இதற்கெல்லாமா நம்ம அரசாங்கம் செலவு செய்யுது?

government

ஒரு அரசாங்கம் செயல்படுவதற்கு அடிப்படை மக்களின் வரிப்பணம். அனைத்து வகைகளிலும் மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணம் முறையாகத் தான் செலவு செய்யப்படுகிறதா? அதை விவாதிப்பதற்கு முன்பு, ஒரு அரசாங்கத்தின் வேலை தான் என்ன என்பதைச் சுருக்கமாக விளங்கிக் கொள்வோம்.

அரசாங்கத்தின் வேலை என்ன?

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தின் முக்கியமான பணிகளை இவ்வாறு பட்டியலிடலாம்

1 ) மக்களைக் காப்பது

ராணுவம், காவல்துறை போன்ற சீருடை பணியாளர்களை பணியில் அமர்த்துவதன் மூலம் நாட்டு மக்களை அண்டை/ எதிரி நாட்டினரிடமிருந்து காப்பது. புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களிலிருந்தும் அவர்களைக் காப்பது ஒரு அரசாங்கத்தின் முக்கியமான கடமை.

2 ) சட்டங்கள் இயற்றுவது

மக்கள் மற்றும் அரசு சார்ந்த நலன்களுக்காகக் கால மாற்றத்திற்கேற்ப சட்டங்கள் இயற்றுவது. சட்டம் ஒழுங்கைப் பேணுவது.

3 ) மக்கள் நலன்

உணவு, உடை மற்றும் உறைவிடம் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் தொடங்கி, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற மக்கள் நலனை உறுதி செய்யும் சேவைகளைத் தொடர்ந்து அளிப்பது.

ஒரு அரசாங்கம் எதற்கெல்லாம் அவசியம் செலவு செய்ய வேண்டும்?

1 ) நியாயமான  மற்றும் முற்போக்கான வரிவிதிப்பை நிர்வகிக்க

2 ) மாநில உள்கட்டமைப்பு மற்றும் வளங்களை மேம்படுத்துவதற்காக

3) பொதுமக்களுக்கான வீடு கட்டி தருவது மற்றும் அது சார்ந்த சேவைகளுக்காக

4 ) சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க

5 ) சட்டங்கள் இயற்ற

6 ) தபால் சேவைகளுக்காக

7 ) ஒளிபரப்பு மற்றும் ஒலிபரப்பு நிறுவனங்களுக்காக

8 ) பொதுக் கல்வி திட்டங்களுக்காக

9 ) வணிகம் செய்வதற்கான ஒழுங்குமுறைகளை உருவாக்க

10 ) வர்த்தகம்

11 ) உயிர்காக்கும் அவசர சேவைகளுக்காக

12 ) பாதுகாப்பு மற்றும் ஆயுத படையினருக்காக

13 ) அரசுப் பணியாளர்களுக்காக

14 ) சமூக சுகாதாரம் மற்றும் நலனுக்காக

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பட்டியலுக்காக ஒரு அரசாங்கம் நேர்மையான வழியில் செலவு செய்யலாம்.

ஒரு அரசாங்கம் எதற்கெல்லாம் செலவு செய்யக்கூடாது?

1 ) ஆக்கரமிப்பு போர்களுக்காக

2 ) மத விஷயங்களுக்காக

3 ) தேர்தல் பரப்புரைகளுக்காக

4 ) விளம்பரங்களுக்காக

உண்மையில் மத்திய, மாநில அரசுகள் இப்படித்தான் செலவு செய்கின்றனவா? மக்கள் வரிப்பணம் முறையாக கையாளப்பட்டிருக்கின்றனவா?

எனக்கு மோடி மெசேஜ்  அனுப்பியிருக்கிறார்

உண்மைதான். உங்கள் மொபைலுக்கு அடிக்கடி மோடி மெசேஜ் அனுப்பி இருப்பார். இதற்கெல்லாம் செலவு ஆகுமா? ஆகாதா? நிச்சயம் ஆகும். மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் யோகா தினத்திற்காக, நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறுந்தகவல் அனுப்பப்படும். அப்படி அந்த ஒருநாள் அனுப்பப்படும் குறுந்தகவல்களுக்காக 15.87 கோடியை அரசு செலவு செய்துள்ளது. கூடுதலாக யோகா செய்ய பாய் வாங்க 92 லட்சமும்.

சும்மா ஒரு விளம்பரம்

ஆம் ஆத்மீ கட்சி விளம்பரங்களுக்காக மட்டும்  526 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

டெல்லி போன்ற ஒரு சிறிய யூனியன் பிரதேசமே இவ்வளவு செலவு செய்யும்போது, நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று மத்திய அரசும் பலவாறாக மக்களின் வரிப் பணத்தை விளம்பரங்களுக்காகச் செலவு செய்துள்ளது. அதிகம் ஒன்றும் இல்லை, பதினோரு ஆண்டுகளில் விளம்பரங்களுக்காக மட்டும் மத்திய அரசு செலவு செய்த தொகை 6000 கோடி.

அப்படி எதில் தான் இவர்கள் விளம்பரம் செய்கிறார்கள் என்கிறீர்களா?

1 ) பத்திரிகை விளம்பரங்களுக்காக

2) வெளிப்புற விளம்பரங்களுக்காக. இவை விளம்பர தட்டிகள், சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், திரைப்படத்துக்கு முன்வரும் விளம்பரங்கள் என்று பல வகைப்படும்.

3 ) அச்சிடப்பட்ட விளம்பரங்கள்

4 ) ஒலி மற்றும் ஓளி விளம்பரங்கள்

5 ) டிஜிட்டல் மீடியா விளம்பரங்கள்

தமிழக அரசும் சளைத்ததா என்ன? அனைத்து மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு மாவட்டத்துக்குப் பத்து கோடி ரூபாய் செலவாகிறது என்று தெரியவந்துள்ளது. கணக்குப் போட்டு பார்த்தால், இந்த விழாவுக்காக அரசு நூறு கோடிக்கும் அதிகமாகச் செலவு செய்கிறது.

எல்லாத்தையும் மாத்தணும்

வீட்டில் வாஸ்து சரியில்லை என்ற காரணத்திற்காக அதை இடித்து, மாற்றங்கள் செய்பவர்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அரசு கட்டிடங்கள் எதுவுமே சரியில்லை என்று சொல்லி அவற்றையெல்லாம் இடித்து, மாற்றங்கள் செய்து, மறுபடியும் கட்டிய அரசைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் திட்டம் தான் இது. தெலங்கானா அரசு இதற்காகக் 200 கோடி ரூபாய்க்கும் மேலாகச் செலவு செய்திருக்கிறது.

மத்திய அரசு ஒரு எம்பிக்குச் செலவு செய்யும் தொகை எவ்வளவு தெரியுமா?

தினசரி உதவித்தொகை

மாத சம்பளம் போக, பாராளுமன்றத்திற்குச் சென்று ஒருநாள் கையெழுத்திட்டால் 2000 ரூபாய்

தொகுதி உதவித்தொகை

ஒவ்வொரு மாதமும் தனது தொகுதிக்காகத் 45000 தரப்படுகிறது

அலுவலக செலவுகளுக்காக உதவித்தொகை

ஒரு மாதத்திற்கு அலுவலக செலவுகளுக்காக 45000 தரப்படுகிறது.

பயண உதவித்தொகை

எம்பி ஒரு கிலோமீட்டர் பயணித்தால் 16 ரூபாய். ரயிலில் மாதத்திற்கு மூன்று தடவை வரை இலவசமாகப் பயணம் செய்து கொள்ளலாம். இது தவிர எம்பி மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு அவர்களது சேவை காலம் முழுவதும் தங்குமிடம் இலவசம்.

தொலைத்தொடர்பு வசதிகள்

எம்பி ஒருவர் மூன்று தொலைப்பேசி இணைப்புகள் வரை பெற்றுக்கொள்ளலாம். ஆண்டுக்கு ஐம்பதாயிரம் இலவச அழைப்புகள் மேற்கொள்ளலாம். இது தவிர இரண்டு மொபைல் இணைப்புகள் பெற்றுக்கொள்ளலாம்.

தண்ணீர் வசதி

அரசு குடியிருப்பில் இருக்கும் ஒரு எம்பிக்கு, ஆண்டுக்கு 4000 லிட்டர் தண்ணீரும்,  50000 யூனிட் மின்சாரமும் இலவசம்.

இதர வசதிகள்

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சோபா விரிப்புகள் துவைப்பதற்காகவும், மர சாமான்கள் வாங்குவதற்காகவும் 75000 தரப்படுகிறது.

எப்படி கணக்கு போட்டுப் பார்த்தாலும் ஒரு மாதத்திற்கு, ஒரு எம்பிக்கு அரசு இரண்டு லட்சம் வரை செலவு செய்கிறது.

பாராளுமன்ற உணவகத்தில் என்ன விலை?

ஒரு ரொட்டி இரண்டு ரூபாய், டால் ஐந்து ரூபாய். டீ மூன்று ரூபாய்.

நன்றாகச் சாப்பிடக்கூடிய ஒரு எம்பிக்குக் கூட ஐம்பது ரூபாய்க்கு மேல் பில் வராது.

இதையெல்லாம் வாசிக்கும்போது உங்கள் கண் முன் ஒரு சாமானியன் வந்து போவதை தடுக்கவே முடியாது.

கழிப்பறை, மின்சாரம்

இன்னமும் நம் நாட்டின் பல கிராமங்களில் மின்சார வசதிகள் இல்லை, சாலை வசதிகள் இல்லை. அரசு நடத்தும் பல பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் கிடையாது. மிக மோசமான உள்கட்டமைப்புகள் கொண்டதாகத்தான் இருக்கின்றன அரசுப்பள்ளிகள். அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதாகத் தொடர்ந்து அரசு சொல்லி வந்தாலும், கள நிலவரம் அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை.

நீட் தேர்வு

நீட் தேர்வால் அரசுப் பள்ளியில் படித்த ஒரு பிள்ளையின் உயிர் ஏற்கனவே பறிபோய் விட்டது. இன்னும் மூன்று மாதங்களில் நீட் தேர்வு நடக்கவிருக்கிறது. ஆனால் அரசுப் பள்ளியில் பயிலும் பிள்ளைகளுக்கு இன்னமும் அதற்கு உண்டான கோச்சிங் தரப்படவில்லை. போதுமான நிதி இல்லை என்று சொல்லப்படுகிறது. இதை வாசிக்கும் போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உங்களுக்கு நினைவில் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல.

அந்த நேரத்தில் மட்டும் கத்திவிட்டு அடங்கிப் போவதை ஊடகங்களும், அரசியல்வாதிகளும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். எப்போதும் போல மறந்து கடந்து போவதை நாமும் பழகிக்கொண்டோம்.

சுகாதாரம்

டெங்கு காய்ச்சல் வந்து கொத்து கொத்தாக நம் வீட்டுப் பிள்ளைகள் இறந்தபோது, கொசுவ ஒழிக்க அரசு திட்டம் தீட்டுவதாகச் சொல்லப்பட்டது. அரசு மருத்துவமனைகளின் நிலை பரிதாபத்திலும் பரிதாபம். மக்கள் எந்தப் பயமும் இன்றி அரசு மருத்துவமனையைப் பயன்படுத்த இன்னும் எத்தனைக் காலம் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை.

நீர் வழித்தடங்கள்

சென்ற ஆண்டு கிருஷ்ணா நீர் திறந்துவிடப்பட்டதும், அவசர அவசரமாகத் தூர் வாராமல் விட்ட நீர் வழித்தடங்களை அரைகுறையாக அரசு தூர்வாரியதில், பாதிக்கும் மேற்பட்ட நீர் வீணானது. பெரும் மழை, பெரும் புயல், பேரிடர்கள் இவை எதிலிருந்தும் அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதை கன்யாகுமரியில் ஒக்கி புயலால் காணாமல் போனபோது அரசு செயல்பட்ட விதத்திலிருந்தே புரிந்து கொள்ளலாம். மீனவர்களும், விவசாயிகளும் இந்நாட்டின் இரண்டாம் தர குடிமக்கள் போல நடத்தப்படுகிறார்கள்.

அரசு சில காரியங்களுக்காக மிக அதிகமாகச் செலவு செய்வதையும், ஒரு சில விஷயங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதையும் கவனித்திருக்கிறீர்களா? அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. நம் அனைவரையும் விட நம்மை ஆளும் அரசு தந்திரமானது. நீங்கள் யார் என்பதில் இருக்கிறது இதற்கான விடை.

காட்சிகளைப் பொறுத்தமட்டில் மக்கள், விவசாயிகள், மாணவர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் பெரியோர்கள் போன்ற எந்த வார்த்தைக்கும் அர்த்தம் கிடையாது. அவர்களுக்கு அர்த்தம் தரும் ஒரே வார்த்தை ஓட்டு. அது எந்தத் திசையில் இருக்கிறதோ அதை நோக்கி அனைத்து வசதிகளும் சென்று சேரும்.

இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது உங்களுக்குக் கோபம் வருகிறதா? யூ ஆர் என் ஆண்ட்டி இண்டியன்.

 

 

 

Related Articles

ராட்சசி திரைப்பட வசனங்கள் ஒரு பார்வை!... * பள்ளிக் கூடமா அது... சந்தக்கட... எங்க பாத்தாலும் குப்ப... இரைச்ஙாலு... ஆட்டுமந்தைய திறந்துவிட்ட மாதிரி... படிக்கற புள்ளைக இந்த வயசுலயே ஜாதிப் பேர சொ...
கவிப்பேரரசு வைரமுத்து பற்றிய சுவாரஸ்யமான... கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் 13-7-1953 ல் பிறந்தார். தந்தை இராமசாமி தேவர், தாயார் அங்கம்மாள். வடுகப்பட்டியில் உயர்நிலைப் பள்ளிக்...
எவ்வளவு சம்பாதித்தாலும் உங்கள் கையில் பண... பணக்காரர்கள் ஏழை வேடமிட்டு மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான். ஆனால் உண்மையான ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் உருண்டு பிரண்டு எவ்வளவு சம்பாதித்தாலும் க...
கூலித் தொழிலாளிகள் ஏமாற்றி சம்பாதிப்பவர்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் நடுவராக பங்கேற்றார். அப்போது அவர் பல படங்...

Be the first to comment on "இதற்கெல்லாமா நம்ம அரசாங்கம் செலவு செய்யுது?"

Leave a comment

Your email address will not be published.


*