பள்ளி கல்லூரிகளில் எவிட்டாக்கள் தயாளன்கள் குறைவு! இன்பராஜ்கள் நிர்மலாதேவிகள் அதிகம்! – பொறுமையான ஆசிரியர்களும், பொறுக்கி ஆசிரியர்களும்!

பள்ளி கல்லூரிகளில் எவிட்டாக்கள் தயாளன்கள் குறைவு! இன்பராஜ்கள் நிர்மலாதேவிகள் அதிகம்!

தமிழ் சினிமாவில் இதுவரை எப்படிப்பட்ட ஆசிரியர்களை எல்லாம் காண்பித்து இருக்கிறார்கள் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

1. தங்க மீன்கள்

தங்க மீன்கள் எவிட்டா மிஸ்ஸை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. எந்நேரமும் செல்லாம்மாவை கடிந்து கொண்டும் படிப்பே வரல என்று மட்டம் தட்டிக்கொண்டும் W என்ற எழுத்தை எழுத தெரியாததால் அவளை இனிமேல் எல்லோரும் W ன்னு பட்டப் பேர் வச்சு கூப்பிடுங்க என்று ஆசிரியரே “நல்வழி”ப்படுத்திக் கொண்டும், ஆசிரியரே அவளை மற்ற மாண மாணவிகளிடம் இருந்து தனிமைபடுத்திக் கொண்டும் வால் வால்லென்று கத்திக் கொண்டு இருக்க இவர்களுக்கு  மத்தியில் தேவதை போன்று காணப்பட்டவர் தான் எவிட்டா மிஸ். தனியார் பள்ளி எனும் கொடுஞ் சிறையிலிருந்து செல்லம்மா என்ற குழந்தையை காப்பாற்றி அரசுப்பள்ளியில் சேர்த்து அவளை நல்வழிப்படுத்தும் ஆசிரியை எவிட்டாவை எப்போதும் யாராலும் மறக்கவே முடியாது. ச்ச நமக்கு இப்படி ஒரு மிஸ் கிடைக்காம போயிட்டாங்களே என்று எண்ணத் தோன்றும்.

2. குற்றம் கடிதல்

பாலியல் கல்வி வேண்டும் என்பதை மிக ஆணித்தரமாக சொன்ன படம் குற்றம் கடிதல். செழியன் என்ற மாணவன்  முத்தம் கொடுத்து விடுவேன் என்று சொன்னதும் உணர்ச்சிவசப் பட்டு அடிக்கும் மெர்லின் கதாபாத்திரம் மறக்க முடியாதவை. ஆரம்பத்தில் இந்தக் கதாபாத்திரம் எவிட்டாவுக்கு எதிர் கதாபாத்திரமாக இருக்க, படத்தின் இறுதியில் தன் தவறை உணர்ந்து ஆசிரியை என்பவள் தாயாக இருக்க வேண்டும் என்று சொல்லும்  “தாய்” மெர்லின் வேற லெவல் ஆசிரியை.

3. தர்ம துரை

இந்தப் படத்தில் நடிகர் ராஜேஷ் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் கதாபாத்திரம் செய்திருப்பார். ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாமல்  காமராசரின் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் பள்ளியில் படிக்கும் வாய்ப்பு பெற்று மருத்துவர்களை உருவாக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் அந்த ஆசிரியர், தன்னுடைய மாணவ மாணவிகளை வன்முறையில் இறங்க வேண்டாம் என்றும் இறங்கிய மாணவர்களை கண்டிக்கும் மனமும் உடையவராக காணப்பட்டார்.  ஆசிரியர் என்பதையும் மீறி அப்பா போன்று நடந்துகொள்ள கூடிய ஆசிரியர்களை இந்தக் கதாபாத்திரம் நினைவூட்டியது.

4. பரியேறும் பெருமாள்

கிட்டத்தட்ட தர்ம துரை படத்தில் வந்த ராஜேஷ் கதாபாத்திரம் போன்றது பரியேறும் பெருமாள் படத்தில் வரும் பேராசிரியர் கதாபாத்திரம். எங்கப்பா செருப்பு தைக்குறவருடா… அவனுடைய பிள்ள என்னைய பன்னிய பாக்குற மாதிரி பார்த்தானுங்க… துரத்தி துரத்தி அடிச்சானுங்க… பேய்த்தனமா படிச்சேன்… அன்னிக்கு என்னைய அடக்கனும்னு நினைச்சவன்லாம் இன்னிக்கு என் முன்னாடி கை கட்டி நிக்குறானுங்க… என்று நடிகர் ராமு பேசுவதை கேட்கும் போது உடலுக்குள் எதோ ஒன்று சுர்ரென்று பாய்வது போல் இருக்கும்.

5. சாட்டை படத்தில் வரும் தயாளன், பசங்க பார்ட் 1 படத்தில் வரும் வாத்தியார், அழகு குட்டி செல்லம் வினோதினி கதாபாத்திரம், கல்லூரி படத்தின் கிளைமேக்ஸில் வரும் ஆசிரியர், முந்தானை முடிச்சு ஆசிரியர், வாகை சூடவா ஆசிரியர், மாணவர்களை அரசியலுக்கு இழுக்கும் ரமணா என்று தமிழ் சினிமாவில் ஆங்காங்கே சில நல்ல ஆசிரியர்களும் காட்டப்பட்டிருக்கிறார்கள்.

நாட்டாம தம்பி பசுபதி டீச்சர வச்சிருக்காருடோவ் என்ற கவுண்டமணி காமெடி, டீச்சரை உருகி காதலிக்கும் வடிவேலு காமெடி, ஏகன் படத்தில் வரும் ஆசிரியை நயன்தாராவின் உடை என்று தமிழ் சினிமா அவ்வப்போது ஆசிரியைகளை மகா மட்டமாகவும் காண்பித்து உள்ளது. இவை எல்லாம் ஒரு புறம் இருக்க இன்பராஜ் என்ற ஆசிரியர் கதாபாத்திரம் பற்றி தற்போது சமூக வலை தளங்களில் அதிகம் பேசி வருகின்றனர்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ராட்சசன். இந்தப் படத்தில் நாயகனுக்கு மட்டுமின்றி உடன் நடித்திருந்த ராம் தாஸ், அமலா பால், காளி வெங்கட் என்று அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக  இன்பராஜ் மற்றும் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் தியேட்டருக்குள் இருந்தவர்களின் வயிறு கலங்கும் அளவுக்கு மிரட்டி விட்டார்கள் என்றே கூற வேண்டும். கிறிஸ்டோபர் சைக்கோ என்றால் இன்பராஜ் காம வெறியன்.

காம வெறியனான இன்ப ராஜ் செய்யும் தொழில் என்ன? ஆசிரியர் தொழில். ஆசிரியர் தொழிலில் இருந்து கொண்டுதான் அந்தக் கதாபாத்திரம் தன்னிடம் பாடம் படிக்கும், வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளை காம பார்வையோடு பார்க்கிறது. இது போன்ற கதாபாத்திரங்கள் ( சாட்டை படத்தில் கூட இது போன்ற ஒரு கதாபாத்திரம் இருக்கிறது) கிட்டத்தட்ட எல்லா பள்ளி, கல்லூரிகளிலும் இருக்கத் தான் செய்கிறது.

இன்பராஜ்கள்:

ஆசிரியரைப் பார்த்தால் பணிவும் பாசமும் நன்றியுணர்வும் வர வேண்டும். மாறாக, அய்யய்யோ இவரா என்ற பயமும், அட ச்சீ இந்த நாயா என்ற வெறுப்புணர்வும் வரக் கூடாது. ஆனால் நிஜத்தில் பெரும்பாலானோர்க்கு வருவது எல்லாம் வெறுப்பு உணர்வு தான். காரணம் அந்த ஆசிரியர்களின் நடத்தை அப்படி.

மாணவர்கள் என்னை கண்டாலே பயந்து சாக வேண்டும், என்னைப் பற்றி மிரட்சியாக மற்றவரிடம் பேச வேண்டும் அதை கேட்டு எல்லோருமே எனக்கு அஞ்சி நடப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற சர்வதிகார எண்ணம் தான் பெரும்பாலான ஆசிரியர்களிடம் காணப் படுகிறது.  அது தான் அவர்களுடைய கெத்து என்று அவர்கள் நம்பிக்கொண்டு இருப்பது உலக மகா அபத்தமான ஒன்று.

தன்னிடம் பாடம் படிக்கும் பிள்ளைகளில் எந்தப் பிள்ளை அழகாக இருக்கிறாளோ அவளிடமே அதிகம் பேசுவது, அவளிடமே கேள்வி எழுப்பி அவளை வம்புக்கு இழுப்பது, அவளுடைய போட்டோவை ஜூம் பண்ணி பார்ப்பது, ஆசிரியர்களுடன் அரட்டை அடிக்கும் போது அந்த மாணவியின் உடல் அங்கங்களை வருணித்து பேசுவது, அந்த மாணவி என்ன தவறு செய்தாலும் பெரிது படுத்தாமல் ஆதரிப்பது என்று அத்தனை பொறுக்கித் தனங்களும் செய்யக் கூடிய பொறுக்கித் தனமான இன்பராஜ்கள் தான் நம்மை சுற்றி பெரும்பாலான அளவில் காணப்படுகிறார்கள்.

தயாளன்கள்:

தர்மதுரை, பரியேறும் பெருமாள், தங்க மீன்கள் போன்ற படங்களில் காட்டப்பட்ட ஆசிரியர்கள் சமூகத்தில் மிகக் குறைவாகவே காணப்படுகிறார்கள். அதாவது பள்ளிக்கு ஒன்றிரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இந்த ரகத்தில் இருக்கிறார்கள்.

மற்றது எல்லாம் வகுப்பறையில் ஒரு மாதிரியும் ஆசிரியர்கள் கூடி அமரும் இடத்தில் ஒரு மாதிரியும் நடந்துகொள்ளக் கூடிய ரகம், உடன் பணியாற்றும் சக ஆசிரியர் ஆசிரியைக்குள் சாதி பாகுபாடு பார்த்து பழகும் ரகம். குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான அரசுப் பள்ளிகளில் இந்த ரக ஆசிரியர் ஆசிரியைகள் தான் காணப்படுகிறார்கள்.

இன்பராஜ் மாதிரியான ஆசிரியர்களுக்கு சொம்பு தூக்கும் சில நிர்மலா தேவிகளும் பல பள்ளிகளில் கல்லூரிகளில் காணப்படுகிறார்கள். ஆசிரியர் ஒரு மாணவியைப் பற்றி இரட்டை அர்த்தத்துடன் பேசினால் அதை கேட்டுக்கொண்டிருக்கும் ஆசிரியை பொம்பள பிள்ளைங்கள இப்படி பேசாத என்று உடனே கண்டிக்க வேண்டும். மாறாக ஆசிரியைகளும் சேர்ந்து கொண்டு பல் இளித்துக்கொண்டு திரிகிறார்கள். அதே போல் ஒரு மாணவி எதோ ஒரு சூழல் காரணமாக ஆசிரியரையோ ஆசிரியையோ கொஞ்சம் குரல் உயர்த்தி பேசிவிட்டால் போதும் உடனே ஆசிரியைகள் எல்லோரும் சேர்ந்துகொண்டு அந்த மாணவிக்கு ” நடத்தை கெட்டவள் ” என்ற பட்டத்தை கொடுத்து மற்ற மாணவ மாணவிகளிடம் இருந்து தனிமைப்படுத்தப் படுகிறார்கள்.

எனக்கு நீ பயப்படனும், கடைசி வரைக்கும் நீ எனக்கு கீழ தான் இருக்கனும், இங்க நான் மட்டும் தான் அறிவாளி, நான் சொல்றது எல்லாமே சரியா தான் இருக்கும் என்ற மனப்பான்மை நம்மிடம் இருக்கும் வரை இன்பராஜ்களும் நிர்மலா தேவிகளும் சொகுசாகத் தான் சுற்றித் திரிவார்கள்.

இந்த இன்பராஜ்களும் நிர்மலா தேவிகளும் சேர்ந்து கொண்டு பல மாணவ மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடுவதோடு மட்டுமில்லாமல் பல தயாளன்கள் மற்றும் பல எவிட்டாக்களின் மனதை புண்படுத்தி அவர்களுடைய வாழ்க்கையையும் சீரழிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மேற்குத் தொடர்ச்சி மலை படம் எப்படி இருக்... தமிழில் ஒரு உலக சினிமா என்று கடந்த சில நாட்களாகவே இந்தப் படத்தைப் பற்றி பலர் பேசிக்கொண்டனர். அவர்கள் சொன்னது அனைத்தும் உண்மை என்பதாலும் இந்தப் படம் நி...
165 தமிழர்கள் என்ன ஆனார்கள்? ஒட்டுமொத்த ... தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? பல்வேறு நாடுகளில் தமிழர்கள், தமிழ் வம்சாவளிகள் முக்கிய பதவியில் இருந்தாலும் அந்நாடுகளில் வாழும் சாமான்யனின் நிலை...
மனிதம் போற்றும் 3 Roses விளம்பரம்! vs மன... சமீபத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்று வரும் இரண்டு விளம்பரங்களைப் பற்றி இங்கு பேச உள்ளோம். ஒன்று 3 Roses டீத்தூள் விளம்பரம் மற்றொன்று 5 Star சாக...
யூட்யூபில் காசு சம்பாதிக்க நினைத்து படாத... இன்றைய சூழலில்  இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் வேலையில்லாமல் அங்கும் இங்கும் அலைந்து தான் திரிகிறார்கள். சரியான வேலை கிடைப்...

Be the first to comment on "பள்ளி கல்லூரிகளில் எவிட்டாக்கள் தயாளன்கள் குறைவு! இன்பராஜ்கள் நிர்மலாதேவிகள் அதிகம்! – பொறுமையான ஆசிரியர்களும், பொறுக்கி ஆசிரியர்களும்!"

Leave a comment

Your email address will not be published.


*