இ-வாலட்(E-Wallet) மூலம் ரயிலில் முன்பதிவு செய்யும் புதிய வசதியைப் பயணிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது ஐஆர்சிடிசி. ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ திறன்பேசி செயலியான ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட்(IRCTC Rail Connect) என்ற செயலியில் இ-வாலட் மூலம் இனி பயணிகள் ரயில் பயண சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். பேடிஎம்(PayTm), மொபிக்விக்(Mobikwik) போன்ற இ-வாலட்கள் போலவே ஐஆர்சிடிசியின் வாலட்டையும் பயணிகள் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஆர்சிடிசியின் புதிய அறிவிப்புகள்
ஐஆர்சிடிசி இணையதளத்தில் பதிவு செய்து கொள்வதன் மூலம் ஐஆர்சிடிசியின் இ-வாலட் வசதியைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆறு வங்கிகள் வரை இந்த இ – வாலட்டில் பயணிகள் இணைத்து பயன்படுத்தி கொள்ள இயலும்.
ஐஆர்சிடிசி தனது பயணிகளுக்கு வாடகை கார் வசதியையும் தருகிறது. முன்னதாக வாடகை கார் நிறுவனமான ஒலாவோடு ஐஆர்சிடிசி நிறுவனம் தனது பயணிகளுக்கு வாடகை கார் வசதியைத் தரும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும் ரயில் பயணங்களில் இருக்கும் பொழுதே தங்களுக்கு விருப்பமான உணவகங்களில் இருந்து விருப்பமான உணவைப் பெறும் வகையிலான சேவையை புட் ஆன் டிராக்(Food on Track) என்ற திறன்பேசி செயலியின் மூலம் பயணிகள் பெறலாம் என்றும் ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. பிஎன்ஆர் எண்ணை(PNR Number) வைத்து பயணிகள் உணவு தருவிக்கலாம். ஆன்லைன், ஆப்லைன், க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட், கேஷ் ஆன் டெலிவிரி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்தலாம்.
உணவை விற்பனை செய்யும் விற்பனையாளர் ரசீது தர தவறினால், உணவு இலவசம் என்ற புதிய கொள்கையையும் ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
Be the first to comment on "ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய புதிய வசதியை அறிமுகம் செய்தது ஐஆர்சிடிசி"