ஆண்ட்ரியா – அதிகம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு  அறிவார்ந்த நடிகை! 

ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தில் வக்கீல் அப்பாவிற்கு மகளாக பிறந்தவர் ஆண்ட்ரியா. ஏ. ஆர் ரகுமான் இசையில் உருவான ஒரு காபி விளம்பரத்தில் தமிழ் பட சிவாவுடன் இணைந்து நடித்து சினிமா ஊடகத்தில் அறிமுகமானார் ஆண்ட்ரியா. அதைத்தொடர்ந்து மணிரத்தினத்தின் உதவி இயக்குநர் இயக்கத்தில் கண்ட நால் முதல் என்கிற படத்தில்  துணை நடிகையாக வந்து சென்றார். பிறகு இசைத்துறையில் பாடகியாக பயணிக்கத் தொடங்கினார்.  அப்படி அவர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கண்ணும் கண்ணும் நோக்கியா,  கற்க கற்க, ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி என் மேலே,  கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன், நீ சன்னோ ந்யூ மூனோ என்ற பாடல்களைப் பாடினார்.  இந்தப் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். 

அதேபோல யுவன் சங்கர் ராஜா மற்றும் ஆண்ட்ரியா கூட்டணியில்,  ஓ பேபி ஓ பேபி, அடடா வா அசத்தலாம், தீராத விளையாட்டுப் பிள்ளை, இதுவரை இல்லாத மாற்றம், நோ மனி நோ ஹனி,  மதுர பொண்ணு, ஏக் தோ தீன் சார், ஒரு கோப்பை கொண்டு வா  போன்ற பாடல்கள் உருவானது. இந்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் நடிகர் விஜயுடன் இணைந்து பாடியது போல யுவன் இசையில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து பாடினார். 

ஜிவி இசையில், உன் மேல ஆசைதான், பூக்கள் பூக்கும் தருணம், தேடியே தேடியே போன்ற சூப்பர் ஹிட் பாடலை பாடினார். அதைத்தொடர்ந்து தேவி ஸ்ரீபிரசாத் இசையில் “ஹூ இஸ் த ஹீரோ” ஜிப்ரான் இசையில் “சாதி மதம்” என்கிற பாடல்களை கமலுக்காக பாடினார். அதை தொடர்ந்து விஜய் ஆண்டனி இசையில் காதலிக்க பெண்ணொருத்தி என்கிற பாடல் அனிருத் இசையில் எங்கடி பொறந்த என்கிற பாடல் சந்தோஷ் நாராயணன் இசையில் மாமா டவுசர் கழண்டுச்சே என்கிற பாடல்  விவேக் மெர்வின் இசையில் லோ ஆன லைஃப் என்ற பாடல்  அரோல் கரோலி இசையில் மயக்குறானே என்கிற பாடல்  தமன் இசையில் தாடிக்காரா என்கிற பாடல்  என்று பல ஹிட் பாடல்களை தந்தார் ஆண்ட்ரியா. இப்படி பல ஹிட் பாடல்களை தந்த ஆண்ட்ரியா இதுவரை ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் தான் விருது வாங்கியிருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? யுவன் சங்கர் ராஜா இசையில் கோவா படத்திற்காக பாடிய “இதுவரை” என்கிற பாடல் விஜய் டிவி விருது வாங்கி இருக்கிறது மற்ற பாடல்கள் எல்லாம் விருதுக்கு தேர்வாகி இருக்கிறதே தவிர அதில் ஒன்று கூட ஆண்ட்ரியாவுக்கு கிடைக்கவில்லை. பாடகி அவதாரம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் டப்பிங் ஆர்டிஸ்டாக வேட்டையாடு விளையாடு கமாலினி முகர்ஜிக்கு,  ஆடுகளம் டாப்சிக்கு, நண்பன் இலியானாவுக்கு, தங்கமகன் எமி ஜாக்சனுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். 

 இப்படி நல்ல குரல்வளம் கொண்ட ஆண்ட்ரியாவுக்கு தன்னுடைய முதல் படத்திலேயே கௌதம் மேனன் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  பச்சைக்கிளி முத்துச்சரம் என்கிற படத்தில் கல்யாணி என்கிற கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார்.  அதைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, சகுனி போன்ற பெரிய பெரிய இயக்குனர்களின் படங்களில் பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்தார்.  இருந்தாலும் இந்த படங்களில் ஆண்ட்ரியா பெரிதாக ஜொலிக்கவில்லை. காரணம் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா  அழுத்தமான கதாபாத்திரத்திலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க, அந்தப் படங்களில் ஆண்ட்ரியா செகண்ட் ஹீரோயின் என்கிற தோற்றத்துடன் பார்க்கப்பட்டார். தமிழ் சினிமா சரியாக கொண்டாடாத இந்த ஆண்ட்ரியாவை மலையாள சினிமா அழகாக கொண்டாடியது என்று தான் சொல்ல வேண்டும்.  அன்னயும் ரசூலும் என்கிற மலையாளப் படத்தில் தான் ஆண்ட்ரியா முதன்முறையாக லீடு ஹீரோயினாக ஒற்றை ஹீரோயினாக ஜொலித்தார். இந்த சமயத்தில்தான் நடிகர் கமல்ஹாசனுடன் விஸ்வரூபம் படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திறமையான கலைஞர்கள் என்று தெரிந்துவிட்டால் அவர்களை  தன்னுடைய படங்களில் சரியாக பயன்படுத்திக் கொள்வது கமலஹாசனின் வழக்கம். அப்படி ஆண்ட்ரியாவை விஸ்வரூபம் படத்தில் தன்னுடைய சக பணியாளராக நடிக்க வைத்தார்.  இந்தப் படத்திலும் இரண்டு ஹீரோயின்கள் என்ற போதிலும் ஆண்ட்ரியா தான் முதன்மை ஹீரோயினாக தெரிந்தார்.  இங்கிருந்து ஆண்ட்ரியாவின்  நடிப்பு பயணம் மாறியது.  ஸ்டைலிஷான ஆண்ட்ரியாவுக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். 

ஆனால் மீண்டும் ஆண்ட்ரியாவின் நடிப்பு பயணம் சறுக்கலில் இறங்கியது என்றுதான் சொல்ல வேண்டும். என்றென்றும் புன்னகை, இங்க என்ன சொல்லுது,  அரண்மனை, பூஜை, ஆம்பள போன்ற படங்களில் கெஸ்ட் ரோலாக, செகண்ட் ஹீரோயினாக,  அல்லது ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் நாயகியாக வந்து சென்றார். இதன்பிறகு எங்கேயும் எப்போதும் என்ற சூப்பர்ஹிட் படத்தை தந்த இயக்குனர் சரவணன் இயக்கத்தில் உருவான வலியவன் படத்தில் முதன்மை ஹீரோயினாக நடித்தார். ஆனால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் பெரிய அளவில் தோல்வி அடைந்தது. மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து உத்தம வில்லன் படத்தில் பணியாற்றினார். ஆனால் இந்த படத்தில் பர்சனல் மருத்துவர் என்ற சின்ன கதாபாத்திரத்தில் மட்டுமே அவர் நடித்திருந்தார்.  விஸ்வரூபம் அளவுக்கு பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு கடைசியில் ஏமாற்றமடைந்தனர் ஆண்ட்ரியா ரசிகர்கள். இத்தனை படங்களுக்குப் பிறகு முழுக்க முழுக்க ஆண்ட்ரியாவை  கொண்டாடப் படும் விதத்தில்  “தரமணி” படம் அமைந்தது.  கௌதம் வாசுதேவ் மேனன் செல்வராகவன் கமல் ஹாசன் போன்ற தரமான இயக்குனர்களுடன் பணியாற்றிய போதும் இயக்குனர் ராமுடன் பணியாற்றியது அவருக்கு  வேறு ஒரு அனுபவத்தை பெற ஆண்ட்ரியா முற்றிலும் வித்தியாசமாக தெரிந்தார். இதுதான் நாங்கள் எதிர்பார்த்த ஆண்ட்ரியா என்று பலரும் தரமணி ஆண்ட்ரியாவை கொண்டாடினார். இந்த படத்திற்காக தான் முதன் முறையாக சிறந்த நடிகை என்ற விருதுகள் வாங்கினார் ஆண்ட்ரியா. ஆனால் இதற்கு முன் அவர் பல படங்களில் நடித்தது போல் தெரியும். ஆனால் அவர் மிகக் குறைவான படங்களில் மட்டுமே சின்ன சின்ன ரோல்களில் நடித்திருந்தார். இருந்தாலும் அப்படி தெரியக் காரணம் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அழுத்தமாக வீரியமாக  நடித்ததுதான். அதுக்குப்பிறகு மிஸ்கினின் துப்பறிவாளன் படத்தில் செம ஸ்டைலிஸ் ஆக வந்தார் ஆண்ட்ரியா. அவருக்கு  விஸ்வரூபம் படத்தை போல அந்த படம்  அமையும் என்று எதிர்பார்த்த  ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தனர் என்பதே உண்மை. இருந்தாலும் மிஸ்கினின் வித்தியாசமான சண்டைக்காட்சிகளில் புதுவிதமான ஆண்ட்ரியா தெரிந்தார் என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை.

இந்தப் படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் 2 படம் வெளியானது. ஆனால் கமல் அரசியலுக்குள் வந்து விட்டதால் இந்த படம் ரிலீஸானது பலருக்கு தெரியவில்லை. ஆரம்ப காலத்தில் விஸ்வரூபம்-2 எப்போது வரும் என்று கேட்டுக் கொண்டிருந்தவர்கள் இந்த படம் ரிலீசான சமயத்தில் கண்டுகொள்ளவே இல்லை. விஸ்வரூபம் முதல் பாகத்தில் தவறிவிட்டதை இந்த படத்தில் கமல்ஹாசன் சரியாக செய்திருப்பார். ஆண்ட்ரியா போன்ற நல்ல உயரமான திடகாத்திரமான உடலமைப்பை உடைய ஒரு நடிகைக்கு பக்காவான மாஸ் சண்டைக்காட்சிகள் வைத்திருப்பார் என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளே சென்றனர். எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு ரசிக்கும்படியான சண்டைக்காட்சிகள் ஆண்ட்ரியாவுக்கு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் ஆண்ட்ரியாவின் தலையை தனியாக வெட்டப்பட்டு  ஒரு பெட்டிக்குள் போட்டு எடுத்து வருவது போல காட்சி இருந்தது படம் பார்த்தவர்களை அதிரச் செய்தது. அடப்பாவிகளா ரொம்ப பெருசா எதிர்பார்த்து வந்தா கடைசியில இப்படி அநியாயமாக கொன்று விட்டீர்களே என்று தியேட்டரிலேயே சில ரசிகர்கள் கத்தினர். ஆனால் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காட்சிக்கு எந்த ஒரு நடிகையும் ஒத்துழைப்பாரா என்று தெரியவில்லை. இது ஒருவகையில் ஆண்ட்ரியாவின் துணிச்சல் என்று  சொல்லலாம். இதை அடுத்து  இயக்குனர் வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் சந்திரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். 

வடசென்னை படத்தில் முதன்மை ஹீரோவான ராஜனின் காதலியாக மனைவியாக நடித்திருந்தார்.  “ராஜன் பொண்டாட்டி டா” என்று சொல்லும் சீன் தியேட்டரில் அவ்வளவு கைதட்டல்களை வாங்கியது. அதேசமயம் கடற்கரைப்பகுதியில் ஒரு கப்பலில் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக படுத்திருப்பது போல ஒரு காட்சியில் ஆண்ட்ரியா நடித்து இருந்தார். இந்த காட்சிகளை எல்லாம் பார்க்கும் போது  சந்திரா கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா பொருந்தினாரா அல்லது ஆண்ட்ரியாவுக்கு தகுந்த மாதிரி சந்திரா கதாபாத்திரம் மாற்றப்பட்டதா என்கிற கேள்விகள் எழுந்தன. இனி அடுத்தடுத்து வரும் வட சென்னை பாகம்-2, பாகம்-3 போன்ற படங்களில் ஆண்ட்ரியா அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்தது போல மாஸ் காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல வடசென்னை படத்தில் ஒரு கேள்வி எழுப்பினார்கள். இந்த படத்தில் நடித்து இருந்த எல்லோருக்கும் இளமை வயது நடுத்தர வயது என்பதற்கு ஏற்ப மேக்கப் போட்டு இருக்கிறீர்கள், ஆனால் ஆண்ட்ரியாவுக்கு மட்டும் இளம் வயது நடுத்தர வயது இரண்டுக்குமே எதுவும் செய்யாமல் அப்படியே விட்டு இருந்திருக்கிறீர்களே என்று நிறைய பேர் கேள்வி எழுப்பி இருந்தார்கள். அது ஏனோ ஆண்ட்ரியாவுக்கு முதுமை தோற்றத்தை கொடுக்க விரும்பவில்லை போல வெற்றிமாறன்.  இதற்கிடையில் நடிகர் சித்தார்த்துடன் “அவள்” படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்தப் படம் பெரிய அளவில் மக்களிடம் சென்றடையாததால் அந்த படத்தில் நடித்து இருந்த ஆண்ட்ரியாவின்  ரசிகர்களுக்கும் அந்தப்படம் சென்றடையவில்லை. 

இவ்வளவு திறமை வாய்ந்த நடிகை ஆண்ட்ரியாவுக்கு 2018 ஆம் ஆண்டு திரை திறமையாளர் என்கிற விருது கொடுத்து பாராட்டியது அவள் விகடன் குழு. 

சிறந்த நடிகைக்கான 2018ஆம் ஆண்டு விருது தரமணி படத்திற்காக ஆண்ட்ரியாவுக்கு வழங்கியது பிகைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல். ” “அன்னையும் ரசூலும்” என்கிற மலையாள படத்தில் ஆண்ட்ரியாவை பார்த்த பிறகுதான் தரமணி படம் எடுத்தால் அதில் ஆண்ட்ரியா தான் நடிக்கணும் என்று உறுதியாக நம்பினேன்.  நான் பார்த்த மிக சொற்ப நல்ல நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருத்தர்.  தமிழ்நாட்டில் பிறந்து தமிழை எழுதவும் படிக்கவும் முறையாக பயின்ற ஒரு தமிழ் நடிகை.  தரமணி படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த பொழுது படக் குழுவில் இருந்தவர்கள் இது உங்களுடைய சிறப்பான நடிப்பு இந்தப் படத்திற்காக உங்களை தமிழ்நாடே கொண்டாடும் என்று சொன்னார்கள். அதற்கு ஆண்ட்ரியா தமிழ் நாட்டில் அது ஒரு போதும் நடக்காது நான் நிறைய பார்த்து விட்டேன் என்று சொன்னார்.  தமிழ்நாடு ஆண்ட்ரியாவை அதிகம் கொண்ட கூடிய காலம் வரும் ” இப்படி இயக்குனர் ராம் ஒரு மேடையில் தெரிவித்திருந்தார். மாஸ்டர் படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆண்ட்ரியாவை வேறு விதமாக காட்டியிருப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.   

Related Articles

48 கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்... கௌரி சிங்வி என்ற பதினான்கு வயது பெண் கர் தண்டா முதல் கேட்வே ஆப் இந்தியா வரை உள்ள நாற்பத்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்க இருக்கிறார். ராஜஸ...
சர்தார் வல்லபாய் படேல் சிலையும் விவசாயிக... அக்டோபர் 31 சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு (தேசிய ஒற்றுமை தினம்) இன்று அவருடைய சிலை திறப்பு விழா குஜராத்தில் கோலாகலமாக நடந்து முடிந்...
காதலர் தினத்தில் இந்தப் புத்தகத்தை பரிசள... கவிப்பேரரசு வைரமுத்துவின் மிக முக்கியமான கவிதை தொகுப்பு தான் "தண்ணீர் தேசம்". இந்தப் புத்தகத்தை மிக அழகான காதல் காவியம் என்று கூட சொல்லலாம். கலைவண...
புதிதாக வாட்சப் குரூப் தொடங்க வேண்டுமென்... வாட்சப் போன்ற சமூக வலை தளங்கள் மூலமாக தொடர்ந்து குற்றங்கள் நடந்து வருகின்றனர். குறிப்பாக பல ஊர்களில் பொய்யாக பரப்பப்பட்ட வாட்சப் வதந்திகளால் பலருடைய உ...

Be the first to comment on "ஆண்ட்ரியா – அதிகம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு  அறிவார்ந்த நடிகை! "

Leave a comment

Your email address will not be published.


*