பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதி சடங்கிற்கு நடிகர் விஜய் சென்றிருந்தபோது அவருடைய தலை முடியை வைத்து இது டோப்பா முடி என்று அஜித் ரசிகர்கள் கேலி செய்கின்றனர். “வெளியே வரமாட்டேன் போடா” என்று அஜித்தை ஒரு பத்திரிக்கை விமர்சித்தால் அப்போது விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். இப்படிப்பட்ட கேலிகளுக்கு பெருத்த ஆதரவும் எதிர்ப்பும் கிடைக்கிறது. இதற்கு காரணம் இவற்றையே பெரும்பான்மையான நேரமாக வேலையாக வைத்திருக்கும் ரசிகர் மன்றங்கள் தான் என்று ஒரு தரப்பினர் சொல்கின்றனர். அந்த ரசிகர் மன்றங்களின் நன்மை தீமை பற்றிப் பார்ப்போம்.
ரசிகர் மன்றம் ஒரு விதத்தில் தேவைதான். ரசிகராக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. காரணம் பாமர மனிதன் பேண்ட் சட்டை, விதவிதமான ஹேர் கட்டிங் போன்றவற்றை எல்லாம் சினிமா நடிகர்களை பார்த்து தான் கற்றுக் கொண்டான். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்று ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ற நாகரிக வளர்ச்சியை திரையில் காட்டினார்கள். இப்படி நடிகர்கள் திரையில் விதவிதமான மனிதர்களின் வாழ்க்கையை காட்டும் போது இந்த உலகம் இப்படியும் இருக்கிறதா என்கிற ஒரு புரிதல் ரசிகனுக்கு உருவாகிறது. இலக்கிய புத்தகங்கள் பள்ளிக்கூட ஆசிரியர்கள் சொல்லித்தராத சில விஷயங்களை திரையில் நடிகர்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு நடிகனை ஒரு தனிமனிதர் அதிகம் ரசிக்கும் போது, அதே நடிகனை தன்னைப்போலவே அதிகம் நேசிக்கும் இன்னொரு மனிதனை தேடி அலைகிறது மனம். அப்படி அலையும் அந்த மனதிற்கு தீர்வாக ரசிகர் மன்றம் அமைகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து பல தொழில் செய்யும் நபர்கள் அறிமுகமாகி நண்பர்கள் ஆகிறார்கள். இதன் மூலம் மன அமைதியும் தொழில் வளர்ச்சியும் மனிதப் பற்றும் அதிகமாகிறது. சாமானிய இளைஞர்கள், பொழுது போகாதவர்கள், வேலை செய்ய விரும்பாதவர்கள், படிக்காதவர்கள் மட்டும் இந்த மன்றத்தில் இருப்பதில்லை. பெரிய பெரிய டாக்டர்கள் இன்ஜினியர்கள் கூட இந்த மன்றத்தில் உறுப்பினராக இருக்கிறார்கள்.
ஏற்கனவே மன்றத்தில் இருப்பவர்கள் மன்றம் தொடங்கியவர்கள் யாரும் வற்புறுத்தி அழைப்பதில்லை. அந்த இளைஞர்களாக ஆசைப்பட்டு தான் சேர்கிறார்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு மன்றத்தில் சேருபவர்கள் யாரும் இல்லை. மன்றங்களின் நோக்கம் கொண்டாடுவது மட்டுமல்ல உதவுவதும் மன்றத்தின் அடிப்படையான நோக்கம் தான். இயற்கை சீற்றத்தின் போது அல்லது சமூக அவலங்கள் நடக்கும் போது மாவட்ட வாரியாக இருக்கும் இந்த ரசிகர் மன்றங்கள் தமிழகம் முழுக்க ஒன்றுதிரண்டு தங்களால் முடிந்த உதவியை சமூகப் பணியாக செய்து வருகிறது. இவ்வளவு ரசிகர்களை சம்பாதித்து ரசிகர் மன்றங்களாக உருவாக்கி வைத்திருக்கும் அந்த ஒரு நடிகன் ஒரு சமூக பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் போது சமூக பிரச்சனைக்கு போராட துணியும் போது பல கோடி ரசிகர்கள் அவருக்கு துணையாக நிற்கிறார்கள். தன்னுடைய தலைவன் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தால் ரசிகன் கடலூரில் அதே நேரத்தில் உண்ணாவிரதம் இருக்கிறான்.
தாங்களாகவே உருவாகிக் கொள்ளும் ரசிகர்கள், தங்களுடைய வறுமை நிலையையும் மறந்து ரசிகன் என்ற அடையாளத்திற்காக மற்றவர்களுக்கு உதவுவது கண்தானம் செய்வது பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் நோட்டுகள் சீருடைகள் செருப்புகள் வழங்குவது போன்ற சின்னச்சின்ன சமூக பணிகளை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். ஏழ்மை நிலையிலும் குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி தன்னுடைய தலைவன் சொன்னான் என்பதற்காக தன்னுடைய ஒட்டுமொத்த உடலையே தானம் செய்த அப்பாவி ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் தமிழகத்தில் இருக்கின்றனர். இதனால் இந்த சமூகத்தில் பல மாற்றங்களும் சீர்திருத்தங்களும் நடந்துள்ளது என்பதும் முற்றிலும் உண்மை. பாட்ஷா என்கிற ஒரு படம் வந்த பிறகு ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்க்கை அப்படியே மாறிப் போனது. பொருளாதார ரீதியாக மாறவில்லை என்றாலும், மரியாதை ரீதியாக மாறியது என்பது முற்றிலும் உண்மை.
எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் ஒரு ரசிகர் மன்றத்தால் உண்டாகும் நன்மைகள் என்றால் அது இவ்வளவுதான். மற்றபடி இந்த ரசிகர் மன்றங்களில் நிறைய பேருடைய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பது தான் உண்மை. அவற்றை அந்த நடிகர்களே கூறியிருக்கிறார்கள். தயவுசெய்து இவ்வளவு தீவிரமாக இருக்க வேண்டாம் உங்கள் குடும்பத்தையும் தொழிலையும் முதலில் கவனியுங்கள். பிறகு சினிமாவை கொண்டாடுங்கள் என்று அவர்கள் ஆரம்பம் முதல் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே தான் இருக்கின்றனர். ஆனால ரசிகர்களும் ரசிகர் மன்றங்களில் இருக்கும் சில மனிதர்களும் அவற்றை கேட்பதாக இல்லை.
இந்த ரசிகர் மன்றங்களை ஆராயும் போது, ரசிகர் மன்றங்களில் துடிப்புடன் பணி செய்பவர்கள் அனைவருமே சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய இல்லாத பட்டவர்கள்தான். இவர்கள் ரசிகர் மன்றங்களின் மூலம் சமூக சேவை செய்கிறேன் என்கிறார்கள். அவர்களின் நோக்கம் அது இல்லை. அதிக பணம் சம்பாதிக்கும் அதிக மக்கள் செல்வாக்கு உள்ள ஒரு நடிகனின் ரசிகர் மன்றத்தில் தானும் ஒரு உறுப்பினராக இருந்தால் அதன் மூலம் ஏதோ ஒரு ஆதாயம் கிடைக்கும் என்கிற நப்பாசைதான். சமூக சேவை செய்ய அந்த மன்றத்தில் இருக்கிறேன் என்பதெல்லாம் வெறும் அபத்தமான பொய். சமூக சேவை செய்ய நினைப்பவன் சுயமாக செய்வான் அல்லது உண்மையான சமூக சேவகர்களுடன் சேர்ந்து செய்வான். நடிகன் பெயரில் செய்ய மாட்டான்.
ரசிகர் மன்றங்களில் இளம் வயதில் சேரும் மாணவ பருவத்தினர்கள் வாழ்க்கையையே தொலைத்து விடுகிறார்கள். அவர்கள் ரசிகர் மன்றங்களுக்காக செலவிடும் தொகையை சுயமாக சம்பாதிக்கிறார்களா? டிக்கெட் வாங்க காசு தராத அப்பாவை பெட்ரோல் ஊற்றி கொளுத்திகிறான் மகன், டிக்கெட் வாங்க காசு தராததால் தற்கொலை செய்துகொண்டான் மகன், இந்த மாதிரியான செய்திகள் எல்லாம் முன்னணி நடிகர்களின் படம் ரிலீசாகும் போது வருகிறதா? இல்லையா?
அம்மா அப்பா போன்ற நெருங்கிய உறவினர்களின் காசை பிடுங்கி கொண்டு திருடிக்கொண்டு வந்து செலவு செய்கிறார்கள் அவர்கள். இப்படிப்பட்ட ரசிகர்கள்தான் பின்னாட்களில் படிப்பையும் இழந்து, வாழ்க்கையை தொலைத்த போதிலும் அவர்கள் கட்டவுட் வைக்கத் தவறுவதில்லை. சரியான வருமானம் இல்லாத போதிலும் குடும்பம் வறுமையில் தத்தளித்த போதிலும் அவர்கள் வட்டிக்கு கடன் வாங்கி கொண்டு கூட தன்னுடைய தலைவனுக்கு கட்அவுட் வைத்து மற்ற உயிர்களையும் சாகடிக்கிறார்கள்.
தான் கெட்டது மட்டும் இல்லாமல் ரசிகர் என்ற பெயரில் ரசிகர் மன்ற உறுப்பினர் என்ற பெயரில் தன் வீட்டிலிருக்கும் நண்டு சிண்டு களை எல்லாம் கண்ட கண்ட இடங்களுக்குக் கூட்டிக் கொண்டு போய் நடிகர்தான் சாமி நடிகர் தான் உன் தலைவன் என்று கற்றுக் கொடுப்பது எல்லாம் மூடத்தனம். ரசிகர்களுக்கு உள்ளேயே மேல்மட்ட ரசிகர் கீழ்மட்ட ரசிகர் என்ற பாகுபாடு இருக்கிறது. அதுதான் உண்மை.
அதிலும் குறிப்பாக அந்த நடிகனின் பட ரிலீசின் போது முதல் நாளில் இந்த சாமானிய ரசிகர்கள் செய்யும் அலப்பறைகள் பரிதாபத்துக்கு உரியது. நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்கள் அமைதியாக வேலை நேரம் போக மற்ற நேரத்தில் சினிமாவை கொண்டாடும்போது இந்த சாமானிய இளைஞர்கள் ரொம்ப சிரத்தை எடுத்து பெரிய கட்-அவுட் வைத்து அதன் மீது ஏறி பால் ஊற்றி ஹீரோயிஸம் செய்ய முயல்கிறார்கள். ஒருவேளை அந்தக் கட் அவுட்டில் பால் ஊற்றும் இளைஞன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தால் அந்த இளைஞனின் குடும்பத்திற்கு ரசிகர் மன்றம் ஏதாவது நிதி உதவி வழங்குகிறதா? இல்லை அந்த ரசிகரின் தலைவன் அந்த குடும்பத்திற்கு ஏதாவது நிதி உதவி வழங்குகிறானா? இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது அந்த இளைஞனின் முட்டாள்தனமான செயல் என்று எத்தனை நடிகர்கள் விலகி இருக்கிறார்கள். படம் ரிலீசாகும் நாளின் போது கூட்ட நெரிசலில் சிக்கி நிறைய இளைஞர்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள் நிறைய பேர் கட் அவுட்டில் ஏறி கீழே விழுந்து உயிரிழந்து இருக்கிறார்கள். கட்டவுட் சாய்ந்ததால் சாலையில் பயணிக்கும் சில நபர்கள் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மரணம் அடைந்திருக்கிறார்கள். அஜீத் ரசிகர் மன்றத்தை கலைத்தற்க்கும் கமல் ரசிகர் மன்றம் என்று தொடங்காமல் நற்பணி மன்றமாக தொடங்கியதற்கும் மேலே உள்ள காரணங்கள் ஒரு வகையில் காரணமாக இருக்கின்றன.
நடிகனின் போட்டோவை எந்நேரமும் பாக்கெட்டில் வைத்திருப்பது எந்த விதத்தில் வாழ்க்கைக்கு உதவுகிறது? என்று கேள்வி எழுப்பினால் என்னுடைய நடிகர் துறையில் நிறைய நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறார் அவருடைய போட்டோ எங்கள் பாக்கெட்டில் இருக்கும் போது நாங்கள் அவர் சொன்ன அறநெறிகளை மீறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று சொல்கின்றனர். அதேசமயம் நடிகர்களும் அவ்வளவு உத்தமர்கள் இல்லை வெளியில்தான் ரசிகர் மன்றம் வேண்டாம் குடும்பத்தை கவனியுங்கள் என்று சொன்னாலும் இன்னொரு பக்கம் ரசிகர் மன்றங்கள் வேலையெல்லாம் எப்படி போகிறது? என்று ஆள் வைத்து கேட்கிறார்கள். இதன் காரணம் என்ன? இந்த அப்பாவி ரசிகர்களை எல்லாம் மூளைச்சலவை செய்து செய்து அவர்களை அறியாமையில் சுழல வைத்து அவர்களைப் பயன்படுத்தி தன்னை எம்எல்ஏவாக முதலமைச்சராக என்று நிறுத்திக் கொள்வதுதான் அந்த நடிகர்களின் நோக்கம்.
நடிகர்களை பார்த்து நடிகர்களை முன்மாதிரியாக வைத்து பலபேர் ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் ஆள் இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது. ஐபிஎஸ் அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகள் நடிகர்களைப் பார்த்து உருவாக்கினார்கள் என்று சொல்வது அபத்தம் நடிகர்கள் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவவில்லை. சாமானியர்கள் அவர்களை முன் மாதிரியாக வைத்துக்கொண்டு அவர்களாகவே தான் உயர்த்திக் கொண்டார்கள். இப்படிப்பட்ட ஏழை சாதனையாளர்களை நடிகர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஏழைகளுக்கு உதவுவது போல் விளம்பரம் செய்து கொண்டு இன்கம் டாக்ஸ் துறையில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.
எல்லா சமூக அமைப்புகளிலும் நல்லது மட்டுமே நடப்பதில்லை கெட்டதும் நடக்கிறது. அதே போலதான் ரசிகர் மன்றங்களிலும். ரசிகர் மன்றம் வேண்டாம் என்று புறக்கணித்தாலும் அது மீண்டும் மீண்டும் தானாகவே உருவாக்கிக் கொண்டு வரும் என்பதுதான் உண்மையான விஷயம். தனிஒருவன் படத்தில் அரவிந்த்சாமி அப்பா ஒரு கட்சியின் தீவிர தொண்டனாக இருப்பார். அதேபோல கொடி படத்தில் கருணாஸ் ஒரு கட்சியின் அடிமட்டத் தொண்டன் ஆக இருப்பார். இவர்களின் வாழ்க்கையே எல்லாம் எடுத்துப் பார்த்தால் அது கடைசியில் போய் எதாவொரு விதத்தில் பாதிப்பாய் முடியும். இந்த மாதிரி தான் ரசிகனும். அரசியல் கட்சிகளை நம்பி எப்படி அடிமட்ட தொண்டர்கள் பாதிக்கப்படுகிறார்களோ அதே மாதிரி தான் இந்த மாதிரியான ரசிகர்களும்.
Be the first to comment on "நடிகர்களின் மீது பித்து பிடித்தது போல் இருப்பது ரசிகர்களின் வாழ்க்கைக்கு நல்லதா கெட்டதா?"