தமிழ் சினிமாவின் பாராட்டத்தக்க சில புதிய முயற்சிகள்!

Innovative efforts of Tamil Cinema!

தமிழ் சினிமாவில் அவ்வப்போது வித்தியாசமான முயற்சியுடன் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாவது உண்டு. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் உண்மையிலயே வித்தியாசமான முயற்சிகள் கொண்ட படங்கள் நிறைய வந்துள்ளன. அவை என்ன என்ன என்று பார்ப்போம். 

முதல் படம் மெர்க்குரி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் வசனங்கள் கிடையாது. வசனங்களே இல்லாமல் கமல் நடிப்பில் பேசும் படம் வெளியானது. அந்தப் படத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து மெர்க்குரி வெளியாகி நல்ல பெயரை பெற்றது. பாதர கழிவுகளால் பொதுமக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கும் படமாக இது இருந்தது. 

அடுத்ததாக ஒளிப்பதிவாளர் செழியனின் இயக்கத்தில் வெளியான டூலெட் திரைப்படம். இந்தப் படத்தில் பாடல்களும் பின்னணி இசையும் கிடையாது. இதற்கு முன்னர் பின்னணி இசை இல்லாமல் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் நடுநசி நாய்கள் என்ற படம் வெளியானது. வீடு வாடகைக்கு கிடைப்பதை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட டூலெட் திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. 

அடுத்ததாக இயக்குனர் பார்த்திபனின் இயக்கத்தில் வெளிவந்த ஒத்த செருப்பு. தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவிலயே இதுவரை யாரும் செய்திடாத முயற்சி. கதை திரைக்கதை இயக்கம் வசனம் தயாரிப்பு நடிப்பு என அனைத்து வேலைகளையும் ஒற்றை மனிதராக செய்திருந்தார். இந்தப் படம் ஆஸ்கர் வெல்லும் என பார்த்திபன் கனவு கண்டார். ஆனால் ஆஸ்கர் வெல்லவில்லை. இதற்கு முன்னர் இருவர் மட்டுமே நடித்த இருவர் மட்டும் என்ற படம் தமிழ் சினிமாவில் ரிலீசாகி அந்தப் படம் கண்டுகொள்ளப்படாமலெலே போனது. இதே போல முழுக்க முழுக்க ஒரே அறைக்குள் ஒரே வீட்டுக்குள் ஒரே ட்ரெயினுக்குள் ஒரே விமானத்துக்குள் எடுக்கப்பட்ட படங்கள் நிறைய இருக்கின்றன. 

அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கைதி. நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான இந்தப் படத்தில் பாடல்களும் ஹீரோயினும் கிடையாது. இதே போல பாடல்கள் இல்லாமல் பல வருடங்களுக்கு முன்னரே கமலின் குருதிப்புனல் வெளியாகி உள்ளது. ஆனால் அந்தப் படத்தில் ஹீரோயின் இருந்தார். ஆனால் கைதியில் ஹீரோயின் இல்லை. மெட்ராஸ் கலையரசன் நடிப்பில் உருவான களவு திரைப்படமும் கிட்டத்தட்ட கைதி மாதிரி தான். அந்தப் படத்திலும் ஹீரோயின் இல்லை. இதேபோல விஜய் ஆண்டனியின் நான் படத்திலும் ஹீரோயின் இல்லை. 

இப்படி வித்தியாசமான முயற்சிகளுடன் சினிமாக்கள் உருவாகி கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அவற்றில் நிறைய படங்கள் தோல்வியை தான் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த சமூக விழிப்புணர்வு தமிழ் திரைப்படங்கள்!

பொது மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க கூடிய வகையில் அரசாங்கத்தால் நிறைய விளம்பர படங்கள் எடுப்பது உண்டு. அது போல தமிழ் மட்டுமல்ல உலகின் பல சினிமாக்களிலும் விழிப்புணர்வை உண்டாக்க கூடிய வகையில் பல படங்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இந்தியாவில் தேசிய விருது கமிட்டியில் சமூக விழிப்புணர்வு படங்கள் என்று ஒரு தனிப் பிரிவே உள்ளது.  அந்தப் படங்களைப் பற்றி பார்ப்போம். 

முதல் படம் ஆண்டவன் கட்டளை. விஜய்சேதுபதி, ரித்திகா சிங் நடிக்க காக்கா முட்டை மணிகண்டன் இயக்கிய படம் இது. வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்கள் பாஸ்போர்ட், விசா போன்றவை எடுக்க இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என்பது தான் இந்தப் படம் சொன்ன சேதி. இது ஒரு விழிப்புணர்வு படம் என்று அந்தப் படமே தன்னை அறிவித்துக் கொண்டது. சிறந்த சமூக விழிப்புணர்வு திரைப்படம் என்ற பிரிவில் இந்தப் படம் தேசிய விருது பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தப் படம் எந்த விருதும் பெறாமல் போனது. 

அடுத்த படம் பேட் மேன். அருணாச்சல முருகானந்தம் என்ற நிஜ பேட் மேனின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது. அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் நடிக்க இயக்குனர் பால்கியால் உருவாக்கப்பட்ட படம் இது. மாத விலக்கின் போது பழைய பாவாடை துணிகளை உபயோகித்தால் தொற்று பாதிப்புகள் ஏற்படும் அதனால் நாப்கின் உபயோகிங்கள் என்று வலியுறுத்திய படம். இந்தப் படம் சிறந்த சமூக விழிப்புணர்வு திரைப்படம் என்ற பிரிவில் தேசிய விருது பெற்றது. இந்தப் படத்திற்கு மூல காரணமான அருணாச்சலம் முருகானந்தம் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இரும்புத் திரை. ஆன்லைன் கொள்ளையர்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. பி எஸ் மித்ரன் இயக்கிய  இந்தப் படத்தில் விஷால், அர்ஜூன், சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். ஆன்லைன் தளங்களில் உங்களுடைய தகவல்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள் அது உங்களை பாதிக்கும்… எந்த ஆப் எப்ப அலோ கேட்டாலும் அலோ பண்ணாதீர்கள், ஆன்லைன் தளத்தில் ஜாக்கிரதையாக இருங்கள் என்பது தான் இந்தப் படம் சொல்ல வரும் செய்தி. இந்தப் படம் பெரிய அளவில் ஹிட் அடித்ததே தவிர எந்த விருதையும் வெல்லவில்லை. 

இந்த லிஸ்டில் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி, விஜய குமாரின் உறியடி 2 படங்களையும் குறிப்பிடலாம். கெமிக்கல் தொழிற்சாலைகளால் உண்டாகும் தீமைகளை விளக்கிய படங்கள் இவை. திருட்டுப் பயலே 2, காளிதாஸ் போன்ற படங்கள் கணவர்களுக்கான விழிப்புணர்வு படங்கள் என்று சொல்லலாம். 

சில வித்தியாசமான காதல்கள்: 

அருவி படத்தில் நிறைய பேசப்பட விஷயங்கள் பேசி இருப்பார்கள். அதில் எனக்கு மிகவும் பிடித்தது அருவி மீதான பீட்டரின் காதல். 

பள்ளி தோழியிடம் தன்னுடைய காதல் ஆசையைப் பற்றி கீழே உள்ளவாறு விவரிப்பார் அருவி. “என்னை எப்படி தெரியுமா ப்ரபோஸ் பண்ணனும்… கேளேன்… ஒரு பிளைன் கார்டு… ஓப்பன் பண்ணா லவ் யூ அருவின்னு மூணே மூணு வார்த்தை. அத படிக்கும்போது உள்ள ஒரு ஃபீலிங் வரும் இல்லயா அதான் லவ்… “

“ஏன்டி பிளைனா இருக்க நீ… “

“லவ்வ எப்டிடி வோர்ட்ஸால டிஸ்க்ரைப் பண்ண முடியும்…” என்று முடியும் லவ் ப்ரோபஸ் வசனம். 

அதுக்கு அடுத்ததாக தொலைக்காட்சி அலுவலகத்தில் பீட்டருக்கும் அருவிக்கும் நடக்கும் உரையாடல் இது. 

“பீட்டர் நீ என்ன பயங்கரமா லவ் பண்ற… ப்ரபோஸ் பண்ணு…” 

“ஹாய் அருவி… நான் பீட்டர்… நான் இத சொல்லியே ஆகணும்… நீ அவ்ளோ அழகு… இங்க எவனும் இவ்ளோ அழகா இவ்வளவு அழக பாத்துருக்க மாட்டாங்க…”

“பீட்டர் இப்படியா ப்ரபோஸ் பண்ணுவ…” என்று சினிமா பாணியில் புரோபஸ் செய்த பீட்டர் மீது அருவி கோபித்துக் கொள்வாள். அதே அருவிக்கு கிளைமேக்ஸில் பீட்டர் லவ் கார்டு கொடுப்பான். அதில் அருவி பள்ளி நாட்களில் சொன்னதை போலவே லவ் யூ அருவி என்று சிம்பிளாக இருக்கும். அந்த மூன்று வார்த்தையை படித்ததும் அருவி பீட்டரைப் பார்த்து சிரிப்பாள். இந்தக் காதலை நான் உலகின் மிக புனிதமான காதல் என்பேன். காரணம் அருவிக்கு எய்ட்ஸ் இருக்கு என தெரிந்தும் பீட்டர் அவளை காதலிப்பான். பீட்டர் இந்த இடத்தில் ஒரு உயர்ந்த மனிதனாக நம் மனதை கவர்கிறான். பீட்டரைப் போலவே தமிழ் சினிமாவில் உள்ள மற்ற உன்னதமான நாயகன் நாயகியையும் குறிப்பிடலாம். 

முதல் படம் அங்காடித் தெரு. இந்தப் படத்தில் கிளைமேக்ஸில் நாயகிக்கு கால்கள் பறிபோய்விடும். இருந்தாலும் நாயகன் நாயகியை திருமணம் செய்துகொள்வான். அடுத்த படம் வழக்கு எண் 18/9, இந்தப் படத்தில் கிளைமேக்ஸில் நாயகியின் முகம் ஆசிட் வீச்சால் சிதைந்துவிடும் இருந்தாலும் நாயகன் தன் காதலில் வழுவாமல் இருப்பான். (மின்சார கண்ணா படத்தில் குஷ்புவின் முகம் தீய்ந்ததும் அவள் கணவன் அவளை வெறுப்பது போல் ஒரு காட்சி இருக்கும்). அடுத்ததாக ஜோக்கர் படத்தை சொல்லலாம், இந்தப் படத்தில் கிளைமேக்ஸில் நாயகி கோமா நிலைக்கு போய்விடுவாள் இருந்தாலும் நாயகன் தன் காதலில் உறுதியாக இருப்பான். 

ஐ படத்தில் கிளைமேக்ஸில் விக்ரமின் உடல் கூன் விழுந்து போக நாயகி அப்போதும் அவன் மீது காதல் மாறாமல் இருப்பாள். 

Related Articles

பள்ளிப்பருவத்தில் வருவது காதலா? வெறும் இ... 96 (Tamil Movie) IMBD Rating - 9.4/10இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிரு...
ஹைதராபாத் என்கவுன்டரை கொண்டாடும் திரைப் ... 1.நடிகர் சதீஷ் :மற்றவர்களின் கருத்துக்களையோ, மனித உரிமை பேசுபவர்களையோ விடுங்கள்... அந்த பெண்ணின் பெற்றோருக்கு மனதின் ஓரத்தில் ஒரு சிறு நிம்மதி வரு...
ஜித்தன் ரமேசின் “ஒங்கள போடனும் சார... ஒங்கள போடனும் சார்... சுருக்கமாக ஓபிஎஸ்... இந்த மாதிரி டைட்டிலை எங்கிருந்து பிடிக்கிறார்கள் ? யாருக்காக வைக்கிறார்கள் ? என்பது கேள்விக் குறியே. தியேட்...
டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாமின் பொன்மொழிக... காலத்தின் மணற்பரப்பில் உன் காலடிச் சுவடுகளை பதிக்க விரும்பினால் உனது கால்களை இழுத்து இழுத்து நடக்காதே. நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம் நேர...

Be the first to comment on "தமிழ் சினிமாவின் பாராட்டத்தக்க சில புதிய முயற்சிகள்!"

Leave a comment

Your email address will not be published.


*