அமெரிக்கா தன் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை குறைக்கும் விதமாக குற்றம் புரிந்தவர்களை மற்ற நாள்கள் கடுமையாக தண்டித்து ஆண்டின் ஒரேயொரு ஒரு நாள் இரவு (மாலை 7 to காலை 7) யார் வேண்டுமானாலும் என்ன தவறு வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் அந்த இரவில் நடைபெறும் குற்ற செயல்களை அரசு கண்டுகொள்ளாது என்ற நடைமுறையை பின்பற்றி வருகிறது.
இப்படி சுதந்திரத்துடன் கொல்வதற்குப் பெயர் பர்ஜ். இந்த பர்ஜ் நடைமுறையை சிலர் நாட்டிற்கு செய்யும் தொண்டாக நினைத்து ஆயுதங்களுடன் அன்றைய நாளின் இரவில் ஊர்சுற்றுகிறார்கள். அந்த நகரத்தின் சாலையோரம் உள்ள ஒரு வீட்டில் தான் நம் கதாநாயகனின் குடும்பம் வசிக்கிறது.
நாயகனுக்கு ஒரு மகன் ஒரு மகள் ஒரு மனைவி. மகள் பருவம் எய்திய குமரி. ஒருவனை காதலிக்கிறாள், ஆனால் அப்பா அதற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில் பர்ஜ் நடைபெறும் நாளில் மகளின் காதலன் அந்த வீட்டிற்குள் நுழைகிறான். காதலியின் அறைக்குச் செல்கிறான். இருவரும் முத்தமிட்டு கொஞ்சி குளாவுகிறார்கள்.
இதே நேரத்தில் வீட்டில் உள்ள தொலைக்காட்சி பெட்டியில் செய்தி பார்த்த குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் வீட்டின் அனைத்து கதவுகளையும் சாத்திக்கொண்டு பத்திரமாக இருக்கிறார்கள். அந்த வீடு தனது நான்கு பக்கமும் நவீன கேமராக்கள் பொறுத்தப்பட்ட வீடு. கேமரா அறைக்குள் மகன் செல்கிறான். வீட்டின் முன்வாசற் பகுதியில் உள்ள கேமராவில் ஒருமனிதன் காயப்பட்டு உயிருக்குப் போராடியபடி ஓடிவருவது தெரிய வருகிறது. மகன் அந்தக் கேமராவை சூம் செய்து அந்த நபர் பேசுவதை ஒலிப்பெருக்கியில் கேட்கிறான். அந்த நபர் உயிருக்கு போராடி உதவிக்காக கெஞ்சுவதைக் கேட்டு மனம் இறங்கி கதவை நீக்கி நீக்குகிறான் மகன். அப்பா அதை எதிர்க்க… உதவி கேட்ட நபர் வீட்டிற்குள் நுழைகிறான்.
இந்நிலையில் மகளின் காதலன் தன் காதலை உன் அப்பாவிடம் கூறுகிறேன் எனக்கூறி மாடி அறையிலிருந்து கீழிறங்கி வருகிறான். வந்தவன் திடீரென துப்பாக்கியைத் தூக்கி காதலியின் அப்பாவை நோக்கி சுட ஏற்கனவே பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருந்த அப்பாவோ ஒதுங்கி பதுங்கி அவனை சுடுகிறார். குண்டடிபட்ட காதலன் சாகிறான். இந்த துப்பாக்கி சூடு நடைபெற்ற நேரத்தில் மகனின் கருணையால் வீட்டிற்குள் நுழைந்த நபர் அதே வீட்டிற்குள் ஓடி ஒளிந்துகொள்கிறான்.
சில நிமிடங்களில் அவனை தேடி ஒரு முகமூடி கொலைகார கும்பல் நாயகனின் வீடு முன் வந்து நிற்கிறது. எங்களிடம் இருந்து தப்பியவன் உங்கள் வீட்டிற்குள் தான் நுழைந்துள்ளான் அவனை நாங்கள் சொல்லும் காலத்திற்குள் வெளியே அனுப்பினால் அவனை மட்டும் பர்ஜ் செய்வோம். இல்லையென்றால் உங்களுடைய மொத்த குடும்பத்தையே பர்ஜ் செய்ய வேண்டியதிருக்கும் என்கிறான். நாயகனுக்கு வேறு வழி தெரியவில்லை, தன்னுடைய குடும்பம் தான் தனக்கு முக்கியம் என்பதால் ஒளிந்திருக்கும் அந்த நபரை தேடிக்கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைப்பதாக உறுதியளிக்கிறான்.
அந்த வீட்டின் மின்சார இணைப்பை துண்டித்த கொலைகார கும்பல் அந்த வீட்டு வாசலிலயே துப்பாக்கி, கோடாரி, கத்தி என்று கொலை ஆயுதங்களுடன் நிற்க நாயகன் அந்த நபரை தேடுகிறான். ஆனால் மகனோ ஒரு கேமரா பொறுத்திய பொம்மை வாகனத்தை வைத்து அதன் மூலம் ஒளியெழுப்பி அந்த நபர் வீட்டின் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துகொள்ள உதவுகிறான். நேரமாகி கொண்டே இருக்க நாயகன் அந்த நபரை துப்பாக்கி ஏந்திய கையுடன் தேடுகிறான். சில நிமிடங்களில் அந்த நபர் பிடிபடுகிறான். எங்க நாலு பேருடைய உயிருக்காக நீ செத்து தான் ஆகணும் என்று அவனுடைய கைகால்களை கட்டி சேரில் உட்கார வைத்து வெளியே உள்ள கொலைகார கும்பலிடம் ஒப்படைக்க நாயகன் முயல்கிறான். ஆனால் நாயகனின் மனைவிக்கும் மகனுக்கும் இது மனிததன்மையற்ற செயலாகத் தெரிகிறது. இப்போது அந்த நபர் “நான் சாகத் தயார்… என்னைய வெளிய அனுப்புங்க…” என்கிறான். அந்த வார்த்தைகளை கேட்ட பிறகு நாயகனுக்கும் அவன் மீது கருணை உண்டாகிறது.
அஞ்சி பிழைப்பதை விட போராடி சாகலாம் என முடிவெடுத்து நாயகன் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் துப்பாக்கிகளை எடுத்துக் கொடுக்கிறான். ஆளுக்கொரு திசையென்று அவர்கள் பிரிந்து செல்ரா கால அவகாசம் முடிந்துவிட்டதால் வெளியே நிற்கும் கொலைகார கும்பல் வீட்டின் அனைத்து கதவுகளையும் ஜன்னல்களையும் உடைத்தெறிந்து உள்ளே நுழைகிறது.
உள்ளே நுழையும் முகமூடி கொலைகாரர்கள் ஒவ்வொருவராக நாயகனால் சுடப்பட்டு இறக்கிறார்கள். நாயகனின் மகளோ பெட்டுக்கு அடியில் ஒளிந்துகொள்கிறாள். அவளை உயிருடன் பிடித்து ருசிக்க வேண்டுமென விரும்புகிறான் தலைமை கொலைகாரன். இந்நிலையில் நாயகனின் மகன் கொலைகாரன் ஒருவனிடம் சிக்கிக்கொள்ள அந்தக் கொலைகாரனை சுட்டுத்தள்ளுகிறார் நாயகன்.
தன் மகனையும் மனைவியையும் ஒரு இடத்தில் பத்திரப்படுத்தி வைத்துவிட்டு நாயகன் வேறுபக்கம் செல்ல முயல அவனை தலைமை வில்லன் வயிற்றில் பெரிய அகன்ற கத்தியால் குத்திவிடுகிறான். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே உள்ள கொலைகார கும்பலை வேறொரு கும்பல் சுட்டுத்தள்ளும் காட்சியை கேமரா அறைக்குள்ளிருந்து பார்க்கிறான் மகன். இப்போது நாயகனும் மகனும் மனைவியும் தலைமை வில்லனிடம் சிக்கிக்கொள்ள அவர்களை சுட்டுத்தள்ள துப்பாக்கியுடன் நிற்கிறான் வில்லன். இதுவரை ஒளிந்துகொண்டே இருந்த மகள் அப்பாவை குத்திய தலைமை வில்லனை சுட்டுத்தள்ளுகிறாள். இப்போது இன்னொரு கும்பல் வீட்டிற்குள்ளே நுழைகிறது. பழைய முகமூடி கொலைகார கும்பலில் உள்ள அனைவரையும் சுட்டுத்தள்ளுகிறது. இந்தக் கும்பல் அந்தக் குடும்பத்தை காப்பாற்ற வந்த கும்பல் என்று நினைக்க பிறகு தான் தெரிகிறது அவர்களும் பர்ஜ் செய்ய வந்த கும்பல் என்று.
நாயகன் இறந்துவிட்டான் என்று அவனை ஒருவன் தரதரவென இழுத்துச் செல்ல மற்ற மூவரையும் சுட்டுத் தள்ளுவதற்காக தயாராக இருந்தது புதிய கொலைகார கும்பல். இப்போது மகனின் அந்த கேமரா பொருத்திய பொம்மை வாகனம் அங்கே நகர்ந்து செல்ல முதன்முறையாக உயிர்ப்பிச்சை கேட்டு வீட்டிற்குள் நுழைந்தவன் அந்த கொலைகார கும்பலில் உள்ள ஒருவனை சுட்டு வீழ்த்துகிறான். மற்ற கொலைகாரர்களை அவன் துப்பாக்கி முனையில் மண்டியிட வைக்கிறான். அவர்களை கொல்லட்டுமா என அந்த உயிர்ப்பிச்சை நபர் கேட்க நாயகனின் மனைவியோ வேண்டாம் என்கிறாள். அந்த கொலைகாரர்களை சரிக்கு சமமாக மேஜையில் அமர வைத்து காலை 7 மணி வரை காத்திருக்கிறாள். காலை 7 மணி ஆகிறது பர்ஜ் அவகாசம் முடிகிறது. எல்லோரும் கலைந்து செல்கிறார்கள். இத்துடன் படம் முடிகிறது.
இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் பொழுதுபோகாமல் இருக்கும்போது கண்டிப்பாக பாருங்கள் என்று சொல்லலாம். இந்தப் படத்திலும் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கின்றன. இருப்பினும் “மனிதன் எவ்வளவு மிருகத் தன்மையுடன் நடந்துகொள்கிறான்” என்று சொன்ன விதத்திற்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
Be the first to comment on "இந்த ஒருநாளில் அரசு அனுமதியுடன் நீங்கள் குற்றங்கள் செய்யலாம்! – The Purge (2013) படம் ஒரு பார்வை!"