தி ஜானகிராமனின் “அம்மா வந்தாள்” ஒரு பார்வை!

தி ஜானகிராமனின் - அம்மா வந்தாள் ஒரு பார்வை

ஒவ்வொருவரும் தன் வாழ்வில் கண்டிப்பாக படிக்க வேண்டிய பத்து தமிழ் நாவல்கள் என்று பட்டியலிட்டால் அவற்றில் தி ஜானகிராமனின் அம்மா வந்தாள் புத்தகம் கண்டிப்பாக இடம்பெறும். அப்படிப்பட்ட அம்மா வந்தாள் நாவல் பற்றி பார்ப்போம்.

அப்பு, பவானியம்மாள், இந்து, தண்டபானி, சிவசு, அலங்காரம், கோபு, காவேரி இப்படி முப்பதுக்கும் குறைவான கதாபாத்திரங்களே நாவலை நகர்த்திச் செல்கின்றன. எந்த இடத்திலும் சலிப்பு தட்டாமல் ஜெட் வேகத்தில் சென்று மனதை கலங்கடிக்கிறது இந்த நாவல். கதை எதை பற்றியது அதன் போக்கு எப்படி என்பதை சுருக்கமாக இங்கு தந்துள்ளோம்.

கதைச் சுருக்கம் :

அப்புவின் பதினாறு வருட வேத பாடசாலை படிப்பு முடிந்தது. பதினாறு வருடங்கள் கழித்து ( பெற்றோர்களுடன் கடிதப் போக்குவரத்து உண்டு. 16 வருடங்களில் ஐம்பதுக்கும் குறைவான நாட்களே அப்பு சொந்த ஊரில் தங்கி இருக்கிறான் ) அப்பு தன் சொந்த ஊருக்குத் திரும்பவதை காவிரிக்கரையில் அமர்ந்து நினைத்துபார்க்கிறான். பவானியம்மாளின் வேத பாடசாலையில் அப்பா தண்டபானி சேர்த்துவிட்ட முதல்நாளை நினைத்துப் பார்க்கிறான். குருக்கள் நினைவூட்டிய பிறகு இந்து தனியாக இருப்பாள் என்பதால் அவளுடைய பாதுகாப்பிற்காக விரைந்து செல்கிறான் அப்பு. பவானியம்மாள் வீட்டில் இல்லாத அந்தப் பொழுதில் இந்து அப்புவுக்கு சாதம் பரிமாறுகிறாள். பாடசாலை பழைய உணவையே உண்டு பழகியவனுக்கு இந்துவின் கைப்பக்கவம் பிடித்திருக்கிறது.

பாடசாலை மாணவர்களுக்கும் தன் மனம் கவர்ந்த அப்புவுக்கும் ஜடை பின்னிவிடும் இந்து அப்பு மீதான தன் காதலை தெரிவிக்கிறாள். திருமணம் ஆன போதிலும், ஈரோடு பக்கம் அமைந்த அந்த திருமண வாழ்க்கை முறிவுற்று அத்தை வீட்டில் வாழ்ந்து வந்தபோதிலும் என் மனம் முழுக்க நீ தான் நிரம்பியிருக்காய் என்று சொல்ல அப்புவுக்கு என்னமோ மாதிரி ஆகிறது. பாடசாலை அப்புவை சொந்த ஊருக்குப் போக வேண்டாம் என்றும் தன்னுடனே இருக்க வேண்டும் என்றும் வேண்டுகிறாள் இந்து.

பவானியம்மாளுக்கும் அதே மாதிரியான எண்ணம் தான். ஆனாலும் பாடசாலை வாழ்க்கையை அடுத்து இன்னும் வேலை, சம்பளம், கல்யாணம் என்று அப்பு தன் வாழ்க்கையில் பார்க்க வேண்டியது நிறைய இருக்கிறது என்பதால் கவுண்டன் தாந்தோணியின் வண்டியில் ஏறி ரயில் ஸ்டேசன் வரை கூட வந்து வழியனுப்பி வைக்கிறார் பவானியம்மாள்.

அச்சகம் ஒன்றில் ப்ரூப் ரீடர் வேலை பார்க்கும் அப்பா தண்டபானிக்கு தான் ஊருக்கு வருவதாக கடிதம் எழுதுகிறான். தங்கை காவேரி, சகோதரன் கோபு, அண்ணன் அண்ணி, அம்மா, அப்பா என்று எல்லோரும் அவன் வருகைக்காக காத்திருக்கிறார்கள். அப்புவின் அண்ணனனுக்கோ தம்பியை அழிந்துபோகும் வேதத்தை அப்பா படிக்க வைக்கிறாரே என்று கோபம்.

அப்பு தன் சொந்த வீட்டிற்கு பதினாறு வருட குடுமித் தலையோடு வருகிறான். அவனை உடனே வேலைக்கு சேர்த்துவிடும் முயற்சியிலும் அவனுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியிலும் இறங்குகிறார் அப்பா தண்டபானி. அது சம்பந்தமாக பேச்சு கொடுக்கும் சிவசு மதிய வேளையில் அடிக்கடி வந்து அம்மாவை சந்திக்கிறார் என்பது அப்புவுக்கு நெருடலாகவே இருக்கிறது. அம்மாவை சந்தேகிக்கிறான் அப்பு. வீட்டில் உள்ள அனைவரும் சிவசு மற்றும் அம்மாவைப் பற்றி பேச மறுக்கிறார்கள். வீட்டிலிருப்பவர்கள் அனைவருமே அம்மாவுக்கு பிறந்தவர்கள் இல்லை என்ற உண்மை தெரிய வருகிறது. அம்மாவை பிடிக்கவில்லை அவனுக்கு.

இந்நிலையில் பவானியம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று கடிதம் வருகிறது. கடிதம் வந்ததையொட்டி அப்பு தன் பாடசாலைக்கே திரும்புகிறான். பாடசாலையில் வாத்தியார் வேலை பார்த்துக்கொண்டு அங்கேயே காலம் கழிக்கலாம் என்று முடிவெடுக்கிறான். அம்மா சிவசு பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்க அப்புவுக்கு மட்டும் அந்த விசியத்தை யாருமே சொல்லவில்லை. அப்புவின் கவனிப்பால் பவானியம்மாளின் உடல்நலம் குணமடைகிறது.

இந்நிலையில் திடீரென அங்கு அம்மா வருகிறாள். பவானியம்மாள் அவளை நன்கு கவனிக்க முற்படுகிறாள். அம்மாள் அப்புவை தன்னோடு வீட்டிற்கு வர வேண்டும் என்று அழைக்கிறாள். அப்புவோ இனி தன் வாழ்நாளை பாடசாலையிலயே கழிக்கப் போகிறேன் என்று சொல்ல, அம்மா தன் முடிவை சொல்கிறாள். காசிக்கு போய் இறப்புக்காக தவம் இருக்கப் போகிறேன் என்பதுதான் அம்மாளின் முடிவு. அதைக் கேட்டு அப்பு அதிர்கிறான். அம்மா ரயிலேறி காசிக்குச் செல்ல அம்மாவை வழியனுப்பிவிட்டு வீட்டிற்கு வந்த அப்புவை இந்து கட்டிப்பிடித்து காதலை சொல்லிவிட்டு ஓடிய பிறகு, காசிக்குச் சென்ற அம்மாவின் முகத்தை நினைத்தபடி தனியாக நின்ற அப்புவின் கால்கள் துவண்டுபோக சோர்வாக கீழே அமர்கிறான்.

புத்தகமாக காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கிறது. கண்டிப்பாக ஒருமுறையாவது நாவல் முழுவதையும் படியுங்கள். பிறகு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத புத்தகமாக ” அம்மா வந்தாள் ” புத்தகம் இருக்கும்!

Related Articles

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) 2018 ஐப...  வரிசை எண் போட்டி எண் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிகள் நேரம் இடம்1 3 8-ஏப்ரல் கொல்கத்தா vs பெங்களூர் 8:00 PM கொ...
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2018 ஐபிஎல் ...  வரிசை எண் போட்டி எண் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 1 07-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை...
திரைப்படங்களின் தலைப்பில் சாதிப் பெயர் இ... முந்தைய காலத்தை விட இந்தக் காலத்தில் தான் சாதி பாகுபாடும் ஆதிக்கமும் வன்முறையும் அதிகம் இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. தெருப்பலகைகளில...
டெஸ்லா நிறுவனத்தை முந்தத் திட்டமிட்டிருக... தெற்கு ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப் பெரிய லித்தியம் அயன் பேட்டரியை (lithium ion battery) உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த...

Be the first to comment on "தி ஜானகிராமனின் “அம்மா வந்தாள்” ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*