ஒரு சில மனிதர்களை தமிழ் சினிமா தொடர்ந்து மோசமானவர்களாகவே சித்தரித்து வருகிறது. அந்த சித்தரிப்பில் கொஞ்சம் உண்மையும் உள்ளது என்பது மறுக்க முடியாது. முதலில் சூதுகவ்வும் படத்தை எடுத்துக் கொள்வோம். அந்தப் படத்தில் நேர்மையான அமைச்சரின் மகனாக அருமைபிரகாசம் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கருணாகரன். நேர்மையான அப்பாவுக்கு அப்படியே எதிர்மறையான தறுதலையாக வேலை வெட்டிக்குப் போகாமல் சுற்றிக் கொண்டிருப்பார். பிறகு ஒரு கட்டத்தில் தன்னை தானே ஆள் வைத்து கடத்த சொல்வார். பிறகு முதலமைச்சருடன் தொடர்பு ஏற்பட இல்லாத பிராடுத்தனம் எல்லாம் செய்து கிடுகிடுவென உயர்ந்து அமைச்சராகி விடுவார். ஆக இந்தப் படத்தில் அமைச்சர் மகன் ஒரு திருட்டு கம்மனாட்டி.
சலீம் மற்றும் துப்பாக்கி முனை, தெறி ஆகிய படங்களை எடுத்துக் கொள்வோம். மூன்று படங்களிலுமே ஒரு இளம்பெண் கற்பழித்து கொல்லப்படுவாள். அப்படி கற்பழித்து கொன்றவர்கள் யாரென்று பார்த்தால் அவர்களில் ஒருவன் அமைச்சரின் மகனாக இருப்பான். அந்த அமைச்சர் மகனுக்கு நான்கு மொள்ளமாரி பிரெண்டுகள் இருப்பார்கள். அந்த நாய்களுடன் சேர்ந்து தம் அடிப்பது, தண்ணி அடிப்பது, கஞ்சா அடிப்பது, விலைமகள்களுடன் உல்லாசமாக இருப்பது என்று அத்தனை அயோக்கிய தனமும் செய்பவர்களாக இருப்பார்கள். ஆக இந்தப் படங்களில் அமைச்சர் மகன்கள் கொலைகாரன்கள்.
அடுத்ததாக வழக்கு எண் 18/9 படத்தை எடுத்துக் கொள்வோம். இந்தப் படத்தில் ஒரு பெண் அரசியல்வாதியின் மகன் பள்ளி படிக்கும் காலத்திலயே தறுதலையாக சுற்றிக் கொண்டிருப்பான். ஒரு நடுத்தர வீட்டுப் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க முயன்று அதை வீடியோ எடுத்து தன் நண்பர்களுக்கு பகிர விரும்புகிறான். ஆனால் அது நடக்கவில்லை என்றதும் அந்தப் பெண்ணின் முகத்தில் ஆசிட் அடிக்க முயன்று வேறொரு பெண்ணின் முகத்தில் ஆசிட் அடித்துவிடுகிறான். ஆக இந்தப் படத்தில் அரசியல்வாதியின் மகன் ஒரு மிருகம்.
அரசியல்வாதிகளின் மகன்களை தான் இப்படி காட்டுகிறார்கள் என்றால் மகள்களையும் தவறாகத் தான் காட்டுகிறது தமிழ் சினிமா. உதாரணத்துக்கு புதுப்பேட்டை படத்தை எடுத்துக் கொள்வோம். அந்தப் படத்தில் கொக்கு குமாரின் உதவியை நாடுவார் ஒரு அமைச்சர். அப்போது அந்த அமைச்சரின் மகள் தன் நண்பனுடன் சேர்ந்து குடித்துவிட்டு உடலுறவு வைத்துக் கொண்டதும் அதை வீடியோவாக எடுத்த நண்பன் அந்த வீடியோவை காட்டி மிரட்டுவதாகவும் கொக்கி குமாருக்குத் தெரிய வரும். “ஏன் மணி பொண்ணுங்க கூடவா குடிப்பாங்க… பணக்கார வீட்டுப் பொம்பளைங்களுக்கு இந்த தப்பெல்லாம் சகஜம் போல…” என்பான் கொக்கி குமார். ஆக இந்தப் படத்தில் அமைச்சரின் மகள் ஒரு ஒழுக்கம்கெட்ட நாரக் கழுதை.
மன்னிக்கப் பழக சொல்லும் சினிமாக்கள்!
“மன்னிப்பு எனக்கு தமிழ்ல்ல பிடிக்காத ஒரே வார்த்தை…” என்ற வசனத்தை நாம் அவ்வளவு எளிதில் மறக்கப் போவதில்லை. அதே சமயம், “மன்னிச்சு வுட்றேன் பொழச்சி போங்க…” என்ற வசனத்தையும் நாம் அவ்வளவு எளிதில் மறக்கப் போவதில்லை. முதல் வசனம் விஜய்காந்தின் ரமணா படத்தில் வருவது. இரண்டாவது வசனம் கமலின் அன்பே சிவம் படத்தில் வருவது. இந்த இரண்டில் மன்னிக்கப் பழகு என்று சொன்ன சினிமாக்களை தான் பார்க்க போகிறோம்.
முதல் படம் விருமாண்டி. “மன்னிக்க தெரிஞ்சவன் தான் மனுசன்… ஆனா மன்னிப்பு கேட்கறவன் வீரன்” என்ற வசனமே மன்னிக்கப் பழக கற்றுக் கொடுத்த சினிமாக்களின் ஊற்று. மரணம் இயற்கையாக வர வேண்டுமே தவிர நாமாக கட்டாயப்படுத்த கூடாது ஆகவே அகிம்சைக்கு முன் உதாரணமான இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று சொன்ன படம் விருமாண்டி.
அடுத்த படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்தப் படத்தில் அனிதாவை கதிர் துரத்தி துரத்தி காதலிப்பான். பிறகு ஒரு கட்டத்தில் அனிதாவுக்குமே கதிர் மீது காதல் வந்துவிடும். இருவரும் உடலுறவு வைத்துக் கொண்ட அடுத்த நாள் அனிதா லாரியில் அடிபட்டு இறந்து போகிறாள். அவள் உடலில் ஒரு கை மட்டுமே மிஞ்சுகிறது மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் சிதைந்து விடுகிறது. இப்படியொரு கொடூரமான மரணம் தன் மகளுக்கு நேர்ந்ததை எண்ணி அனிதாவின் பெற்றோர்கள் அழுது கதறுவார்கள். அந்த சமயம் பார்த்து அனிதாவின் மரணத்திற்கு காரணமான கதிர் அவர்கள் முன் சென்று நிற்பான். அனிதாவின் அப்பா அவனை கண்டபடி திட்டி சாபமிடுவார். ஆனால் அனிதாவின் அம்மாவோ எதுவுமே சொல்லாமல் அமைதியாக அவன் அருகே சென்று அவன் தலையில் அன்பாக கை வைத்து மன்னித்துவிட்டு செல்வார். மிக அழுத்தமான காட்சி இது.
அடுத்ததாக துப்பாக்கி முனை படத்தைப் பார்ப்போம். இந்தப் படத்தில் எம். எஸ். பாஸ்கரின் மகளாக அம்மு அபிராமி நடித்திருப்பாள். பள்ளி மாணவியான அம்முவை நான்கு பணக்கார வீட்டு பிள்ளைகள் காரில் வைத்து கற்பழித்து கொன்றுவிடுவார்கள். தன் மகளின் இறப்பிற்கு காரணமாக இருந்த அந்த நான்கு இளைஞர்களையும் எம். எஸ். பாஸ்கர் கொடூரமாக தன் ஆத்திரம் அடங்க கொல்வார் என எதிர்பார்க்கையில் அவரோ அந்த நான்கு இளைஞர்களையும் கொல்லாமல் மன்னித்து போலீஸின் பிடியில் விட்டுவிடுவார்.
இதே போல அருவி படத்தையும் குறிப்பிடலாம். தன்னிடம் அதிகாரத்தை பயன்படுத்தி உடலுறவு வைத்துக்கொண்ட மூன்று ஆண்கள் கண்முன்னே இருந்தபோதிலும் அவர்களை அவள் எதுவும் செய்யாமல் வெறும் மன்னிப்பு மட்டும் கேட்க சொல்வாள். மன்னிப்பை விட சிறந்த தண்டனை எதுவுமே கிடையாது என்பதை உணர்த்தும் காட்சி அது.
மீடியாவை கிழித்து தொங்கவிட்ட படங்கள்!
மக்களை பரபரப்பாக வைத்திருப்பது தான் இன்றைய செய்தி தொலைக்காட்சிகளின் வேலை. அதிலும் குறிப்பாக செய்திக்குத் தகுந்தாற் போல பின்னணி இசையை கோர்த்து செய்தியை சுவாரஸ்யமாக சொல்லி வருகின்றன நம் மீடியாக்கள். இப்படிப்பட்ட மீடியாக்களின் எச்சை புத்தியை தோலுரித்த படங்களைத் தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.
முதல் படம் கத்தி. விவசாய நிலத்தை கார்ப்பரேட் கம்பெனி அபகரிக்கப் போகிறது இதை தடுக்க மீடியா வெளிச்சம் வேண்டும் என்று நாயகன் கேட்க விவசாய பிரச்சினைய சொன்னா யாரு பாக்கப் போரா… டிஆர்பிய ஏத்துற மாதிரி “கணவனை கொன்று கள்ளக் காதலுடன் ஓடிய மனைவி” இந்த மாதிரி நல்ல கிளுகிளுப்பான செய்தியா கொண்டு வாய்யா என்று மீடியா ஊழியர் கேட்பார். அதேபோல “டான்ஸ்க்கு மார்க் போட டைம் இருக்குது… ஆனா விவசாயிகளோட பிரச்சினைய சொல்ல நேரம் இல்ல..” என்று ஒரு வசனம் வரும். இப்படிப்பட்ட மீடியாக்களின் எச்சை தனங்களை முதலில் தோலுரித்த படம் கத்தி. இதற்கு முன்னர் போக்கிரி படத்தில் மீடியாக்களின் அநாகரிகப் போக்கை நெப்போலியன் தோலுரித்திருந்தார் என்றாலும் கத்தி படம் தான் அதை இன்னும் அழுத்தமாக சொன்னது.
அதை தொடர்ந்து பல படங்கள் வந்துவிட்டன. குறிப்பாக பூலோகம், காக்கா முட்டை, தொடரி படங்களை சொல்லலாம். பூலோகம் படத்தில் ஒரு விளையாட்டு சேனல் தன் லாபத்திற்காக படிப்பறிவில்லாத பாக்சர்களை எப்படி எல்லாம் பயன்படுத்துகிறது என்பதை நுணுக்கமாக காட்டி இருப்பார்கள். உயிரை பணயம் வைக்கும் விளையாட்டு வீரர்களை வைத்து குரங்காட்டி வித்தை காண்பித்து சம்பாரிக்கும் மீடியாக்களை கத்தி படத்திற்குப் பிறகு அதிகம் கிழித்து தொங்கவிட்ட படம் பூலோகம்.
காக்கா முட்டை படத்திலும் மீடியாவின் திருட்டு தனத்தை நன்கு வெளிப்படுத்தி இருப்பார்கள். பீட்சா ஷாப் வாட்ச் மேன் காக்கா முட்டை சகோதரர்களை அடித்து விரட்டும். அதை அந்தப் பகுதி சிறுவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுப்பார்கள். அந்த வீடியோ இருக்கும் செல்போனை அந்தப் பகுதி திருடர்களிடம் போகும். அந்த திருடர்கள் அதை 8000 ம் ரூபாய்க்கு சன் டிவி நிரூபருக்கு விற்பார்கள். டிவி நிறுவனமோ அதை செய்தியாக்கி விவாத மேடையெல்லாம் வைத்து பெரிய லாபம் பார்க்கும். அதிலும் குறிப்பாக காக்கா முட்டை சிறுவர்களைப் பற்றி பேசும் மீடியா ஊழியர் ஒருவர் தன் பின்னாடி அந்த காக்கா முட்டை சிறுவர்கள் கடந்து செல்வதை கூட பார்க்காமல் செய்தியை பரபரப்பான வியாபாரம் ஆக்குவதில் குறியாக இருப்பார். அருவி, கவண், தொடரி போன்ற படங்களிலும் இதுபோன்ற காட்சிகள் உள்ளன. இதெல்லாம் மீடியாவுக்கான செருப்படி காட்சிகள்.
கடுமையாக உழைத்தும் வெற்றியடையாத படங்கள்!
ஒரு சில படங்களை எப்போது பார்த்தாலும் ச்ச என்னமா கஷ்டப்பட்டு இந்தப் படத்தை எடுத்துருக்காங்க… அப்படி இருந்தும் படம் ஓடாம போயிடுச்சே என்று நினைக்கத் தோன்றும். அப்படிப்பட்ட படங்களை இங்கு பார்ப்போம்.
முதலில் பார்க்கப் போகும் படம் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன். எழுத்து, இயக்கம், இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலும் அபார உழைப்பை கொட்டிய படம். குறிப்பாக நடிகர் பார்த்திபன் உண்மையாகவே பல மாதங்களாக முடி வளர்த்தி அந்தப் படத்திற்காகவே பல வருடங்கள் மற்ற படங்களில் நடிக்காமல் இருந்தார். அப்படி இருந்தும் படம் ஓடவில்லை. ஆனால் படத்தை இன்று கொண்டாடுகிறோம்.
அடுத்ததாக ஷங்கரின் ‘ஐ’. இந்தப் படத்திற்காக விக்ரம் அநியாயத்திற்கு உடல் இளைத்தார். அந்த உடல் இளைத்த கெட்டப் வெளியே தெரிந்துவிட கூடாது என்பதற்காக பலவருடங்கள் வெளியே தலை காட்டாமல் இருந்தார். அப்படி உழைத்தும் அவருக்கு அந்தப் படம் எந்த விருதையும் பெற்றுத் தரவில்லை. படமும் பெரிய ஹிட் அடிக்கவில்லை.
அடுத்ததாக பரத்தின் 555. இந்தப் படத்திற்காக பரத் மிக கடுமையாக உழைத்து சிக்ஸ்பேக் வைத்து பல வருடங்கள் இந்தப் படத்திற்காகவே நேரம் ஒதுக்கி நடித்த படம். ஆனால் படம் ஓடவில்லை.
இதே போல ஆர்யாவின் கடம்பன் படத்தை எடுத்துக் கொள்வோம். இந்தப் படத்திற்காக ஆர்யா எயிட் பேக்கெல்லாம் வைத்தார். அவருடைய அபார உழைப்பை மீறியும் அந்தப் படம் தோல்வி அடைந்தது.
இந்தப் பட்டியலில் மிக முக்கியமானவர் நடிகர் ஜெயம் ரவி. ஒவ்வொரு படத்திற்காகவும் தன் உருவத்தை மாற்றி நடிக்கிறார். அப்படி இருந்தும் அவருடைய படங்கள் தோல்வியை தான் சந்திக்கின்றன. அதிலும் குறிப்பாக பூலோகம், ஆதி பகவன் போன்ற படங்கள் மிக நன்றாக இருந்தன. ரவியின் அபார உழைப்பு அந்தப் படத்தில் தெரியும். இருந்தாலும் படங்கள் தோல்வியை சந்தித்தன.
இதே போல தனுஷின் மரியான் படத்தையும் குறிப்பிடலாம். நீச்சல் தெரியாமல் அவதிப்பட்டு பாலைவனத்தில் சுடுமணலில் வெறுங்காலில் நடந்து நிஜ புலிகளுடன் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு என்று சிரமப்பட்டு கடுமையான உழைப்பைக் கொடுத்த போதிலும் அந்தப் படம் வெற்றியடையவில்லை.
இதே போல அனுஷ்காவின் இஞ்சி இடுப்பழகி படத்தையும் குறிப்பிடலாம். இந்தப் படத்திற்காக உடல் எடையை பன்மடங்கு பெருக்கி குண்டு பொண்ணாக மாறினார் அனுஷ்கா. அப்படி உழைத்தும் படம் பெரிய வெற்றி அடையவில்லை. அந்தப் படம் முடிந்து பல மாதங்கள் ஆன போதிலும் அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இப்படி நடிகர் நடிகைகள் அபார உழைப்பை கொடுத்த போதிலும் படம் வெற்றியடையவில்லை என்று நினைக்கும்போது சினிமாத் துறை உண்மையிலயே ஆபத்தாக தெரிகிறது.
Be the first to comment on "அரசியல்வாதியின் மகன்களும் தமிழ்சினிமாவும்! – தமிழ்சினிமா ஒரு பார்வை!"