கடந்த பதினைந்து ஆண்டுகளில் தான் இந்த “இணையதளம்” என்ற வார்த்தை மிக பிரபலமாகி உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி, காலமாற்ற தேவை அது. அதை அவ்வளவு எளிதாக நிராகரிக்க முடியாது. இந்த நிலையில் தான் தொழில்நுட்ப ரீதியான இணையதளங்கள், செய்தி இணையதளங்கள் போன்ற இணையதளங்கள் தொடங்க ஆரம்பித்தன. அதிலும் இந்தியாவில் ஜியோ வந்த பிறகு ஏகப்பட்ட இணையதளங்கள் முளைத்துவிட்டன.
இணையதளம் தொடங்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற முடிவு எடுக்கப்படுகிறது. ரூபாய் 20000க்கும் அதிகமான தொகை செலுத்தி ஒரு பர்பெக்ட்டான இணையதளம் தொடங்கி விடலாம். ஆறு மாதம் காத்திருந்து கூகுள் ஆட்சென்சும் வாங்கி விடலாம். ஆனால் அந்த இணையதளத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் தான் இருக்கிறது திறமை. இந்த மாதிரி புதிதாக தொடங்கப்பட்டுள்ள எங்கள் செய்தி, கட்டுரை இணையதளத்துக்கு ஆங்கிலம் டூ தமிழ் மொழிபெயர்ப்பு “ரைட்டர்கள்” தேவை என்ற விளம்பரத்தைக் கொடுக்க வேண்டும். அதை பார்த்து யாராவது வந்தால் அவர்களை சாம்பிலுக்கு ஒரு கட்டுரை எழுத சொல்லி தேர்வு செய்ய வேண்டும். அதெல்லாம் போக,
எந்த மாதிரியான செய்திகள் எழுதுவது என்பதுதான் இங்கு இருக்கும் எல்லா சிறுசிறு இணையதளங்களுக்கும் பிரச்சினையாக இருக்கிறது. ஸ்போர்ட்ஸ்க்கு என்று தனி இணையதளம், டெக்னாலஜிக்கு என்று தனி இணையதளம், இலக்கியத்துக்கு தனி இணையதளம், சினிமாவுக்கு தனி இணையதளம் என்பதில் கூட பிரச்சினை அவ்வளவாக இருக்காது. காரணம் அந்த மாதிரி இணையதளங்கள் ஓரளவுக்கு தனக்கென தனி வாசகர்களை சம்பாதித்து விடுகின்றன. ஆனால் எல்லாம் கலந்த ஒரு செய்தி இணையதளம் ஒரு நாளைக்கு ஒரு செய்தி மட்டும் எழுதுங்கள் என்று சொல்லிவிட்டு ஒரேயொரு செய்திக்கு அதிகமான பார்வைகளை எதிர்பார்ப்பது என்ன விதமான மனநிலை என்று தெரியவில்லை. எப்படி வாசகர்களைப் பெறும் என்பதும் புரியவில்லை.
தமிழ் உலக சிறுசிறு செய்தி இணையதளங்களைப் பொறுத்தவரை அவர்கள் டைம்ஸ் ஆப் இந்தியா, என்டிடிவி, பிபிசி, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கன் க்ரானிக்கல் போன்ற ஆங்கில செய்தி இணையதளங்களில் இருந்தும், தமிழில் பெரிய பத்திரிக்கையாக இருக்கும் தின இந்து, தினமணி, தினத்தந்தி, விகடன், புதிய தலைமுறை, பாலிமர், நியூஸ்7, நியூஸ்18 போன்ற நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை தான் அப்படியே வேறு வடிவில் திரித்து மானே தேனே சேர்த்து வெளியிடுகின்றன. அந்தப் பெரிய செய்தி நிறுவனங்கள் உடனுக்குடனே ஒளிபரப்பும் அந்த செய்திகளை இவர்கள் மணிக்கணிக்கில் உட்கார்ந்து கட்டுரையாக எழுத வேண்டும். அதிலும் அந்த மாதிரி இணையதளங்கள் சரியான நேரத்தில் அந்தக் கட்டுரையை பப்ளிஸ் செய்யவும் மாட்டார்கள். அந்தச் செய்தி பற்றிய சூடான விவாதம் எல்லாம் முடிந்து ஓய்ந்த பிறகு செத்துப் போன நியூஸ் அந்த இணையதளத்தில் வெளியாகும்.
அதிலும் இவ்வளவு வார்த்தைகளுக்குள் இந்தக் கட்டுரை இருக்க வேண்டும் என்ற வரைமுறைகள் வேறு. அவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்குள் ஒரே செய்தி பலமுறை பல தளங்களில் வலம் வந்த பிறகு அதே செய்தியை copy paste இல்லாமல் plagiarism பிழைகள் இல்லாமல் ஒரு கட்டுரையை தரமானதாக படைக்க எப்படியும் அரைநாளாவது ஆகிவிடும். அப்படி அரை நாட்களுக்கும் மேல் மாங்கு மாங்கென உக்காந்து டைப் பண்ணி அனுப்பினால் அது தளத்தில் வெளியானதும் செத்த பொணம் போல் யாராலும் சீண்டப்படாமல் கிடக்கும். கடைசியில் எழுதியவரும் இணையதளம் நடத்துபவரும் மட்டுமே அதை லைக் செய்வார்கள். நியூஸ் ஹண்ட் போன்ற ஆப் உடன் இணைத்துக் கொண்டு சில இணையதளங்கள் ஓரளவுக்கு பார்வைகளை பெற்று விடுகின்றன. ஆனால் தனித்து இயங்க வேண்டும் ஆனால் எல்லோரும் போட்ட செய்தியையே போட வேண்டும் என்று நினைக்கும் இணையதளங்கள் தடுமாறி விடுகின்றன. ஒரு சில இணையதளங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை எடுத்து தங்கள் பக்கங்களில் அப்லோட் செய்து லைக்குகளை பெற்று விடுகின்றன.
ஒவ்வொரு கட்டுரையும் எவ்வளவு பார்வைகள் பெறுகிறது என்பதை கட்டுரை எழுதியவருக்கு தெரியாதபடி இருக்கும் இணையதளங்களில் இருக்கும் செய்தி ரைட்டர்கள் பாவம். என்ன இது இவ்வளவு படிச்சு பாத்து பாத்து எழுதறோம் ஆனா பார்வைகள் பெறாமலே இருக்கு என்று எழுதியவர் வருந்த நீங்க எழுதறது நல்லா போக மாட்டிங்குது இன்னும் ஈர்ப்பா தலைப்பு வைங்க, நீங்க உள்ள எழுதிருக்கறதவிட தலைப்பு தான் முக்கியம் என்று அறிவுறுத்துவார்கள் இணையதம் நடத்துபவர்கள்.
இங்கு தலைப்புகள் தான் பிரச்சினையே! பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்கேற்ப தலைப்பு வடிவமைக்கனும். அந்த மாதிரி தலைப்புகளும் கவனத்தை ஈர்க்கும்படி வைத்தால் அந்தச் செய்தியை படித்தவர்கள் நீங்க பழைய செய்திக்கு புதிய “தலைப்பு” வச்சே பொழப்பு நடத்துறிங்கடா என்று திட்டி தீர்த்துவிட்டு போவார்கள்.
பெரிய பெரிய ஊடகங்களை தாண்டி பெரிய பெரிய பத்திரிக்கையாளர்களின் எழுத்தை தாண்டி, சிறுசிறு இணையதளங்கள் மக்கள் கவனத்தைப் பெற விதவிதமாக யோசிக்க ஆரம்பிக்கின்றன. நடிகர், நடிகைகள் பற்றிய குடும்ப விவகாரங்களை பற்றி எழுதலாமா? கிசுகிசு, வதந்திகள் தான் அதிக பார்வைகள் பெறுகின்றன என்று அந்த மாதிரியான செய்திகள் எழுத போனால் எழுதுபவருக்கு நாராசமாக இருக்கிறது. எல்லோரும் போகும் வழியில் போக வேண்டாம் பத்தோடு பதினொன்னு ஆகிவிடுவோம்.
சரி, பிரபலங்களை பற்றி அவதூறு பேசி பணம் சம்பாதிக்கும் இணையதளமாக இருக்காமல் நல்ல நல்ல மனிதர்களை தேடிப் பிடித்து அவர்களின் படைப்புகள் பற்றி எழுதினால் அப்போதும் அவை சம்பந்தப்பட்ட படைப்பாளிகளை தவிர மற்றவர்கள் யாராலும் பெரிதும் கவனிக்கப்படுவதில்லை. சரி இந்த மாதிரியான சின்னசின்ன freelance writerகள் எழுதுவது தான் பெரிய அளவில் கவனிக்கப்படுவதில்லை என்று சமூக அவலம் குறித்து பெரிய மனிதர்கள் எழுதியவற்றை கருப்பொருளாக வைத்து அந்த மனிதர்களுக்கான உரிய கிரிடிட் கொடுத்து ஒரு கட்டுரை அமைத்தால், சில இணையதளங்கள் முக்கியமான மனிதர்களை பற்றிய முக்கியமான கட்டுரைகளை பிற செய்தி இணையதளத்திலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொண்டு “இது தினமணியில் இருந்து எடுக்கப்பட்ட கட்டுரை – நன்றி “தினமணி”” என்று போடுவது போல செய்தால் அது “அறிவுத்திருட்டு” என்ற பொருளில் வந்து விடுகிறது. இது ஏதோ சீட்டிங் வெப்சைட் போல என்ற கெட்ட பெயர் எடுத்து இதற்குமுன் எழுதிய அத்தனை நல்ல கட்டுரைகளையும் கலங்கப்படுத்தி விடுகிறது.
இந்த மாதிரியான freelance writerகள் இணையதளங்களை தேடி தேடி அலைந்து ஓய்ந்து விடுகிறார்கள். Trell, Roposa, UC news போன்ற தளங்கள்/ ஆப்கள் எல்லாம் இவர்களை “இங்க வாங்க… நாங்க இருக்கோம்” என்று தன் அருகே அழைத்து மாங்கு மாங்கென எழுத வைத்து கடைசியில் சொற்ப பணம் கொடுத்து ஏமாற்றி விடுகின்றன.
சம்பளம் குறித்து இந்த மாதிரியான இணையதள ஓனர்களிடம் மெயில் அனுப்பினால் மெசஞ்சரில் தகவல் தெரிவித்தால் அந்தச் செய்தியை பார்த்த பிறகும் அவர்களிடமிருந்து சரியான ரிப்ளையும் வராது. பதில் சொல்வதற்கு நான்கு நாட்கள் ஐந்து நாட்கள் இழுத்தடிப்பார்கள். சில நேரங்களில் அது பத்து நாட்களாக கூட நீடிக்கும். சம்பளம் கொடுப்பதற்கு மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்படும். சில சமயம் சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற ஒன்றை சுத்தமாக மறந்து போயி அது மூன்று மாதங்கள் வரை நீடிக்கும். இதற்கு அவர்களை குற்றம் சொல்லி எந்தப் பிரயோஜனமும் இல்லை. காரணம் காசு அவர்களுக்கு கொடுப்பது கூகுள் ஆட்சென்ஸ். ஒவ்வொரு கண்டன்டும் நூற்றுக்கும் அதிகமான பார்வைகளை பெறுகிறது? முழுமையாக படிக்கப்படுகிறதா? கன்டன்ட் ஒரிஜினலாக இருக்கிறதா? அடல்ட் கன்டன்டாக இல்லாமல் இருக்கிறதா? என்று அலசி ஆராய்ந்த பிறகே பணம் கொடுக்கிறது. அதுவும் கூகுள் ஆட்சென்ஸ் மாதமாதம் சரியாக சம்பளம் கொடுப்பதில்லை. இணையதளத்தின் வீச்சைப் பொறுத்து அமைகிறது. உண்மையிலயே அரசியல், விளையாட்டு, சினிமா, ஜோதிடம், சமையல், பயணம் என்று ஒரு கலவை செய்தி இணையதளம் நடத்துவது அதுவும் குறைந்த ஆட்களை குறைந்த சம்பளத்திற்கு வைத்துக்கொண்டு குறைந்த கட்டுரைகள் எழுத வைத்து பணம் சம்பாதிப்பது என்பது தலையை பிய்த்துக் கொள்ளும் காரியம். இந்த மாதிரி இணையதளங்கள் கூட பத்திரிக்கை துறை குறித்த சரியான புரிதல் இல்லாமல், மக்களுக்கு என்ன மாதிரியான செய்திகளை கொண்டு போய் சேர்ப்பது பற்றிய புரிதல் இல்லாமல் தொடங்கப்பட்டு சரியான ஒத்துழைப்பும் நேரமும் அமையாததால் இம்மாதிரியான இணைதளங்கள் தோல்வி அடைகின்றன என்று சொல்லலாம்.
ஆனால் பல ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் பணியாற்றி விட்டு, புதிதாக தொடங்கப்படும் இணையதளம் மூலம் தங்கள் பணியைத் தொடர நினைக்கும் பத்திரிகையாளர்கள் அதைவிட மிகுந்த மன உளைச்சலையும் வறுமையையும் அனுபவிக்கிறார்கள். இவர்கள் எழுதும் செய்திகள் கட்டுரைகள் ஒவ்வொன்றும் தரமானதாக இருக்கும். ஆனால் அவர்களின் அந்த முதிர்ச்சியான வார்த்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் எளிய மக்களுக்கு சரியாக போய்ச் சென்றடைவதில்லை.
விடிய விடிய தகவல்கள் சேகரித்து பல இடங்களுக்கு பயணம் செய்து நிறைய புத்தகங்களைப் படித்து அவர்கள் எழுதிய கட்டுரைகள் பார்வைகள் அதிகம் பெறாமல் போகிறது. அதன் மூலம் பணம் அதிகம் கிடைக்க மாட்டேங்குது என்ற குறை ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம், அவர்கள் எழுதும் கட்டுரைகள் செய்திகள் எல்லாம் அரசை விமர்சிக்கும் படியும் மக்களை அரசுக்கு எதிராக தூண்டும் படியும் அரசு அதிகாரிகளை அவமானப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது என்ற விமர்சனங்கள் மட்டும் அதிக அளவில் எழும். ஆனால் அந்த கட்டுரைகள் மக்களிடம் சரியாகப் போய்ச் சேராது.
இந்த நிலையில் அந்த செய்தி ஆசிரியர்கள் கட்டுரை ஆசிரியர்கள் மீது ஏதாவது ஒரு அரசு அதிகாரியோ? அரசு ஊழியரோ? அல்லது ஏதாவது ஒரு அரசியல்வாதியோ? வழக்கு பதிவு செய்துவிட, வழக்கு பதிவு செய்தவர்களின் பக்கம் துணை நிற்கும் போலீஸ்காரர்கள், என்ன காரணம் எதற்காக அழைத்துச் செல்கிறோம் என்று சொல்லாமல் அந்த இணையதள பத்திரிக்கை ஆசிரியர்கள் கட்டுரை ஆசிரியர்களை தரதரவென இழுத்துச் சென்று அவமானப்படுத்துகிறார்கள். பத்திரிகைத்துறை அனுபவசாலிகள் இந்த மாதிரியான வழக்குகளை நிறைய சந்தித்திருக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு அது பெரிய பிரச்சினையாக அமைவதில்லை. அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் மற்ற பத்திரிகையாளர்களும் ஒன்றுகூடி திரண்டு வந்து போராட்டத்தில் இறங்குகின்றனர். அந்த மாதிரியான அனுபவசாலி பத்திரிக்கையாளர்கள் நடத்தும் இணைய தளங்களை எந்த அறிவிப்புமின்றி அரசு அல்லது அரசியல்வாதிகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் அந்த இணையதளத்தை முடக்கம் செய்து விடுகிறார்கள். பத்திரிக்கையாளர்களோ மறுபடியும் தனியாகச் செலவு செய்து அந்த இணையதளத்தை மீட்டு கொண்டுவருவதற்குள் அவர்கள் படாதபாடு படுகிறார்கள். ஆனால் பத்திரிகை துறையில் அனுபவம் இல்லாமல் அதுகுறித்த எந்த புரிதலும் இல்லாமல் செய்தி இணையதளம் நடத்துபவர்கள் நிலைமை தான் புரியாத புதிராக இருக்கும்.
Be the first to comment on "செய்தி இணையதளம் நடத்துவது எவ்வளவு சிரமமானது? – இணையதள வேதனை!"