பசி காரணமாக பள்ளிக்கூடம் பக்கம் ஏழை மாணவர்கள் செல்லாமல் சிறுவயதிலயே வேலை வறுமை என்று அலைகிறார்கள், தங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள் என்ற நோக்கத்தில் காமராஜர், எம்.ஜி.ஆர் போன்றோர் பள்ளிக் கூடங்களில் மதிய உணவு, சத்துணவு கொண்டு வர திட்டம் வகுத்திருக்கின்றனர். அந்த திட்டத்தினால் பலனடைந்த மக்கள் ஏராளம். இன்றுவரை அந்த திட்டம் தொடரப்பட்டு மேம்படுத்தப்பட்டு பல மாணவ மாணவிகளின் வாழ்க்கையை காப்பாற்றுகிறது. ஆனால் அதே பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்கள் சத்துணவு சாப்பாடு சாப்பிடும் மாணவர்களை கொஞ்சம் இளக்காரமாக தான் பார்க்கிறார்கள். அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு அது புரியும்.
சத்துணவு சாப்பாடு சாப்பிடும் அந்த மாணவர்களை மற்ற மாணவர்கள் கொஞ்சம் இளக்காரமாகப் பார்ப்பது. தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சத்துணவு சாப்பாட்டை சோற்றுக்கே வழியில்லாதவர்கள், அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் போன்றோர் தான் சாப்பிட வேண்டும் என்கிற ஒரு பார்வை மேலோட்டமாக இருக்கிறது. அப்படிப்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் இருந்து வரும் சிறுவர் சிறுமிகள் என்றாவது ஒருநாள் சத்துணவு சாப்பாடு வாங்கி சாப்பிட்டால், சத்துணவு சாப்பாடு சமைத்து பரிமாறும் மனிதர்களே, “அட நீ ஏன்டா இந்த சாப்பாட்டை வாங்கி சாப்பிடுற” என்று சொல்கிறார்கள். சத்துணவு சாப்பாடு சமைத்து பரிமாறும் மனிதர்களே அப்படி ஏற்றத்தாழ்வு பார்வையில் இருந்தால் மற்ற மாணவர்களுக்கு எப்படியிருக்கும்? சத்துணவு சாப்பாடு சாப்பிடறவங்களாம் தாழ்த்தப்பட்டவர் போல என்று நினைப்பார்கள் தானே. சத்துணவு சமைக்கும் ஆயா அப்படி இருக்கிறார் என்றால் அதற்கு என்ன காரணம்? அவருடைய மனதிற்குள் அப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வை சமூகம் பதிய வைத்திருக்கிறது. ஒரு சில குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சத்துணவு சாப்பாடெல்லாம் என்றைக்கும் வாங்கி சாப்பிடாத, முட்டை தராங்க சுண்டல் தராங்கன்னு அதையெல்லாம் வாங்கி சாப்பிட வேண்டாம். “ஏன்னா அந்த சாப்பாட்டை சமைக்கிற அரிசியில் நிறைய புழு பூச்சிகள் இதெல்லாம் இருக்கும்… அதுவுமில்லாம அந்த அரிசி எல்லாம் சுத்தமான அரிசியல்ல… அரசாங்கம் கொடுக்கும் விலை குறைவான அரிசிகள் நல்ல தண்ணீரில் சுத்தம் பண்ணாமல் ஒழுங்காக பராமரிக்காமல் சீக்கிரம் சீக்கிரமாக எடுத்துக் கொண்டு வருகிற அரிசி அவை என்று அறிவுறுத்தி பயமுறுத்துகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் “ரேசன் அரிசி சாப்பிடுபவன் தாழ்ந்தவன்” என்று குழந்தைகளுக்கு அந்த எண்ணத்தை விதைப்பவர்களே அவர்கள் தான்.
சில பள்ளிகளில் கொடி வணக்கப் பாடல் நடைபெறும் போது ஒருசில மாணவர்கள் மயங்கி விழுவதைப் பார்க்கலாம், அவர்களிடம் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி, “ஏன்டா மயக்கம் போட்டு விழுந்த…” என்று கேட்டால், அவர்கள் சொல்லும் பதில் நான் ஒழுங்கா சாப்பிடல… வீட்டுல சமைக்கறதுக்கான வசதிகள் இல்லை என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு தான் சத்துணவு திட்டம் மேலும் மேலும் மேம்படுத்தப்பட்டது. அப்படி வீட்டில் சரியான சாப்பாடு கிடைக்காததால் சாப்பாடு சாப்பிட வேண்டும் என்பதற்காகவே பள்ளிக்கூடத்திற்கு வரும் சிறுவர்கள் சிறுமிகள் இன்றும் நம் சமூகத்தில் இருகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் ரேசன் அரிசி சாப்பிடுபவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிற ஒரு பார்வையை குழந்தைகளிடம் விதைத்தால் வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக பள்ளிக்கூடம் வரும் சிறுவர்-சிறுமிகள் எங்கே போவார்கள்.
மூடர்கூடம் இயக்குனர் ஒருமுறை தான் அளித்த பேட்டியில், “அக்காவோட நகைகள அடகு வச்சுத்தான் முதல் படம் எடுத்தோம்… அப்ப எங்க குடும்பம் ரொம்ப வறுமைல இருந்துச்சு… ரேசன் அரிசில சாப்பாடு ஆக்கித் தின்னோம்” என்று கூறி இருக்கிறார். ரேஷன் அரிசியில் சாப்பாடு சமைத்து உண்பதை அவர் இழிவாக அல்லது தாழ்ந்த நிலையை பிரதிபலிப்பதாகவோ காட்டவில்லை, பேசவில்லை. இயக்குனர் நவீனுக்கு மட்டும் அல்ல, இக்கட்டான சூழல் என்று வந்துவிட்டால் எல்லோருமே இந்த ரேசன் அரிசி சாப்பாட்டை தான் சாப்பிட வேண்டும். அது ஏனோ நமக்கெல்லாம் புரிவதில்லை. விஜய் டிவியில் கனெக்சன் என்கிற நிகழ்ச்சி நடத்தி வந்த, அயன் படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்த நண்டு ஜெகன் அம்மா உணவகம் திறக்கப்பட்ட போது பெரும்பாலான நாட்கள் ஜெகன், அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுவாராம். இதேபோல பரிதாபங்கள் கோபி சுதாகர் இருவரும் சென்னைக்கு வந்த புதிதில் கையில் நல்ல வருமானம் இல்லாத பொழுது பல நாட்கள் அம்மா உணவகத்தை நம்பி வாழ்க்கையை ஓட்டி இருக்கிறார்கள். இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் ரேஷன் அரிசி குறித்து ஒரு வசனம் வரும்.
அந்தப் படத்தில் கரகாட்டக்காரர்கள் தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் வருமானம் இல்லாமல் எப்படி வறுமையை சந்திக்கிறார்கள் என்பதை அழுத்தமாக காட்டியிருப்பார்கள். அந்தப் படத்தில், “ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறா மகராசி… ஆனால் அந்த அரிசியை கூட நம்மளால நிம்மதியா வாங்கி சாப்பிட முடியல…” என்று வருத்தத்துடன் கூறுவார் கரகாட்ட கலைஞர் ஒருவர். இப்படி பலதரப்பட்ட கலைஞர்களுக்கு பசியைப் போக்கக் கூடிய மருந்தாக இருப்பது அம்மா உணவக குறைந்த விலை உணவுகளும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த ரேஷன் அரிசியும் தான்.
இப்படி குடிசையில் வாழ்பவர்கள் முதல் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்பவர்கள் வரை, இக்கட்டான சூழல் என்று வந்துவிட்டால் அவர்கள் ரேஷன் அரிசி சாப்பாடு தான் சாப்பிட வேண்டும். வெள்ளம், சுனாமி போன்ற காலங்களின் போது ஆற்றங்கரையோரம் வாழும் குடிசைவாசிகள், ஏரிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி இருக்கும் நகரவாசிகள் போன்றோர் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களுக்கு சரியான உணவு கிடைக்காது. உணவு பொருட்கள் மற்றும் உணவு சமைப்பதற்கான மூல பொருட்கள் எதுவும் கிடைக்காது. அந்த மாதிரி நேரங்களில் அரசு அந்தப் பகுதி வாழ் மக்களுக்கு, கூடுதலாக ரேஷன் அரிசி மற்றும் பருப்பு எண்ணெய் போன்றவற்றை வழங்க முன் வருகின்றன. அப்படி கூடுதலாக வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு எளிதில் விரைவில் கிடைக்காத போது சில சமூக சேவை அமைப்புகள், சமூகப் பொறுப்புணர்வு அதிகம் உள்ள இளைஞர்கள் ஒன்று திரண்டு தங்களுடைய சொந்த பணத்தில் அரிசி முதலான சமையல் பொருட்கள் வாங்கி சமைத்து வெள்ளம் சுனாமி போன்ற இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று வேளையும் உணவு அளித்து அவர்களை காப்பாற்றி வருகின்றனர்.
அப்படிப்பட்ட சூழலில் நிறைய மக்களுக்கு நிறைய உணவு கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றபோது பலர் ரேஷன் அரிசியை சமையலுக்கு பயன்படுத்தி இக்கட்டான நிலையில் இருக்கும் மக்களுக்கு பரிமாறுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட நேரத்தில் கூட ஒரு சிலர் போயும் போயும் ரேஷன் அரிசியில் சோறு ஆக்கி போடுகிறார்களே என்று கமென்ட் அடிக்கின்றனர். அதேபோல இன்னும் சிலர் ரேஷன் அரிசியில் சாப்பாடு ஆக்கி அவர்களுக்குக் கொடுக்கிறது, கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனால் போதுமான பணம் இல்லையே பணம் இருந்தால் நல்ல அரிசி வாங்கி இந்த மாதிரி இக்கட்டான சூழலில் இருக்கிறவங்களுக்கு நல்ல சாப்பாடு கொடுக்கலாம் என்றும் சொல்கின்றனர். இப்படி மக்களுக்கு ரேஷன் அரிசி பலவித சூழ்நிலையில் கை கொடுக்க, ஒரு சில மக்கள் ரேஷன் கடையில் இருந்து மறைமுக ஒப்புதல் மூலம் மூட்டை கணக்கில் ரேஷன் அரிசியை வாங்கிக் கொண்டு போய் அரிசியை அரைத்து கால்நடைகளுக்கு கஞ்சியாக காய்ச்சி ஊற்றுவதற்கும், தங்கள் வீட்டு நாய்களுக்கு இந்த ரேஷன் அரிசியில் சோறு ஆக்கிப் போடுவதற்கும், கோழிகளுக்கு தீவனமாகவும் இந்த ரேஷன் அரிசியை பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இப்படி பல்வேறு விதமான பயன்பாட்டு முறையில் இருக்கும் இதே ரேஷன் அரிசிதான் தமிழகம் நம்மை வாழ வைக்கும் என்று நம்பிக்கொண்டு இங்கு குடி பெயர்ந்து வரும் ஹிந்தி தொழிலாளர்களின் வயிற்றுப்பசியை போக்குகிறது. அப்படி ரேஷன் அரிசியில் சாப்பிட்டு உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கும் அந்த ஹிந்தி தொழிலாளர்கள்தான் தமிழகத்தில் இன்று தமிழக தொழிலாளர்களை காட்டிலும் இரண்டு மடங்கு மூன்று மடங்கு அதிகமாக வேலை செய்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் ரேஷன் அரிசி உடலுக்கு வலு சேர்க்கிறதா? அல்லது உடலை வலுவிழக்க செய்கிறதா? என்கிற ஒரு கேள்வியும் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் ரேஷன் அரிசி நல்ல உடல் வலிமையைத் தருகிறது, அதைவிட விலை உயர்ந்த அரிசி உடலுக்கு வலிமையைத் தருகிறது என்றெல்லாம் எந்த வேறுபாடும் கிடையாது. எந்த அரிசியாக இருந்தாலும் அதில் சோறு பொங்கி அன்றாடம் அதையே உண்டு வாழும் பொழுது அவர்களுக்கு பெரும்பாலும் சர்க்கரை நோய் எலும்புத் தேய்மானம் போன்ற பிரச்சினைகள் பெருமளவு ஏற்படும் என்கின்றனர் சிலர்.
இப்படி தமிழகத்திற்குள் குறைந்த விலையில் கிடைக்கும் ரேஷன் அரிசியை தரமற்றதாகவும் அந்த அரிசியை பயன்படுத்துபவர்களை இழிவானதாகவும் பார்ப்பதால் ரேசன் அரிசியை லாரி லாரியாக கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு அங்கு பாலிஸ் செய்யப்பட்டு பிறகு அதே அரிசி, கேரளா பொன்னி அரிசி, ஆந்திரா பொன்னி அரிசி, கர்நாடகா பொன்னி அரிசி என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு 1 ரூபாய் ரேஷன் அரிசி 50 ரூபாய்க்கு விற்கும் பொன்னி அரிசி ஆக மீண்டும் தமிழகத்திற்குள் வருகிறது. ரேசன் அரிசியை பெரும்பாலான மக்கள் தவிர்ப்பதற்கு அந்த அரிசிக்குள் இருக்கும் வாடகை மற்றும் அதன் நிறம் மற்றும் அதனுள் கலந்து இருக்கும் குப்பைகள். இப்படிப்பட்ட அரிசியை சாதாரண அரிசியை போல் மாற்றும் முறைகள் குறித்து யூடியூபில் நிறைய பெண்கள் வீடியோ போட்டிருக்கிறார்கள். ஆனால் அவை பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் பொது வினியோகத் துறையில் இருக்கும் அரசு அதிகாரிகள் ரேஷன் அரிசி முன்புபோல் தரமற்றதாக இருப்பதில்லை. இப்போது ஒரு கிலோ ரேஷன் அரிசி தயாரிப்பதற்கு 42 ரூபாய் செலவாகிறது. இப்படிப்பட்ட ரேஷன் அரிசியை ஒரு சில பெண்கள் தங்களுடைய இல்லத்திலேயே சில அறிவியல் பூர்வமான செயல் முறைகளைப் பயன்படுத்தி நல்ல அரிசியைப் போல் மாற்றி இட்லி சுடுவதற்கும் தோசை சுடுவதற்கும் முறுக்கு சுடுவதற்க்கும் முறுக்கு பணியாரம் சுடுவதற்கும் பயன்படுத்துகின்றனர். இப்படி மாதத்தில் 10 நாட்கள் ரேஷன் அரிசி அவர்கள் வீட்டில் உணவு பொருளாக மாறுகிறது. தோசை, இட்லி, முறுக்கு, பணியாரம் போன்றவற்றிற்கு பெண்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்துவதற்கு முன் வர வேண்டும். அது மட்டுமில்லாமல் மற்ற அரிசிகளை சோறு பொங்கி சாப்பிடும் போது அதனால் சர்க்கரை நோய், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. ஆனால் ரேசன் அரிசியை சரியாக பயன் படுத்துபவர்களுக்கு மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் எடுத்துக் கொள்பவர்களுக்கு அந்த மாதிரியான பிரச்சினைகள் வருவதில்லை என்று பொது வினியோகத் துறை அதிகாரிகளும் மருத்துவர்களும் கூறுகின்றனர்.
Be the first to comment on "ரேசன் அரிசின்னா அவ்வளவு கேவலமா போயிடுச்சா? – ரேசன் அரிசியை சரியாகப் பயன்படுத்தும் குடும்ப பெண்கள்!"