- கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் 13-7-1953 ல் பிறந்தார். தந்தை இராமசாமி தேவர், தாயார் அங்கம்மாள். வடுகப்பட்டியில் உயர்நிலைப் பள்ளிக்கல்வி பயின்றார். இவரது முதற்கவிதை பிறந்தது பத்தாவது வயதில்.
- 14 வயதில் வெண்பா எழுதும் புலமை பெற்றார். பள்ளிகளுக்கான பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் பரிசுகளை வென்றார். பெரியார், அண்ணா, கலைஞர், ஆதித்தனார், பாரதிதாசன், கண்ணதாசன் போன்ற சமுதாய இலக்கிய மேதைகளால் ஈர்க்கப்பட்டார்.
- 1970 ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டி அரசு ஏடான ” தமிழரசு ” நடத்திய பண்டித நேரு பிறந்த நாளில் அறிவிக்கப்பட்ட கவிதை போட்டி போன்றவற்றில் பங்கேற்று எழுபதுக்கும் மேற்பட்ட முதற்பரிசுகளைப் படத்துறைக்கு வரும் முன்பே பெற்றார்.
- கல்லூரிக் கவிஞர், கல்லூரி நாவலர் என்னும் தகுதிகள் பலவற்றைப் பெற்றார். பி. ஏ. இரண்டாம் ஆண்டு மாணவராக இருந்தபோதே இவரது முதல் படைப்பான ” வைகறை மேகங்கள் ” வெளிவந்தது. இவருக்கு வளமான எதிர்காலம் உண்டு என்று கவியரசு கண்ணதாசன் அந்த நூலின் அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
- மாணவராக இருக்கும் போதே இவரது முதல் தொகுதியான ” வைகறை மேகங்கள் ” ஒரு மகளிர் கல்லூரிக்குப் பாடமாக இருக்கும் பெருமை பெற்றது. அன்று முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி தலைமையில் மாணவப் பருவத்திலேயே கவிதை பாடும் பெருமை பெற்றார். தமிழ் இலக்கியத்தில் எம். ஏ. பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
- 1980 ல் பாரதிராஜாவின் ” நிழல்கள் ” படத்தின் மூலமாகத் திரை உலகில் நுழைந்தார். 1982 ல் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தமிழக அரசின் விருதை அன்றைய முதல்வர் எம். ஜி. ஆரிடம் பெற்றார்.
- 1986 ல் ” முதல் மரியாதை ” படப் பாடல்களுக்கு இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை இந்தியக் குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றார். தொடர்ந்து 1992 ல் ரோஜா படப்பாடல்களுக்காக இரண்டாம் முறையும் 1994 ல் கருத்தம்மா படப் பாடல்களுக்காக மூன்றாம் முறையும் இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளை குடியரசு தலைவரிடமிருந்து பெற்றார்.
- 1994 ல் இரண்டாம் முறையும் 1995 ல் மூன்றாம் முறையும் சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதுகளை முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதியிடாம் இருந்து பெற்றார்.
- இதுவரை 30க்கும் மேலான நூல்கள் எழுதியிருக்கிறார். பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். அதில் கவிராஜன் கதை, இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, திருத்தி எழுதிய தீர்ப்புகள், ரத்த தானம், சிகரங்களை நோக்கி, வில்லோடு வா நிலவே, இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள், இதுவரை நான் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.
- பாரதியாரின் வரலாற்றை முதன்முதலில் புதுக்கவிதையில் இவர் எழுதிய “கவிராஜன் கதை” பாரதி இலக்கிய பரிசு ரூ 10,000 பெற்றது. இவரது படைப்புகளை ஆய்வு செய்து இதுவரை 4 பேர் முனைவர் பட்டமும் 15 பேர் எம்ஃபில் பட்டமும் பெற்றிருக்கிறார்கள்.
- 1989 ஆம் ஆண்டு சிறந்த கலைத்துறை வித்தகருக்கான தமிழக அரசின் பாவேந்தர் விருதையும் 1995 ம் ஆண்டு சிறந்த கவிஞருக்கான தமிழக அரசின் விருதையும் முதல் அமைச்சரிடமிருந்து இருமுறை பெற்றிருக்கிறார். திரைப்பட பாடல்கள் 5000க்கும் மேல் எழுதி இருக்கிறார். ஐந்து படங்களுக்கு கதை வசனம் எழுதி இருக்கிறார்.
- 1986 ல் ” கவியரசு ” என்னும் பட்டம் இவருக்குத் ” தமிழ் வளர்ச்சி ” மன்றத்தாரால் வழங்கப் பட்டது. கவியரசு பட்டத்தை 1998 ல் தாமே துறந்தார். இவரது ” பெய்யெனப் பெய்யும் மழை ” நூலை வெளியிட்ட அந்நாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ” கவிப்பேரரசு ” என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கினார்.
- இவரது ” தண்ணீர் தேசம் ” ஆறு மாத ஆராய்ச்சிக்குப் பிறகு பிறந்த விஞ்ஞானக் காவியமாகும். கடல் பற்றிய ஆய்வு நூல்கள் படித்து கடலுக்குள் இருந்து ஒரு காதல் காவியத்தை விஞ்ஞானக் காவியமாகப் படைத்திருக்கிறார்.
- கவிதைக்கும் உரைநடைக்கும் இடைப்பட்ட ஒரு நடையை கவிஞர் வைரமுத்து இதில் கையாண்டிருக்கிறார். இவரது படைப்புகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மற்றும் சில தென்னிந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. நவீன தமிழ் உரைநடையின் மீதும் கவிதையின் மீதும் இவரது படைப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
- சமூக இலக்கியப் பேரவை என்ற அமைப்பை நிறுவி தமிழ்க் கவிஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஊக்கம் கொடுத்து வருகிறார். உலகமெங்கும் தமிழ்ப் பரப்பும் பணியிலும் பயணத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். சில வெளிநாடுகள் இவரை அழைத்துப் பாராட்டியதும் உண்டு. கள்ளிக் காட்டு இதிகாசம் நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது கிடைத்தது. இவருடைய மூன்றாம் உலகப் போர் நாவல் மலேசிய அறவாரியம் ஒன்றால் சிறந்த தமிழ் நூலாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது. சமீபத்தில் அவருடைய தமிழாற்றுப் படை புத்தகம் வெளியாகி உள்ளது.
Be the first to comment on "கவிப்பேரரசு வைரமுத்து பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்!"