96 என்ற படத்தின் கலந்துரையாடல் பா. ரஞ்சித்தின் கூகை நூலகத்தில் நடந்தது. அந்தக் கலந்துரையாடலில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் பிரேம்குமார், இளம் நடிகர் ஆதித்யா, இளம் நடிகை கௌரி கிஷன், எழுத்தாளர் தமிழ்ப்பிரபா போன்றோர் கலந்து கொண்டனர். விஜய் சேதுபதி என்கிற மாஸ் நடிகர் நூலகத்திற்கு வந்திருக்கிறார் என்றதும் அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரிடம் நிறைய ரசிகர்கள் நிறைய சினிமா தொழில் நுட்ப கலைஞர்கள் கேள்வி கேட்டு நிகழ்ச்சியை கலந்துரையாடல் என்ற நிலையிலிருந்து விவாதக்களம் என்ற நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுமி மைக்கைப் பிடித்துக் கொண்டு காதலைப் பற்றி ஒரு கேள்வி கேட்டார். அந்த சிறுமியிடம் கொஞ்சலாக பேச்சைத் தொடங்கிய விஜய் சேதுபதி காதலைப் பற்றி பேசுவதற்கு “உனக்கு என்னமா வயசு ஆகி விட்டது… உன்னையெல்லாம் யாரு இங்க கூட்டிட்டு வந்தா… இந்த வயசுல நீ உன்னுடைய நண்பர்கள் கூட சேர்ந்து ஜாலியாக விளையாடனும் அதை விட்டுட்டு இங்க வந்து பெரியவள் போல் பேசி உன்னுடைய குழந்தைமையை விட்டுவிடக்கூடாது…” என்று பொறுமையாக பதிலளித்தார்.
விஜய்சேதுபதிக்கு இருந்த அந்தத் தெளிவு நிறைய பெற்றோர்களுக்கு இருப்பதில்லை. சிறு வயதிலேயே தன்னுடைய குழந்தை பேரறிவு பெற்ற ஒரு அறிவுஜீவியாக மாறிவிட வேண்டும் என்பதற்காக இந்த பெற்றோர்கள் அலையாய் அலைந்து திரிகிறார்கள். சிறுவர்களை சிறுமிகளை எங்கு அழைத்துச் செல்ல வேண்டுமோ அவர்கள் வயதுக்கு உரிய இடங்களுக்கு அழைத்துச் செல்லாமல் எடுத்ததும் பெரிய பெரிய இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்குள் இருக்கும் அந்த குழந்தைத் தன்மையை அழித்து விட்டு மெச்சூரிட்டி என்கிற பெயரில் பெற்றோர்கள் குழந்தைகளை முற்றிலுமாக சாகடித்து விடுகிறார்கள்.
அரசியல் கட்சிகளில் குழந்தைகள்:
உதாரணத்திற்கு சீமானின் அரசியல் மேடை ஒன்றை இங்கு குறிப்பிடலாம். அவர் மேடையில் அமர்ந்திருக்க அவருக்கு முன் கருப்பு சட்டையும் கட்சி துண்டையும் அணிந்திருந்த சிறுவன் ஒருவன்,
வேடிக்கை மனிதரைப் போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ, அண்ணன் தீவிரவாதி என்றால் அண்ணனின் மகன் நானும் தீவிரவாதிதான், வீரப்பரம்பரை டா எங்க பரம்பரை, தெரியுமாடா உனக்கு போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறான். அவன் அப்படி பேச பேச சுற்றி இருப்பவர்கள் சீமான் உட்பட பெரிய பெரிய பிரபலங்கள் எல்லாம் அந்த சிறுவனின் வார்த்தைகளை ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதில் மழலையர் பாசறை என்கிற புதிய தொடக்கம் வேறு. இந்தியாவிலேயே எந்த கட்சியும் இப்படி ஒரு மழலையர் பாசறையை உருவாக்கவில்லை என்று சிலர் அதைக் கொண்டாடி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சிறு வயதிலேயே அவர்களுக்குள் ஒரு கட்சி சார்பான கொள்கைகளை பதிய வைத்து விட்டால் அதற்குப் பிறகு அந்த சிறுவர்களால் எப்படி பள்ளி கல்லூரிகளில் எல்லாத்தரப்பு மக்களிடமும் சரிசமமாக பழக முடியும்? மற்றவர்கள்தான் எப்படி அந்த சிறுவனிடம் இயல்பாக பழகுவார்கள். தன்னிடம் பழகும் மற்ற நண்பர்களிடம் அவன் எந்த விஷயங்களைப் பற்றி உயர்த்தி கூறிக் கொண்டு இருப்பான் அவன் உயர்த்தி கூறிக் கொண்டிருக்கும் விஷயங்களை கேட்க கேட்க அதைக் கேட்கும் சிறுவர்கள் என்ன மனநிலைக்கு போவார்கள் அப்படிப்பட்ட சிறுவர்கள் எல்லாம் படிப்பில் கவனம் செலுத்துவார்களா?
இதைப்பற்றி எல்லாம் எதையும் யோசிக்காமல் தங்களுடைய அரசியல் லாபத்திற்காக, விளம்பரத்திற்காக குழந்தைகளுக்குள் கண்டதையும் திணித்துவிட்டு அவர்களை பலிகடா ஆக்கி கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் இப்படி மடை தனமாக நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் சில ஜாதி இயக்கங்கள் அதை விட முட்டாள் தனமாக நடந்து கொண்டிருக்கின்றன.
ஜாதி இயக்கங்களில் குழந்தைகள்:
டிக்டாக்கில் ஒரு சிறுமி மிக பிரபலமாக வலம் வந்தாள். அவளுடைய ஐடியின் பெயர் “**** வீட்டு பெண்” என்பது. தெற்கு மாவட்டத்தில் உள்ள டிக் டாக் பயனாளர்கள் அத்தனை பேரும் அந்த சிறுமியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஆனால் அந்த சிறுமியின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளை கேட்பதற்கே மிக நாராசமாக இருந்தது.
சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் சொல்லித் தரக்கூடாது என்ற நல்ல நோக்கத்துடன் சிலர் அந்த ஐடியை ரிப்போர்ட் அடித்து காணாமல் போக வைத்தனர். ஆனால் மூளையற்ற அவருடைய பெற்றோர்களோ மீண்டும் மீண்டும் புதிய புதிய அக்கவுண்ட்களை உருவாக்கி தன் குழந்தைக்கு கண்டதையும் சொல்லிக் கொடுத்து அதே டிக்டாக்கில் ஒளிபரப்பி, வீர வம்சமடா வீர பரம்பரை டா என்று ஆவேச உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுமியை ஜாதி சங்க தலைவர், தன் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். அவரைச்சுற்றி முறுக்கு மீசை மனிதர்கள் எல்லாரும் பல்லிளித்துக் கொண்டு வீராப்புடன் இருக்கிறார்கள். இந்த சிறுமியின் பள்ளிக்கூட ஆசிரியர் ஆசிரியைகள் சக மாணவ மாணவிகள் எல்லோரும் அவளை எப்படி பார்ப்பார்கள் அவளுக்கு என்ன சொல்லி புரிய வைப்பார்கள் அவளுக்கு யார் சொல்வது சரியானது என்று எப்படி புரியும் அப்பா அம்மா சொல்லித் தருவது சரியா இல்லை ஆசிரியர்கள் நண்பர்கள் சொல்லி தருவது சரியா என்று பகுத்தறியும் திறன் அந்த பிஞ்சு குழந்தைக்கு இருக்கிறதா?
இதேபோல ஜாதி வெறியை குழந்தைகளின் மனதில் பதிய வைக்கும் நோக்கத்துடன், சில பெற்றோர்கள் குறிப்பாக அம்மாக்களே வீடியோ எடுத்து அதை வெளியே பரப்புவது இந்த சமூகம் மெல்ல மெல்ல மிருகத்தனமாக மாறிக்கொண்டு வருகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
தன் குழந்தையை குச்சியை வைத்து மிரட்டி கொண்டிருக்கும் ஒரு அம்மா, நீ என்ன ஜாதி நீ என்ன குலம் நீ என்ன சாமியை கும்பிடற என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்புகிறார். அந்தக் கேள்விகள் அத்தனைக்கும் அந்த சிறுமி, “நான் இந்த ஜாதி இந்த குலம் திருமணம் செய்தால் இந்த குலத்தில் இருந்து இந்த பையனை தான் நான் திருமணம் செய்துகொள்வேன் ஒருபோதும் யாரையும் காதலிக்க மாட்டேன் என்றும் நம் ஜாதியின் பெருமையை காப்பாற்றுவேன்” என்று உறுதி மொழி அளிக்கிறாள்.
இந்தியா எனது தாய்நாடு, இந்தியர் அனைவரும் எனது உடன் பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்க வேண்டிய வயதில் இந்த சிறுமி என் ஜாதி பெருமையை நான் காப்பாற்றுவேன் என்று உறுதி மொழி எடுத்தால் நாடு விளங்குமா? அந்தப் பெண்ணைச் சுற்றியிருக்கும் தோழிகள் என்ன மாதிரியான புரிதலுடன் வளர்வார்கள். அந்த சிறுமிக்கு பெரியவளானதும் அவளுக்கு பிறக்கும் குழந்தை என்ன மாதிரியான மன நிலையுடன் வளர்வாள் அவளை சுற்றி இருக்கும் தோழிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாம் என்ன மாதிரியான மன நிலையுடன் வளர்வார்கள் என்பது பற்றியெல்லாம் எதுவுமே யோசிப்பதில்லை?
ஒரு பக்கம் அரசியல் தெரியுமாடா உனக்கு என்று புரட்சி பேசும் அந்த சிறுவன் நம் மனதை கலங்கடிக்கிறான். இன்னொரு பக்கம் நான் வீரப்பரம்பரைடா என்று முழங்கும் அந்த சிறுமி நம் மனதை புண்படுத்துகிறாள். நான் என் ஜாதி பெருமையை காப்பாற்றுவேன் என்று உறுதிமொழி எடுக்கும் சிறுமி நாம் மனதை நோகடிக்கிறார்.
இவர்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த சினிமாவில் நடித்த நட்சத்திரக் குழந்தைகள் எல்லாம் அதைவிட ஆட்டம் போடுகின்றன. குறிப்பாக இந்த துணை நடிகர் கொட்டாச்சியின் மகளும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ராசுக்குட்டியாக நடித்து மனம் கவர்ந்த அந்த சிறுவனும் போடும் ஆட்டம் பலரை எரிச்சலூட்ட கூடியதாக இருக்கிறது.
இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருக்கும் அந்தச் சிறுமி, தன் அம்மாவை விட அதிகாரத்தில் கீழ் நிலையில் இருக்கும் அந்தக் காவலாளியை பார்த்து டேய் சொட்ட என்று சொல்வார். அதை சினிமாவாக பார்த்த ரசிகர்கள் தியேட்டரில் கைதட்டி சிரித்து மகிழ்ந்தார்கள். ஆனால் அந்தச் சிறுமியோ நிஜத்திலும் அதே மாதிரியான தன்மையுடன் நடந்து கொள்ளும் போது சினிமாவில் ரசித்தவர்கள் நிஜத்தில் அந்த சிறுமியின் செயல்பாடுகளை வெறுக்க தொடங்கினர்.
குறிப்பாக கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது சாமானிய மக்கள் எல்லோரும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து போலீஸ்காரர்களிடம் அடிவாங்கிக் கொண்டு திரிந்த சமயத்தில் அந்த சிறுமி உங்களுக்கு அறிவே இல்லையா என்று கேள்வி கேட்டது எல்லோரையும் எரிச்சலுக்கு ஆளாக்கி விட்டது.
அதேபோல அந்த ராசுகுட்டி சிறுவனும் கொரோனா வைரஸ் எதுவும் பண்ணாதே என்று சொல்லி ஏதோ பல ஆண்டுகள் வாழ்ந்து முடித்தவர் போல், மருத்துவ துறையில் பட்டம் பெற்றவன் போல் அவன் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிறான். அப்போது அந்த சிறுவனை பலரும் பலவிதமாக எச்சரித்தார்கள். ஆனால் அவருடைய பெற்றோர்கள் அந்த எச்சரிப்புகளை எல்லாம் கவனித்தார்களா என்றுதான் தெரியவில்லை. இன்றுவரை அந்த சிறுவன் தன்னை ஒரு மேதாவியாக நினைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறான். சமூக வலைதள வாசிகள் அந்த சிறுவனை தாறுமாறாக கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகளை வைத்து விளம்பரம் தேட கூடாது என்று சொல்வது சரிதான். ஆனால் அந்த பழக்கத்தை விஜய் சேதுபதியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என சிலர் சொல்வார்கள். காரணம் விஜய் சேதுபதி தன்னுடைய மகனான சூர்யா சேதுபதியை, நானும் ரவுடிதான் படத்தில் இளம்வயது விஜய்சேதுபதி ஆகவும், சிந்துபாத் படத்தில் தன்னுடைய கூட்டாளி திருடனாகவும் நடிக்க வைத்திருந்தார்.
அதை காரணமாக வைத்து விஜய் சேதுபதி மட்டும் தன்னுடைய மகனை எல்லோர் முன்னிலையிலும் பிரபலமாக்க விரும்பலாம். ஆனால் சாமானியர்கள் தங்களுடைய குழந்தைகளை வைத்து பிரபலம் என்ற விஷயத்தை அடைந்தால் அது ஏன் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று சிலர் கேட்பார்கள். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி, இரண்டு படங்களில் சிறு வேடங்களில் நடித்தான். சில பேட்டிகளில் பெரிய நடிகர்கள் உடன் கூட இருந்து தனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டான். அதோடு அவன் நிறுத்திக் கொண்டான். அதை விட்டுவிட்டு அவன் மேலும் பிரபலம் என்ற விஷயத்திற்காக சமூகவலைதளங்களில் வந்து மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கவில்லை. பெரிய அறிவுஜீவி போல் பேசவில்லை. ஒருவேளை அவன் அப்படி செய்திருந்தால் அப்போது சமூக வலைதள வாசிகள் எல்லோரும் இன்னும் தீவிரமாக அந்த சிறுவனை கலாய்த்து தள்ளி இருப்பார்கள். யாரை கலாய்க்குறோம் என்பது முக்கியம் இல்லை எதனால் வச்சு செய்கிறோம் என்பதுதான் சமூக வலைதள வாசிகளைப் பொறுத்தவரை மையக் கருத்தாக இருக்கிறது. அதனால் உங்கள் குழந்தைகளை பொறுப்புணர்வுடன் நடத்துங்கள் பெற்றோர்களே.
Be the first to comment on "விஜயசேதுபதியிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் பெற்றோர்களே! – வைரல் என்ற விஷயத்தை பயன்படுத்தி குழந்தைகளை வைத்து விளம்பரம் தேடும் பெற்றோர்கள்!"