“சைக்கோ பெண்களுக்கான படம்!”

Psycho tamil movie is for Women!

கடந்த ஜனவரி 24ம் தேதியன்று ரிலீசான மிஷ்கினின் சைக்கோ படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் படத்திற்கான நேர்மறை எதிர்மறை விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பத்திரிக்கைகளில் நிறைய வந்துகொண்டே இருக்கின்றன. அப்படி வந்த இந்து தமிழ் திசையின் சைக்கோ விமர்சனத்தில் பெண்கள் இந்தப் படத்தை தவிர்க்கவும் என்ற வரியை காண முடிந்தது. சைக்கோ படத்தை பெண்கள் ஏன் பார்க்க கூடாது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.    

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், இதயம் பலவீனமானவர்கள் இந்தப் படத்தை பார்க்க வேண்டாம் என்று கூறுவதில் அறிவியல் ரீதியாக ஒரு நியாயம் உள்ளது. பெண்கள் பார்க்க தவிர்க்கனும் என்பதில் அப்படி என்ன நியாயம் உள்ளது? 

சைக்கோ படத்தில் தொடர்ந்து பெண்கள் தான் வில்லனால் (அங்குலிமாலாவால்) கொலை செய்யப்படுகிறார்கள்… ஒரு பெண்ணால் தான் அவன் பாதிக்கப்படுகிறான்… ஒரு பெண்ணால் தான் மனம் திருந்துகிறான்… இப்படி பெண்கள் பற்றிய விஷயங்கள் தான் இந்தப் படத்தில் நிறைய இருக்கின்றன. அப்படி இருக்கையில் இது எப்படி பெண்கள் பார்க்க தகுதியற்ற படமாக மாறும்? 

என்னை பொறுத்தவரை இந்தப் படத்தை நான் 18 வயதை தாண்டிய அனைத்து பெண்களுக்கான படம் என்பேன். அம்மா என்கிற பெண்ணின் அரவணைப்பு இல்லாததால் அனாதையான அங்குலிமாலா ஒரு கிறித்துவ பள்ளியில் படித்து வருகிறான். அங்கு ஒரு நாள் அவன் வகுப்பறையில் சுயமைதுனம் செய்துகொண்டிருக்க அதை ஒரு ஆசிரியை பார்த்து விடுகிறாள். அவள் நினைத்திருந்தால் அந்த சிறுவனுக்கு ஒரு அம்மாவாக சகோதரியாக இருந்து சுயமைதுனத்தைப் பற்றி புரியும்படி எடுத்துச் சொல்லியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு நான் ஒரு ஸ்ட்ரிட் டீச்சர் கண்டிப்பா நான் பனீஷ் பண்ணுவேன் என்று அவனை அனைவர் முன்பும் நிறுத்தி அவமானப்படுத்தி தண்டனை தருகிறாள். தவறு செய்த மாணவர்களை தண்டிக்கும் பொருட்டு அவனை பிரேயரில் அனைவர் முன்பும் நிறுத்தி குற்றவாளி எனும் முத்திரை குத்தி அசிங்கப்படுத்துவது, அவன் பெயரை காவல் நிலையத்தில் திருடர்களின் பெயரை… புகைப்படத்தை… நோட்டீஸ் போர்டில் வைப்பது போல் பள்ளி நோட்டீஸ் போர்டில் அறிவிப்பது போன்ற “பொது சபையில் நிறுத்தி தண்டனை வழங்குதல்” என்ற நடைமுறை இன்றும் பல பள்ளிகளில் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அப்படி வழங்கப்படும் தண்டனைகளில் ஆசிரியைகளுக்கும் பெரும்பங்குண்டு. 

நான் படித்தது அரசு உதவிபெறும் பள்ளி. அந்தப் பள்ளியில் நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். வகுப்பறையில் ஆசிரியர் இல்லாததால் மாணவ மாணவிகள் எல்லோரும் கதை பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென வகுப்பறைக்குள் நுழைந்த ஆசிரியை ச்சீ கருமம் என்று வந்த வேகத்தில் வகுப்பறையை விட்டு வெளியேறினார். அவர் அப்படி வெளியேறிய பிறகு தான் எங்களுக்குத் தெரிந்தது முதல் பெஞ்சில் அமரும் மணிகண்டன் என்ற மாணவன் சுவரின் ஓரமாக படுத்து பெஞ்ச் மறைவில் சுயமைதுனம் செய்துகொண்டிருந்தான் என்று. ஆசிரியை வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில் பத்தாம் வகுப்பு மாணவர்களில் தடியாக இருக்கும் நான்கு பேர் வந்து அவனை ஒரு குற்றவாளியை இழுத்துச் செல்வது போல தரதரவென இழுத்துச் சென்றனர். தலைமை ஆசிரியர் அறையின் ஒரு ஓரத்தில் அவன் தலைகுனிந்து நின்றுகொண்டிருக்க ஆசிரியைகள் அனைவரும் தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டு அவனை ஒரு அற்ப புழுவை பார்ப்பது போல் பார்த்தனர். அந்த நிகழ்வு முடிந்து பல நாட்களாகியும் அவன் மீதான ஆசிரியைகளின் பார்வை மட்டும் மாறவில்லை. அது மட்டுமின்றி அந்த மாணவனுடன் நாங்கள் பேசி சிரித்தாலும் அவன் கூட என்ன உனக்கு பேச்சு வேண்டி கிடக்கு என்று எங்களை திட்டி அவனை தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். மிகுந்த மன உளைச்சலை அனுபவித்த மணிகண்டன் அடுத்த சில நாட்களில் வேறு ஒரு பள்ளியில் சேர்ந்துகொண்டான். இப்படி அவன் ஒருமுறை செய்த தவறை பலமுறை பேசிப்பேசி அந்தப் பள்ளியை விட்டு துரத்தியது அந்த ஆசிரியை கூட்டம். அப்படிப்பட்ட ஆசிரியையை தான் மிஷ்கின் தன்னுடைய படத்தில் காட்டி உள்ளார். ஆக இது ஆசிரியைகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று தான் சொல்வேன். 

படத்தில் நிர்வாண காட்சி உள்ளது, ரத்தக் காட்சிகள் நிறைய உள்ளது இதை எப்படி பெண்கள் பொதுவெளியில் பார்ப்பார்கள்? ஆண்கள் கூடியிருக்கும் தியேட்டரில் நிர்வாண காட்சி வரும்போது பெண்களால் அதை எப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும்? ச்சி என்று தலையை குனிந்துகொள்ளமாட்டார்களா? என்று சிலர் சொல்கிறார்கள். இப்படி சொல்பவர்கள் ஆண்கள் தானே தவிர பெண்கள் ஒருபோதும் இப்படி சொல்வதில்லை. பெண்கள் பார்க்காத நிர்வாணமா? ரத்தமா? 

தந்தையோ கணவனோ சகோதரனோ கழிவறைக்கு கூட செல்ல முடியாத நிலையில் படுக்கையில் விழுந்தால் நிர்வாணத்தை எல்லாம் மறந்து அவனை குளிப்பாட்டுவது, அவனுக்கு உடைமாற்றுவது, அவன் கழிவுகளை அகற்றுவது என்று அத்தனை வேலைகளையும் செய்பவள் பெண் தான். ஆணைப் போல பெண்கள் சுயமாக கழிவறைக்கு கூட செல்ல முடியாத நிலையில் படுக்கையில் விழுந்தால் எத்தனை ஆண்கள் அவர்களை தாய்மையுடன் பார்த்துக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்? பொம்பள ஆள் யாராச்சும் கூட இருந்தா பரவால என்று அந்தக் கடமையை வேறு ஒரு பெண்ணிடம் தான் நூற்றுக்கு 99% ஆண்கள் ஒப்படைக்கிறார்கள். அதே போல பெண்கள் பார்க்காத ரத்தமா? மாதம் மூன்று நாட்கள் அவர்கள் அனுபவிக்கும் சித்ரவதை அவர்களை ஆண்களை விட பலமான மனிதர்களாக மாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 

பெண்கள் தியேட்டர் திரையில் காட்டப்படும் வன்முறைக் காட்சிகளை பார்த்து ஸ்ஸ் என்று கண்களை மூடியது, ஆபாசக் காட்சிகளை பார்த்து ப்ச் என்று தலையை குனிந்தது எல்லாம் அந்தக் காலம். இப்போது போய் பெண்கள் இந்தப் படத்தைப் பார்ப்பதை தவிர்ப்பது நலம் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? இதுவும் ஒரு வகையில் ஆண்களால் பெண்கள் மீது நடத்தப்படும் ஆதிக்கமே. 

Related Articles

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு யுபிஎஸ்சி ... கடந்த ஞாயிற்றுக்கிழமை 12000க்கும்  மேற்பட்ட யுபிஎஸ்சி தேர்வர்கள் தங்களுக்கான முதல்நிலை தேர்வுகளை விஜயவாடா நகரில் ஒதுக்கப்பட்டிருந்த 27 தேர்வு  மையங்கள...
மூன்றாம் உலகப் போர் எப்பவோ ஆரம்பிச்சிடுச... கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, படங்களைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறார் விக்ரம் பிரபு. கனக்கச்சிதமான தோற்ற...
லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கை எப்படிபட்டது... லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கையைப் பற்றி அலுவலகங்களில் பணிபுரியும் சாமானியர்களான நாம் யாருமே அவ்வளவாக தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. நமக்குத் தெரிந்த...
நான்கு முறை தங்கம் வென்ற மாரத்தான் வீராங... தற்போதைய காமன்வெல்த் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று அதிக பதக்கங்கள் வென்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இது போன்ற உலக அள...

Be the first to comment on "“சைக்கோ பெண்களுக்கான படம்!”"

Leave a comment

Your email address will not be published.


*