தயாரிப்பு நிறுவனம் : டிரைடன்ட் ஆர்ட்ஸ்
தயாரிப்பாளர் : ஆர் ரவீந்திரன்
கதை, இயக்கம் : சுந்தர் சி
வசனம் : பத்ரி
இசை : ஹிப் ஹாப் ஆதி
ஒளிப்பதிவு : டட்லி
எடிட்டிங் : என் பி ஸ்ரீகாந்த்
கலை இயக்கம் : துரை ராஜ்
சண்டைப் பயிற்சி : அன்பறிவ்
நடிகர் நடிகைகள்: விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு, ராம்கி, பழ கருப்பையா, டெம்பிள் மங்கீஸ் ஷா, சாயா சிங்…
சர்டிபிகேட் : U/A
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதகதராஜா என்ற படம் ரிலீசுக்குத் தயாராகி கொண்டிருந்தது. பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை படம் இன்றுவரை வெளியாகவில்லை. அதை தொடர்ந்து சுந்தர் சியும் விஷாலும் இரண்டாவது முறையாக இணைந்து ஆம்பள எனும் சூப்பர்ஹிட் படத்தை தந்தனர். ஷங்கரின் ஐ படத்துடன் ரிலீசான போதிலும் நல்ல கலெக்சனை அள்ளியது ஆம்பள. ஹிப்ஹாப் ஆதிக்கு அது அறிமுக படம். இப்போது மூவரும் இணைந்துள்ளனர். டிரைலரும் டீசரும் பட்டாசாக இருக்க இந்தப் படத்திற்கு இன்று நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படத்தின் முதல்காட்சியே இது சுந்தர் சி படமா என்ற வியப்பைத் தருகிறது. ( இந்தப் படத்தின் கதை தெலுங்கு படத்திலிருந்து சுடப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் சுந்தர் சி மீதான மரியாதை குறையவில்லை. ) சுந்தர் சி என்றாலே காமெடி படம் தான் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்தப் படம் தக்க பதிலடி. என்னால் எப்படிப்பட்ட படத்தையும் இயக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் சுந்தர் சி. அன்பே சிவம் படத்தை நீங்கள் தான் எடுத்தீர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறோம். அதேபோல சங்கமித்ரா படத்திற்கும் ஆவலாக உள்ளோம். நான் ஒரு ” தயாரிப்பாளரின் டைரக்டர் ” என்று மீண்டும் நிரூபித்துள்ளீர்கள் சுந்தர் சி. படத்திற்கு வெங்கட் பிரசன்னா, சுபா போன்றோருடன் இணைந்து திரைக்கதை அமைத்து மாஸ் கமர்ஷியல் படத்தை தந்தது சிறப்ப. தொடர்ந்து இதே போல பல திறமைசாலிகளுடன் கூட்டணி வைத்து படம் எடுங்கள் சுந்தர் சி. ( திரைக்கதையில் சுபா பங்காற்றி உள்ளதாலோ என்னவோ குண்டுவெடிப்பு காட்சிகள் கோ படத்தை நினைவூட்டிச் செல்கின்றன… ).
சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கிறது. வாழ்த்துக்கள் அன்பறிவ்! இந்த வருடமும் சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான தேசிய விருது உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. ( ஒரு சில சண்டைக்காட்சிகள் ஹாலிவுட் பட சண்டைக்காட்சிகளை நினைவூட்டின என்பதும் மறுக்க முடியாத உண்மை. ) குறிப்பாக இடைவேளை சண்டைக் காட்சி செம மாஸ். ஒளிப்பதிவு பட்டாசாக உள்ளது. பரபரப்பான திரைக்கதைக்கு நன்றாகவே கைகொடுத்துள்ளது டட்லியின் ஒளிப்பதிவு.
ஆக்சன் கிங் அர்ஜூனுக்கு சொந்தக்காரர் என்பதாலோ என்னவோ விஷாலுக்கு சண்டைக் காட்சிகள் அவ்வளவு பிரமாதமாக செட் ஆகிறது. துப்பறிவாளன் படத்திற்குப் பிறகு இந்தப் படத்திலும் சண்டைக் காட்சிகளில் மிரட்டி உள்ளார் விஷால். கத்திச் சண்டை, அயோக்யா போன்ற படங்கள் விஷாலுக்கு சரிவை தந்தது. தொடர்ந்து சறுக்கலில் பயணிப்பாரோ என்று பதட்டத்தை உண்டாக்கிய விஷால் இந்தப் படத்தின் மூலம் தனது ரசிகர்களை ஆறுதல் படுத்துகிறார். கொஞ்சம் வெயிட் போட்டுட்டிங்க விஷால்! உடம்ப குறைங்க… மீசையில்லாமல் இருக்கும் விஷால் பல இடங்களில் அவன் இவன் விஷாலை நினைவூட்டுகிறார். படத்தில் விஜய் சேதுபதியின் வருகை யாரும் எதிர்பார்க்காதது.
பல இடங்களில் சிரிக்க வைக்கிறார் ஷா. ஷாவை தொடர்ந்து யோகி பாபு தன் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார். சாயா சிங்கும் ராம்கியும் பழ கருப்பையாவும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாகச் செய்துள்ளனர். ராம்கியின் மகனாக நடித்த சிறுவனும் நன்றாக நடித்துள்ளான். குறிப்பாக அந்த சிறுவனின் குரல் மனதைக் கவர்கிறது. ஒரு சீனில் இயக்குனர் சுந்தர் சி எட்டிப்பார்க்கிறார், தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது.
திரைத்துறைக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகப் போகிறது, தமன்னாவின் அழகில் சிறிதும் மாற்றமில்லை. நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா போல கொண்டாடப்பட வேண்டிய நடிகை தமன்னா. அப்படி இருந்தும் அவருக்கான உயரம் இன்னும் சரிவர அமையவில்லை. மசாலா படங்களுக்கு மட்டும் அதிக ஆர்வம் செலுத்தினால் எப்படி? அவ்வப்போது கல்லூரி, தர்மதுரை, கண்ணே கலைமானே, பெட்ரோமாக்ஸ் போன்ற படங்களிலும் நடிங்க தமன்னா. ஆக்சன் படத்தில் உங்கள் பங்களிப்பு சிறப்பாகவே உள்ளது. கவர்ச்சி காட்டுவதில் தாராள மனப்பான்மை உள்ளவராக உள்ளீர்கள். சண்டைக் காட்சிகளிலும் மாஸ் காட்டி உள்ளீர்கள் தமன்னா. பாகுபலி படத்திற்குப் பிறகு சண்டைக் காட்சிகளில் தமன்னாவிற்கு பெயர் சொல்லும்படி ஆக்சன் அமைந்துள்ளது. ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு இந்தப் படம் நல்ல அறிமுகம். தமிழ் சினிமாவில் வலம் வர வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா லக்ஷ்மி. போட்டோகிராபர் வில்லியாக லண்டன் பொண்ணாக நடித்திருக்கும் நடிகை செம ஹாட்டாக இருக்கிறார். அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்தும் வில்லிக்கு ஒன்னுமே ஆகவில்லை என்பது நகைப்புக்குரிய காட்சியாக இருக்கிறது.
ஆம்பள படத்திற்கு பிறகு ஹிப்ஹாப் ஆதி, சுந்தர் சி, விஷால் கூட்டணி இணைந்துள்ளது. ஆனால் ஆம்பள படம்போல இந்தப் படத்தில் உள்ள பாடல்கள் அவ்வளவாக மனம் கவரவில்லை. பாடல்களை நான்கு பேர் எழுதியுள்ளனர் என்ற போதிலும் ஒரு பாடல் கூட மனம் கவரவில்லை. பின்னணி இசையில் எப்பவும் போல மாஸ் காட்டி உள்ளார் ஆதி. அதே சமயம் பின்னணி இசை சில இடங்களில் இரைச்சலாகவும் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
சுந்தர் சி படம் என்றாலே படம் ஜெட் வேகத்தில் இருக்கும். இந்தப் படத்திலும் அந்த வேகம் குறையவில்லை. எடிட்டிங் அப்படி உள்ளது. ஒரு ஹாலிவுட் படம் பார்க்கிறோம் என்ற உணர்வை படம் முழுக்க தக்க வைத்துள்ளது என் பீ ஸ்ரீகாந்தின் எடிட்டிங். யாருப்பா காஸ்ட்யூம் டிசைனர்? விஷால் அணிந்திருக்கும் அத்தனை உடைகளுமே சூப்பர்.
” அவன் வந்தா ஆப்சன் இல்ல… ஆக்சன் தான்… ” , ” அவ என் பல்ல பாக்கல, ஸ்கில்லா பாத்துட்டா… “, ” ஓட்டுப் போட்ட கறையே ஒரு வாரத்துல போயிடும்… முத்தம் கொடுத்த கறை மூனு மாசமா போகமா இருக்குமா… ” , ” கருப்பான பசங்களுக்குத் தான் செம பீஸா மாட்டும் போல இருக்கு… “, ” நெருப்ப அப்பறமா அணைக்கலாம்னு விட்றக் கூடாதுப்பா… “, ” நாடாள வேண்டியவன் நாதி அத்துப் போறானே… அரசாள வேண்டியவன் அனாதையா போறானே… “, ” ஓடுறவனுக்கு பல வழி இருக்கு… ஆனா தொரத்துறவனுக்கு ஒரு வழி தான் இருக்கு… ” , ” உன் ஹைட்டுக்கு ரெண்டே ஸ்டெப்புல இந்தியா போயிடலாம்… “, ” இந்த நக்கல் பேச்சுக்குத் தான்டா எந்த தமிழனுக்கும் நான் உதவறது இல்ல… ” , ” உன் அக்கவுன்ட்ல இருந்து ஆக்சன் கிங் அர்ஜூன் தான் பணம் எடுக்கனுமா… “, ” என்னையலாம் இந்தியால அடிச்சுப் போட்டாலே யாரும் கேட்க மாட்டாங்க… ” , ” ஒனக்கு ஒருத்தி கிடைக்கலன்னு பிரச்சினை… எனக்கு ஒருத்தி கூட கிடைக்கலன்னு பிரச்சினை… “, ” ஹேக்கர ஜோக்கர் ஆக்கிட்டிங்களேடா… ” போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன. வசனகர்த்தா பத்ரிக்கு வாழ்த்துக்கள்.
ஆஹா ஓஹோ என்று கொண்டாட கூடிய படம் இல்லை என்றாலும் ஒரு முறை பார்த்து ரசிக்க கூடிய படம் ” ஆக்சன் “. படத்தில் யார் யாரையோ கண்டுபிடிக்கும் விஷால் நிஜத்தில் இந்த தமிழ்ராக்கர்ஸ் பயலுகளை இன்னும் கண்டுபிடிக்காமல் இருக்கிறாரே!
Be the first to comment on "” ஓடுறவனுக்கு பல வழி இருக்கு… ஆனா தொரத்துறவனுக்கு ஒரு வழி தான் இருக்கு… ” – ஆக்சன் விமர்சனம்!"