எதிர்ப்பு தான் மூலதனம்
அரசியலுக்கு எதிர்ப்பு தான் மூலதனம் என்று ரஜினி சொன்னதும் சொன்னார் எக்கசக்க எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியொன்றில் போர் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம். அரசியலுக்கு எதிர்ப்பு தான் மூலதனம் என்று சொன்னார். அன்று முதலே ரஜினிக்கு எதிர்ப்புகள் குவியத்தொடங்கிவிட்டது. இப்போது அரசியலுக்கு வருகிறேன், தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கப்போகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டார். அந்த கணத்தில் இருந்து இப்போது வரை பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெரிய எழுத்தாளர்கள் பேஸ்புக்கில் நீளமான பதிவை பதிவிட்டு எதிர்ப்பை தெரிவிக்க, நெட்டிசன்கள் காரணமே இல்லாமல் #ஒருநிமிசம்தலைசுத்திருச்சு என்று கலாய்த்து தள்ளுகிறார்கள்.
எதிர்ப்பதற்கான காரணங்கள்?
முதல் காரணம் ரஜினி மராட்டியர் என்பது. நாம் தமிழர் கட்சி உள்பட பலரும் ரஜினி தமிழர் இல்லை என்பதை காரணம் காட்டியே கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ரஜினியும், இந்த தமிழக மக்கள் என்னை தமிழனாக மாற்றிவிட்டார்கள் என்றும் என்னுடைய அப்பாவுக்கு கிருஷ்ணகிரி தான் பூர்வீகம், ஆதலால் நானும் பச்சைத்தமிழன் தான் என்றும் கூறிவிட்டார். இருந்தும் இதே காரணத்தை முன்னிறுத்தி எதிர்ப்புகளை தெரிவிக்கின்றனர்.
அடுத்தது ரஜினியின் அரசியல் கொள்கை. ஆன்மிக அரசியல் தான் எங்களுடைய கொள்கை என்று சொல்ல, அது மேலும் எதிர்ப்புகளை குவியச் செய்துள்ளது. பெரியார், அண்ணா வழியில் வாழ்ந்த தமிழகத்தில் ஆன்மீக அரசியல் என்பது எந்த விதத்தில் சாத்தியம் என்பதும் தெரியவில்லை. ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பினால், உண்மையான நேர்மையான அரசியல் என்று பதில் வருகிறது. எதிர்ப்பாளர்களோ, ஆன்மீக அரசியல் என்றால் காவி அரசியல், பாஜக தமிழகத்தில் ரஜினி மூலமாக காலூன்ற போகிறது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இப்படி எதிர்ப்புகள் பலவிதமாறு குவிந்தாலும் அவருடைய ரசிகர்கள் அதிதீவிரமாக செயலாற்றி வருகிறார்கள் என்பது மட்டும் உண்மை.
ரசிகர்கள் ஆதரவு
டிசம்பர் 31ம் தேதி மதியமே தமிழகத்தின் பல இடங்களில் ரஜினியின் அரசியல் வருகை குறித்த பிளெக்ஸ் பேனர்கள் எழுந்து நின்றது. அதையடுத்து வெப்சைட் ஒன்று துவங்கப்பட்டு அதில் பல்லாயிரக்கணக்கில் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இப்போது ரஜினி ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றமாக மாறியுள்ளது, ஊரெங்கும் உறுப்பினர் சேர்க்கைக்கான முகாமிட்டு ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மையிலயே படுவேகம் தான்…!
Be the first to comment on "அரசியலுக்கு எதிர்ப்பு தான் மூலதனம்! எதிர்ப்புகள பாத்தா #ஒருநிமிசம்தலைசுத்திருச்சு!"