நான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனத்தில் ப்ளூசட்டை மாறன் ஹிப்ஹாப் ஆதியின் எல்லா பாடல்களும் ஒரே மாதிரி இருப்பதாக கூறியிருந்தார். அவருடைய இசையை பற்றியும் ப்ளூசட்டை விமர்சனத்தை பற்றியும் பார்ப்போம்.
ஹிப்ஹாப் தமிழாவின் ஒரே இசை!
கிளப்புல மப்புல என்ற ஆல்பம் பாடலின் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதன் பிறகு இறைவா, தமிழன்டா, வாடி புள்ள வாடி என்று தொடர்ந்து ஹிட் ஆல்பத்தை கொடுத்து பிரபலமானவர் ஹிப்ஹாப் ஆதி.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ஆம்பள படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டு தான் இருக்கிறார். ஆம்பள, இன்று நேற்று நாளை, கதகளி, தனி ஒருவன், கவண், இமைக்கா நொடிகள், அரண்மனை 2, கோமாளி என்று தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறார். ஆனால் அந்தப் படங்களின் பாடல்கள் அனைத்துமே ஒரே மாதிரி இருக்கின்றன. ஒவ்வொரு படைப்பாளியும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று தங்களுக்கென்று ஒரு ஸ்டைல் வைத்திருப்பார்கள். ஆதியும் அந்த ஸ்டைலை தான் பயன்படுத்துகிறார் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சமீபத்தில் வெளியான நான் சிரித்தால் படத்தின் திரைவிமர்சனத்தில் ப்ளூசட்டை மாறன், “ஹிப்ஹாப் ஆதியோட எல்லா பாட்டும் ஒரே மாதிரி தான் இருக்கு… ” என்று குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் ப்ளூசட்டை மாறனின் கருத்து தான் உண்மை. ஆம்பள முதல் கடைசியாக வெளியான நான் சிரித்தால் வரை அவருடைய பாடல்கள் ஒரே மாதிரி தான் இருக்கின்றன. குறிப்பாக அவர் இசையமைத்து அவரே பாடும் பாடல்கள் எல்லாம் ஒரே டோனில் தான் இருக்கின்றன. இதற்கு பெயர் தனித்தன்மை இல்லை. மாறாக இதனை சரக்கு காலி அல்லது வறட்சி என குறிப்பிடலாம்.
இளம் இசையமைப்பாளரே இப்படி சொதப்பினால் எப்படி? அதுவும் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து இன்னும் பத்து வருடங்கள் கூட ஆகவில்லை. இளம் இசையமைப்பாளர்களில் வெரைட்டி வெரைட்டியாக மியூசிக் போடக் கூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் கண்டிப்பாக ஹிப்ஹாப் தமிழா சேர மாட்டார். ஒரே மாதிரி போட்டாலும் பரவாயில்லை ஒரிஜினலாக இருப்பதில்லையே என்பது தான் குறை. டியூனை எங்கிருந்தாவது சுடுவது அதை கொஞ்சம் மாற்றிப் போட்டு தன்னுடைய இசை என்று தாம்தூம் என குதிப்பது இந்த இசையமைப்பாளர்களின் வேலையாகப் போய்விட்டது. குறிப்பாக கோமாளி படத்தில் வரும் பைசா நோட்ட உத்துப் பாத்தேன் காந்தியத் தான் காணோம் என்ற பாடலின் டியூன் களவாடப் பட்டது. இப்படியே போனால் கூடிய விரைவில் ஹிப்ஹாப் தமிழா என்ற அடையாளத்தை இழந்து தோல்வி இசையமைப்பாளராக தான் ஆதி மாற வேண்டிய சூழல் வரும்.
ப்ளூ சட்டை மாறனின் தவறான விமர்சனங்கள்!
யூடூப்பில் சினிமா விமர்சனம் செய்பவர் ப்ளூ சட்டை என்கிற திரு. இளமாறன். பெரிய நடிகர்களின் படம், பெரிய இயக்குனர்களின் படம் என்றில்லாமல் யாருடைய படமாக இருந்தாலும் நல்லா இல்லை என்றால் அதை கிழித்து தொங்க விடுவதில் கில்லாடி. அந்த நக்கல் நய்யாண்டி தனத்தினாலயே இன்று பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்களை சம்பாதித்துள்ளார்.
அவருடைய நிறைய விமர்சனங்கள் நாம் நினைப்பதை அவர் சொல்வது போல் இருக்கும். அந்த அளவுக்கு ஒளிவு மறைவு இல்லாத யதார்த்தமான விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். ஆனால் அவருடைய சமீபத்திய விமர்சனங்களில் நிறைய பேர் மாற்றுக்கருத்துக்கள் தெரிவிக்கிறார்கள்.
என்னை பொறுத்த வரை சமீபத்திய விமர்சனங்கள் மட்டுமல்ல அதற்கு முன்பிருந்தே அவருடைய சினிமா விமர்சனங்களில் எனக்கு மாற்றுக் கருத்துண்டு. கபாலி படத்தை விமர்சனம் செய்யும்போது, “பொண்டாட்டிய தேடிப் போறதெல்லாம் ஒரு கதையா…” என விமர்சித்திருந்தார். அதே ப்ளூசட்டை மாறன், “இந்தப் படத்துல தன் காதலிய தேடிப் போறதுதான் சூப்பரான விஷியமே” என்று பவர்பாண்டி விமர்சனத்தில் குறிப்பிட்டார்.
அதே போல தற்போது ராட்சசன், சைக்கோ, ஓ மை கடவுளே படத்திற்கும் ஏற்றுக்கொள்ள முடியாத விமர்சனத்தை தந்துள்ளார் மாறன். முதலில் ராட்சசன் படத்தை எடுத்துக் கொள்வோம். அதில் கிறிஸ்டோபர் ஏன் சைக்கோவாக மாறினான் என்பதை காட்டப்பட்ட விதம் தவிர மற்ற அனைத்து விஷியங்களுமே பாராட்டும்படி இருந்தன. ஆனால் மாறனோ ஒரே அடியாக அந்தப் படத்தை மட்டம் தட்டினார்.
அடுத்ததாக மிஷ்கினின் சைக்கோ படத்தை எடுத்துக் கொள்வோம். அந்தப் படத்திலும் அங்குலிமாலா ஏன் சைக்கோ ஆனான் என்பதை காட்டப்பட்ட விதம் தவிர மற்ற காட்சிகள் அனைத்துமே பாராட்டும்படி தான் இருந்தன. ஆனால் மாறனோ இந்தப் படத்தையும் ஒரே அடியாக மட்டம் தட்டினார்.
அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்துவின் ஓ மை கடவுளே படத்தை எடுத்துக் கொள்வோம். இந்த படம் உண்மையிலயே மிக நன்றாக இருந்தது. ஆனால் படத்தை மிக மோசம் என்பது போல திட்டினார். அதிலும் குறிப்பாக, ” ஜீன்ஸ் போட்ட பீட்டர் பசங்களுக்கு வேணா இது பிடிக்கும்…” என குறிப்பிட்டது ஏன் என்று தெரியவில்லை. இந்தப் படம் அனைவரும் ரசிக்கத்தக்க படமாக தான் உள்ளது அப்படி இருந்தும் அவர் தரக்குறைவாக விமர்சிக்க ஒரு காரணம் உண்டு. ஓ மை கடவுளே படத்தில் “டேய் புளூசட்ட” என்ற வசனம் உள்ளது. அந்த ஒரு வசனத்திற்காகவே படத்தை தரக்குறைவாக விமர்சித்துள்ளார் என்று நினைக்கும்போது மாறன் மீதான மரியாதை குறைகிறது.
Be the first to comment on "ப்ளூசட்டை மாறன் சொன்னதுபோல் ஹிப்ஹாப் ஆதியின் எல்லா பாடல்களும் ஒரே மாதிரி இருக்கின்றனவா?"