இரண்டு முதல் நான்கு வயதான குழந்தைகளும் கூட இனி ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறலாம். உடற்பயிற்சியையும், விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் ‘பேபி ஒலிம்பிக்ஸ்’ என்ற குழந்தைகளுக்கான ஒலிம்பிக் விளையாட்டுகளை பெஹரைன் நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது.
ஐந்து வெவ்வேறு துறைகளின் கீழ் பல்வேறு போட்டிகளை நடத்த பெஹரைன் ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது. தடகள போட்டியின் கீழ் மூன்று நிகழ்வுகளும், நான்கு வயதுக் குழந்தைகளுக்கான மெட்டிலே ரிலே, மூன்று வயதுக் குழந்தைகளுக்கான தடை தாண்டும் ஓட்டம், இரண்டு வயதுக் குழந்தைகளுக்கான பதினைந்து மீட்டர் ஃப்ரீஸ்டைல் ஓட்டப் பந்தயம் என்று வித விதமான போட்டிகளை பெஹரைன் ஒலிம்பிக் கமிட்டி நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இது தவிரவும் ஜிம்னாஸ்டிக் போட்டிகள், ஃப்ரீகிக் கால்பந்து போட்டிகள், கூடைப்பந்து போட்டிகள் மற்றும் பளுதூக்கும் போட்டிகளும் குழந்தைகளுக்காக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.நாட்டிலுள்ள அனைத்து மழலையர் பள்ளிகளும் இந்நிகழ்விற்காக தங்களிடம் பயிலும் குழந்தைகளை தயார்படுத்தி வருகின்றனர்.
பெஹரைன் தேசிய அரங்கத்தில் பேசிய பெஹரைன் ஒலிம்பிக் கமிட்டியின் பொதுச் செயலர் அப்துல் ரஹ்மான் அஸ்கர், ஒலிம்பிக் விளையாட்டுக்கள் குறித்த ஆர்வத்தைத் தூண்டவும், அந்தப் போட்டிகளை மேலும் பிரபலப்படுத்தவும் இது போன்ற நடவடிக்கைகள் நாட்டில் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அப்துல் ரகுமான் இளைஞர் மற்றும் விளையாட்டுக்கான பெஹரைன் உச்ச கவுன்சில் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை பெஹரைன் நாட்டில் பிறந்த எந்தவொரு தடகள வீரரும் அந்நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று வந்தது கிடையாது என்பதால், அதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் குழந்தை பருவத்தில் இருந்தே மேற்கொள்ள அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எப்படியோ ஒலிம்பிக்கில் ஓடிக்கொண்டிருக்கும் போது, பாலுக்காக அழுது அடம் பிடிக்காமல் இருந்தால் சரி.
Be the first to comment on "கொஞ்சம் நடக்க தெரிஞ்சா போதும், ஒலிம்பிக்ல கலந்துக்கலாம்"