புத்தக வாசிப்பை எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லையா? அப்போ இதை படிங்க

புத்தக வாசிப்பை எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லையா? அப்போ இதை படிங்க

கடைசியாக நீங்கள் வாசித்த புத்தகம் எது? நம்மில் பலரும் மௌனத்தை விடையாக அளிக்கும் கேள்வி இது. படிப்பை முடித்த கையோடு, வெறித்தனமாக பாடப் புத்தகங்களை கிழித்து மைதானத்தில் பறக்க விட்டதோடு புத்தகங்களுக்கும் நமக்குமான உறவு அநேகமாக முடிந்து விடுகிறது. உண்மையில் புத்தகங்கள் என்பது படிப்புக்கும், சம்பளத்திற்கும் மட்டுமே தானா? கணினி யுகம் என்பது இன்று காலாவதி ஆகிவிட்ட ஒரு சொல், இன்று நாமிருப்பது டிஜிட்டல் யுகம். இந்த டிஜிட்டல் யுகத்தில் புத்தகங்களுக்கான மதிப்பு தான் என்ன? அதை விவாதிப்பதற்கு முன் புத்தகங்கள் எதற்காக வாசிக்கப்பட வேண்டும்?

எதற்காகப் புத்தகங்கள்?

டிவியில் அனைத்தும் இருக்கிறது, இணையத்தில் அனைத்தும் இருக்கிறது, பிறகு எதற்காகப் புத்தகங்கள். புத்தக வாசிப்பை வெறுப்பவர்களிடம் இருந்து அடிக்கடி இந்தக் கேள்வியை நாம் எதிர்கொண்டிருப்போம்? இவ்வளவும் தான் இருக்கிறதே, பிறகு எதற்காகப் புத்தகங்கள்?

இரவில் நதிக்கரையில் அமர்ந்து இருக்கிறீர்கள். கைகளை இறுக உடலோடு சேர்த்து கட்டிக்கொள்ளும் அளவுக்குக் குளிர். உங்கள் தலைக்கு மேலே இருக்கும் முழுநிலவின் பிம்பம் ஓடும் நதியில் கரைகிறது. அந்தப் பிம்பம் வேறெங்கோ இருக்கும் உங்கள் காதலியையோ அல்லது காதலனையோ நினைக்கச் செய்கிறது.

மேலிருக்கும் வரிகளை வாசிக்கும் போது, உங்கள் மனம் இயங்கும் முறையைக் கவனித்து பாருங்கள். அது ஒரு நதியை, முழுநிலவை, குளிரை, காதலைக் கற்பனை செய்துகொள்கிறது. நீங்கள் எதை வாசிக்கிறீர்களோ அதை நோக்கி உங்களை அழைத்துச் செல்கிறது. அந்தக் கற்பனை அதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வேறுபடும். நீங்கள் உங்கள் கற்பனையில் பார்த்த நதியை, உங்கள் கணவரோ/ மனைவியோ கூட பார்க்க முடியாது. அது அவர்கள் நதி, அவர்கள் கற்பனை.

அதே நதிக்கரை சூழலை நீங்கள் டிவியில் அல்லது சினிமாவில் பார்க்கிறீர்கள். அங்கே கற்பனைக்கு ஏதும் இடமிருக்கிறதா? நிச்சயம் இல்லை. அங்கே ஏற்கனவே யாருடையோ கற்பனையோ படமாக்கப்பட்டு உங்களிடம் காண்பிக்கப்படுகிறது. அதிகபட்சம் இரண்டு நொடிகள், உங்களை அங்கே அழைத்துச் செல்ல. அந்தப் படத்தை பார்த்த அத்தனை பேருக்கும் இயக்குநருடைய அந்த ஒரே கற்பனை தான். கிட்டத்தட்ட வாடகை வீட்டில் வாழ்வது போல.

சுருக்கமாக இப்படி விளங்கி கொள்ளலாம். ஒரு உலகத்தை உருவாக்குவதற்கும், யாரோ உருவாக்கிய உலகத்தில் வாழ்வதற்குமான வித்தியாசமே புத்தக வாசிப்புக்கும், காட்சி ஊடகத்திற்குமானது.

உங்கள் வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய புத்தகங்கள்

தமிழில் பல புத்தகங்கள் வாசிக்க வேண்டியவை. அவற்றை பட்டியலிட்டால் உங்கள் மொபைல் இலவச டேட்டா, இந்த கட்டுரையொடு முடிந்து போகலாம். ஆகவே ஒரு நல்ல மனிதனாக மட்டுமல்லாமல் ஒரு ஆளுமையாக நீங்கள் உருவாக வாசிக்க வேண்டிய பட்டியலை இங்கே தருகிறோம். பலமுறை உங்கள் வாழ்வில் கேள்விப்பட்ட புத்தகங்கள் தான், இதை யாரோ ஒருவர் உங்களுக்கு ஏற்கனவே பரிந்துரைத்திருக்க கூடும். அதனால் ஒரு சின்ன விளையாட்டு. உங்களுக்கு தெரிந்த புத்தகத்தின் தெரியாத தகவல்களையும் சேர்த்து தருகிறோம்.

கில்லி திரைப்படம்

கில்லி திரைப்படத்தில் ஒரு காட்சி. நாயகியை வில்லன் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயற்சி செய்வார். அதற்கு நாயகி பெரிய அளவுக்கு அலட்டல் இல்லாமல், முடிந்தால் நாயகனை எதிர்த்து அவர் முன் நின்று பார் என்று சவால் விடுவார்.இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் எழுதியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்கள், அப்படி நின்றவர்கள் எல்லாம் இன்று நடுகல்லாய் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆகவே பகைவர்களே, என் தலைவன் முன் வந்து நிற்காதீர்கள் என்று எச்சரிக்கை செய்யும் விதத்தில் ஒரு குறள் அமைந்துள்ளது. திருக்குறளே தான்.

என்னைமுன் னில்லன்மின்றெவ்விர் பலரென்னை

முன்னின்று கன்னின் றவர்.

நடுகல் என்பது இறந்தவர்களுக்காக எழுப்பப்படும் நினைவு சின்னம்.

திருக்குறள் போல நாம் வெறுக்கும் வேறொரு நூல் இன்றில்லை. அதற்குக் காரணம் பத்து மதிப்பெண் வாங்க நம்மை மனப்பாடம் செய்ய வைத்த பள்ளிக்கூடங்கள். உண்மையில் திருக்குறளில் நாம் வெறுக்கத்தக்க எதுவும் இல்லை.

தமிழ் மற்றும் கடவுள் என்ற இரண்டு சொற்கள் திருக்குறளில் இல்லை. ஒன்பது என்ற எண் திருக்குறளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

சூரியனைச் சுட்டது யாரு?

சூரியனை யாரும் சுட முடியாது. சூரிய வெப்பம் தான் நம்மைச் சுடும், சூரியன் திரைப்படத்தில் வரும் பிரபலமான வசனம். தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு கவுண்டமணி நிமிர்ந்து பார்த்து சத்திய சோதனை என்பார். சத்திய சோதனை காந்தியின் சுயசரிதை. ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம். காந்தி அளவுக்கு இன்று அவதூறு பரப்பப்படும் இன்னொரு தலைவர் இல்லை. அவரை பற்றி தினம் ஒரு அவதூறு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுகிறது. நம்மை விடவும் காந்தி ஐரோப்பாவில் மிகச் சரியாக புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறார். அவர் மீது குவிந்து கிடைக்கும் அவதூறுகளில் இருக்கும் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள இந்த நூல் உங்களுக்கு உதவலாம்.

வக்கீல் தொழிலின் முதல் நாளன்று பயத்தில் நாக்கு குளறி பேச முடியாமல் வெளியேறிய ஒருவர் எப்படி ஒரு தேசத்தின் ஆன்மாவாக அறியப்படுகிறார் என்று நாம் தெரிந்துவைத்திருப்பது அவசியம்.

 ஆசை முகம் மறந்து போச்சே

பாரதி, இன்று கொண்டாடப்படும் ஒரு கவிஞர். ஆனால் தமிழ் சமூகம் ஒருவரை அங்கீகரிக்க வேண்டுமானால் அதற்கு முதல் தகுதி அவர் சாக வேண்டும். பாரதியார் உயிரோடு இருந்த காலங்களில், இன்றளவு தனக்கு பெயரும், புகழும் கிடைக்கக்கூடும் என்பதை உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. அவரது இறுதி சடங்கிற்கு கூட பதிமூன்று பேர் தான் கலந்துகொண்டார்கள் என்பது வரலாறு. எழுத்தின் வல்லமையை ஊரறிய செய்தவர்.

கடுமையான வடிவ , ஒலி  ஒழுங்குடன் இருந்தே ஆக வேண்டுமென்ற மரபு கவிதைகளின் கட்டுப்பாட்டை முதன்முதலில் உடைத்தவர். பெண்ணியவாதி என்று அவருக்கான அடையாளங்கள் நிறையவே.

கண்ணனை காதலியாக நினைத்து அவர் இயற்றியதன் முதல் நாலு வரி மட்டும்

ஆசை முகம் மறந்து போச்சே -இதை

யாரிடம் சொல்வேனடி தோழி

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில்

நினைவு முகம் மறக்கலாமோ

வாழும் காலத்தில் அவருக்கு செய்ய மறந்த மரியாதையை அவரது படைப்புகளை வாசிப்பதன் மூலம் ஈடு கட்டுவோம்.

பரதேசி

பயணத்தை அடிப்படையாகக் கொண்டு இன்று தமிழில் நிறையச் சினிமாக்கள் வந்த வண்ணம் உள்ளன. எண்பது ஆண்டுகளுக்கு முன்பே பயண இலக்கியம் என்ற வகைமையைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் ஏ.கே.செட்டியார். உலகம் முழுவதும் பயணித்து சுவாரிஸ்யமான பயண இலக்கிய கட்டுரைகளை தமிழில் தந்தவர். ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தி திரைப்படத்தை எடுத்து வெளியிடுவதற்கு முன்பே, 1940லேயே காந்தி குறித்து ஆவணப்படம் எடுத்துவர ஏ.கே.செட்டியார்.

இன்றைய தமிழகத்தின் நூறாண்டு முந்தைய சித்திரத்தை அறிய விரும்புவோர்க்கு ‘ஏ.கே.செட்டியார் பயண கட்டுரைகள்’ என்ற நூல் நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தரும்.

பிலோ இருதயநாத் அடிப்படையில் ஒரு பள்ளிக்கூட வாத்தியார். தமிழின் முதல் மானுடவியலாளர் என்று அறியப்படுகிறார். சைக்கிளில் இந்தியா முழுவதும் சுற்றிவந்து நாடோடிகளை பற்றியும், ஆதிவாசிகளை பற்றியும் எழுதியவர். இன்றும் அவரது படைப்புகள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

கதை கவிதைலாம் நமக்கு எதுக்கு

கவிதை என்பது இன்று மலிவாகி போன ஒரு சொல். காதலை சொல்ல மட்டுமே பயன்படுவது என்று சினிமாவில் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு நாமும் அதையே நம்பி போனோம். உண்மையில் கவிதை காதலை சொல்ல மட்டும் தானா?

தமிழின் கவிதை பாரம்பரியம் மிக நீண்டது. பாரதியாரில் தொடங்கிய நவீன கவிதை மரபு ந.பிச்சமூர்த்தி, ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன், வண்ணதாசன், கலாப்ரியா, தேவதேவன், தேவதச்சன் என்று நீண்டு இன்று மனுஷ்யபுத்திரன், போகன் சங்கர் வரை தொடர்கிறது. கவிதை மீது இன்றிருக்கும் ஒவ்வாமைக்கு மிக முக்கிய காரணம், கவிதைகள் என்ற பெயரில் நமக்கு வாசிக்க கிடைக்கும் போலி கவிதைகள்.

கவிதை  1

அன்பே

நீயில்லாமல்

இந்த உலகம் சுழலலாம்

ஆனால்

நான்

உயிர் பிழைத்திருக்க மாட்டேன்

கவிதை 2

குழந்தைகளின் ஜன்னல்கள்

இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்

உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா

வீடு இங்கேதான் இருக்கிறதாம்…

இதெல்லாம் ஒரு காரணமா?

முகுந்த் நாகராஜன்

இந்த இரண்டையும் வாசித்தீர்கள் தானே? எதை கவிதை என்று சொல்வீர்கள். கொஞ்சம் குழந்தைகளின் உலகை அறிந்தவர்கள் கூட மிக எளிதாக இரண்டாவதைத்தான் கவிதை என்பார்கள். காரணம் அது தரும் அனுபவம். முதலில் இருப்பவை வெறும் வரிகள்.

இப்படி கவிதை என்ற பெயரில் வெளியாகும் போலிகளை கண்டறியும் திறன் உங்களுக்கு இருக்கும் பட்சத்தில், கவிதை வாசிப்பென்பது நல்லதொரு அனுபவம்.

தமிழில் கவிதைக்கு இணையாக ஆழமான மரபு புனைவுக்கு உண்டு. புதுமைப்பித்தன் தொடங்கி சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என்று தரமான படைப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தீவிர இலக்கியப் படைப்புகளுக்கு நிகராக ஜனரஞ்சக படைப்புகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன, கலகி தொடங்கி சுஜாதா வரை.

தமிழில் சிறந்த பத்து நாவல்

பொய்த்தேவு – க.நா.சுப்ரமணியம்

தலைமுறைகள் – நீல பத்மநாபன்

கிருஷ்ண பருந்து – ஆ.மாதவன்

புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்

ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி

ஜே.ஜே.சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

விஷ்ணுபுரம் – ஜெயமோகன்

பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்.

மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்

சுய முன்னேற்றப் புத்தகங்கள்

சுய முன்னேற்றப் புத்தகங்கள் தமிழுக்குப் புதிது. அப்துல் கலாமின் படைப்புகள், இறையண்பு அவர்களின் போர்த்தொழில் பழகு, நீயா நானா கோபிநாத்தின் ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க’ போன்றவை தமிழில் சுய முன்னேற்றப் புத்தகங்கள் பட்டியலில் இணைகின்றன.

‘ஒரு புத்தகம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது’,  ‘நான் இந்த அளவுக்கு முன்னேறக் காரணம் இந்தப் புத்தகம் தான்’, இதுபோன்ற வார்த்தைகளை யாராவது உங்கள் முகத்துக்கு நேரே கூறினால், தயக்கமே இல்லாமல் அவரை நீங்கள் சந்தேகக்கண் கொண்டு பார்க்கலாம். ஒரு புத்தகம் அப்படியொரு எந்த உடனடி மாற்றமும் தந்து விடாது. பிறகு எதற்குப் புத்தகங்கள் என்கிறீர்களா? உங்கள் ஆயுளில் உங்களுக்கு விதிக்கப்பட்ட/ சபிக்கப்பட்ட ஒற்றை வாழ்க்கைக்கு இடையே, ஆசுவாசமாய் உங்களுக்குத் தொடர்பே இல்லாத நிறைய வாழ்க்கைகளை வாழ்ந்து பார்க்கலாம்.

Related Articles

உலகின் தலைசிறந்த சொல் செயல் – வேலை... சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நீ மாறாத... உனக்கேத்த மாதிரி சூழ்நிலையவே மாத்து... இந்த உலகத்துல கொடுமையான விஷியம் ரெண்டு.      ...
பெண்களின் பேராதரவுடன் நேர்கொண்ட பார்வை! ... அஜித் என்ட்ரி ரொம்ப சிம்பிளாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அஜித் திரையில் வரும்போது விசில் சத்தம் காதை கிழிக்கிறது. கை நடுங்கிக்கொண்டே காபி ...
அரசியல்வாதியின் மகன்களும் தமிழ்சினிமாவும... ஒரு சில மனிதர்களை தமிழ் சினிமா தொடர்ந்து மோசமானவர்களாகவே சித்தரித்து வருகிறது. அந்த சித்தரிப்பில் கொஞ்சம் உண்மையும் உள்ளது என்பது மறுக்க முடியாது. முத...
உலக சினிமா இயக்குனர்களும் அவர்களின் படங்... 1.Meghe dhake tara (1960) படத்தை இயக்கியவர் Ritwik katak Ramkinkar (1975)jukti, takko aar gappo (1974)titash ekti nadir naam (1973)Durbar...

Be the first to comment on "புத்தக வாசிப்பை எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லையா? அப்போ இதை படிங்க"

Leave a comment

Your email address will not be published.


*