“ஜல்லிக்கட்டு போராட்டம்” மாதிரியான ஒரு போராட்டம் இனிவரும் காலங்களில் நடக்குமா?

Will a struggle like the _Jallikkattu struggle_ take place in the future_

சமூக வலைதளங்களினால் மிகப்பெரிய வரலாற்று போராட்டமாக மாறிய ஜல்லிக்கட்டு போராட்டம், மெரினா கடற்கரையில் மிகப்பெரிய மாற்றத்தை பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்கின்றனர். கருப்பு சட்டை போட்டுக்கொண்டு பத்து ஆண்களோ அல்லது பத்து பெண்களோ மெரினாவில் கும்பலாக நடமாடிக்கொண்டு திரிந்தால் உடனே அவர்களை சந்தேகக் கண்ணுடன் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள் போலீஸ்காரர்கள். கருப்பு சட்டையில் இருப்பவர்கள் மட்டும் அல்ல, கிட்டத்தட்ட வண்ண வண்ண உடைகளில் கும்பலாக இருக்கும் சாதாரண மனிதர்களிடம் கூட போலீஸ்காரர்கள் கொஞ்சம் கெடுபிடி ஆகத்தான் நடந்துகொள்கின்றனர். அப்படி கும்பலாக இருக்கும்  மனிதர்களிடம் சென்று ஏதோ ஒன்று துருவித் துருவி விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர் போலீஸ்காரர்கள். இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் உண்டான மிகப்பெரிய மாற்றங்களில் இந்த மாற்றமும் ஒன்று. 

இப்படி அதிகார துறையினருக்கு ஒரு மிகப்பெரிய பயத்தை உருவாக்கி வைத்திருக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம். இதற்கு பிறகு ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி ஒரு மிகப்பெரிய போராட்டம் இனி தமிழகத்தில் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. அதற்கு காரணம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சில முட்டாள்தனமான விஷயங்கள். காளைகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு குறித்து பேசியது, அவர்களை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹிப்ஹாப் ஆதி, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சில நாட்களுக்கு முன் தினத் தந்தி டிவியில் சீமான் நடத்திய மக்கள் மன்றம் நிகழ்ச்சி  போன்ற பலதரப்பட்ட மனிதர்கள் ஜல்லிக்கட்டு குறித்தும் காளைகளின் நலன் குறித்தும் பேசிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது. இவற்றையெல்லாம் விட இளைஞர்கள் சுயமாக “அவர்களாக” மெரினா பீச்சில் ஒன்று கூடினார்கள். 

இப்படி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான இளைஞர்கள்  ஜல்லிக்கட்டு என்கிற ஒரு விஷயத்தை மட்டும் மையமாக வைத்து போராடினார்கள்.  ஆனால் தமிழ் படைப்பாளிகள் மற்றும் பல வருடங்களாக தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர்கள் எல்லோரும் ஜல்லிக்கட்டை மட்டும் மையமாக வைத்து போராடாமல் தமிழர்களின் நீண்டகால பிரச்சனையாக இருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒட்டுமொத்தமாக சேர்ந்த போராட்டமாக இதனை மாற்ற வேண்டும் என்று துடித்தனர். இனி ஒருமுறை இப்படி ஒரு கூட்டம், இவ்வளவு இளைஞர் படை ஒன்று சேருமா என்பது ஆச்சரியம், அதனால் இப்பொழுதே நமக்கு தேவையானதை நாம் கேட்டு வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது. இவற்றை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த மாபெரும் நல்ல விஷயங்கள் என்று சொல்லலாம். “நீங்கள் ஏன் மாணவர்களோடு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை” என்று கேட்டபோது அதற்கு பதிலாக, “இது மாணவர்களின் போராட்டம் இதில் சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் யாரும் தலையிடக்கூடாது, இது முழுக்க முழுக்க அவர்களின் போராட்டம்” என்று தெரிவித்திருந்தார் நடிகர் கமல்ஹாசன். ஆனால் படைப்பாளிகள் உள்ளே போகும் போது இளைஞர்களின் நோக்கம் கொஞ்சம் மாறியது என்பதும் உண்மை. இப்படி ஜல்லிக்கட்டு போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய நோக்கத்திலிருந்து  திசை மாறி போனதற்கும் அறம் தவறி போனதற்க்கும் மிக முக்கியமான காரணங்கள் அரசியல் கட்சி தலைவர்களுக்கு வேலைசெய்யும் எடுபிடிகள். முதலில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளே நுழைய முற்படும்போது இளைஞர்கள் அவர்களை புறக்கணித்தார்கள். ஏனென்றால் அவர்கள் உள்ளே வந்துவிட்டால் பொதுமக்களுக்கு கொடுக்கப்படும் சாப்பாடு பொருட்களில் ஸ்டிக்கரை ஓட்டுவார்கள் கட்சித் துண்டுகளோடு கட்சி பனியனோடு கட்சி கொடியோடு அந்தக் கூட்டத்தில் உலாவுவார்கள். கடைசியில் அது கட்சிகளுக்குள் நடக்கும் மோதலாக மாறி போராட்டம் சிதைந்து விடும் என்பதில் மாணவர்கள் தெளிவாக தான் இருந்தார்கள். அவர்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு வரை மாணவர்கள் சின்ன சின்ன சார்ட் பேப்பர்களில் “isupportjallikattu”, “Banpeta”  என்ற வாசகத்தை மட்டும்  கைப்பட எழுதிக் கொண்டு போராட்டத்தை அமைதியான முறையில் நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் கட்சித் தலைமைகளின் எடுபிடிகளும் அவர்களையே சுற்றிக் கொண்டிருக்கும் சில கீழ்மட்ட எடுபிடிகளும் உள்ளே நுழைந்ததும் போராட்டமே வேறொரு உருவத்திற்கு மாறிவிட்டது. இவ்வளவு நேரம் போராட்டத்தில்,  நாகரீகமான வார்த்தைகள் வலம் வந்து கொண்டிருக்க, இந்த மாதிரியான எடுபிடி சில்லறைகள் உள்ளே நுழைந்ததும் வார்த்தைகளே மாறிவிட்டது. 

போராட்டத்தின் மூலமாக முதலமைச்சருக்கு தொடர் மன அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக “டேய் பன்னீரு…  ஜல்லிக்கட்டு நடக்கலைன்னா உன் கண்ணில் வரும் கண்ணீரு”, ” ஆலுமா டோலுமா பீட்டா ஒரு…”, ” அஞ்சு ஆறு ஏழு பன்னீரை படுக்கப்போட்டு…”  மாதிரியான வார்த்தைகள் எல்லாம் அந்த கட்சி எடு படிகளின் வாயிலிருந்து பிறக்க ஆரம்பித்தது. அவர்களைப் பார்த்து ஒரு சில இளைஞர்கள் எப்படியும் பேசலாம் போல என்று நினைத்து அந்த மாதிரி வார்த்தைகளை பேச கூட்டத்தில் சிரிப்பலைகள் நிரம்பியது. அப்படிப்பட்ட கூட்டத்தில் சில சிறுமிகள் சிறுவர்கள் இருக்கிறார்கள் என்பது கூட கட்சி எடுபிடிகளுக்கு கண்ணுக்கு தெரியவில்லை. ஒரு சில தாய்மார்கள் அந்த மாதிரியான வார்த்தைகளை கேட்டு முகம் சுளித்தபடி கூட்டத்தில் அமர்ந்திருந்தனர். சில மேதாவிகள் இவற்றை ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டும் போராட்டத்தை பொழுதுபோக்காக கொண்டுசெல்ல வேண்டும் என்று போராட்டத்தின் தன்மையை முற்றிலும் மாற்றினர். 

குறிப்பாக சிறுமிகளிடம் மைக்கை கொடுத்து, நீ ஜல்லிக்கட்டு குறித்து பேசு என்று சொல்ல அந்த சிறுமிகள்…  பெரியவர்கள் பேசிய வார்த்தைகளை ஞாபகம் வைத்துக்கொண்டு “டேய் பன்னீரு… நீ மட்டும் என் கைல கிடைச்சா என்ன பண்ணுவேனு…” என்பது போன்ற வார்த்தைகள் எல்லாம் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.  சிறுமிகள் அப்படி பேசுவதைக் கேட்டு அவர்களுடைய அம்மாக்கள் முதல்கொண்டு சிரிக்க, அந்த சிறுமிகள் நாம் சரியான பாதையில் சரியானவற்றை கற்றுக் கொண்டு செல்கிறோம் என்று நினைத்துவிட்டனர். அப்படி போராட்ட கூட்டங்களில் சில சிறுமிகள் சிறுவர்கள் பெரிய பதவியில் இருப்பவர்களை ஒருமையில் பேசும் போது அதைப் பார்த்து சிரித்த மனிதர்கள் அவர்களுடைய வீட்டுக் குழந்தைகளையும் அப்படி  முதல்வரை ஒருமையில் பேச வைத்து  வீடியோவாக எடுத்து வைரலாக்கி விட்டு, என் மகளை நான் புரட்சிப் பெண்ணாக வளர்க்க விரும்புகிறேன் என்று ஊடகங்களில் பேட்டி கொடுத்தனர். இப்படி இளைஞர்களால் உண்மையான போராட்ட உணர்வுடன் தொடங்கப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம், நிறைய மனிதர்களுக்கு விளம்பரம் தேடித் தரக் கூடிய போராட்டமாக மாறி விட, அப்போதே ஒரு சில இளைஞர்கள் அந்தப் போராட்டத்தில் இருந்து விலகி வெளியே வந்துவிட்டனர். நாங்கள் எதற்காக போராட்டத்தை தொடங்கினோமோ போராட்டம் அந்த விஷயத்திற்காக தொடராமல் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி எடுபிடிகள் போன்றவர்களெல்லாம் உள்ளே நுழையும்போது நோக்கம் சிறிது சிறிதாக மாறி போராட்டம் வேறொரு வடிவில் வந்து விட்டது, இது கண்டிப்பாக மாணவர்களின் போராட்டம் இல்லை என்று அவர்கள் பதிவு செய்து இருந்தனர். 

இப்படிப்பட்ட இளைஞர்கள் அதையடுத்து மக்கள் எந்த மாதிரியான பிரச்சினைகளை சந்தித்தாலும் அவர்களுக்காக களத்தில் இறங்கி போராட முன்வருவதில்லை. அப்படியே ஒரு சில இளைஞர்கள் முன்சென்று போராடினால் அவர்களுக்கு ஒட்டு மொத்தமாக திரண்டு போய் ஆதரவு தெரிவிக்க பல இளைஞர்கள் உண்மையில் விரும்பவில்லை. காரணம் அவர்கள் போராட்டத்தை தொடங்கி உண்மையாக போராடிக் கொண்டிருந்தால் உடனே சில பிரபலங்கள் அந்தப் போராட்டத்தை வைத்து மேலும் விளம்பரம் தேடி மேலும் பிரபலமாகி கொள்ளலாம் என்று விரும்புகின்றனர் என்பதால் பிரச்சனை யாருக்கோ அவர்களே போராடி கொள்ளட்டும் என்ற சுயநல உணர்வுக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். 

அந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை  பதிவு செய்தால் அந்தப் படைப்புகள் இளைஞர்களிடம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நோக்கத்துடன் சினிமா பிரபலங்கள் நிறைய பேரு உலாவிக் கொண்டிருந்தனர். சினிமா பிரபலங்கள் அப்படி யோசிக்க போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் அப்போதே இந்த போராட்டத்தை மையப்படுத்தி இந்த சினிமாக்காரர்கள் சினிமா எடுத்து காசு பார்ப்பார்கள் பாருங்களேன் என்று மீம்களை தெறிக்கவிட, சில பிரபலங்கள் அந்த எண்ணத்தில் இருந்து விலகிக் கொண்டனர். இருந்தாலும் சில சினிமா பிரபலங்கள் “மிக முக்கியமான வரலாற்று சம்பவத்தை பதிவு செய்கிறேன்” என்கிற பெயரில் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து சில படைப்புகளை எடுத்தனர். ஆனால் அப்படி எடுத்த படைப்பாளிகளுக்கு அவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு நிறைய இடங்களில் இருந்து மிரட்டல்கள் வந்தது. அவர்களை மிரட்டியவர்கள் போராட்டத்தை தொடங்கிய இளைஞர்களோ அல்லது போராட்டத்தின் முடிவில் போலீஸ்காரர்களிடம் அடிவாங்கிய ரத்தம் சிந்திய இளைஞர்களோ கிடையாது. 

மறைமுகமாக சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி சார்ந்த சில முக்கியமான புள்ளிகள், இவர்கள் இருவரும் ஜல்லிக்கட்டு குறித்து பதிவு செய்யும் படைப்பாளிகளுக்கு மிரட்டல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். ஜல்லிக்கட்டு போராட்டம் நாங்கள் இல்லை என்றால் அது நடந்திருக்கவே நடந்திருக்காது என்பது போல்  பேசவும் செய்தனர். அவற்றை மீறியும் சில பிரபலமான இயக்குனர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை பதிவு செய்தனர். குறிப்பாக இயக்குனர் சமுத்திரகனி “தொண்டன்” படத்திலும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் “சர்கார்” படத்திலும் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து வசனங்கள் வைத்திருந்தனர்.  ஜல்லிக்கட்டு பற்றி பேசினால் இளைஞரிடம் கைதட்டலும் விசிலும் வரும் என்று எதிர்பார்த்து வைத்திருப்பார்கள் போல. ஆனால் தியேட்டரில் படம் பார்த்த பல இளைஞர்கள் “உச்” தான் கொட்டினர். அந்தளவுக்கு போராட்டம்  என்கிற ஒவ்வொரு வார்த்தையின் மீது அவர்களுக்கு அதிருப்தி வந்துவிட்டது. அதை தொடர்ந்து தமிழ் சினிமாக்களில் போராட்டம் சம்பந்தப்பட்ட படங்கள் நிறைய வந்தன. குறிப்பாக உறியடி2 ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படம் என்றாலும் அது மக்களிடம் இளைஞர்களிடம் பெரிய வரவேற்பு பெறவில்லை. இதைத் தொடர்ந்து பல சினிமா இயக்குனர்கள் “விவசாயத்திற்காக போராடுவோம்”  என்கிற ஒரு கருப்பொருளை மையமாக வைத்துக்கொண்டு பல படங்கள் எடுக்கத் தொடங்கினர். அத்தனை படங்களும் தோல்விதான் அடைந்தது. காரணம் அந்த படைப்புகள் எல்லாம் போராட்டம் என்கிற ஒரு விஷயத்தை படத்தில் வைத்தால் நன்கு காசு பார்க்கலாம் என்கிற எண்ணத்தோடு எடுக்கப்பட்ட படைப்புகள். இப்போது கூட போராட்டம் என்கிற ஒரு விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிறைய திரைப்படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. அப்படி தொடர்ந்து படங்கள் எடுக்கப்பட்டு கொண்டே வருவதால் “தமிழன்டா”, “போராடுவோம்”, “தோழர்”  போன்ற வார்த்தைகளின் மீது சினிமா ரசிகர்களுக்கு ஒரு அதிருப்தி வந்துவிட்டது. இந்த வார்த்தைகளை திரும்பத் திரும்ப கேட்பதால் ரசிகர்களுக்கு ஒரு மாதிரியான சலிப்பு வந்து விடுகிறது. இனிவரும் காலத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் போல்  ஒட்டுமொத்த இளைஞர்களின் ஆதரவோடு ஒரு போராட்டம் நடக்குமா என்று கேட்டால் கண்டிப்பாக அது சாத்தியமில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக தனித்தனி குழுக்களாக போராடுவார்களே தவிர “மெரினா புரட்சி” மாதிரி இன்னொரு புரட்சி வருவது அரிதினும் அரிது. ஏனென்றால் உண்மையான உணர்வுடன் போராட்டத்தில் இறங்கிய இளைஞர்கள் அவ்வளவு வேதனை அடைந்து விட்டார்கள். தங்களை வைத்து அரசியலும் வணிகமும் செய்தவர்களை அவர்கள் கண்டுகொண்டார்கள். 

Related Articles

ரஜினியின் 100 மரணமாஸ் வசனங்கள் ஒரு பார்வ... எனக்கு மரியாதை வேண்டாம், வேலைக்கு மரியாதை கொடுங்க... இது எப்படி இருக்கு? எப்போதுமே ஒருத்தர குறைச்சி மதிப்பிடக் கூடாது. ஆஞ்சநேயர ராவணன் குற...
அடுத்த பிரதமர் சீமான்! அடுத்த சிஎம் சிம்... சிவனேன்னு சினிமாவில் இருந்த சீமானை வாங்கண்ணே... வாங்கண்ணே... என்று இழுத்து வந்து தொண்டை கிழிய பேச மேடை அமைத்து தந்து... இயக்கம் ஆரம்பிக்க வைத்து... அத...
உத்தரகாண்டில் மூன்று புதிய அணைகளைக் கட்ட... இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இண்டஸ் நீர் ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளுக்கும் மூன்று ஆறுகள் வீதம் பிரித்துக்...
2018ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள்!... கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வருடத்திற்கு நூறு தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் அசால்ட்டாக இருநூறு படங்கள் ரிலீஸ் ஆகிறது....

Be the first to comment on "“ஜல்லிக்கட்டு போராட்டம்” மாதிரியான ஒரு போராட்டம் இனிவரும் காலங்களில் நடக்குமா?"

Leave a comment

Your email address will not be published.


*