ஆர்யாவின் கண்கள் இரக்கமற்றது? ஏன் தெரியுமா? – இயக்குனர் பாலா ஏன் அப்படி சொன்னார்?

இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா அவர்களின் படத்தில் அறிமுகமாகி பிறகு இயக்குனர் விஷ்ணு வர்தனின் அறிந்தும் அறியாமலும் படத்தில் மறு அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. அந்தப் படத்தில் அவர் ஹீரோவாக நடித்திருக்கா விட்டாலும் அவர் நடனம் ஆடிய “தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா” என்ற பாடல் மூலம் பிரபலமானார். 

அதைத் தொடர்ந்து கள்வனின் காதலி போன்ற படத்திலும் நடித்தார். ஆனால் விஷ்ணுவர்தன் ஆர்யா கூட்டணி போல் அது அமையவில்லை. மீண்டும் இருவரும் இணைந்து பட்டியல் படத்தில் மாஸ் காட்டினார்கள். நம்ம காட்டுல பாடலில் ஆர்யாவும் பத்மபிரியாவும் அதகளம் செய்திருப்பார்கள். 

அதைத் தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன் வேறொரு ஆர்யாவை காட்டியது. மீண்டும் ஆர்யாவும் விஷ்ணுவும் இணைந்து சர்வம் படத்தில் மாஸ் காட்டினார்கள். அதென்னவோ ஆர்யாவை அவ்வளவு  ரசித்து ரசித்து படம் எடுக்கிறார் விஷ்ணு வர்தன். மேகம் கருக்குது என்ற பாடல் புதிய ஆர்யாவை காட்டியது. 

இப்படி ஆர்யாவின் சினிமா வாழ்க்கை நார்மல் ஸ்பீடில் போய்க் கொண்டிருக்க ஆர்யாவின் வாழ்க்கையில் இணைந்தார் இயக்குனர் பாலா. நான் கடவுள் என்கிற படம் ஆர்யாவை ஒட்டுமொத்தமாக மாற்றி வேறொருவராக காட்டியது. ஆர்யாவா இது என்று பிரமிக்க வைத்தது. அதைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் மதராசபட்டினம் படத்தில் வேறொரு ஆர்யா தெரிந்தார். மகிழ் திருமேனியின் மீகாமன் படத்தில் இன்னொரு ஆர்யா தெரிந்தார். இப்படி ஒவ்வொரு இயக்குனர்களும் ஒவ்வொரு விதமான ஆர்யாவை வெளிக்கொண்டு வந்துள்ளார்கள். இப்படி சடசடவென்று மிக குறுகிய காலத்தில் 25 படங்கள் நடித்துவிட்டார் ஆர்யா. இவருடைய 25 வது படத்திற்கு “ஆர்யா – 25” என்று தனி நிகழ்ச்சி ஒன்று நடத்தியது விஜய் டிவி. 

அதில் ஆர்யாவின் ஆஸ்தான இயக்குனர்கள், நடிகர் நண்பர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டு ஆர்யாவின் நற்குணங்கள், அலட்சியம், பெருந்தன்மை, பெண்களுடன் நெருங்கிப் பழகும் குணம் என்று ஜாலியாய் சிரித்துப் பேசி கலாய்த்துச் சென்றனர். எல்லோரும் சென்ற பிறகு கடைசியாக தனியாளாக அந்த நிகழ்ச்சிக்கு வந்தார் இயக்குனர் பாலா. 

அப்போது ஆர்யாவைப் பற்றி நிறைய விஷயங்கள் பாலா சொன்னார். அதில் மிக முக்கியமான ஒன்று ஆர்யாவின் கண்களைப் பற்றி சொன்னது. “ஆர்யாவோட அம்மா அப்பா கோவிச்சுக்கிட்டாலும் பரவால… ஆனா ஆர்யாவோட கண்ணுல இரக்கமில்லாத தன்மை ஒன்னு தெரியுது” என்றார். அது முற்றிலும் உண்மையான வரிகள். 

பாஸ் என்கிற பாஸ்கரன், சரவணனும் வாசுவும் ஒண்ணா படிச்சவங்க, அவன் இவன் (ஆர்யாவைப் பொறுத்தவரை) போன்ற படங்களில் வரும் ஜாலியான ஆர்யாவை மறந்து விடுவோம். முதலில் பட்டியல் ஆர்யாவை பார்ப்போம். அந்தப் படத்தில் ஆர்யா அசால்ட்டான கேரக்டராக நடித்திருந்தாலும் தன் காதலியை ஒருவன் கற்பழித்து விட்டான் என்றதும் கிளைமேக்ஸில் ஆர்யாவின் கண்கள் கொஞ்சம் மிருகத்தனமாய் தெரியும். அதைத் தொடர்ந்து ஆர்யாவும் சதித்திட்டத்தால் கொல்லப்பட்டு விடுவார். இறந்த பிறகு பரத் கண்முன் ஆத்மாவாக வரும் இடத்தில் ஆர்யாவின் கண்களை கவனியுங்கள். இரக்கமற்றதாய் தெரியும். 

இதே போல சர்வம் படத்தில் திரிஷாவை இழந்த பிறகு, திரிஷாவின் இதயம் பொருத்தப்பட்ட சிறுவனை கொலைகாரன் ஒருவனிடம் இருந்து காப்பாற்றும் ஆர்யாவின் கண்கள் ஏனோ அவ்வளவு இறுக்கமானதாக தெரிந்தது. 

அதற்கடுத்து மீகாமன் பட ஆர்யாவை பார்ப்போம். அந்தப் படத்தில் ஆர்யா சீரியஸான கேரக்டரில் நடித்திருப்பார். அவருடைய கண்களுக்குள் ஒரு வன்மம் தெரிந்துகொண்டே இருக்கும். 

இப்போது பாலாவின் நான் கடவுள் படத்திற்கு வருவோம். இந்தப் படத்தில் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆர்யாவின் கண்கள் இரக்கமற்றதாய் தான் தெரியும். ஜாதக காரன் சொன்னான் என்பதற்காக மகனை காசிக்கு அனுப்பிவிட்ட அம்மாவை போடி குந்தானி என்று திட்டுகிறான் ருத்ரா. அம்மா பாசம் குறித்து பூஜா பாட்டுப் பாட அவரை அடித்து துரத்துகிறான் ருத்ரா. அப்படிப்பட்ட ருத்ரா, கண் பார்வை இல்லாத பெண்ணை ஒருவன் கொடுமை படுத்துகிறான் என்றதும் ருத்ராவின் இரக்கமற்ற கண்கள் மிகவும் குரூரமாய் தெரிகிறது. 

அந்த வில்லனை மிக கொடூரமாக அடித்து துவைத்து சாகடிக்கிறான் ருத்ரா. அப்படிப்பட்ட ருத்ராவை ஆர்யா வேறொரு படத்தில் காட்டுகிறாரா என்று ஆராய்ந்து பார்த்தால் பெரும்பாலான வரை அப்படி ஆர்யாவின் இரக்கமற்ற கண்களை யாரும் காட்டவில்லை. 

சமீபத்தில் ரிலீசான ஆர்யாவின் மகாமுனி படம் ஆர்யாவின் இரக்கமற்ற கண்களை மீண்டும் திரைக்கு கொண்டு வந்து காட்டியது. முனிராஜ் என்று ஒரு சாதுவான ஆர்யா. இன்னொரு பக்கம் சாதுவான கொலைகார ஆர்யா. இதில் முனிராஜ் என்கிற சாந்தமான ஆர்யாவை விட்டுவிடுவோம். மகாதேவன் என்கிற கூலிக்கு கொலை செய்யும் ஆர்யாவை பார்ப்போம். 

தன் முதலாளியான அரசியல்வாதியின் மனைவியை எதிர் கட்சிக்கார அரசியல்வாதி தாறுமாறாய்ப் பேச, அந்த வாய்க்கொழுப்பு அரசியல்வாதியை கொரியர் டெம்போவில் கடத்தச் செல்கிறார் ஆர்யா. டெம்போவின் டோர்களை திறந்துவிட உள்ளே கருகும்மென்று இருக்கிறது. அந்த இருட்டுக்குள் இருந்து ஆர்யா வெளியே வருகிறார். அப்போது ஆர்யாவின் கண்களை பார்க்க வேண்டுமே! 

அடுத்ததாக மகாதேவனின் மனைவி விஜியை காவல் துறையினர் மிரட்டி தற்கொலை செய்துகொள்ள வைத்துவிடுவர். மனைவி இறந்து விட்டாள் என்றதும் தெரிந்த மகா, தன்னுடைய முதலாளி அரசியல்வாதியும் அவரது கூட்டாளி போலீஸ்களும் கூடி இருக்கும் இடத்திற்கு வருகிறான், கொலைவெறியுடன் வருகிறான் மகா. முதலாளியின் மச்சானை தலையில் கொளுத்துகிறான். முதலாளியை துப்பாக்கியில் சுட்டு வீழ்த்துகிறான். 

அந்தக் காட்சிகளுக்கு முன் ஜிப்ரானின் மிரட்டலான பின்னணி இசை ஒலிக்க, இருள் நிறைந்த வண்டி மறைவிலிருந்து வெளியே வரும் ஆர்யாவின் கண்களை பார்க்கனுமே! அப்போது புரிகிறது இயக்குனர் பாலா சொன்ன, “ஆர்யாவின் கண்கள் இரக்கமற்றது” உண்மை என்று. 

சினிமாவைப் பொறுத்தவரை விதவிதமான காட்சிகளுக்கு தகுந்தபடி, கண்களுக்கு லென்ஸ் பொருத்துவார்கள். அது சினிமா உலகைப் பொருத்தவரை சகஜம்தான், இதைப்பற்றி வியந்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரியான செயற்கை அலங்காரங்கள், செட்டப்கள் போன்றவற்றை மீறி இயற்கையாகவே ஒரு சில நடிகர்கள் கண்களில் கூட நடிப்பை காட்டுகிறார்கள். அந்த மாதிரியான நடிகர்களை தேடி பிடிப்பது தான் பாலாவின் தனித்தன்மை. முதலில் நந்தா படத்தை எடுத்துக்கொள்வோம். அந்த படத்தில் அம்மாவுக்கு துரோகம் செய்த அப்பாவை கொலை செய்த அந்தச் சிறுவனின் கண்களை பாருங்கள். கண்கள் பச்சை நிறமாக இரக்கமற்றதாகத் தெரியும். அந்தச் சின்ன பையனின் வளர்ந்த கதாபாத்திரமான சூர்யாவின் கண்களிலும் அந்த மாதிரியான ஒரு இரக்கமற்ற தன்மையை காட்டியிருப்பார் இயக்குனர் பாலா. 

அந்தப் படத்திற்குப் பிறகா அல்லது அதற்கு முன்பு இருந்தேவா  என்று தெரியவில்லை. நிறைய பேர் சூரியாவின் கண்களை பற்றி குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்கள்,  குறிப்பிட்டு பேசியிருக்கிறார்கள். இன்று வரை சூர்யாவின் கண்கள் அவர்களுக்கு சிறப்பான ஒன்றாக இருக்கிறது. சூர்யாவோட கண்கள் நடிக்கும் என்று பலர் சொல்வதை நிறைய தடவை நாம் கேட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட அந்த கண்களில் இருந்து நடிப்பை வெளிக்கொண்டு வருவதை இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் கூட “ஏழாம் அறிவு” படத்தில் நன்கு வெளிப்படுத்தியிருப்பார். “ஏழாம் அறிவு” படத்தில் பார்வையால் ஹிப்னாடிசம் செய்து மற்றவர்களின் சிந்தனையை மன ஓட்டத்தை தன் பார்வைக்கு தகுந்தபடி தன்னுடைய எண்ணத்திற்கு மாற்றும் படியான சக்தி தான் அந்த ஹிப்னாட்டிசம் என்று விளக்கி இருப்பார்கள். அந்த படத்தில் வரும் சீனாக்கார வில்லன் டாங்லியின் கண்களை உற்று பார்த்து விட்டால் அவ்வளவு தான் நாம் நம்மை இழந்துவிடக் கூடிய நிலைமை வந்துவிடும். அப்படிப்பட்ட சூழலை எதிர்கொள்ளக்கூடிய நாயகனாக சூர்யா அசத்தியிருப்பார். டாங்கிலி தன் கண்களால் சூர்யாவை தன்வசப்படுத்த எவ்வளவு முயன்றாலும் அது முடியாது. அப்போது சூர்யா ஒரு தீர்க்கமான பார்வை பார்த்துக் கொண்டே இருப்பார். அந்த கண்களில் ஒரு எதிர்ப்பு சக்தியை காட்டுவார். 

நான் ஒரு சாதாரண இளைஞன், சர்க்கஸில் வேலை பார்க்கும் அரவிந்தன் என்கிறபோது இருக்கக்கூடிய சூர்யாவின் கண்களுக்கும்… போதி தர்மரின் வம்சத்தில் இருந்து வந்தவன், கிட்டத்தட்ட போதிதர்மர் நிலையை  அடைந்தவன் என்பதை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்ட காட்சிகளில் சூர்யா தன் கண்களில் வித்தியாசம் காட்டி இருப்பார். எல்லா கலைஞர்களுக்கும் இந்த மாதிரி கண்களில் நடிப்பைக் காட்ட கூடிய திறமை அவ்வளவு எளிதில் அமைந்து விடாது. ஒருவேளை சூரியா பாலா படத்தில் நடித்ததால் அப்படி ஒரு திறமை அவருக்குள் இருந்து வெளிப்பட்டதா என்று தெரியவில்லை. இது பற்றி அவர் எந்த பேட்டிகளிலும் குறிப்பிட்டது இல்லை.  இணையதளம் என்கிற ஒரு படம். அந்த படத்தில் நகைச்சுவை நடிகர்,  மேடைப் பேச்சாளர் திரு. ஈரோடு மகேஷ் அவர்கள் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.  அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் கண்களால் நடிப்பது எப்படி என்று தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு பாடம் எடுப்பார் அந்த காட்சிகளை பார்க்க பார்க்க சிரிப்பு முட்டிக்கொண்டு வரும் அப்படிப்பட்ட அந்த காட்சியை ஒய் பிளட் சேம் பிளட் அந்த நிகழ்ச்சியிலா அல்லது ரீல் அந்து போச்சு அந்த நிகழ்ச்சியிலா என்று தெரியவில்லை, எதோ ஒரு நிகழ்ச்சியில்  முத்துவும் ஆனந்தியும் சேர்ந்து அந்தக் கண்களால் நடிக்கும் காட்சியை கலாய்த்து தள்ளி இருப்பார்கள். அடுத்ததாக இயக்குனர் பாலாவின் “அவன் இவன்” படத்திற்கு வருவோம். அந்த படத்தில் விஷாலின் கண்களை முற்றிலுமாக வேறுவிதமாக மாற்றி இருப்பார் இயக்குனர் பாலா. அந்த படத்திற்கு பிறகும் அதற்கு முன்பும் நடிகர் விஷாலின் உடல்மொழியில், குறிப்பாக கண்களில் நடிப்பை வெளிக் காட்டும் தன்மையில் மாறுதல்கள் இருப்பதை நம்மால் கவனிக்க முடியும். 

கண்களில் நடிப்பைக் காட்ட தெரிந்தவன் தான் உண்மையான கலைஞன். (இதனால்தான் கமல், ரஜினி, விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அட்டகத்தி தினேஷ் போன்ற நடிகர்களால் என்ன மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தங்களுக்கே உரிய தனித்தன்மையுடன் செய்து முடிக்க முடிகிறது.) அப்படி ஆர்யா ஒரு உண்மையான கலைஞனாக இருப்பதால்தான் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்கள் எல்லாம் ஆர்யாவைத் தேடி போகிறார்கள். அதனால் தான் ஆர்யாவுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அல்லது தொடர் தோல்வி என்றால் சொந்த வேலையை விட்டுவிட்டு ஆர்யாவுடன் கைகோர்த்து வெற்றியை நோக்கி பயணிக்க தயாராகின்றனர் சில இயக்குனர்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், தமிழ் சினிமாவில் ஆர்யாவுக்கான இடம் இது இல்லை. 

Related Articles

இந்தியாவின் கூகுள் பாய் ! – அற்புத... இந்தியாவின் கூகுள் பாய் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் கௌடில்யா பண்டிட். எந்த துறையிலிருந்து எந்த கேள்வி கேட்டாலும் நொடியில் பதிலளிக்கும்...
ப. திருமாவேலன் எழுதிய பெரியோர்களே தாய்மா... அறச்சீற்றம் கொண்ட இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் " பெரியோர்களே தாய்மார்களே!" - பெரியோர்களே தாய்மார்களே பு...
தமிழ் சினிமாவின் இரண்டு உன்னதமான “... எம் எஸ் பாஸ்கருக்கும் ஏ. ஆர். ரகுமானுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். ஆனால் இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அவர்களுடைய வசீகர குரல் தான் அந்த...
விமான நிலையத்தில் உயர்தர வசதிகளை அறிமுகப... கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்தின் சேவையை அடிக்கடி பயன்படுத்தும் பயணிகள், மிதமிஞ்சிய போக்குவரத்து நெரிசல் காரணமாக அங்கு வந்து செல்லும் பயண அனுபவத்தை ...

Be the first to comment on "ஆர்யாவின் கண்கள் இரக்கமற்றது? ஏன் தெரியுமா? – இயக்குனர் பாலா ஏன் அப்படி சொன்னார்?"

Leave a comment

Your email address will not be published.


*