உங்கள் வாழ்க்கையைச் சுற்றி எத்தனை விசாரணை “அப்சலும்” உறியடி “கோட்டரும்” இருக்கிறார்கள்? 

விசாரணை, உறியடி இந்த இரண்டு படங்களுமே மிக சின்ன படங்கள். ஆனால் வீரியமான கதைக்களம் கொண்ட படங்கள். “அதிகாரத்தை எதிர்த்து கேள்வி எழுப்புதல்” என்பது தான் இந்த இரண்டு படங்களின் மையம். விசாரணை படத்தில் சம்பவங்களை காட்சி ஆக்கி எந்தப் பாடலும் இல்லாமல் எந்த உணர்ச்சிகர வசனமும் இல்லாமல் பார்வையாளனுக்கு வலி உணர்ச்சியை கடத்தி அதிகாரத்தை கேள்வி கேட்டிருப்பார் இயக்குனர் வெற்றிமாறன். உறியடி படத்தில் அக்னிக்குஞ்சொன்று கண்டேன் என்று பாடலை வைத்து, பிச்சைக்காரருக்கு சாப்பாடு வழங்க மறுத்த ஹோட்டல்காரரின் சாதிப் புத்தியை கேள்வி எழுப்பி கொஞ்சம் பிரச்சார ஹீரோயிச தொனியில் அதிகாரத்தை கேள்வி கேட்டிருப்பார் இயக்குனர் விஜயகுமார். 

விசாரணை படத்தில் படிக்காத நான்கு கூலிக்கார இளைஞர்கள். உறியடி படத்தில் படித்த நான்கு வசதியில்லாத வீட்டுப் பிள்ளைகள். 

முதலில் விசாரணை படத்தை பார்ப்போம். இந்தப் படத்தில் தங்கும் இடத்தின் வாடகை செலவை மிச்சம் செய்வதற்காக பார்க் ஒன்றில் வாட்ச்மேனை கரக்ட் செய்து தங்கி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பார்கள் அந்த நான்கு இளைஞர்கள். திடீரென ஒருநாள் அவர்களில் மூன்று பேரை போலீஸ் பிடித்துச் செல்கிறது. என்ன காரணம் என்றே சொல்லாமல் குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி அடி அடி என அடித்து துவைக்கிறது. அடுத்தநாள் காலையில் மலம் கழிக்க, நொண்டி நொண்டி போகும்போது அப்போது தங்களின் நான்காவது நண்பனான அப்சலை சந்திக்கிறார்கள். 

அப்சல் படம் பார்த்துவிட்டு திரும்பும்போது, போலீஸ் அவனை பிடித்து விசாரிக்கிறது. அவன் பயத்தில் தன்னைப் பற்றியும் தன்னுடன் தங்கி இருப்பவர்கள் பற்றியும் சொல்ல கேட்க நாதியற்றவர்கள் என்று தெரிந்துகொண்ட போலீஸ் துறையினர் அவர்களை கும்பலாகப் பிடிக்கிறது. நால்வரும் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கின்றனர். முருகதாஸ் அப்சலை திட்டுகிறான். 

தொடர்ந்து பல நாட்கள் அடித்து துன்புறுத்திக் கொண்டே இருக்க கருகும்மென்று இருக்கும் அந்த லாக்கப்பிற்குள் சுருண்டு பலமில்லாமல் கிடக்கும் அப்சலை அடிக்க வலுவில்லாமல் அடிக்கிறான் முருகதாஸ். இப்போது அப்சலுக்கு குற்ற உணர்வு எழுந்து விடுகிறது. நம்மளால தான் இவங்களுக்கு இத்தன கொடும நடக்குது என்ற வருந்துகிறான். 

இப்போது ஆந்திரா போலீஸிடம் இருந்து தப்பி தமிழ்நாடு போலீசிடம் சிக்கிக் கொள்கிறார்கள். தமிழ்நாடு போலீஸ் அவர்களை ஏடிஎம் கொள்ளை வழக்கில் சிக்க வைக்க, துருதுரு அப்சல் முத்துவேலிடம் “நீங்க எங்கள கொல்ல போறிங்களா” என்று நியாயம் கேட்க போக, படாரென்று அவன் நெஞ்சில் குண்டு பாய்கிறது. பிளாக் & ஒயிட்டில் அந்தக் காட்சியை காட்டி இருப்பார்கள். “சார் உயிர் இருக்கு காப்பாத்திடலாம் சார்…” என்று கூட இருப்பவர்கள் கெஞ்ச, இப்போது அத்தனை பிரச்சினைகளுக்கும் நான் தான் காரணம் என்று உணரும் அப்சல், “அண்ணே ஓடிருங்கணே… உங்களையும் கொன்னுபுடுவாங்கண்ணே… ஓடிருங்கண்ணே…” என்று சொல்கிறான் அப்சல். சாகும் தருணத்தில் “என்னய காப்பாத்துங்கண்ணே” என்று சொல்லாமல் “உங்கள காப்பாத்திக்குங்கண்ணே” என்று சொல்லும் அந்தக் குட்டிப் பையன் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறான். இங்கு அப்சல் ஹீரோ! 

இப்போது உறியடி படத்திற்கு வருவோம். இந்தப் படத்தில் நான்கு இளைஞர்களில் ஒருவனாக கோட்டர் இருக்கிறான். ஜாலியாகப் போய்க் கொண்டிருக்கும் அந்த நான்கு இளைஞர்களின் கல்லூரி வாழ்க்கையில் ஒழுக்கமற்ற அதிகார பலம் கொண்ட ஒருத்தன் குறுக்கிடுகிறான். தன் கண் முன்னே நடக்கும் அநியாயத்தை எந்த பயமுமின்றி துணிச்சலாக இறங்கி அந்த ஒழுக்கமற்றவன் கன்னத்தில் பட்பட்டென்று அடிக்கிறான். இங்கு தொடங்குகிறது பிரச்சினை. அடிவாங்கியவன் தன்னுடைய அதிகார பலத்தையும் சாதி பலத்தையும் காட்ட ஆரம்பிக்க ஆரம்பிக்க மற்றொரு புறம் கோட்டரும் அவனது நண்பர்களும் அதிகாரத்தை எதிர்க்க துணிகின்றனர். “அவனுக்கு மட்டும் எதாவது ஆச்சு” என்று சொல்லும் ஹீரோ, கோட்டரு மருத்துவமனையில் வீழ்ந்ததும் வெறிகொண்டு மற்ற இரண்டு நண்பர்களை கூட்டிக்கொண்டு கிளம்புகிறான். அவன் மருத்துவமனையில் வீழ்வதற்கு யாரெல்லாம் காரணமோ அவர்கள் அத்தனை பேரையும் இந்த இளைஞர்கள் காணாமல் செய்து விடுகின்றனர். இங்கும் பிரச்சினை தொடங்குவது அப்சலை போன்ற ஒரு சின்ன பையன் “கோட்டரு” என்பவனால். 

விசாரணை திரைப்படத்திற்காக ஆனந்த விகடன் விருது வாங்கிய இயக்குனர் சமுத்திரக்கனி, “இந்தப் படத்துக்காக தம்பி தினேஷ் போட்ட உழைப்பு ரொம்ப அபாரமானது. அதே மாதிரி அந்த குட்டிப்பையனும்…” என்று அப்சலை சுட்டிக் காட்டி இருப்பார். “உறியடி” திரைப்பட இயக்குனர் விஜய்குமார் ஒரு பேட்டியில், “கோட்டரு மாதிரி துருதுரு பசங்க, நம்ம எல்லோருடைய கேங்லயும் இருப்பாங்க…” என்று சொல்லி இருப்பார். அப்சல், கோட்டரு மாதிரி அப்பாவி துருதுரு இளைஞர்களுக்கு பின்விளைவுகள் யோசிக்க தெரியாது. வெகுளியாய் இருந்துவிடுகிறார்கள். நிஜத்தில் இந்த மாதிரி அப்பாவி துருதுரு வெகுளிங்க நம்மைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் மீது முதிர்ச்சி அடைந்த நீங்கள் எதற்கும் ஒரு கண் வைத்திருங்கள். அந்த மாதிரியான இளைஞர்களை நாம் கைவிட்டு விடக்கூடாது. 

“சின்ன பசங்க அப்படித்தான் இருப்பானுங்க” என்ற மைண்ட்செட் நமக்கு இருக்க வேண்டும். அரசியல் புரியாமல் யார் யார் தனக்கு சாதகமாக பேசுகிறார்கள், யார் யார் பாசமாகப் பேசி விஷத்தை இறக்குகிறார்கள் என்பது எல்லாம் அவர்களுக்கு யோசிக்க தெரியாது. யோசிக்க யாரும் விடுவதில்லை. அவன் என்ன தான் உங்களிடம் துள்ளினாலும் குரங்கு ஆட்டம் போட்டுக் காட்டினாலும் அந்த மாதிரி குட்டிப் பையன்களை விட்டுவிடாதீர்கள். 

 

Related Articles

பள்ளி கல்லூரி மாணவிகள் கட்டாயம் படிக்க வ... தமிழகப் பெண்களைப் பொறுத்த வரை பெரும்பாலான கோலம் போடுவது எப்படி ? சமையல் செய்வது எப்படி ? போன்ற புத்தகங்களை தான் நேரம் செலவழித்து படிக்கிறார்கள். கொரிய...
ஜவுளிக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் படும... நவம்பர் 14 குழந்தைகள் தினம் இந்தியா முழுக்க கொண்டாடப் படுகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் பண்டிகைகளை தவிர தேசிய தினங்கள் எதுவும் உண்மையாக கொண்...
சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி?... நாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத...
ஒரு அஞ்சு நாலு லீவு சொல்லுங்க, நியூசிலா... நியூசிலாந்து என்ற பெயரை அடிக்கடி கிரிக்கெட்டில் கேள்விப்பட்டிருப்போம். அப்படி அந்த நாட்டில் என்னதான் இருக்கிறது? பார்க்கவேண்டிய இடங்கள் என்னென்ன? எவ்வ...

Be the first to comment on "உங்கள் வாழ்க்கையைச் சுற்றி எத்தனை விசாரணை “அப்சலும்” உறியடி “கோட்டரும்” இருக்கிறார்கள்? "

Leave a comment

Your email address will not be published.


*