கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவன் ” தக்ஸ் ஆப் இந்துஸ்தான் ” படக்குழுவினரிடம் ” உங்கள் படத்தை தமிழகம் கொண்டாடப் போவது உறுதி, அதே போல பரியேறும் பெருமாள் படமும் அங்கு கொண்டாடப்பட வேண்டும்” என்று பரியேறும் பெருமாள் படத்தைக் குறிப்பிட்டு டுவிட்டரில் எழுதி இருந்தார்.
அப்படி பலர் இந்தப் படத்திற்காக பலத்த எதிர்பார்ப்புடன் காத்து இருந்தனர். காரணம் ட்ரெய்லர் அப்படி. பைரேட்ஸ் ஆப் கரிபீயன் சாயலில் அமீர்கான் கதாபாத்திரம், மிரட்டலான அமிதாப்பின் தோற்றம், கத்ரீனா கைஃபின் கவர்ச்சியான நடனம், பாத்திமாவின் சண்டைக்காட்சிகள் என்று ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பாகுபலி, பத்மாவதி போன்ற படங்களை போல இருக்குமா? அந்தப் படங்களின் வசூலை முறியடிக்குமா? என்ற எதிர்பார்ப்புடன், மேலே குறிப்பிட்ட இரண்டு படங்களையும் மிஞ்சி விடும் என்ற நம்பிக்கையுடன் தியேட்டரில் ரசிகர்கள் அமர்ந்திருந்தார்கள்.
1795 ல் நடக்கும் கதை என தொடங்கியது படம். இந்திய சாம்ராஜ்யங்களை கைப்பற்றிய ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி மிச்சம் இருக்கும் ஒரு சாம்ராஜ்யத்தை நம்ப வைத்து கழுத்து அறுத்து அடிமை படுத்துகிறது. அந்த சாம்ராஜ்யத்தில் இருந்து கடைசியாக சபீரா என்ற சிறுமி இருக்கிறாள். அவளை ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆசாத் எனும் வீரர் காப்பாற்றுகிறார். ஆசாத் தன்னுடன் சில நபர்களை சேர்த்துக் கொண்டு ஆங்கிலேயர்களுக்கு அவ்வப்போது குடைச்சல் தருகிறார்.
ஆசாத்தை (அமிதாப்பை) பிடிக்க அமீர்கானை உளவாளியாக அனுப்புகிறார்கள் வெள்ளையர்கள். இந்துஸ்தானியான அவர் ஆசாத்தை பணத்திற்காக வெள்ளையர்களிடம் பிடித்துக் கொடுத்தாரா? என்பது மீதிக்கதை. மொள்ளமாரியாக நடித்து இருக்கும் அமீர்கான் காமெடி பண்ணுகிறேன் என்ற பெயரில் கடுப்பேற்றுகிறார். இவருடைய காமெடி காட்சிகள் எப்போது முடியும், அமிதாப் மற்றும் சபீராவின் கம்பீரமான சண்டைக் காட்சிகள் எப்போது வரும் என்று ஏங்க வைக்கிறது அமீர்கானின் மொள்ளமாரித்தன காட்சிகள்.
“நீ நல்லவனா?கெட்டவனா?” ” நல்லவனோ கெட்டவனோ வாழ்ந்துட்டு இருக்கமில்ல?அதான் சிறப்பு ”
“எனக்கு ஏமாத்தறது பழக்கம்… ” ” எனக்கு நம்புறது பழக்கம்… ” போன்ற வசனங்கள் கைதட்டல் பெற்றது.
படத்தின் ஒரே பலம் அமிதாப் மட்டுமே. எம். ஜி. ஆர், சிவாஜி, கட்டப்பா சத்யராஜ் என்று கம்பீரமான நடிகர்களின் சாயல் அவருடைய நடிப்பில் தெரிந்தது. அமீர்கானின் நண்பராக நடித்திருந்தவருக்கு தமிழ் டப்பிங்கில் எம். ஜி. ஆரின் “என்ன பதத்துக்கு போன… வத தென்னை பதமா… ” டைப் தமிழில் பேசியிருக்கிறார்கள். அது சிரிப்பை வர வைக்காமல் எரிச்சலை தான் தந்தது. மற்றபடி கத்ரீனா கைஃப், பாத்திமா இருவரும் தங்களுக்கு தந்த வேலையை முடிந்த வரை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.பிண்ணனி இசை பல இடங்களில் எரிச்சலை தந்தது. அமிதாப்புடன் அமீர்கான் சேர்ந்து நடனமாடும் பாடல் மட்டுமே கேட்கும் ரகம். கேமரா, எடிட்டிங், கிராபிக்ஸ், சவுண்ட் டிசைன் போன்ற வேலைப்பாடுகள் அற்புதம்.
மொத்தத்தில் ஒரு சுமாரான ஹாலிவுட் படம் பார்த்தது போன்ற உணர்வை மட்டுமே தந்தது “தக்ஸ் ஆப் இந்துஸ்தான்”. பைரட்ஸ் ஆஃப் கரீபியன், பாகுபலி, பத்மாவதி படங்களை மனதில் வைத்துக் கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தாள் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும்.
Be the first to comment on "நம்ப வைத்து ஏமாற்றிய அமீர்கான் – தக்ஸ் ஆப் இந்துஸ்தான் விமர்சனம்!"