43வது சென்னை புத்தக திருவிழா 2020ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி தொடங்கியது. தொடங்கி வைக்க தமிழக முதல்வர் எடிப்பாடி பழனிச்சாமி வந்தார். அடுத்த வருட புத்தக திருவிழாவிற்கு நிதி உதவியாக 75 லட்சம் தருவதாக அறிவித்தார். அப்போது முதலே பிரச்சினை தான். நிதி உதவி தரும் அரசுக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்ள வேண்டுமென்று தமிழக அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்கிறார்கள் என மக்கள் செய்தி மையம் ஸ்டாலை அகற்றியது பபாசி. அது மட்டுமின்றி தமிழக அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது எனவும் அறிவித்தது. இதுகுறித்து Chennai Book Fair-ல், அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததால் ‘மக்கள் செய்தி மையம்’ அரங்கின் அனுமதியை ரத்து செய்து, பத்திரிகையாளர் அன்பழகனையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அன்பழகன் உடனே விடுவிக்கப்பட்டு, உரிம அனுமதியும் திருப்பித் தரப்பட வேண்டும்! என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தனது கண்டனத்தை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
தமிழக அரசு அடுத்த வருடம் 75 லட்சம் ரூபாய் நீதி உதவி கொடுக்கிறதா சொன்னதுக்கே இப்பவே விசுவாசமாக வால் ஆட்ட தொடங்கி விட்டது பபாசி என்று பேசும் அளவுக்கு பபாசி நடந்துகொள்வது பல எழுத்தாளர்களை கொந்தளிக்க செய்துள்ளது. பபாசியின் இந்த தவறான செயலுக்கு எதிரான எழுத்தாளர்களின் பதிவுகளை பார்ப்போம்.
பவா செல்லத்துரை:
இதுவரை நாங்கள் எழுதின எல்லாமே அதிகாரத்திற்கும்,அரசுக்கும், இந்த சமூக அமைப்பிற்க்கும் எதிரானவையே. அரங்கத்தை காலி செய்யச்சொன்னால், கடன்வாங்கிக் கட்டின டெபாசிட் பணத்தை திருப்பிக்கொடுங்கள். மௌண்ட் ரோட்டில் கடை போட்டு விற்றுக்கொள்கிறோம்.
ஸ்ரீதர் சுப்ரமணியம்:
* தமிழக அரசில் முட்டை ஊழல் – கிறிஸ்டி புட்ஸின் முட்டை அரசாங்கம்
* அம்மா உணவகம் – 300 கோடி ரூபாய் இழப்பு
* தமிழக அரசின் ரூபாய் 15,000 கோடி ஊழல்
இவைதான் அந்த ஆட்சேபத்துக்குரிய புத்தகங்கள். இவற்றின் இணையதள லின்க்கை முதல் கமெண்டில் கொடுத்துள்ளேன். முடிந்த அளவு இந்த லின்க்கை பரப்பவும். அன்பழகன் வெளியே வரும் பொழுது சுமார் இரண்டு மூன்று லட்சம் பிரதிகளுக்கான ஆர்டர் போய் சேர்ந்திருக்க வேண்டும்.
இது தவிர எல்டிடிஈ பற்றிய சில புத்தகங்கள் புத்தக விழாவில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் தமிழக பாஜக கோரிக்கைகள் எழுப்பி இருப்பதாக செய்திகள் கசிகின்றன. அந்தப்புத்தகத்தின் லின்க் இருந்தாலும் அதையும் பகிருங்கள்.
பாஜகவினர் கவனத்துக்கு…
அன்புள்ள பாஜக அபிமானிகள் கவனத்துக்கு
பபாசி சர்ச்சை சம்பந்தமாக நீங்கள் பதிவுகள் எழுதி வருகிறீர்கள். அவற்றில் ‘கருத்துரிமை’ பற்றி விநோதமான, விசித்திரமான விளக்கங்கள் வெளிப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. அவை குறித்து உங்களிடம் பேசலாம் என்று நினைத்தேன்.
1) புத்தக விழா முழுவதும் இடதுசாரி புத்தகங்கள் மட்டுமே நிரம்பி இருக்கின்றன
இது உங்களின் முக்கிய குற்றச்சாட்டு. ஆனால் நான் பார்த்தவரை இடது அல்லாத நிறைய புத்தக ஸ்டால்கள் இருக்கின்றன. ஆர்எஸ்எஸ்சின் விஜயபாரதம் ஸ்டால் போட்டிருக்கிறார்கள். சத்குரு ஜக்கி வாசுதேவ் ஸ்டால் இருக்கிறது. மஹாத்ரியா என்ற பெயரில் ஆன்மிகம் பேசும் ஒரு சாமியார் ஸ்டால் எல்லா இடங்களிலும் அமைத்து விடுகிறார்கள். ராமகிருஷ்ண மடம் ஸ்டால் இருக்கிறது. ‘நமது அம்மா’ ஸ்டால் கூட இருக்கிறது.
ஆனாலும் இடதுசாரி புத்தகங்களே பெரும்பாலும் ஆக்கிரமிக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அது என்ன தண்டிக்கப்பட வேண்டிய ஒரு குற்றமா? வலதுசாரி புத்தகங்கள் அதிகமில்லை என்றால் அதற்கு யார் காரணம்? வலது சாரிகள் யாரும் புத்தகங்கள் எழுதக் கூடாது என்று அமித் ஷா சட்டம் ஏதாவது இயற்றி இருக்கிறாரா என்ன? ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகளில் சர்வதேச ஆய்வுத்தரத்துடன் எழுதப்பட்ட வலதுசாரி வரலாற்று நூல் பெயர் ஒன்றையாவது சொல்லுங்கள் என்று நான் இட்ட பதிவில் ஒரு பெயர் கூட கிடைக்கவில்லை. அங்கும் வந்து வழக்கமான கிண்டல் கேலி செய்து விட்டுப் போய் விட்டீர்கள். மோடியும் கூட ஆட்சிக்கு வந்த உடனேயே ஒரு ஆர்எஸ்எஸ் ‘வரலாற்று ஆய்வாளரை’ இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்துக்கு தலைவராக நியமித்தார். ஒன்றும் நடக்கவில்லை. ஏன் என்று யோசித்துப் பார்த்தீர்களா?
சரி, சர்வதேச ஆய்வுத்தரம் கூட வேண்டாம். தீனாநாத் பத்ரா என்ற வரலாற்று நிபுணர் உங்களிடம் இருக்கிறார். வேதகாலத்தில் மோட்டார் கார், ஜெனட்டிக் இன்ஜினியரிங் என்றெல்லாம் ஆய்வு செய்து எழுதி வைத்திருக்கிறார். அந்தப்புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து அரங்கில் வைக்கலாமே? அதைத் தடை செய்ய வேண்டும் கேட்கவில்லையே?
2) ஊழல் குற்றச்சாட்டு என்று சும்மா ஆதாரமில்லாமல் சொல்லி விட்டால் சரியா? (ரஃபேல் பற்றி கன்னா பின்னாவென்று சொல்லி விட்டு பின்னர் ஒன்றும் இல்லை என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்து விட்டது.)
ஊழல் குற்றச்சாட்டுகள் என்பவை எப்போதுமே அப்படிதான். அவை வெளிவரும் பொழுது பெரும் கோபமும், ஆத்திரமும் மக்கள் கண்ணை மறைக்கவே செய்யும். எதிர்க்கட்சிகளும் அதனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தவே முனையும். 2ஜி விஷயத்தில் பாஜக இப்படித்தான் செய்தது. கடைசியில் அந்த வழக்கில் எல்லாரும் விடுதலையானார்கள். 2ஜியை வைத்து விமர்சனங்கள் செய்து கொண்டிருந்த நான் தீர்ப்பு வந்ததும் செய்த விமர்சனங்களுக்கு மன்னிப்புக் கோரி ஒரு பதிவு எழுதினேன். ஆனால் பாஜகவில் யாராவது ‘தவறாக பிரச்சாரம் செய்து மக்களை மடை மாற்றி விட்டோம்,’ என்று மன்னிப்புக் கோரி அறிக்கைகள் விட்டார்களா? நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகும் கூட இன்றும் கனிமொழியையும், ராசாவையும் 2ஜியில் தொடர்பு படுத்தி நீங்கள் பதிவுகள் எழுதி வருவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களின் ‘கருத்துரிமை standard’ படி அப்படி செய்யக் கூடாதே சார்?
3) ஊழல் குற்றச்சாட்டு என்றால் போலீசில் புகார் கொடுப்பீர்களா அல்லது புத்தகம் எழுதி கல்லா கட்டுவீர்களா?
போலீசில் புகார் செய்வது எல்லாராலும் இயலாத காரியமாக இருக்கும். அதுவுமின்றி ஒரு குழு போலீஸ் புகார், வழக்கு என்று போகும்; வேறொரு குழு தெருவில் இறங்கிப் போராடும். இன்னொரு குழு அது பற்றி விழிப்புணர்வு கொண்டு வர எழுதவோ பேசவோ முனையும். இதுதான் 2ஜியிலும் நடந்தது. போபர்ஸ் சர்ச்சையிலும் நடந்தது. சுவீடனில் வந்த ஒரே ஒரு ரேடியோ செய்திதான் போபர்ஸ் வழக்குக்கு திரி கொளுத்தியது. அப்போது அவர்களிடம் போய் ‘ஏன் ரேடியோவில் பேசுகிறீர்கள்? நீதிமன்றம் போயிருக்க வேண்டியதுதானே,’ என்று யாரும் கேட்கவில்லை. 2ஜி சர்ச்சை வெடித்திருந்த சமயம் துக்ளக் முழுக்க ஒவ்வொரு வாரமும் அது பற்றித்தான் இருந்தது. அப்போது யாரும், ‘அதுதான் வழக்கு பதிவு பண்ணியாயிற்றே ஏன் இன்னும் எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள், சட்டம் தன் கடமையை செய்யட்டுமே,’ என்று கேட்கவில்லை. மன்மோகன் சிங் ஆட்சியில் எழுந்த ஊழல் புகார்களை விமர்சித்து பாபா ராமதேவ், அன்னா ஹசாரே போன்றோர் போராட்டங்கள் துவங்கிய பொழுது அவர்களை நீங்கள் வீட்டுக்குப் போக சொல்லவில்லை. உங்கள் தொண்டர்களை அனுப்பி போராட்டத்துக்கு வலு சேர்க்கவே செய்தீர்கள், அல்லவா?
4) ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை வீசுவது கருத்துரிமையில் வராது.
‘திராவிடம் வந்து தமிழகத்தை நாசம் செய்து விட்டது,’ என்று பேசாத இந்துத்துவரே கிடையாது. அந்த வாதத்தை தவிடு பொடியாக்கி மாதங்கள் பல ஆகிறது. நானும் பல்வேறு அழுத்தமான ஆதாரங்களுடன் குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு எல்லாம் பதிவுகள் எழுதி விட்டேன். எல்லாப் parametersகளிலும் பாஜக நீண்ட காலம் ஆண்ட மாநிலங்கள் தமிழகத்தை விட படு மோசமாக செயல்பட்டு வருகின்றன என்றெல்லாம் நிரூபித்து விட்டேன். ‘தமிழகம் நாசம் ஆகி விட்டது,’ என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்டு விட்டேன். வழக்கமாக குழுமி என்னை அவலமான வார்த்தைகளில் இழிவு செய்யும் இந்துத்துவர்கள் கூட அந்தப்பதிவுகளில் எல்லாம் ‘கண்டுக்காமல்’ போய் விடுகிறீர்கள்.
போலவே, ஜெஎன்யூ பற்றி பாஜக ஐடி செல் பரப்பிய வாட்சப் வதந்திகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி விட்டேன். ஆயினும் இன்றைக்கும் அதே பொய்களை உற்சாகமாக பரப்பிக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.
வேலையின்மை பற்றிய அறிக்கை நிறுத்தப்பட்டிருந்த பொழுது பிரதமரே அதனை மறுதலித்து மக்களவையில் பேசினார். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் அதே அறிக்கை வெளியாகி பிரதமர் பேசியது தவறு என்று ஆகிப் போனது. ஆதாரமே இல்லாமல் பொய்களை மக்களவையிலேயே அள்ளி விட பிரதமருக்கு இருக்கும் கருத்துரிமை பாமர இந்தியனுக்கு இருக்கக் கூடாதா என்ன?
தவிர, நாளைக்கு பாஜக ஐடி செல்லில் இருந்து தீபிகா பற்றியோ, ஜெஎன்யூ பற்றியோ அசிங்கமான வாட்சப் தகவல் ஏதாவது வந்தால் உங்களின் ‘கருத்துரிமை standard’ படி அதற்கு ஆதாரத்தையும் கூடவே சேர்த்து அனுப்ப சொல்லி கேட்பீர்கள் என்று நம்புகிறேன்.
5) ஒரு விஷயத்தில் என்ன இருக்கிறது என்று தீர விசாரிக்காமல், தெரிந்து கொள்ளாமல் பொங்கக் கூடாது.
பத்மாவத் விஷயத்தில் ஹரியானா, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சல் மாநிலங்களை சேர்ந்த பாஜகவினர் கடுமையாக பொங்கினார்கள். பஸ்ஸுகள் உட்பட பொது சொத்துகள் மானாவாரியாக சேதப்படுத்தப் பட்டன. திரைக் கலைஞர்களின் தலைகளுக்கு விலைகள் வைக்கப் பட்டன. போராட்டங்களில் உயிரிழப்புகளும் நேர்ந்தன. கடைசியாக, படத்தைப் பார்த்தால் அவர்கள் சாட்டிய எந்தக் குற்றச்சாட்டும் உண்மையில்லை என்று ஆகி விட்டது. அதாவது ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கு அவ்வளவு ஆர்ப்பாட்டங்கள். அப்போதும் படத்துக்கு எதிராகவே நீங்கள் எல்லாரும் பொங்கிக்கொண்டுதான் இருந்தீர்கள். அப்போது இது தவறில்லையா, படத்தைப் பார்க்காமல் அதை விமர்சிக்கலாமா என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. (அவர்களின் வன்முறையைக் கூட கண்டிக்கவில்லை; அது தனி விஷயம்.)
சமீபத்தில் கூட தீபிகாவின் படம் ‘சபாக்’ கில் ஆசிட் குற்றவாளியை இந்துவாக காட்டுகிறார்கள்; உண்மை சம்பவத்தில் அவன் ஒரு முஸ்லீம் என்று பாஜகவினர் கோபமாக பரப்பிக் கொண்டு இருந்தனர். படத்தில் அவனை முஸ்லீம் பெயருடன்தான் சித்தரித்து இருந்தனர். ஆனால் உண்மை வெளியான பிறகும் கூட நிறைய பேர் அந்தப் பொய்யை maintain பண்ணிக்கொண்டே இருந்ததை பார்த்தேன்.
இங்கே கடைசியாக ஒரு விஷயம், அடுத்த நூறு ஆண்டுகளுக்கு நீங்கள் ஆட்சியில் இருக்கப் போகிறீர்கள் என்றால் கருத்துரிமை, போராட்டங்கள் பற்றி இப்படிப்பட்ட நிலைப்பாடுகளை எடுக்கலாம். ஆனால் அது நடக்காது என்று உங்களுக்கே தெரியும் என்று நம்புகிறேன். ஐந்து வருடமோ பத்து வருடமோ, மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் பொழுது நீங்களும் அரசு மீது குற்றங்கள் சாட்ட வேண்டி இருக்கும். தெருவில் இறங்கிப் போராட வேண்டி இருக்கும். ஊழல் புகார்கள் சுமத்த வேண்டி இருக்கும். அப்போதெல்லாம் உங்களின் இன்றைய நிலைப்பாடு பெரும் சங்கடத்தை விளைவிக்கும். ‘அதைக்கேட்டியே, இதைக் கேட்டாயா?’ என்ற உங்களின் பலமான ஆயுதம் அப்போது உங்களுக்கே எதிராக திருப்பப்படும் ஆபத்து இருக்கிறது.
எனவே உங்கள் ஆயுதங்களை கவனமாக பயன்படுத்துங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆதவன் தீட்சண்யா:
அரசுக்கு ஆதரவாக மட்டுமே புத்தகங்களை அச்சடித்து விற்க வேண்டுமென்றால் கருமாதி பத்திரிக்கை தான் அச்சடித்து விற்க வேண்டும்.
சு. வெங்கடேசன்:
அரசுக்கு எதிரான புத்தகங்களை புத்தகக் காட்சியில் வைக்கக் கூடாதென்றால் சமையல் குறிப்பு புத்தகங்கள் கூட வைக்கக் கூடாது. ஏனென்றால் அதில் வரும் வெங்காயம் மத்திய அரசுக்கு எதிரானது; ‘உப்பு’ மாநில அரசுக்கு எதிரானது.
கரன் கார்கி:
விடுதலை இலக்கியங்கள் ஒரு போதும் கோழைகளை மகிழ்ச்சிபடுத்தாது மாறாக அச்சப்படுத்தும். புத்தகங்களை கண்டு அஞ்சுகிற அதிகாரம் நிச்சயம் நேர்மையற்றதாய் மட்டுமே இருக்க முடியும். வயிற்றுப்பிழப்புக்காக,அதிகார போதைக்காக கொஞ்சமும் மானமற்று காலில் விழுந்து ஆதாயம் பெறுவது எப்படி புத்தகம் முன்பதிவிற்க்கு அனுகவும். வேப்பிலையை பார்த்தால் பேய்கள் அலறுமாம், புத்தகங்களைப் பார்த்தால் பாசிஸ்டுகள் அலறுகிறார்கள். மலையை,கனிமவளத்தை,ஆற்றுமணலை சூறையாடுகிறவனோடு, கை கோர்க்கும் ஆட்கள் புத்தகங்களை கண்டு அஞ்சுவது இயல்பு தானே. இது ஒரு பதிப்பகத்துக்கு எதிரான செயல் மட்டுமல்ல வாசகர்களுக்கெதிரான நிலைபாடும் கூட எழுதுகிறவனாக நான் இதை எதிர்க்கிறேன்.
ஈரோடு கதிர்:
சென்னைப் புத்தகத் திருவிழாவில் மிக உறுத்தலாக இருந்த விசயம், குறிப்பிட்ட சில அரங்குகளைக் கடந்ததும், முற்றிலும் காற்றோட்டம் இல்லாமல் கடும் புழுக்கம் நிலவுவதே. அதிலும் F வரிசை அரங்குகள் இருக்கும் இறுதிப் பகுதிக்குச் சென்றாலே எப்போது தப்பித்து நுழைவுப் பக்கம் வந்தும் இதமான காற்றைச் சுவாசிப்போம் என்றிருக்கின்றது.
அடுத்தது, எந்த அடிப்படையில் அரங்குகள் ஒதுக்குகிறார்கள் எனத் தெரியவில்லை. ஒரு அரங்கில் ‘காமராசர்’ குறித்த ஒரே ஒரு புத்தகம் மட்டுமே பார்வைக்கும்- விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தது. இன்னொரு அரங்கில் ‘ஆச்சி மசாலா’ முதலாளியின் தமிழ் – ஆங்கிலம் என மொத்தமாகவே இரண்டு புத்தகங்கள் மட்டுமே பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. அந்த அரங்கு நகைக் கடைக்கு நிகராக அலங்கரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதே போன்று இன்னும்கூட இருக்கலாம்
அரங்கிற்குச் செலுத்தப்படும் வாடகை, ஆட்கள் சம்பளம், கொண்டு வந்து – திரும்பிக் கொண்டு செல்லும் செலவுகள், ஓராண்டாக செய்திருந்த முதலீடு உட்பட பலவற்றையும் கடந்து கணிசமான லாபம் ஈட்டும் இடமாக ஒரு புத்தக கண்காட்சி அரங்கு இருக்கவேண்டும். பல்வேறு கட்ட உழைப்பு மற்றும் சிரமங்களுக்கிடையே அரங்கினை வாடகைக்கு எடுத்து நிறைய தலைப்புகளில் அடுக்கி விற்பனைக்கு பலரும் காத்திருப்போர் மத்தியில், ஒரு புத்தகம், இரண்டு புத்தகங்களுக்கு மட்டுமே ஒரு அரங்கினைப் பிடித்து அமர்ந்திருப்பவர்கள் நோக்கம் என்னவாக இருந்தாலும், கடும் மனச்சோர்வையும், அயர்ச்சியையும் உருவாக்குவார்கள்.
இந்த நிலையில், அரசு குறித்த விமர்சனங்களை, குறைகளை படைப்பின் வழியே வைக்கக்கூடாது என்ற அடிப்படையில், மக்கள் செய்தி மையம் பதிப்பகத்தை வெளியேற்றியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
எந்தப் புத்தகங்களுக்காக அந்த பதிப்பகம் வெளியேற்றப்பட்டதோ, அந்தப் புத்தகங்களை முடிந்தவரை அனைவரும் தம் அரங்கில் காட்சி மற்றும் விற்பனைக்கு வைப்பதே சரியான எதிர்ப்பாக இருக்கும் என நினைக்கின்றேன்
Be the first to comment on "அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது! ஆர்டர் போட்ட பபாசி கொந்தளித்த எழுத்தாளர்கள்!"