தினேஷுக்கு தேசிய விருது கிடைக்குமா? இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைவிமர்சனம்!

Irandam Ulagaporin Kadaisi Gundu movie review

தயாரிப்பு : நீலம் புரொடக்சன்ஸ்

தயாரிப்பாளர் : இயக்குனர் பா. ரஞ்சித்

எழுத்து இயக்கம் : அதியன் ஆதிரை

இசை : டென்மா

ஒளிப்பதிவு : கிஷோர் குமார்

எடிட்டிங் : செல்வா ஆர்கே

பாடல்கள் : உமாதேவி, தனிக்கொடி, அறிவு, முத்துவேல்

நடிகர் நடிகைகள் : தினேஷ், ஆனந்தி, ரித்விகா, முனீஸ்காந்த், ஜான் விஜய், ஹரி, ரமேஷ் திலக், லிஜோஷ், மாரிமுத்து, ஆதவன் தீட்சண்யா… 

சர்டிபிகேட் : U

தயாரிப்பு பரியேறும் பெருமாள் எனும் அற்புதமான படத்தை தந்த நீலம் புரொடக்சன்ஸ் என்றதுமே இந்தப் படத்தின் மீது தன்னிச்சையாக எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. அதற்கு தகுந்தாற்போல ஏற்கனவே ரிலீஸ் ஆகி இருந்த மாவுளியோ மாவுளி பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற தலைப்பே வித்தியாசமானதாக இருக்கிறது. டைட்டில் டிசைனிங் செம.  ஆந்திரா தமிழக கடலோர பகுதியில் உள்ள காய்லாங் கடையில் மற்றும் கடற்கரையில் ஒரு குண்டு கிடைக்கிறது அந்தக் குண்டு பற்றியது கதை.அந்தக் குண்டுக்கான குட்டி டாக்குமெண்ட்ரி செம. ஆக கதைக்களமும் வித்தியாசமானதாகவே இருந்தது. இது போன்ற கதைகளை தயாரித்ததற்காகவே இயக்குனர் பா. ரஞ்சித்திற்கு பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். அடுத்ததாக மாரி செல்வராஜ் மற்றும் அதியன் ஆதிரை போன்ற எளிய மனிதர்களை தேடி கண்டுபிடித்து ஆதரவும் வாய்ப்பும் தருவதற்காக வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். மாரி செல்வராஜ் தனது மூன்றாவது படத்தை நீலம் புரொடக்சன்ஸ்க்காக இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களின் படைப்புகள் வெற்றி பெற மனதார வாழ்த்துவோம்.

உமாதேவி எழுதிய நிலமெல்லாம் பாடல், தனிக்கொடி எழுதிய மாவுளியோ மாவுளி பாடல், உமாதேவி எழுதிய இருச்சி பாடல், அறிவு எழுதிய தலைமுறை பாடல், முத்துவேல் எழுதிய நெடுவேலி பாடல் என்று படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன. ஐந்து பாடல்களுமே தனித்துவ இசையுடன் அருமையாக எளிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் டென்மா. பின்னணி இசையும் பாடல் வரிகளும் அருமை. குறிப்பாக குண்டுவை காமிக்கும் இடத்தில் எல்லாம் ஒலிக்கும் பின்னணி இசை அச்சுறுத்தல். இந்தக் கூட்டணி இன்னும் தொடர வேண்டும். கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எப்படி ஒரு தாமரையோ அதே போல பா. ரஞ்சித்திற்கு ஒரு உமாதேவி கிடைத்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எப்படி கார்கி கிடைத்துள்ளாரோ அதே போல பா. ரஞ்சித்திற்கு அறிவு கிடைத்துள்ளார். 

இரும்புக் கடையில் வேலை பார்த்த அதியன் ஆதிரை இயக்குனர் ஆகி உள்ளார். இந்த வெற்றிக்குப் பின்னாடி பெரும் உழைப்பு இருக்க வேண்டும். முதலில் வாழ்த்துக்கள் அதியன் ஆதிரை. எழுத்து இயக்கம் இரண்டையுமே அதியன் ஆதிரையே செய்துள்ளார். இரண்டு பணிகளுமே மிகச் சிறப்பாக உள்ளது. படத்தின் இரண்டாம் பாதியில் லேசான தொய்வு இருந்தது மறுக்க முடியாத உண்மை. கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு சூப்பர். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நன்றாக உழைத்துள்ளார்கள் ஒளிப்பதிவாளரும் சண்டை பயிற்சியாளரும். செல்வா ஆர் கேவின் எடிட்டிங் படத்திற்கு பக்க பலம். பாடல் காட்சிகளில் மட்டும் வரிகளுக்கேற்ற காட்சிகளை கொஞ்சம் கவனமாக கோர்த்திருக்கலாம். சண்டைக்காட்சியில் இரும்பு பொருளை தூக்கி அடிக்கும் காட்சி நம்பகத்தன்மையற்றது. இடைவேளை காட்சி பதைபதைக்க வைக்கிறது. வெடித்தது குண்டா வண்டியா? பஞ்சருக்கு என்ன ஆனது? சிட்டு என்ன ஆகப் போகிறாள் என்ற கேள்வியை எழுப்பி நம்மை அதிர வைக்கிறது இடைவேளை. 

” குண்டுன்னா குண்டாத்தான்யா இருக்கும்… “, ” ஓனருக்குன்னு கொஞ்சம் வைங்கடா… பட்டாணி வாங்கிட்டு ஊரு போயி சேரவாவது காசு வேணும்… “, ” நீ தான் அந்த பப்பாளிக்காவா… “, ” நாங்க தாண்டா முறுக்கு கம்பிங்க… “, ” காய்லாங் கடைக்கெல்லாம் சங்கமா… “, ” கவுர்மெண்ட்டே முடிவு பண்ணிக்குது… ஹெல்மெட் போடாதவன்னாலயும், பிக்பாக்கெட் அடிக்கறதவனாலயும் தான் பிரச்சினைன்னு… “, ” ஒரு இலை ஒரு பரோட்டா… “, ” காத்து வயித்துக்குள்ள போயிடுச்சுப்பா… அது தெரியாம வயிறு நம்பிடுச்சுனு நினைச்சுட்டேன்… “, ” பஞ்சர்னு பேர சொல்ல மாட்டியா… சுப்பையான்னு எதோ பேர சொல்ற… ” , ” எந்த ஓனரு ஜெயிலுக்கு போயிருக்கான்… நம்மள மாதிரி ஏமாந்தவன் தான் போவான்… “, ” “என்ன பிரச்சனையா இருந்தாலும் ஆயுதத்தை மட்டும் தூக்கக் கூடாது. பேசித் தீர்த்துக்கணும்.” போன்ற வசனங்கள் செம. நிறைய வசனங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. நிறைய வசனங்கள் சீரியசாக இருந்தன. 

எல்லோரையும் விட அதிகம் பாராட்டுக்குரியவர் நடிகர் அட்டகத்தி தினேஷ். செல்வம் என்ற லாரி ஓட்டுநராக நடிக்க சொன்னால் மனுசன் வாழ்ந்திருக்கிறார். விசாரணை, குக்கூ இரண்டு படங்களுக்கும் தேசிய விருது பெற்றிருக்க வேண்டிய நடிகர். இந்தப் படத்திற்காகவது தினேஷுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும். மனுசன் அவ்வளவு பிரமாதமாக நடித்துள்ளார். கயல் ஆனந்தி சிட்டு கதாபாத்திரத்தில்  பக்கத்து வீட்டுப் பெண் போல தோற்றமளிக்கிறார். அதுதான் அவருடைய பலம். கயல், பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படமும் ஆனந்திக்கு பெயர் சொல்லும் படமாக அமையும். விசாரணை படத்தில் ஆனந்தியும் தினேசும் ஜோடி சேர்ந்தார்கள், படம் நிறைய விருதுகள் வென்றது. இப்போது மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்கள், இந்தப் படமும் நிறைய விருதுகள் வெல்லும் என்பதில் நம்பிக்கையுண்டு. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா இந்தப் படத்தில் சில காட்சிகளே வந்திருந்தாலும் மனதில் நிற்கும்படி நடித்துள்ளார். முனீஸ்காந்த் ரொம்ப நாட்களுக்குப் பிறகு காமெடியனாக ஒரு நல்ல படத்தில் நடித்துள்ளார். பஞ்சர் கதாபாத்திரத்தில்  நிறைய இடங்களில் சிரிக்க வைக்கிறார் முனீஸ்காந்த். குணச் சித்திர கதாபாத்திரங்களைவிட காமெடியன் கதாபாத்திரம் தான் நன்கு பொருந்துகிறது என்பதை புரிந்துகொண்டு முனீஸ்காந்த் தொடர்ந்து நல்ல காமெடியனாக நடிக்க வேண்டும். குடிகாரனாக மெட்ராஸ் ஜானி ஹரி, வில்லனாக ஜான் விஜய், போலீசாக லிஜீஷ், காய்லாங்கடை முதலாளியாக மாரிமுத்து போன்றோர் தங்களுடைய வேலையை சரியாக செய்துள்ளனர். தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் எழுத்தாளர் ஆதவண் தீட்சண்யாவின் வருகை எதிர்பாராதது. இன்னும் நிறைய படங்கள் நடிக்க வாழ்த்துக்கள் சார். 

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் நெகட்டிவ் ரிசல்ட்டும் நீலம் புரொடக்சன்ஸ்சின் பரியேறும் பெருமாளின் பாசிட்டிவ் ரிசல்ட்டும் குண்டு படத்திற்கு நல்ல ஓப்பனிங்கை கொடுத்துள்ளது. நிறைய தியேட்டர்களில் ஆதித்ய வர்மா படத்தையும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தையும் தூக்கிவிட்டு இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தை இறக்கி உள்ளார்கள். பெரும்பாலான யூடூப் விமர்சகர்களும் இந்தப் படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களையே தந்துள்ளனர். இவை படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளன. போட்ட காசை மட்டும் எடுக்காமல் இரண்டு மடங்கு லாபமாவது கிடைத்தால் தான் இது போன்ற படங்களை பா. ரஞ்சித்தால் தொடர்ந்து தயாரிக்க முடியும். நல்ல படங்கள் ஓடினால் தான் நல்ல படங்கள் வரும். எனவே முடிந்த வரை இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு தாருங்கள். 

2019 ம் ஆண்டை பொறுத்த வரை ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு நல்ல படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்தாண்டின் இறுதியில் வந்தாலும் தனக்கான இடத்தை நிலை நிறுத்தியுள்ளது இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம். ஹரீஷ் கல்யாண், கதிர், அட்டகத்தி தினேஷ் ஆகிய மூன்று முக்கிய இளம் நடிகர்களும் ஒரே சமயத்தில் மோதியுள்ளனர். அதில் வெற்றி பெற்றவர் அட்டகத்தி தினேஷ் என்பதே உண்மை. சாதி வேறுபாடு, முதலாளித்துவம், கௌரவ கொலை போன்ற விஷியங்களை பேசிய படங்களில் இந்தாண்டு வெளியான படங்களில் மகாமுனியும் குண்டுவும் கவனிக்க வேண்டிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Articles

அதிமுகவின் கைக்கூலியா கரூர் கலெக்டர்? கொ... ஆட்சியர் கோவிந்தராஜூக்கு பணிமாற்றம் வந்ததும் கரூரின் அடுத்த கலெக்டராக நியமிக்கப்பட்டார் ஆட்சியர் அன்பழகன். தற்போது அவருக்கு கொலைமிரட்டல் வந்துள்ள செய்...
பெட்ரோல் திருடச் சுரங்கம் தோண்டிய கொள்ளை... தென்மேற்கு டெல்லி, கக்ரோலா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில், கடந்த செவ்வாய் கிழமை நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி...
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை மே மாதம் ... சர்வதேச அரசியலின் மிக முக்கிய செய்தியாக தற்போது விவாதிக்கப்பட்டு வருவது, வரும் மே மாதம் டொனால்ட் ட்ரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் சந்தித்து...
தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக விக்கெட்டுக... தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை 7 ஒருநாளில் போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியதே தனியொரு சுழற்பந்து வீச்சாளரின் அதிகபட்ச சாதனையாக இருந்து வந்தது. அ...

Be the first to comment on "தினேஷுக்கு தேசிய விருது கிடைக்குமா? இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைவிமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*