இந்த பாட்டுக்காக யுவனுக்கு தேசிய விருது கொடுக்கனும்!

Give Yuvan a National Award for this song!

யுவனுக்கு ஏன் இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது யுவன் ரசிகர்களின் மனதிற்குள் பல நாட்களாக இருக்கும் கேள்வி. ஒரு ரசிகர் அந்தக் கேள்வியை பேரன்பு திரைப்படத்தின் புரோமசன் நிகழ்ச்சியில் யுவனிடம் கேட்டார். யுவன் அதற்கு நான் எதிர்பார்ப்பது ரசிகர்களின் அன்பை மட்டும் தான் எனக்கு அதுவே போதும் என்று பதில் தெரிவித்தார். 

நியாயப்படி பார்த்தால் யுவனுக்கு பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் வரும் “சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…” பாடலுக்காக தேசிய விருது கொடுத்திருக்க வேண்டும். அந்தப் படத்தில் உள்ள இதர பாடல்களும் தேசிய விருதுக்கு தகுதியான பாடல்கள் தான். ஆனால் யுவனுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. அப்போதிலிருந்து யுவனுக்கு விருதுகள் மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நந்தா படத்தில் வரும் “முன்பனியா” பாடலை கேட்கும்போது இந்தப் பாடலுக்கு எப்படி தேசிய விருது கொடுக்க மனம் வராமல் போனது என்று கேட்க தோன்றுகிறது. 

செல்வராகவன், ராம் இருவரின் படங்களுக்கு என்றால் யுவனிடம் இருந்து பிரத்யேக இசை சுரப்பிகள் சுரக்கின்றன என்று என்ஜிகே படத்தின் விமர்சனத்திலும் பேரன்பு படத்தின் விமர்சனத்திலும் ஆனந்த விகடன் எழுதியிருந்தது. அது நூறு சதவீதம் உண்மை. காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற படங்களின் பின்னணி இசையும் பாடல்களும் தேசிய விருதுக்கு தகுதியானவை தான். ஆனால் விருது கிடைக்காதது ஏன் என்று தான் தெரியவில்லை. விஜய் டிவி விருது விழாவில் மங்காத்தா இசைக்காக ஏன் யுவனுக்கு விருது கொடுக்கவில்லை என வெங்கட் பிரபுவும், ஆனந்த யாழை பாடலுக்காக ஏன் யுவனுக்கு விருது கொடுக்கவில்லை என்று ராமும் கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கெல்லாம் மழுப்பலான பதில்கள் தான் கிடைத்தன. சரி அதையெல்லாம் விட்டுவிடுவோம். 

யுவன் ஒரு சில இயக்குனர்களோடு கைகோர்க்கும்போது அற்புதமான இசையமைப்பாளராக வெளிப்படுகிறார் என்று பலரும் கூறுகின்றனர். லிங்குசாமி, விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு, ராம், அமீர், செல்வராகவன் ஆகியோர் தான் அந்த சிறப்பு இயக்குனர்கள். ஆனால் யுவன் புதுமுக இயக்குனர்களின் படங்களுக்கும் அற்புதமான பாடலை தந்துள்ளார் என்பதற்கான சரியான எடுத்துக்காட்டு தான் குங்குமபூவும் கொஞ்சும் புறாவும். அந்தப் படத்தின் பாடல்களுக்காகவும் தேசிய விருது தந்திருக்கலாம். 

மேலே சொல்லப்பட்ட இயக்குனர்களுடன் கைகோர்க்கும்போது யுவன் அற்புதமாகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான், எல்லோரும் பெரிதாக பேசிக்கொள்வதுதான். ஆனால் அந்த அளவுக்கு பெரிதாக பேசப்படாத கூட்டணி ஒன்று இருக்கிறது. அது யுவன் – சீனு ராமசாமி கூட்டணி. தர்மதுரை படத்தின் அத்தனை பாடல்களும் நம் மனதை வென்றன. குறிப்பாக ஆண்டிப்பட்டி கணவாய் காத்து, எந்தப் பக்கம் காணும்போதும் வானம் ஒன்று… ஆகிய இரண்டு பாடலும் நம்மை முணுமுணுக்க வைத்தன. அதேபோல யுவன் – சீனுராமசாமி கூட்டணி தர்மதுரைக்கு முன்பாகவே ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளது. “இடம் பொருள் ஏவல்” என்பதுதான் அந்தப் படம். 

அந்தப் படத்தில் உள்ள “குறுந்தொகை கொண்டாடும் காதல் மைனா” என்ற பாடலை கேட்டு இருக்கிறீர்களா? ஒருமுறை கேட்டுப் பாருங்கள். யுவன் பிரமாதமாக அந்தப் பாடலை உருவாக்கி இருப்பார். வைரமுத்துவின் பாடல் வரிகளும் அவ்வளவு சிறப்பாக இருக்கும். குறிப்பாக “சத்தியமாக தமிழ் நமக்கு உணவளிக்கும்… அம்மே தமிழில் எம்ஏ” போன்ற வரிகள் வரும் இடமெல்லாம் வாவ் சொல்ல வைக்கும். இந்தப் படம் சில பிரச்சினைகளால் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. படம் சென்சார் சர்டிபிகேட் வாங்கியதாக கூட தெரியவில்லை. அப்படி ஒருவேளை படம் தணிக்கை சான்றிதழை பெற்று ரிலீஸ் ஆனால் இந்தப் பாடல் பெரிய அளவில் இளைஞர்களால் கொண்டாடப்படும். 

அதேபோல இந்தப் படத்தை யுவனுக்காகவே இந்தப் பாடலுக்காகவே தேசிய விருது போட்டிக்கு படக்குழு அனுப்ப வேண்டும். கண்டிப்பாக இந்தப் பாடலுக்காக யுவனுக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை இந்தப் பாடலுக்கும் யுவனுக்கு தேசிய விருது கொடுக்கவில்லை என்றால்… 

ஆனந்த விகடன் விருது விழாவில் அமீர் வடசென்னை படத்துக்கு தேசிய விருது கொடுக்காமல் இருந்ததை குறிப்பிட்டு சொன்னதை போல “இனி இந்த விருதை நாங்கள் ஒரு விருதாகவே கருதுவதாக இல்லை…” என்று யுவன் ரசிகர்களிடம் இருந்து பதில் வரும். 

யுவனுக்கு இந்தப் பாட்டுக்காக தேசிய விருது கொடுக்கனும்னு நீங்க எந்த பாட்ட நினைக்குறீங்கனு கமெண்ட் பண்ணுங்க நண்பர்களே…

Related Articles

ப்ளஸ் கோட்ஸ் – கூகுள் வரைபடத்தின் ... நெடுந்தூர பயணங்களுக்கு நாம் யாரை நம்புகிறோமோ இல்லையோ, கண்ணை மூடிக்கொண்டு கூகுள் வரைபடத்தை நம்பத் துவங்குகிறோம். சென்னை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நக...
தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினி... இயக்குனர் பாலாவை பற்றி யாவரும் அறிந்ததே. மனதுக்கு மிக நெருக்கமான மனிதர்களுக்காக என்ன வேண்டுமானால் செய்யக் கூடியவர். உதாரணமாக தங்க மீன்கள் படத்தின் ட்ர...
நீங்க சினிமாவில் கேமரா மேன் ஆக வேண்டுமா?... Technical DetailsClose up - காமிரா கிட்டத்தில் பார்ப்பது Close shot - கொஞ்சம் விலகிப் பார்ப்பது Two shot - இரண்டு தலைகள் Three Shot...
சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் கதைகள் ... 1. கடவுளுக்கு கடிதம் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் கதை இது. ஸ்ரீரங்கத்தில் டீக்கடை வைத்திருப்பவன் ரங்கு. அவனுடைய கடைக்கு அடிக்கடி வருபவன் கோவிந்து. அவனுக்...

Be the first to comment on "இந்த பாட்டுக்காக யுவனுக்கு தேசிய விருது கொடுக்கனும்!"

Leave a comment

Your email address will not be published.


*