வைக்கும். அதை வைத்து ஆண் பனை எது பெண் பனை எது என்று எளிதாக கண்டறிந்து விடலாம். ஆனால் மற்ற சமயங்களில் ஆண் பனைக்கும் பெண் பனைக்கும் வித்தியாசம் காண்பது அரிதான செயல். அப்படிபட்ட காலத்திலும் ஆண் பனை எது பெண் பனை எது என்பதைக் கண்டறிவதில் தூக்கணாங் குருவிகள் மனிதனைவிட புத்திசாலிகள். அப்படி ஆண் பனையை கண்டறிந்து அதில் கூடுகட்டி வாழத் தொடங்கும். ஆண் பனைகளில் கூடுகட்டுவதற்கான காரணம் அதில் மனிதர்களுக்கு வேலை. அதனால் குருவிகளுக்கு நோ டிஸ்டர்பன்ஸ். இந்த தூக்கணாங் குருவிகளின் கூடுகளை வைத்தே மழை வருவதை கணித்து விடுவார்கள் நம்ம ஊர் விவசாயிகள்.

ஒரு பனை மரம் தரும் பலன்கள்

ஒரு பனை மரம் ஆண்டுக்கு நூற்றி ஐம்பது லிட்டர் பதநீர், ஒரு கிலோ தும்பு, பதினாறு நார் முடிச்சுகள், இருபத்தி நான்கு கிலோ வெல்லம், இரண்டு கூடைகள், இரண்டு தூரிகைகள், ஆறு பாய்கள் கிடைக்கிறது. இப்படி ஆண்டுக்கு ஆறு ஆயிரம் முதல் எட்டு ஆயிரம் வரை வருமானம் தருகிறது.

இந்தியாவில் உள்ள பனை மரங்களில் ஐம்பது சதவீத பனை மரங்கள் தமிழ் நாட்டில் தான் உள்ளது. ஆனால் அவை நாகரிகத்தின் பேரில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகிறது. கடந்த நாற்பத்தி ஐந்து ஆண்டுகளில் மட்டும் இரண்டு கோடி பனை மரங்கள் அழிந்து போயிருக்கிறது.

இப்படி பலவித நன்மைகள் தரும் நமது மாநில மரத்தை அழிய விட்டிடலாமா?

Related Articles

டெல்லியில் ஒரு நாளைக்கு ஐந்து பெண்கள் பா... டெல்லி காவல்துறையின் தரவுகளின் படி, 2018 ஆம் ஆண்டின் முதல் 3.5 மாதங்களில் ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார...
தமிழ் சீரியல்களில் மாமியார் கொடுமைகள்!... பரபரப்பான சீரியல்களை ஒளிபரப்புவதில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய நான்கு சேனல்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சீரியல்கள் எ...
மனசுல அலைபாயுதே மாதவன்னு நினைப்போ! ̵... பெண் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உரிய பதிலை அளிக்காமல் அவரை கேலி செய்யும் விதமாக பதிலளித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்.அதி...
சிம்புவின் அடுத்த படமும் ட்ராப்! –... கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிம்பு பாத்ரூம விட்டு வெளிய வரமாட்றான் என்று சிம்புவை பற்றி பேசியவர் தான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. சிம்பு ஷூட்டிங்க்கு...

Be the first to comment on "நமது மாநில மரமான பனை மரங்களின் சிறப்பம்சங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*