கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்றும் இதற்கு மேல் இந்த வழக்கை தூக்கிக் கொண்டு இன்னும் பதினைந்து வருடங்களுக்கு இந்தப் பக்கம் வந்து விடாதீர்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. இதனை தமிழர்கள் மதித்தார்களே தவிர மத்திய அரசும் கர்நாடக அரசும் நமது மாநில அரசும் கவனத்தில் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. பொறுத்திருந்து வெறுப்பு அடைந்த சில அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசின் சுங்கச் சாவடியை சுக்கு நூறு ஆக்கினர். அதனை ஒட்டி மாநிலத்தின் பல இடங்களில் மிகத் தீவிரமாக போராட்டம் நடந்து வந்தது. சமூக வலைதளம் முழுக்க காவிரி என்ற வார்த்தை வலம் வந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடங்கியதும் காவிரியை கிடப்பில் போட்டுவிட்டு ஐபிஎல் மீது கவனம் செலுத்த தொடங்கினர் இணையதள போராளிகள். இது நல்லதுக்கு அல்ல. இன்றைய காலத்தில் மக்களின் களமே இணையம் தான். அப்படி இருக்கையில் மக்களின் கவனம் திசை திருப்ப படுவது ஒட்டுமொத்த தமிழகத்துக்கு பேராபத்து என்று உணர்ந்த சிலர் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் மேட்ச்சை புறக்கணித்தனர் ( கொஞ்சம் வன்முறையுடன். ரசிகர்களை தாக்கியது, காவலாளியை தாக்கியது, ஆடுகளத்தில் செருப்பு வீசியது) அதனை தொடர்ந்து சென்னையில் நடக்க இருந்த ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்பட்டது. ஐபிஎல் – ஐ ஆதரித்த சிலர், கிரிக்கெட்டை புறக்கணித்ததால் காவிரி தண்ணீர் தமிழகத்துக்கு வந்து விட்டதா? என்ற கேள்விகள் எழுப்பினர். இந்தக் கேள்வி எழுப்பியவர்கள் தமிழ் சினிமா ஸ்ட்ரைக் முடிந்து திரைப் படங்கள் வெளியாகத் தொடங்கியதும் கிரிக்கெட்டை புறக்கணித்த சினிமாக்காரர்கள் திரைப்படங்களை ரிலீஸ் செய்யாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை பொறுத்திருக்க முடியாதா? சினிமாவுக்கு ஒரு நியாயம், கிரிக்கெட்டுக்கு ஒரு நியாயமா என்ற கேள்விகளை தொடுத்தனர். இதற்கு சினிமாக்காரர்கள் அவ்வப்போது பதிலளித்து வந்துள்ளனர். அவை என்னவென்று பார்ப்போம். பதில் கூறுபவர்கள், மிகத் தீவிரமாக காவிரி விசயத்துக்காக போராடி வருபவர்கள் இயக்குனர்களே. ( நடிகர்கள் மௌன விரதம் என்ற பெயரில் என்னமோ செய்தார்கள். ஒரு பக்கம் தங்கர்பச்சான், பாரதிராஜா, கௌதமன் போன்றோர் கொதித்து எழுந்து கொண்டிருக்க சிம்புவோ நீ எடுத்தது போக மிச்சம் இருக்கறத தாயா என்கிறார். அது தவறு. ஆறு கடலில் கலக்க இருக்கும் பகுதிக்குத் தான் முதலில் சென்றடைய வேண்டும். அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜி போன்ற இளம் போராளிகள் சிலர் ( வெள்ளத்தின் போது, ஜல்லிக்கட்டு புரட்சியின் போது அவருடைய செயல்கள் பாராட்டத் தக்கவை. காவிரி விசயத்தில் ஐபிஎல் விசயத்தில் சற்று முரண்பட்டு நிற்கிறார். ) பிரச்சினையின் தீவிரம் தெரியாமல் உள்ளனர். இவர்கள் எதோ உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார்கள் என்று ஒதுங்கி செல்ல நினைத்தால் இதை ஒரு பாயிண்ட்டாக எடுத்துக் கொண்டு தமிழிசை, பொன்னார், பொன். ராதா கிருஷ்ணன் போன்றோர் உங்களால் சினிமாவை புறக்கணிக்க முடியுமா, ஐபிஎல் போல படம் பார்க்கும் தமிழர்களை அடிப்பார்களா? என்கிறார்கள்.
ஆறாயிரம் கோடி பிசினஸ் உள்ள கிரிக்கெட் மேட்ச்சை புறக்கணித்ததால் கவனம் திரும்புமே தவிர தமிழகத்துக்குள் ஓடும் சினிமாவை புறக்கணித்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ( தமிழ் சினிமாவின் இன்றைய நிலைமையோ மிகவும் பரிதாபத்துக்கு உரியது. ஸ்ட்ரைக் நடத்திய காலத்தில் படங்கள் ரிலீசாகவில்லை. அதனை ஒரு பயலும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் கிரிக்கெட்டின் மதிப்பு அப்படி இல்லை.சினிமாவைக் காட்டிலும் அதன் வியாபாரம், மக்களை ஈர்க்கும் சக்தி பெரிது.
சினிமாவை புறக்கணிக்காததற்கு மற்றும் சில காரணங்களும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. சினிமா என்பது வெறும் கேளிக்கை மட்டும் அல்ல. அது ஒரு வகையில் ஊடகம். அதன் வழியாக அரசியல் பேசலாம். ஆனால் ஐபிஎல் அப்படி இல்லை. அது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே. சினிமா துறையினரை போல கிரிக்கெட் வீரர்கள் என்றைக்காவது அரசியல் பிரச்சினையை பேசி இருக்கிறார்களா? மத்திய அளவில் விடுங்கள். தங்களுடைய சொந்த மாநில பிரச்சினைக்கு கூட குரல் கொடுத்தது இல்லை. அவர்களால் கொடுக்கவும் முடியாது. கொடுத்தால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி. நிர்வாகம் அவர்கள் மீது என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் சினிமாவின் மூலமாக இந்த விசயங்களைப் பேசலாம் என்று கருத்து தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் ( கிரிக்கெட் செலக்சனில் நடக்கும் பாலிடிக்ஸ்ஸை தைரியமாக மக்களிடம் கொண்டு சென்றவர் ) தனது டுவிட்டர் பக்கத்தில் ” காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகம் எங்கும் வீரியமாகப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்க வேண்டாம் என்று போராடிய அனைவரும் கிரிக்கெட்டை விரும்பாதவர்கள் அல்ல. விளையாட்டை விளையாட்டாக மட்டுமே விரும்பி ரசிக்கும் உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் இதை ஏற்க மாட்டார்கள். தரமற்ற விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது” என்று பதிவிட்டுள்ளார்.
வரும் மே முதல் வாரம் வரை தமிழகத்தில் பல இடங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடக்க இருக்கிறது. பல சமூக அமைப்புகள் போல, அரசியல் கட்சிகள் போல, சினிமா துறையினரும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். ( இப்போது விட்டுவிட்டால் இன்னும் பதினைந்து வருடங்களுக்கு தமிழகத்தின் நிலைமை ???? ) . சினிமா வேறு, விளையாட்டு வேறு.
Be the first to comment on "ஐபிஎல் போட்டியை புறக்கணித்தது போல் சினிமாவையும் புறக்கணித்தால் காவிரி கிடைத்திடுமா?"