அரசியல் லாபகரமாக இல்லாத போது, அலுப்புத் தருவதாகி விடுகிறது! – மாக்சிம் கார்க்கி கட்டுரைகள் ஒரு பார்வை! 

ரஷ்ய புத்தகங்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருபவை மாக்சிம் கார்க்கியின் புத்தகங்கள் தான். அவருடைய கட்டுரைகள் சிறுகதைத் தொகுப்புகள் நாவல்கள் பல உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

மாக்சிம் கார்க்கியின் எழுத்துக்கள் எப்போதுமே நம் மனதைக் கசக்கிப் பிழிய கூடிய திறன் வாய்ந்தவை.  ஒருமுறை அவருடைய புத்தகத்தை படித்தால் அந்த புத்தகத்தில் உள்ள சம்பவங்கள் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் நம் மனதில் இருந்து நீங்காது. மாக்சிம் கார்க்கியின் படைப்புகள் பொதுவாக எளிய மக்களின் வலியை நம்முள் கடத்தும்படியான படைப்புகளாக இருக்கும். அந்த வகையில் இந்தப் படைப்பில் விடுதலைக்காக பாடுபடும் எளிய மக்களின் ரத்தம் கலந்த போராட்ட வாழ்க்கையை விவரிக்கிறார் மாக்சிம் கார்க்கி. 

அதுபோலத்தான் இந்த மாக்சிம் கார்க்கியின் கட்டுரைத் தொகுப்பும். நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ் பதிப்பித்த இந்த புத்தகத்தை வல்லிக்கண்ணன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். 

 அவருடைய மொழிபெயர்ப்பு படிப்பதற்கு மிக எளிமையாக இருக்கிறது.  ஒரு சிலருடைய மொழிபெயர்ப்பு புத்தகங்களை இரண்டு மூன்று முறை படித்தால்தான் புத்தகம் என்ன சொல்ல வருகிறது என்பது புரியும்.  ஆனால் இந்த புத்தகம் முதல் முறை படிக்கும் போதே என்ன சொல்ல வருகிறது என்பதை புரியவைக்கிறது. 

  1. அழகி பிரான்ஸ் 2. ஒரு அமெரிக்கப் பத்திரிகையின் கேள்விகளுக்குப் பதில் 3. மூடுபனி 4. கலாசாரப் பாதுகாப்புக் காங்கிரசுக்கு 5. கொழுத்தவர் சங்கீதம் 6. ஒரு சிறந்த புத்தகம் 7. பழைய மனிதனும் புதிய மனிதனும் 8. பாட்டாளி வர்க்க மனிதத்துவம் 9. ஜோனெஸ் பீச்சரின் வழக்கு விசாரணை 10. முதலாளித்துவ பத்திரிகைகள் போன்ற பத்து தலைப்புகளில் இந்த கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. 

 

மனதை தொட்ட வரிகள்/கசக்கி பிழிந்த வரிகள்: 

 

  • நடக்க இயலாதவர்கள் நடுவழியிலேயே விழுந்து விட்டார்கள். அவர்கள், குதிரைகளின் கால்களிலும், போர் வீரர்களின் கால்களிலும் மிதிபடாமல் இருக்கட்டும் என்று, கருணையோடு போலீஸ்காரர்கள் அவர்களை இழுத்து அப்புறப்படுத்தினார்கள். (அழகி பிரான்ஸ்)

 

  • நான் புகுந்து சென்ற வாசலின் அருகே சுதந்திரச் செங்கொடியைக் கிழித்துத் தயாரித்த கால் சட்டை அணிந்த போர் வீரர்கள் இரண்டு பேர் நின்றார்கள். (அழகி பிரான்ஸ்)

 

  • என் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. எல்லாப் புரட்சிக்காரர்களையும் போலவே, நானும் என் வாலிபப் பருவத்தில் இந்தப் பெண்மணியைக் காதலித்தேன். உண்மையாகவும் மனதாரவும் காதல் புரிவது எப்படி என்பதையும், அழகிய முறையில் புரட்சிகளை உண்டு பண்ணுவது எப்படி என்பதையும் தானாகவே அறிந்திருந்த பெண் தான் அவள்… (அழகி பிரான்ஸ்)

 

  • அடிமை நாடுகளில் வசித்த மக்களின் தோல்கள் தரையில் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மீது ”மனித உரிமைப் பிரகடனம்” என்ற எழுத்துக்கள் நயமான வேலைப்பாடுகளுடன் அழுத்தமாகப் பொறிக்கப்பட்டிருந்தன. பிரான்சின் விடுதலைக்காகப் போராடிய போது பாரிஸ் நகரில் அரணாக நின்று உயிரிழந்த மனிதர்களின் எலும்புகளால் செய்யப்பெற்ற தட்டு முட்டுச் சாமான்கள் ஏதோ ஒரு விதக் கருநிறப் பொருளினால் மூடப்பட்டிருந்தன. அதன் மீது, ரஷ்ய ஜார் மன்னனுடன் செய்து கொண்ட கூட்டுறவு உடன்படிக்கை பூ வேலையோடு தைக்கப்பட்டிருந்தது. (அழகி பிரான்ஸ்)

 

  • – முதலாளித்துவத்தின் எடுப்பான தொந்தி வயிறு ஒன்று; (அழகி பிரான்ஸ்)

 

  • பால்ஸாக் காலத்திய சீமாட்டிகளின் – ஆண்களை வசியம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இன்னும் விட்டு விடாது வாழ்ந்த பாட்டிமார்களின் – வரவேற்பு அறைகள் எப்பொழுதும் இருட்டாக இருந்தது போலவே, அந்த அறையும் இருள் மயமாக விளங்கியது. போலி மரியாதை, ஆத்மீக ஊழல் ஆகியவற்றின் துர்நாற்றங்கள் கலந்து குழம்பிக் கவிந்து, அங்கு வருகிறவரின் தலையைச் சுழல வைத்தது; சுவாசத்தைத் தடைப்படுத்தியது. (அழகி பிரான்ஸ்)

 

  • நான் மௌனமாக அவளைக் கவனித்தேன். அந்த ஆத்மாவின் பரிதாபகரமான மரண அவஸ்தையைக் கண்டதும், என் தொண்டையில் வெடித்து எழுந்த வேதனை ஒலியை, நான் சிரமத்தோடுதான் அடக்கிக்கொண்டிருந்தேன். (அழகி பிரான்ஸ்)

 

  • “நீர் சந்தோஷமான துணைவன் அல்ல” என்று சொல்லிவிட்டு அவள் சோர்வுப் புன்னகை புரிந்தாள். “அம்மணி, உண்மையான ரஷ்யன் எவனும் இன்று பிரான்ஸின் விருந்தாளியாகிற பொழுது சந்தோஷம் அடைவதில்லை” என்று நான் பதிலளித்தேன் (அழகி பிரான்ஸ்)

 

  • ஒரு மனிதனுக்குக் காதல் புரியும் ஆற்றல் இருக்குமானால், வாழ்க்கையே சிறப்பான தாகி விடுகிறது. (அழகி பிரான்ஸ்)

 

  • அரசியலில் அழகு என்பதற்கே இடம் கிடையாது… வயிற்றுக்கும், வயிற்றுக்காக அடங்கி ஒடுங்கி வேலை செய்யும் மனசுக்கும் தான் இடம் உண்டு…” (அழகி பிரான்ஸ்)

 

  • பணக்காரர்கள் தான் அரசாங்கம் என்கிற மாளிகையில் உறுதியான கற்களாக விளங்குகிறார்கள். அதன் அஸ்திவாரமே அவர்கள் தான். கவிஞர்கள் வெறும் அணிகலன்கள் தான்; கட்டிட முகப்பிலே உள்ள நகாசு வேலைப்பாடுகள் தான்… அவர்கள் இல்லாமலே யாரும் வாழ்க்கை நடத்த முடியும். மாளிகையின் வலிமைக்கு அதிக வலுச் சேர்க்கும் எதையும் அவர்கள் செய்வதில்லை. மக்கள், அம்மாளிகை நிற்பதற்கு உரிய இடம்தான். புரட்சிக்காரர்கள் வெறும் வெறியர்களே யாவர். இந்த உவமையைத் தொடர்ந்து கூறுவதானால், மாளிகையில் குடியிருப்பவர்களின் அமைதியையும் உடைமையையும் பாதுகாக்கும் வேட்டை நாய்களின் கூட்டம்தான் இராணுவம் என்று குறிப்பிடலாம். (அழகி பிரான்ஸ்)

 

  • அரசியல் லாபகரமாக இல்லாத போது, அலுப்புத் தருவதாகி விடுகிறது. (அழகி பிரான்ஸ்)

 

  • கரு நிற மனிதரைத் துன்புறுத்துவது போன்ற அருவருப்பான காரியம் எதுவும் ஐரோப்பாவில் நடைபெறவில்லை

 

  • எல்லா நாடுகளிலுமே முதலாளிகள் வெறுப்பான – மனிதத் தன்மை இல்லாத – இனமேயாவர். எனினும் உங்கள் நாட்டில் உள்ளவர்கள் மிகவும் நீசமானவர்கள். அவர்கள் பணத்தின் மீது மிகுந்த மூடத்தனமான பேராசைகொண்டிருக்கிறார்கள், என்பது தெளிவாகத் தெரிகிறது. ‘வியாபாரி’ எனும் பதத்துக்கு எனது சொந்த, அந்தரங்கமான, விளக்கம் புத்திசுவாதீனம் இல்லாதவன்’ என்பதாகும்.

 

  • நமது சிறப்பான பூமி – மிகுந்த சிரமத்தோடு அழகுப்படுத்தக் கற்றுக்கொண்டு நாம் வளம் படுத்தியுள்ள உலகம் – அநேகமாக முழு உலகமுமே, பணம் சேர்ப்பது தவிர வேறு எதுவும் செய்வதற்குத் திறமை இல்லாத, மிகவும் சிறு பான்மையான ஒரு இனத் தின் பேராசைப் பிடியிலே சிக்கியிருக்கிறது!

 

  • பணத்தைத் தவிர வேறு எதைத்தான் முதலாளிகள் விளைவிக்கிறார்கள்? நம்பிக்கை வறட்சியும் இருள் நோக்கும் கொண்ட மனோபாவம் (பெஸிமிஸம்), பொறாமை, பேராசை, வெறுப்பு ஆகியவற்றைத்தான். இவை முடிவில் அவர்களை நிச்சயமாக அழித்தே தீரும்.

 

  • அரசியல் அதிகாரம் மற்றவர்கள் உழைப்பு மீது வாழும் புல்லுருவிகளிடம் இல்லாமல் – தொழிலாளி மக்களின் முழு உரிமையாக இருக்கிற இடத்தில் தான் உண் மையான நாகரிகமும், தீவிரமான கலாசார முன்னேற்றமும் சாத்தியம் என்பது என் கருத்து.

 

  • முதலாளிகள் சமூக ரீதியில் ஆபத்தான மனிதர்களின் கும்பல் என்று பிரகடனப்படுத்த வேண்டும்; அவர்களுடைய சொத்துக்கள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட வேண்டும்; நடுக் கடலில் எங்காவது உள்ள தீவில் அவர்களைக் கொண்டு சேர்க்க வேண்டும்; அங்கே அவர்கள் அமைதியோடு சாவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று நான் சிபாரிசு செய்கிறேன். ஒரு சமூகப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஏற்ற இரக்கமுள்ள வழி இதுதான்.

 

  • கரிய ரத்தக் கட்டிகளைத் துப்புகிறான். அழுக்கு முட்டிய தனது செருப்புகளால் ரத்தத்தை மிதிக்க இஷ்டம் இல்லாததனால் தானோ என்னவோ, அவன் நடை பாதை மேல் துப்பாமல், வீடுகளின் வழவழப்பான சுவர் கள் மீதே காறித் துப்புகிறான். யோசனை செய்து வேண்டுமென்றே அவன் இப்படிச் செய்கிறான் என்று நாம் நினைக்க வில்லை. ஆனால், இன்னும் பன்னிரண்டு அடிகள் நடந்ததும் அவன் பசியினாலும் களைப்பாலும் சோர்ந்து விழுந்து விடுவான் என்ற அனுமானம் நமக்கு ஏற்படுகிறது.

 

  • மனிதத்துவத்தின் மாண்பு இரண்டு கால் ஓநாய்கள், பன்றிகள் ஆகியவற்றின் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயமாகும்; மனிதத்துவத்தின் உலக முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு அனுதாபம் காட்டும் திறமை பெற்ற வர்க்கம் உலகத்தில் ஒன்றே ஒன்றுதான் உண்டு என்பதைச் சரித்திரம் மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டி விட்டது என்பது நினைவில் நிறுத்த வேண்டியதாகும்.அந்த வர்க்கம் தான் பாட்டாளி வர்க்கம்.

 

  • முதலாளித்துவ சமுதாயத்தைச் சீர்திருத்த நாம் முயல வேண்டாம். விரோதம் இல்லாமலும், மனிதவர்க்கத்தின் பெரும் பகுதியை அடக்கி ஒடுக்காமலும் முதலாளித்துவ சமூகம் வாழ முடியாது; வாழும் ஆற்றலும் அதற்குக் கிடையாது; அதன் அமைப்பே அத்தகையதுதான்.

 

  • ஒரே ஒரு உண்மையான மனிதத்துவம் பாட்டாளி வர்க்க மனிதத்துவம் தான்.

 

  • காதலைப் புகழ்ந்து பாடும் மகத்தான கவிதைகள் நூற்றுக் கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் எழுதப்பட்டிருக்கின்றன. ஆண் பெண்களின் சிருஷ்டித் திறமைக்குக் காதல் ஒரு தூண்டுதலாக இருந்திருக்கிறது. மிகவும் மதிநுட்பம் பெற்ற மிருகங்களை விட அதிகமான சமுதாய உறவு உடையவனாக மனிதனை ஆக்கியுள்ளது காதல். ஆண் பெண் இன உறவில் உள்ள செயல் திறமான, ஆரோக்கியமுடைய, லௌகிக கற்பனாலங்காரத்தில் காணப்படும் கவித்துவ சக்தியானது, சமூகக் கல்வி அபிவிருத்தியில் மாபெரும் மதிப்புள்ள அம்சமாக இருந்திருக்கிறது. “பசியும் காமமும் உலகத்தை இயக்குகின்றன” என்று ஷில்லர் சொன்னார். காதல் கலாசாரத்திற்கு அஸ்திவாரம்; பசி நாகரிகத்திற்கு ஆதாரம்.

 

  • இந்தச் சகாப்தத்திலே வாழ்ந்து, உழைப்பது உண்மையிலேயே அற்புதமான காரியம் தான்! 

 

  • “நன்மையின் உருவமான கடவுள் ஒருவர் இருந்தால் உலகத்தில் துன்ப துயரங்களே இருக்க முடியாது.”

 

  • ஆழ்ந்த கருத்து நிறைந்ததாய்த் தோன்றும் ஒரு சிலையின் முகத்தைப் போலவே விளங்கிய அவர் முகம் மார்பு மீது தாழ்ந்திருந்தது.

 

  • “வருங்காலம்! வருங்காலம்! வருங்காலத்தின் வேலை திகழ்காலத்தை அழித்து அகற்றுவதுதான். நாம் கற்பனை செய்யக்கூடியதை விட அதிகமான அளவில் துடைத்து அழிப்பது தான். அருவருப்பான, வெட்ககரமான, ஏதோ ஒன்றை அழிப்பது போல அதையும் துடைத்தெறிவது தான். ஆயினும் இந்த நிகழ் காலம் – அது இருந்தே தீரும். 

 

  • இராணுவமாம்; மனிதரை மந்த புத்தி பெற்ற பலியாடுகளாகவோ மேன்மையற்ற மிருகங்களாகவோ மாற்றுகிற போர்த் தொழிலாம்; வெட்கம்! வெட்கம்! ஆமாம். வெட்கம்! அதுதான் உண்மை. அந்த உண்மை அமரத்துவமானது. ஆனால், அதை நடைமுறையாக நாம் கருதுவதில்லை!

 

  • மனிதக் கொலையின் சண்டாளத்தனம் அனைத்தையும் அவர்கள் உணர்ந்து தங்கள் உள்ளத்தில் அதை வெறுத்த போதிலும், அவர்கள் இன்னும் கொன்று கொண்டும், அழித்துக் கொண்டும், இரத்தத்திலும் சேற்றிலும் செத்துக்கொண்டும் தான் இருக்கிறார்கள்.

Related Articles

தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வ... சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா?சாப்பாடு முக்கியம்... அப்புறம் எனக்குப் பசிக்குமல்ல சாப்புடக்கூடாது... என்ற சிறுவனை நாம் அவ்வளவு எளிதாக மறக்க...
கிண்டிலில் புத்தகங்கள் படிப்பது நன்மை தர... புத்தக வாசிப்பு என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை மிக அரிதாக இருக்கும் போது இந்த நிலையில் கிண்டிலில் புத்தகங்கள் வாசிப்பது சரியா? தவறா? நன்மையா? தீமையா? எ...
தோழர் வெங்கடேசனை மிஸ் பண்ணாதீங்க! –... போலீஸ் ஸ்டேசனுக்குச் சென்று பஸ்ஸை காணோம் என்று புகார் தருகிறார் நாயகன். பிளாஸ்பேக் விரிகிறது. லட்சுமி சோடா பேக்டரி நடத்தி வரும் முதலாளி நாயகனின் கதை ச...
நீங்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும... Comparing one person with another is brutal ( ஒருத்தர நீங்க ஏன் மத்தவங்க மாதிரி இல்லைன்னு கேட்குறது மிகப் பெரிய வன்முறை ) - இயக்குனர் ராம் எழுதி இயக்...

Be the first to comment on "அரசியல் லாபகரமாக இல்லாத போது, அலுப்புத் தருவதாகி விடுகிறது! – மாக்சிம் கார்க்கி கட்டுரைகள் ஒரு பார்வை! "

Leave a comment

Your email address will not be published.


*