பேஸ்புக் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மீம்ஸ் தான். அதை தொடர்ந்து நட்புக்களை பெருக்கிக் கொள்ளுதல் என்ற விஷயம். இருந்தாலும் நமக்கு உண்மையில் பேஸ்புக்கை சரியாக பயன்படுத்த தெரியவில்லை என்றே கூற வேண்டும்.
எந்த செய்தி உண்மை, எது தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள், நம்மை சுற்றி நடக்கும் அரசியல் என்ன?, நம் தலை எப்படி வியாபாரமாக்கப்படுகிறது போன்ற பல விஷயங்களை நாம் தெரிந்துகொள்ளாமலே இருக்கிறோம். சில சமயங்களில் ஃபேஸ்புக் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வரும் பொய்யான தகவல்களை வதந்திகளை நாம் உண்மை என நம்பிக் கொண்டு பல இடங்களில் அந்த செய்திகளை வைத்து வாதிட்டு மொக்கை வாங்குகிறோம். குறிப்பாக உடன் தொழில் செய்யும் பணியாளர்கள் அல்லது நம்மை விட மேலானவர்கள் இவர்களிடம் நாம் அந்த சமூக வலைதள செய்திகளை வைத்து வாதிடும் போது நம்முடைய தொழிலும் நம்முடைய மானமும் அறிவும் கூட பாதிக்கப்படுகிறது, சோதிக்கப்படுகிறது. அப்படி சமூக வலைதள செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு வாதிடும் அந்த அப்பாவி மக்களை சுற்றியிருக்கும் அறிவுஜீவிகள் இவன் என்னடா இந்த காலத்துல இந்த மாதிரி நியூஸ் எல்லாம் போய் நம்பி கேட்டுகிட்டு இருக்கான் என்று பங்கமாய் கலாய்த்து அனுப்புவார்கள். அப்படிப்பட்டவர்கள் பேஸ்புக்கை வேறுவிதமாக, குறிப்பாக அவர்கள் பேஸ்புக்கில் இருக்கும் நல்ல விஷயங்களை தேடி கண்டுபிடித்து பயன்படுத்தலாம். பேஸ்புக்கை சரியாக பயன்படுத்துவது என்றால், முகநூல் கணக்கை லாக் செய்துவிட்டு பயன்படுத்துவது அல்ல… தெரிந்த மனிதர்கள் மட்டும் நட்பு வட்டத்திற்குள் வைத்திருப்பது அல்ல… தங்களின் தொழில் சார்ந்த, மனதுக்கு நெருக்கமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் நண்பர்களை, நண்பர்கள் இணைந்திருக்கும் அந்த குழுக்களை பயன்படுத்துவதை வைத்து தான் நாம் பேஸ்புக்கை எப்படி பயன்படுத்துகிறோம் என்று கூறமுடியும்… அப்படி பேஸ்புக்கில் இருக்கும் சில நல்ல விஷயங்கள், நல்ல குழுக்கள் பற்றி இங்கு பார்ப்போம்.
1.வாசகசாலை
தமிழ் பேஸ்புக் உலகின் மிக முக்கியமான குரூப் இது. இலக்கிய ஆர்வம் கொண்ட உலக தமிழர்கள் பலரும் இந்தக் குரூப்பில் உள்ளனர். புத்தக வாசிப்பை மேம்படுத்துவதுதான் இந்த குரூப்பின் மிக முக்கியமான நோக்கம். வாசகசாலை என்ற இணையதளத்தின் மூலம் தொடர்ந்து கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதப்பட்டு வருகின்றன. அதே போல படைப்பாளிகளின் படைப்புகள் குறித்து வாரம் ஒருமுறை வாசகர் கூட்டம் நடைபெறுகிறது. ஒரு எழுத்தாளரின் சிறுகதையை நாவலை கவிதையை பற்றி பேஸ்புக் லைவ் உரையாடல்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வாசகசாலை நிறைய இளம் எழுத்தாளர்களின் முதல் புத்தகங்களை பதிப்பித்து அவர்களை ஊக்கப்படுத்தி உள்ளது. அதேபோல இந்த வாசகசாலை குழு புத்தக விற்பனை குழுவாகவும் அவ்வப்போது செயல்பட்டு வருகிறது. என்னிடம் போதிய வருமானம் இல்லை, ஆனால் புத்தகங்கள் அதாவது சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்ற படைப்புகள் படிப்பதற்கு எனக்கு ஆர்வமாக இருக்கிறது. ஆனால் அவை எந்த இணையதளத்தில் தரமானதாக இருக்கும்? பயனுள்ளதாக இருக்கும்? புதுமையானதாக இருக்கும்? என்று தெரியாதவர்கள் கண்டிப்பாக இந்த முகநூல் பக்கத்தைப் பின்பற்றலாம். இப்படி இந்த வாசகசாலை இணையதளத்தில் உள்ள கட்டுரை, கவிதை, சிறுகதைகள் இதில் ஏதாவது ஒன்றை தினமும் நீங்கள் சில மணி நேரங்கள்… ஏன், சில நிமிடங்கள் படித்தாலே போதும் நீங்கள் உங்களுக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடைவீர்கள். அப்படி தொடர்ந்து நீங்கள் இந்த இணைய தளத்தை பயன்படுத்தக்கூடிய ஒருவராக, வாசிக்கக் கூடிய ஒருவராக இருப்பீர்கள் என்றால் நீங்கள் ஒரு சில மாதங்களில் படைப்பு ஆர்வம் மிகுந்து போய் நீங்களும் கவிதைகள் கட்டுரைகள் சிறுகதைகள் போன்றவை எழுத முயல்வீர்கள். மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது, தொடர் மன உளைச்சல்கள்களால் யோசிக்கும் திறன் குறைந்து கொண்டே போகிறது, கண்முன் தெரியாமல் காட்டுத்தனமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன், கெட்ட பழக்கங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது என்பவர்கள் தயவுசெய்து ஒரு அரை மணி நேரம் இந்த இணைய தளத்தை பயன்படுத்துங்கள். ஏதோ ஒரு புதிய தகவல் உங்கள் மூளைக்குள் இறங்கும்போது மற்ற கெட்ட விஷயங்கள் எல்லாம் சிதறி ஓடி போய் விடுகின்றன. அதனால் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த நீங்கள் பயன்படுத்த வேண்டிய முதல் இணையதளம் என்றால் அது வாசகசாலை இணையதளம் என்று சொல்லலாம்.
2.திரைக்களம்
வாசகசாலை குரூப்பை போலவே திரைக்களம் குரூப்பும் தமிழ் பேஸ்புக் உலகின் மிக முக்கியமான குரூப் இது. சினிமா துறையில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இந்தக் குரூப்பில் உள்ளனர். இந்திய படங்கள் அந்நிய தேச படங்கள் என்று உலகின் அத்தனை மொழி படங்களை பற்றிய விமர்சனங்களையும் இந்தக் குரூப்பில் படிக்க முடியும். யார் வேண்டுமானாலும் இந்தக் குரூப்பில் நாகரிமான வார்த்தைகளால் எழுதலாம். குறிப்பாக எழுத்தாளர் எம்கே மணி, சிபி செந்தில் குமார், ஏவி சந்தோஷ், வெங்கடேஷ் போன்றோர் இந்தக் குழுவின் மிக முக்கியமான உறுப்பினராக இருக்கிறார்கள். திரைப்படங்கள் குறித்து விவாதங்களும், சந்தேகங்களும், வாய்ப்பு கேட்டு வந்தவரை ஏமாற்றிய கதை திருட்டு படைப்பாளிகளின் கதைகள் போன்ற சம்பவங்களை இந்த குழுவில் அவ்வப்போது வாசிக்கலாம். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தக் குழுவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு… நீங்கள் ஒரு தகவலை அல்லது வரலாற்று சம்பவத்தை, ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள எந்த மாதிரியான படங்களில் அந்த தகவல்கள் கிடைக்கும் என்ற ஒரு கேள்வியை இந்த குரூப்பில் கேட்டால் உங்களுக்கு அடுத்த சில நிமிடங்களுக்குள் கடகடவென பதில்கள் வந்து கிடைத்துவிடும். ஆக்கபூர்வமான மனிதர்களுக்கு இந்த குரூப்பில் நல்ல வரவேற்பு உள்ளது.
3.வாசிப்பை நேசிப்போம்
அதே போல “வாசிப்பை நேசிப்போம்” என்ற குழுவை நாம் கவனிக்க வேண்டும். இந்தக் குழுவில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், யூடியூபர்கள், பிளாக்கர்கள், சினிமா விமர்சகர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள் என்று பலதரப்பட்டவர்கள். இவர்களின் பதிவால் ஒரு நாளைக்கு ஒரு புதிய செய்தியாவது (சினிமாவை பற்றியோ, புத்தகத்தை பற்றியோ, எழுத்தாளரை பற்றியோ, அரசியல்வாதியை பற்றியோ) நீங்கள் தெரிந்துகொண்டிருப்பீர்கள்.
வாசகசாலை போலவே வாசிப்பை நேசிப்போம் குரூப்பும் மிக முக்கியமான குரூப். பல தரப்பட்ட புத்தகங்களின் விமர்சனங்கள், புத்தகங்கள் பற்றிய தகவல்கள் இந்தக் குரூப்பில் காணப் பெறுகின்றன. யார் வேண்டுமானாலும் இந்தக் குரூப்பில் நாகரிமான வார்த்தைகளால் புத்தகங்கள் பற்றி எழுதலாம். அவ்வப்போது இந்தப் பக்கத்தில் வாசிப்பு மாரத்தான் போட்டிகள் நடைபெறும். கிட்டத்தட்ட இந்தப் பக்கத்தை பேஸ்புக் நூலகம் என்றே சொல்லலாம். இந்தப் பக்கத்தில் சென்று நமக்குத் தேவையான புத்தகம் பற்றி எதேனும் விசாரிக்க வேண்டுமென்றால் இந்தக் குழுவில் கேட்டால் போதும் அடுத்த சில நிமடங்களில் நமக்கான பதில் கிடைக்கும். மேலும் இந்தக் குழுவில் கிண்டிலில் ஆஃபர் விடும் புத்தகங்களின் கிண்டில் சுட்டிகளை தினமும் சுட்டிக் காட்டுகிறார்கள். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தக் குழுவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஐந்து பேராவது இந்த குழுவில் ஏதாவது ஒரு புத்தகம் பற்றி விமர்சனம் எழுதுகிறார்கள், புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். புத்தகங்கள் பற்றி நம்ம ஊர் நூலகங்களில் கிடைக்காத சில தகவல்கள் கூட இந்த வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுவில் கிடைக்கிறது. வாசகசாலை இணையதளத்தை போலவே இந்த முகநூல் குழுவிலும் தினமும் ஒரு அரை மணி நேரம் நீங்கள் உங்கள் நேரத்தை செலவிட்டால் உண்மையிலேயே உங்கள் வாழ்க்கை சிறிதளவேனும் மேம்பட்டு இருக்கும்.
4.கிண்டில் தமிழ் புத்தகங்கள்
டெக்னாலஜி வளர்ச்சியால் இன்று வாசிப்பு என்பது செல்போன் திரைக்கு வந்துவிட்டது. தமிழ் உலகில் கிண்டில் ஓரளவுக்கு பிரபலமாகி உள்ளது. அதை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் கிண்டில் தமிழ் புத்தகங்கள் என்ற குரூப் செயல்படுகிறது. இந்தக் குரூப்பில் கிண்டிலில் கிடைக்கும் புத்தகங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கிண்டிலில் இலவசமாக கிடைக்கும் சில புத்தகங்கள் பற்றிய தகவல்கள் இந்த குழுவில் காணப்படுகீன்றன. சின்ன சின்ன எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை இந்தக் குழுவில் தான் புரோமோட் செய்கிறார்கள். நீங்களும் ஒருவேளை கிண்டில் எழுத்தாளர் ஆக வேண்டும் என்றால் இந்தக் குழுவை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
5.You turn:
“யூட்டர்ன்” என்பது முகநூல் குழு அல்ல, இது முகநூல் பக்கம். சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கும், அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் செய்திகளில் எது உண்மையான செய்திகள் இது போலியான செய்திகள் என்று ஆராய்ந்து உண்மை நிலையை சொல்வதற்குத் தான் இந்த இணையதள பக்கம். உங்களுக்கு சமூக வலைதளங்களில் வரும் சில உணர்ச்சிகரமான ஆவேசமான பதிவுகளை செய்திகளை எல்லாம் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் வாட்ஸ் அப்பில் தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். அப்போது நமக்கும் அவர்களுடைய உணர்ச்சி நிலைகள் தான் தொற்றிக் கொள்ளும். அந்த மாதிரியான தருணத்தில் நம் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள உண்மை என்ன என்று தெரிந்துகொள்ள யுடர்ன் என்கிற இந்த முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளை அல்லது யுடர்ன் என்கிற அந்த இணையதளத்திற்கு சென்று அன்றைய செய்திகளை அன்றைய கட்டுரைகளை வாசித்தால் போதும் எது உண்மை எது பொய் என்று தெரிந்து விடும். முகநூலை மிகச்சரியாக பயன்படுத்தத் தெரிந்தவர்கள், இந்த குழுக்களில் கண்டிப்பாக பங்கேற்பாளர்கள் ஆக பயனாளர்கள் ஆக இருக்கிறார்கள். நான் இந்த மாதிரி அறிவை மேம்படுத்துவதற்காக மனநிலையை சரி செய்து கொள்வதற்காக பேஸ்புக்கை பயன்படுத்துவதில்லை. நான் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே இந்த பேஸ்புக்கை பயன்படுத்துகிறேன் என்பவர்கள் கண்ட கண்ட மீம் பக்கங்களை பின்பற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் கிட்டத்தட்ட எல்லா மீம் பக்கங்களுமே ஏதோ ஒரு அரசியல் கட்சியின் ஏதோ ஒரு ஜாதி சங்கத்தின் கொள்கைகளை பின்பற்ற கூடிய மீம் பக்கங்களாக தான் இருக்கிறது. அவற்றை பின்பற்றினால் நீங்கள் எந்த அளவுக்கு, உங்கள் வாழ்க்கையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்பது யாராலும் கணிக்க முடியாது ஒன்று. மேலும் மேலும் குப்பை ஆகிக் கொண்டு தான் போவீர்கள். அதனால் மேலே குறிப்பிட்ட இந்த முகநூல் குழுக்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
என்ற குறளை நாம் பள்ளிக்காலத்தில் படித்திருப்போம். அதுபோல நம் வளர்ச்சியும் வீழ்ச்சியும் நாம் பின்பற்றும் நண்பர்களையும் நம்மைச் சுற்றியுள்ள நண்பர்களையும் பொறுத்து தான் அமையும்.
Be the first to comment on "பேஸ்புக்கை எப்படி நல்ல முறையில் பயன்படுத்துவது? இவர்களை பாருங்கள்!"