அரசியல்வாதிகளை தூக்கி சாப்பிடும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்?
கடவுளுக்கு தரும் கல்வியைவிட ஒரு ஏழைக்குத் தரும் கல்வி மேலானது என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். அந்த கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்கிறதா? இல்லையே! சமத்துவம் பிறக்க வேண்டுமெனில் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரே மாதிரியான இலவசமான கல்விமுறை கிடைக்க வேண்டும். ஆனால் கல்வியை நமக்கு முறையாக தராமல் வாக்குவங்கிக்காக எதேதோ பொருட்களை இலவசமாக தந்து நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் சுயநலமிக்க அரசியல்வாதிகள். இந்த சுயநலமிக்க அரசியல்வாதிகளைவிட கொடூரமானவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் [ ஒரு சிலரை தவிர]. ஏன் தெரியுமா? ஏனென்றால் அவர்களின் மிதமிதப்பு. அரசு வேலை என்றால் பணிச்சுமை இருக்காது. ஜாலியாக பொழுதை கழிக்கலாம் என்ற எண்ணம் காலங்காலமாக சோம்பேறி மனிதர்களுக்குள் விதைக்கப்பட்டு வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கும் மனப்போக்கு தொடர்ந்து இக்கேடுகெட்ட சமூகத்தில் காணப்படுவதுதான். சமூகத்தில் நிலவும் ஊழல்களுக்கு திருட்டு அரசியல்வாதிகளைவிட அலட்சியமான அரசுப்பணியாளர்கள் தான் அதிக பங்கு வகிக்கிறார்கள். அதே போல் இன்று தனியார் கல்வி நிறுவனங்கள் பல்கிப் பெருகி, பகல் கொள்ளை அடிக்கிறது. அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? நமக்குத் தெரிந்தது தான். சாட்டை படத்தில் காண்பித்தது போல அலட்சியமான ஆசிரியர்கள் தான்!
இன்றைக்கு கல்வி நிறுவனங்கள் எப்படி?
பின்லாந்து போன்ற நாடுகளில் கல்வி முழுக்க முழுக்க இலவசமாக அரசாங்கத்தால் கற்றுத்தரப்படுகிறது. ஆனால் இங்கு அப்படியா? பொறுக்கித்தனம் செய்துகொண்டிருந்த அரசியல்வாதிகளின் கையில் கல்வி மாட்டிக்கொண்டு சூதாட்டமாக மாறிவிட்டது. தமிழகத்தில் இருக்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் எல்லாம் அரசியல்வாதிகளின் தலையீடு நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்துகொண்டே இருக்கிறது. ஆளுங்கட்சியில் இருப்பவர்களே தனியார் பள்ளிகளை நிறுவி கல்விக்கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் உண்மை முகம்?
அதனால் அரசுபள்ளிகளை கண்டுகொள்வதில்லை. ஏன் படிப்பவர்கள் எல்லாம் ஏழைகளின் பிள்ளைகள் என்பதால் இந்த அலட்சியமா? அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கையூட்டு வாங்கிக்கொண்டு எவன் வயிறு காய்ஞ்சா என்ன? என் வயிறு நிரம்பிடுச்சே என்று இருந்துகொள்வதால் முறையாக பாடம் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே அலட்சியம் காட்டுகிறார்கள். முறையாக பள்ளிக்கு வருவதில்லை. சமத்துவத்தை பேணுவதில்லை. மாணவர்களை டீ வாங்கிட்டு வா, டிபன் பாக்ஸ் கழுவித்தா, வண்டிய துடைச்சித்தா, கக்கூஸ் கழுவு என்று தங்களுடைய சுயவேலைகளுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சம்பளத்தை அரசாங்கத்திடம் வாங்கிக்கொண்டு தனியார் பள்ளிகளில் பார்ட்னர்களாகவும், பகுதிநேர ஆசிரியர்களாகவும் விளங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
கரூர் நாமக்கல் எப்படி?
கல்விக்கொள்ளை அடிப்பதில் இந்த இரண்டு மாவட்டங்கள் முன்னிலையில் இருக்கிறது. நாமக்கல்லில் இருக்கின்ற பெரும்பாலான தனியார் பள்ளிகள் எல்லாம், சில அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டுசேர்ந்து உருவாக்கிய பள்ளிகள் தான். அரசியல்வாதிகளின் ஆதரவுடனும் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டும் லட்சம் லட்சமாக கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பள்ளிகளில் தான் நல்ல கல்வி பெற முடியும் என்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டார்கள். இப்படி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டுசேர்ந்து உருவாக்கிய தனியார் பள்ளிகளுக்கு மாணவ மாணவிகளை சேர்க்கும் பணி அதே அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கையில் இருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப்பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை தனியார் பள்ளிகளில் தள்ளிவிடுகின்றனர் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள். இப்படி மாணவர்களை சேர்த்துவிடும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தனித்தொகையை தனியார் பள்ளி நிறுவனம் வழங்குகிறது. அதாவது ஒவ்வொரு மாணவனின் தலையும் பேரம் பேசப்படுகிறது. தலைக்கு ஐந்நூறு முதல் ஐயாயிரம் வரை பேரம் பேசி காசு பார்க்கிறது அலட்சியம் நிறைந்த அரசுப்பள்ளி ஆசிரிய சமூகம். இன்றைய நாளிதழ்களில் அரசியல்வாதி வீட்டில் என்ற செய்திகளையடுத்து, பள்ளி முதல்வர் வீட்டில், ஆசிரியர் வீட்டில் கோடிக்கணக்கான மதிப்புடைய தங்கநகை திருட்டு போனது என்ற செய்திகளை காண முடிகிறது.
அதேசமயம் நேர்மையாக தனது ஆசிரியர் பணியை செய்யும் அரசுப்பள்ளி ஆசிரியர்களை சக ஆசிரியர்களே கேலி கிண்டல் செய்து மாணவர்கள் முன்பு அவர்களை கோமாளியாக சித்தரிக்கிறார்கள், மேயற மாட நக்குற மாடு கெடுத்த கணக்காக. ஆக வாத்தியாருக்கு எதிரி மாணவர்கள் அல்ல! உடன் பணியாற்றும் சக வாத்தியார் தான். நான் சும்மா வந்து சும்மா பெஞ்சை தேய்ச்சிட்டு போகும்போது நீ மட்டும் எப்படி பிள்ளைகளுக்கு நல்லது சொல்லிக்குடுத்து நல்ல பெயர் வாங்கலாம் என்ற வயித்தெரிச்சல் பிடித்த சோம்பேறியான சொகுசு விரும்பிகளான ஆசிரியர்கள் தான் இச்சமுதாய சீர்கேடுகளுக்கான அடித்தளம்.
பொறியியல் கல்லூரிகளில் என்ன நிலை?
தமிழகத்தில் புற்றீசல்போல பொறியியல் கல்லூரிகளும் சிபிஎஸ்இ பள்ளிகளும் பெருகிவிட்டன. தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிபேராசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு வேண்டுமென்றால், குறைந்தது பத்து மாணவர்களையாவது இன்ஜினியரிங்கில் சேர்த்துவிட வேண்டுமென்று நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அவர்களும் ஏழை மாணவர்களை மூளைச்சலவை செய்து அவர்களின் விருப்பத்திற்கு மாறாக இன்ஜினியரிங்கில் சேர்த்துவிடுகின்றனர். விளைவு, வட்டிக்கு பணம் வாங்கி கட்டி படித்தும் வேலை கிடைக்காமல் திண்டாடுகிறான் மாணவன். அதேபோல் சிபிஎஸ்இ பள்ளியில் படிப்பவர்கள் புத்திசாலிகள் என்றும் அரசுபள்ளிகளில் படிப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றும் ஏற்றத்தாழ்வை உருவாக்கிவைத்திருக்கிறது இந்த கல்வி சூதாட்டம். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் மதிப்பெண்களுக்காக நடைபெறும் மாணவ தற்கொலைகள் நடந்துகொண்டே இருக்கும். இன்னும் நூறு அனிதாக்களை இழந்துகொண்டே இருப்போம்.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கினால் தான் ஏழை மாணவர்கள் தரமான கல்வியை பெற முடியுமென்றால் அப்ப அரசுபள்ளிகள் எதற்கு? இழுத்து மூடிவிடலாமே! நவோதயா பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு உகந்த உண்டு உறைவிடப்பள்ளிகள் என்று வரவேற்பவர்கள் ஏன் இதனை அரசுபள்ளிகளில் செய்யமுடியாதா என்று கேள்விகேட்பதில்லை.
தரமான கல்வியை வழங்க அரசிடம் போதுமான நிதியில்லை என்பதால் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகிவிட்டது என்று சப்பைக்காரணங்களை சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் தேர்தல் வெற்றிக்கு பின் அரசியல்வாதிகளின் சொத்துகள் உயர்வது எப்படி? என்ற உச்சநீதிமன்றத்தின் கேள்வியை முன்வைத்தால் என்ன பதில் சொல்வார்கள்.
இனியாவது கல்விக்காக செலவளிக்கிறேன் என்ற பேரில் பேத்தனமாக தனியார் கல்வி நிறுவனங்களிடம் காசை வாரி இரைக்காமல் நமக்கு தேவையான தரமான கல்வியை அரசிடமிருந்து பெற முயல்வோம்! நம் நெற்றியில் எதும் எழுதி வைத்திருக்கவில்லை என்பதை புரிய வைப்போம்! நமக்கு தேவையானதை கேட்டு வாங்குவது நம் கடமை!
இப்படிலாம் சொன்னா உடனே திருந்திட போறோமா என்ன? ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து செல்வோம். மருத்துவ கொள்ளையை எதிர்த்து அட்லி மெர்சல் படத்தை எடுத்தது போல, கல்வி கொள்ளையை பகிரங்கமாக போட்டு உடைக்கும் திரைப்படம் வந்தால் நான்கு நாட்களுக்கு காச்சுபூச்சு என்று சொல்லும் இந்த சமூகம் அடுத்த ஐந்தாவது நாளில் கப்புச்சுப்பென்று அடங்கி வேற வேலையை பார்க்கத் தொடங்கிவிடும்…
மொத்தத்தில் வெக்கங்கெட்ட சமூகம்! நம் சமூகம்!
Be the first to comment on "தனியார் கல்வி நிறுவனங்களிடம் பேரம் பேசும் அரசுபள்ளி ஆசிரியர்கள்! – விளங்குமா சமூகம்?"