விபத்து சிகிச்சைகளை இலவசமாக்குகிறது டெல்லி அரசு

Delhi-government

கடைக்கோடி சாமானியனுக்கும் தரமான மருத்துவம் சென்று சேர வேண்டும், இந்த வாக்கியம் இடம்பெறாத தேர்தல் அறிக்கைகளே இந்திய அரசியல் வரலாற்றில் இல்லை எனலாம். அநேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் வரி மாறாமல் தங்கள் அறிக்கைகளில் பயன்படுத்தி கொள்கின்றன. உண்மையில் சாமானியர்களுக்கு அப்படிப்பட்ட தரமான மருத்துவம் சென்று சேர்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. அதற்கான உறுதியான முதல் அடியை டெல்லி அரசு எடுத்து வைத்திருக்கிறது.

முன்மாதிரியாய் திகழும் டெல்லி அரசு

டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையில் இயங்கும் ஆம் ஆத்மி அரசு, விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை கொண்டு வர உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சாலை விபத்துகள், அமில தாக்குதல்கள் உள்ளிட்ட விபத்துகளுக்கு இலவசமாக அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அதற்கு உண்டான செலவினங்கள் அனைத்தையும் டெல்லி அரசாங்கமே ஏற்கும். டெல்லி மந்திரி சபையால் இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

டிசம்பர் 12 2017 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தத் திட்டத்தை பற்றி விளக்கிக் கூறினார் டெல்லியின் சுகாதார துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், டெல்லியில் நடந்த இந்தச் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சருடன் அம்மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலும் உடனிருந்தார்.

அனைத்து மக்களுக்கும்

மேலும் இதுகுறித்து பேசிய சுகாதார அமைச்சர், இந்தத் திட்டம் டெல்லி வாசிகளுக்கு மட்டும் என்ற குறுகிய நோக்கமாக அல்லாமல், அனைத்து மாநில மக்களுக்கும் இது பொருந்தும் என்றும் சுட்டிக்காட்டினார். கோல்டன் ஹவர் என்று சொல்லப்படும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சமயங்களில் மக்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கிலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது என்று மேலும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொருவருடைய வாழ்வும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது, ஒவ்வொருவருடைய வாழ்வும் , உயிரும் எங்களுக்கு முக்கியம். சரியான நேரத்தில், சரியான மருத்துவம் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் பட்சத்தில், அவர்களின் உயிர் பாதுகாக்கப்படும் என்று இந்தத் திட்டம் குறித்துப் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி அமைச்சரவை இப்போதைக்கு மூன்று விதமான விபத்துகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளது. அவை முறையே சாலை விபத்துகள், தீ விபத்துகள் மற்றும் அமில தாக்குதல்கள் ஆகும். இந்த இலவச சிகிச்சையை மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளலாம்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் ரூபாய் இரண்டாயிரம் பரிசு

டெல்லியில் ஏற்படும் சாலை விபத்துகள் குறித்து பேசிய சுகாதார துறை அமைச்சர் ஜெயின், ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் 8000 விபத்துகள் நிகழ்வதாகவும், அப்படி நிகழும் விபத்துகளால்  15000 முதல் 20000 மக்கள் பாதிக்கப்படுவதாகவும், 1600 பேர் வரை உயிரிழப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கையைப் பெருமளவு குறைக்க முடிவு செய்த டெல்லி அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அதன் ஒரு பகுதியாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக மருத்துவமனை கொண்டு செல்பவர்களுக்கு ரூபாய் 2000 சன்மானம் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 2017  அன்று குட் சமாரிடன்(Good Samaritan) என்று பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் மூலமாகச் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை விரைந்து மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை குட் சமாரிடன்(Good Samaritan) என்று அழைத்து சன்மானம் வழங்குவது  மட்டுமல்லாமல் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

மேற்கு டெல்லியின் சுபாஷ் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2016ல் நடைபெற்ற விபத்தில் யாரும் உதவ முன்வராததால் நிகழ்ந்த உயிரிழப்பு சம்பவமே இது போன்றதொரு திட்டத்தை அறிவிக்க டெல்லி அரசு முன்வந்துள்ளது.

டெல்லி அரசை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற மாநிலங்களும் இது போன்றதொரு திட்டத்தைச் செயல்படுத்த முன்வந்தால் தேர்தல் அறிக்கைகளில் அறுபதாண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்று வரும் அந்த டெம்ப்லேட் வாக்கியம் நிஜத்திலும் செயல் வடிவம் பெறக்கூடும்.

 

 

Related Articles

தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத... 11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின...
கொல்லிமலையில் விற்பனையாகும் வயாகரா கிழங்... ராஜா திருவேங்கடம் எழுதிய கொல்லிமலை சித்தர்கள் புத்தகம் ஒரு பார்வை! கொள்ளை அழகு கொல்லிமலை, 2. வல்வில் ஓரி, 3. அறப்பளீஸ்வரர் கோயில், 4. ஆகாய கங்க...
ரிமோட்டில் இயங்கப்போகிறது சென்னை மெட்ரோ ... சிறுவயதில் நாம் அனைவருமே பொம்மை கார வைத்து விளையாடியிருப்போம் அல்லவா, மிகவேகமாகக் காரை இழுத்து விட்டால் அது சுவரில் டம்மென்று இடித்து நிற்கும். பிறகு ...
“உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேய... கதாபாத்திரங்கள் : ஆனந்த் - வன அலுவலரின் நண்பன், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி - யானை டாக்டர், மாரிமுத்து - உதவியாள், செல்வா - வளர்ப்பு யானை,...

Be the first to comment on "விபத்து சிகிச்சைகளை இலவசமாக்குகிறது டெல்லி அரசு"

Leave a comment

Your email address will not be published.


*