நல்லா இருந்த ஊரும் நாலு போலீசும் படத்தில் வருவதைப் போல ஒரு வியக்கத்தக்க கிராமம் தான் ஓடந்துறை. இந்தக் கிராமத்தில் அப்படி என்ன தான் நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.
கோவை மாவட்டம் கோத்தகிரி மலையடிவாரத்தில் பவானி ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது
ஓடந்துறை கிராமம். இந்தக் கிராமம் தான் ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகள்
உட்பட மொத்தம் 43 நாட்டு பிரதிநிதிகளை தன்னை நோக்கி ஈர்த்திருக்கிறது.
1996 முதல் 2006 வரை இந்தக் கிராமத்து பஞ்சாயத்து பொதுப்பஞ்சாயத்தாக பத்து ஆண்டுகள்
சண்முகம் என்பவரின் தலைமையில் இருந்துள்ளது. அதன் பிறகு அவரது மனைவி லிங்கம்மாள்
அந்தப் பதவியை வகித்து வருகிறார்.
யாரும் கடன் வாங்குவதில்லை
இவருடைய இந்தக் கிராமத்தில் யாரும் வெளியே வட்டிக்கு கடன் வாங்குவதில்லை. ஒரு ரூபாய்
வட்டி என்ற வீதத்தில் பஞ்சாயத்தே கடன் வழங்கி முறையாக வசூலித்து நிர்வாகம் செய்து வருகிறது.
கொத்தடிமைகள் கிடையாது
பொதுவாக பெரும்பாலான இடங்களில் பழங்குடியினர் காலங்காலமாக தனியார் தோட்டங்களில் கொத்தடிமைகள் போல வாழ்ந்து வருகிறார்கள். நிரந்தர நில வசதி இல்லாத இவர்களுக்கு இவர்களின் தோட்ட முதலாளிகளிடம் வாதாடி நிலத்தைப் பெற்று அவர்களுக்கு பஞ்சாயத்து சார்பில் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்.
தனியார் முதலாளிகளிடம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தரிசு நிலம் இருந்தால் அதனை பஞ்சாயத்து கையகப்படுத்தலாம். இதனை அறிந்த லிங்கம்மாள் நிலத்தை கையகப்படுத்தி பழங்குடியினர் மக்களுக்கு 250 வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஒரே இடத்தில் தமிழக அரசின் பசுமை வீடுகள் 101 ஐ கட்டிக்கொடுத்து
தமிழகத்திலயே சிறந்த பஞ்சாயத்தாக விளங்கிக்கொண்டிருக்கிறது.
நூறு சதவீதம் கல்வி
இந்தக் கிராமத்தில் நூறு சதவீதம் மாணவர்களும் கல்வி அறிவு பெற்றுள்ளார்கள். இடைநின்ற
மாணவர் என்று ஒருவரும் இந்தக் கிராமத்தில் இல்லை.
மின்சார சேமிப்பு
சோலார் பேனல் பொருத்திய வீடுகள், சோலார் தெருவிளக்குகள், எல்.இ.டி விளக்குகள் என்று
மின்சாரத்தை மிச்சப்படுத்தும் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. தெருவெங்கும் சுத்தம்.
எப்போதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று சிறந்து விளங்கும் இந்த கிராமம் மத்திய மாநில
உலக விருதுகளை பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த கிராமத்திற்கு ஆய்விற்கு வந்த
ஜெர்மன், ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் இந்த கிராமத்தின் திட்டங்களை தங்களுடைய நாடுகளில்
செயல்படுத்த தொடங்கியுள்ளனர். உலகிற்கே முன்னோடியாக விளங்குகிறது நம்ம ஓடந்துறை
கிராமம்.
Be the first to comment on "இப்படியும் ஒரு கிராமம்! – ஓடந்துறை கிராமம் பற்றி தெரிந்துகொள்வோம்!"