ஏழாவது சம்பள கமிஷன் என்று ஏதாதோ சொல்கிறார்கள். இந்த மாதிரியான திட்டத்தை கொண்டு வருபவர்களும் தெளிவாக இருப்பதில்லை, மக்களுக்கும் தெளிவாக புரிய வைப்பதில்லை. சரி அதை விட்டுவிடுவோம். கீழ்நிலையில் உள்ள மக்கள் சரியான நேரத்தில் சம்பளம் வாங்க முடியாமல் சம்பள உயர்வு கிடைக்காமல் என்னென்ன பிரச்சனைக்கு ஆளாகிறார்கள் என்பதை பார்ப்போம்.
முதலாளி சமாதிமேல், முட்டிக் கொண்டழுதான், சம்பள பாக்கி! என்ற தமிழன்பனின் வரிகள்தான் சம்பள பாக்கி, சம்பள உயர்வு என்ற வார்த்தைகளை கேட்டதும் நினைவுக்கு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தூய்மை பணியாளர் வேலை செய்யும் பெண்கள் சரியான சம்பளத்தை சரியான நேரத்தில் தரும்படி கேட்டு போராட்டம் செய்திருந்தனர். அரசாங்கம் நிர்ணயித்த சம்பளத்தை எங்களை வைத்து வேலை வாங்கும் காண்ட்ராக்டர்கள் சரியாக கொடுப்பதில்லை. 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று அரசு சொன்னால், இவர்கள் பத்தாயிரத்தை எடுத்துக்கொண்டு 6 ஆயிரம் மட்டும் கொடுக்கிறார்கள். அந்த ஆறாயிரம் ரூபாய் இந்த காலத்தில் எப்படி பத்தும்? என் வீட்டு வாடகையே 5500 ரூபாய். எனக்கு இரண்டு பசங்கள் இருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர் வேலை செய்வதால் எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது…இந்த ஆறாயிரம் ரூபாய் சம்பளம் 10,000 ரூபாய் சம்பளம் எல்லாம் எங்களை வைத்து வேலை வாங்கும் மேனேஜர்கள் போதும் என்று சொல்வார்களா? அவர்கள் அந்த காசை வைத்து குடும்பம் நடத்துவார்களா? அவர்களுக்கெல்லாம் அது பத்தாது, அவர்களுக்கெல்லாம் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் சம்பளம் இருக்கும் ஏனென்றால் அவர்கள் எல்லாம் ராயல் ரிச் ஃபேமிலி. ஏனா நாங்க எல்லாம் குப்பை அள்ளுறவங்க… எங்களுக்கு இந்த 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்துட்டா நாங்க ரோட்டோரம் கிடைக்கறது எல்லாம் அப்படியே பொறுக்கி எடுத்து தின்னுப்போம், ஆனால் எங்களை வைத்து வேலை வாங்குபவர்கள் மட்டும் நல்லா ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல நல்ல ருசியா வாங்கி சாப்பிடுவாங்க… எடப்பாடி சிஎம் சார் குப்பை அள்ளும் நாங்கள் உங்களிடம் வந்து எங்களுக்காக கை தட்டுங்கள், பூஜை செய்யுங்கள், சலாம் போடுங்கள் என்றெல்லாம் கேட்டோமா? நாங்கள் கேட்டது நாங்கள் செய்யும் வேலைக்கு சரியான சம்பளம்… அந்த சம்பளத்தை மட்டும் சரியான நேரத்துக்கு கரெக்டா கொடுத்துட்டு போயிட்டே இரு, உங்களோட பாராட்டு எல்லாம் எங்களுக்கு வேண்டாம் என்று அந்த பெண்மணி கொதித்து எழுந்தார். இப்படி அரசாங்கப் பணியிலும் அரசு வாக்குறுதிகளை நம்பி அரசுக்காக வேலை செய்து கொண்டிருப்பவர்களும் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் சம்பளம் குறித்து போராட்டம் செய்து வந்து கொண்டே தான் இருக்கின்றனர்.
இவர்களின் நிலை இப்படி இருக்க, சின்ன சின்ன தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் என்னென்ன மாதிரியான கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
உனக்கு எத்தனை முறை இந்த வேலையை சொல்லித்தருவது? இன்னும் நீ இந்த வேலையை முடிக்கலையா? இதுதான் நீ வேலை செஞ்ச லட்சணமா? வேலை செய்யாமல் ஓப்பி அடிக்கிறியா? வேலைக்கு சரியான நேரத்துக்கு வர்றதில்லை, சொல்ற வேலையை சரியாக கேட்கறதுமில்லை… நான் ஒன்னு சொன்னா நீ ஒண்ணு புரிஞ்சிக்கிட்டு ஏதேதோ செய்து வைக்கிற… கொஞ்சம் இழுத்துப் பிடிச்சு வேலை செஞ்சு குடு… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி செஞ்சு கொடுப்பா பாத்து பண்ணிக்கலாம்… வேக வேகமா வேலை செய்ய கத்துக்கணும் இவ்வளவு மந்தமா வேலை செஞ்சு என்னைக்கு வேலைய முடிச்சு எப்படி சம்பளம் வாங்குறது? வேல தெரியாதவன கொணாந்து உள்ள விட்டுகிட்டு மத்தவங்க வேலையை கெடுத்தால் எப்படி வேலை ஒழுங்கா நடக்கும்? எப்படி போயி பொருளை வித்துட்டு வந்து இங்கு வேலை செய்பவர்களுக்கு சரியான சம்பளத்தை கொடுக்கிறது? என்று விதவிதமாக சொல்லி வேலை வாங்குவார்கள். நாம் அவர்கள் பேசக் கூடிய அத்தனை வார்த்தைகளையும் கேட்டுக்கொண்டு “என்னடா பண்றது நம்ம வாழ்க்கை எப்படி இருக்கிறது இதை விட்டால் வேற வேலை கிடைக்காது” என்கிற ஒரு இக்கட்டான சூழலில் பல்லை கடித்துக்கொண்டு முதுகு வலிக்க வலிக்க அவர்கள் சொல்லும் வேலையை செய்து முடித்துக் கொடுப்போம். இப்படி இத்தனை முறை திட்டு வாங்கி இவ்வளவு கஷ்டப்பட்டு செய்து முடித்து கொடுத்த வேலைக்கு சரியான நேரத்தில் அவர்கள் சம்பளம் தருகிறார்களா?
இந்த தடவை சம்பளம் கொஞ்சம் லேட்டா தான் கிடைக்கும் என்பார்கள். லேட்டா என்றால் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் தந்து விட்டால் பரவாயில்லை. சொன்ன காலத்தைவிட இழுத்துக் கொண்டே போவார்கள். நாளைக்கு கண்டிப்பா வாங்கி கொள்ளலாம் என்பார்கள். இன்னும் இரண்டு நாளில் கண்டிப்பாக உன் கையில் சம்பளம் இருக்கும் என்பார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு லேட் ஆகுதோ அதுக்கு தகுந்த மாதிரி நான் உனக்கு சம்பளத்தை தந்து விடுகிறேன் சரியா… டென்ஷனாக வேண்டாம், வேலையை விட்டுப் போக வேண்டாம். இன்னும் இரண்டு நாட்கள் மூன்று நாட்களில் தந்துவிடுகிறேன் என்று இழுத்தடித்து பிறகு வாரக்கணக்கில் இழுத்தடித்து அடுத்த கட்டமாக அடுத்த மாசம் சம்பளத்தோடு சேர்த்து வாங்கிக்கலாம், கவலைப்படாதே நான் உனக்கு நல்ல சம்பளம் போட்டுத் தாரேன் என்பார்கள். நான் எப்பவுமே சம்பளம் கொடுக்கறதில் கரெக்டா இருப்பேன். இந்த மாதிரி வேலை செய்றவங்க என்கிட்ட வந்து சம்பளம் கொடுங்கனு கேக்குற அளவுக்கு நான் வைச்சுக்கவே மாட்டேன். இப்படியே வக்கணையாக பேசி மூளைச்சலவை செய்து தொடர்ந்து வேலை வாங்கிக் கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் மாதக்கணக்கில் ஆரம்பித்து அது மூன்று மாதம் நான்கு மாதங்கள் என்று போகிற போது நாம் அவர்களுக்கு போன் பண்ணினாள், கண்டிப்பாக எடுக்க மாட்டார்கள். மெசேஜ் பண்ணினால் பார்ப்பார்கள், பார்த்த பிறகும் ரிப்ளை செய்ய மாட்டார்கள். இப்படி கண்டபடி திட்டு வாங்கிக் கொண்டு வேலை செய்து கொடுத்த நாம், செய்த வேலைக்கு சம்பளம் வாங்குவதற்காக அவர்கள் பின்னாடி நாயை விட கேவலமாக லோலோ என்று அலைந்து திரிய வேண்டும். அப்படி அவர்கள் பின்னாடி அலைந்து திரிந்ததால் போற வாற இடமெல்லாம் என் பொச்சுக்கு பின்னாடியே வந்து கிட்டு இருப்பியா? சம்பளம் கொடுக்காம என்ன ஓடிப்போயிருவாங்களா? இங்க தானே இருக்கிறோம் பொறுமையா இரு வாங்கிக்கலாம், என்று அதட்டுவார்கள். அப்படி திட்டு வாங்கிக் கொண்டும் அவர்கள் பின்னாடி தொடர்வதை நாம் நிறுத்தாமல் தொடர்ந்து அவர்களிடம் சம்பளம் பற்றிக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கானது கிடைக்கும், சம்பளம் இவனிடம் வாங்க முடியாது என்று ஒதுங்கிப் போய் விட்டால் அப்பாடா நமக்கு லாபம் என்ற அந்தத் திருடர்கள் மேலும் குதுகலம் ஆகிவிடுவார்கள். அடுத்த கட்ட நடவடிக்கையாக அவர்களின் வீட்டிற்கு தேடிச் சென்று அவர்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் இப்படி சம்பளம் வழங்காததால் என் குடும்பம் இவ்வளவு வறுமையில் இருக்கிறது… மன உளைச்சலை அனுபவித்துக் கொண்டிருக்கிறது… என்று சொன்னால் உடனே அவர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். எதுக்குடா வீட்டு பொம்பளைங்க கிட்ட எல்லாம் போய் சம்பளம் பற்றிக் கேக்கறே என்று மேலும் எரிச்சல் அடைவார்கள். அடுத்த கட்டமாக அவர்கள் வீட்டிலும் இருக்க மாட்டார்கள். அப்படியே வீட்டில் இருந்தாலும் வீட்டு பெண்களிடம் சொல்லி நாளைக்கு வாங்கிக்கலாம் என்று சொல்ல சொல்வார்கள். அடுத்த நாள் விடியற்காலையில் போய் நின்றால் ஏன்டா இப்படி காலங் காத்தலயா வந்து நிப்ப… காசு கொடுக்காம ஏமாத்திட்டு போய்டுவாங்களான்ன… உன்னை ஏமாற்றி நான் என்ன அப்படியே கோட்டையா கட்டிவிட போகிறேன் என்று பெரிய யோக்கியன் மாதிரி பேசுவார்கள். கடைசியில் ஏதோ அவர்கள் பிச்சை போடுவது போல் போனா போகுது என்று நாய்க்கு எலும்புத்துண்டு தூக்கிப் போடுவது போல் தூக்கி நம் முகத்தில் விசிறுவார்கள்.
இயக்குனர் ராம் எழுதி இயக்கி நடித்த தங்கமீன்கள் படத்தை எடுத்துக்கொள்வோம். அந்த படத்தில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் பாத்திரங்களுக்கு வெள்ளி பூசும் வேலையை செய்து கொண்டிருப்பார். அவருக்கு முதலாளியாக ஒரே ஒரு முதல் முதியவர் இருப்பார். அந்த முதியவர் தன்னுடைய கடையில் வேலை செய்யும் கல்யாணி என்கிற அந்த ராமுக்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக சம்பளம் என்கிற ஒன்றை தந்து இருக்கவே மாட்டார். கல்யாணி தொடர்ந்து அந்த முதியவரிடம் சம்பளம் பற்றிக் கேட்டுக் கொண்டே இருப்பார். ஒரு கட்டத்திற்கு மேல் முதியவர் தொந்தரவு தாங்காமல் கல்யாணியை பார்த்தாலே ஓடிப்போய் ஒளிந்து கொள்வது கல்யாணி ஃபோன் பண்ணினால் போனை எடுக்காமல் இருப்பது போன்று நாட்களை கடத்துவார். அப்படி ஒருநாள் கல்யாணி கடைக்குச் சென்று தனக்கு சம்பளம் வழங்காத அந்த முதியவரை பற்றி கடையில் வேலை செய்யும் சிறுவனிடம் எப்படிப் பேசுகிறார் என்பதை பாருங்கள். எங்க அந்த பெருசு சம்பளம் என்று கேட்டால் ஓடிப்போய் ஒளிந்து கொள்வானே… ஆறு மாசமா சம்பளம் வாங்காமல் நாய் மாதிரி அலைஞ்சுகிட்டு இருக்கேன்… வேலை வாங்கும் போது மட்டும் மகன் மகன்னு சொல்லியே வேலை வாங்குவானுங்க… சம்பளம் கேட்டா எவன்னு கேப்பானுங்க… வயதானவர் என்று பார்க்காமல் முதியவர் என்று பார்க்காமல் சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து கொண்டே இருக்கும் அவரை கண்டபடி ஒருமையில் திட்டுவார் ராம்.
சம்பளத்தை வாங்கிக் கொண்ட பிறகு இத்தனை நாள் நீங்கள் சேகரித்து வைத்திருந்த அத்தனை கோபத்தையும் ஒட்டு மொத்தமாக திரட்டி அந்த சம்பளம் தராமல் ஏமாற்றி கொண்டிருந்தவனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் அவன் காதில் விழும்படி ஒருமையில் திட்டித் தீருங்கள். முடிந்தால் உள்மனதில் இருந்து நெருப்போடு ஒரு சாபத்தை கூட விட்டு விடுங்கள். நம்மளை போன்ற உடலை வருத்தி அலைந்து திரிந்து, குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாமல் வேலை செய்து கொடுத்து சம்பளத்திற்காக கெஞ்சு கெஞ்சென கெஞ்சும் சாமானியர்களுக்கு வாயை தவிர வேறு எந்த ஆயுதத்தையும் பயன்படுத்த முடியாத சூழல். நமக்கு எல்லாம் வாயும் வார்த்தைகளும் தான் ஆயுதம். இந்த மாதிரி சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் முதலாளிகள் அவர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டே இருக்கும் தொழிலாளர்கள் பற்றி மாதம் ஐந்து செய்திகளை பார்க்கப்படுகிறது. நாடு முழுக்க இவை காலங்காலமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. அதில் ஒரு சிலர் சம்பளம் தராதவர்களை கடத்திக் கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல், ஏன் அந்த சம்பளம் தராமல் ஏமாற்றியவருக்கே தெரியாமல் எவ்வளவு தூரம் அடித்து வெளுக்க முடியுமா அவ்வளவு தூரம் வெளுத்துவிட்டு நடு ரோட்டில் தூக்கி வீசி விட்டு சென்ற சம்பவங்கள் கூட இருக்கிறது.
Be the first to comment on "சரியான நேரத்தில் சம்பளம் தராதவர்களை என்ன செய்யலாம்? உங்களுக்கு அதிகபட்சம் எத்தனை மாதம் சம்பளம் தராமல் இழுத்தடித்து இருக்கிறார்கள்?"