ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான, பலருடைய மூன்றரை வருட உழைப்பை சுமந்த 2.O படம் தற்போது ரிலீசாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்தப் படம் திருப்தி படுத்தியுள்ளது என்றே கூறலாம். பல வருடங்களுக்குப் பிறகு பழைய ரஜினியைப் பார்க்கிறோம் என்று சிலர் சிலாகிகின்றனர். சிலாகிப்பதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. இதற்குமுன் ரஜினியை வைத்து கபாலி, காலா என்ற இரண்டு வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் பா. ரஞ்சித்தை நீயெல்லாம் டைரக்டரா என்று மட்டம் தட்டும் வகையில் சில மீம்கள் வெளியாகி இருப்பதை ஊக்குவிக்கிறார்கள் என்பது தான் வருத்ததிற்குரிய விஷியம்.
குறிப்பாக கூவம் நதியில் விவேக் குளித்து எழுந்து வரும் காட்சியும் அதை ஒரு பெண்மணி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் காட்சியையும் வைத்து ரஞ்சித்தையும் ஷங்கரையும் ஒப்பீடு செய்திருக்கிறார்கள். ரஞ்சித் ரஜினியை சாக்கடையாக மாறி இருக்கும் கூவம் நதிக்குள் தள்ளிவிட்டாராம் ! ஷங்கர் தண்ணீர் ஊற்றி ரஜினியை சுத்தம் செய்தாராம் ! என்ன ஒரு மட்டமான சிந்தனை இது!
கடந்த சில மாதங்களாக இயக்குனர் அட்லி, இயக்குனர் சிறுத்தை சிவா, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் போன்ற பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்கள் மீம் கிரியேட்டர்களால் அதிகம் கலாய்க்கப்படுகின்றனர். இப்போது 2.O வெற்றியை முன்னிட்டு அந்த வரிசையில் பா. ரஞ்சித்தையும் இணைத்து முடிந்த வரை மட்டம் தட்டுவோம், இவனையெல்லாம் இப்படி அடிச்சு உட்கார வச்சா தான் அடங்குவானுங்க என்ற ரீதியில் சில மீம் கிரியேட்டர்கள் இயங்கி வருகிறார்கள்.
ரஞ்சித், தலைவர் ரஜினியை சாக்கடைக்குள் தள்ளிவிட்டார் என்று அவர்கள் சொல்வதை சரி என்றே வைத்துக் கொள்வோம். சாக்கடை என்று அவர்கள் அந்த மீமில் குறிப்பிட்டிருப்பது கூவம் நதியை. கூவம் நதி ஆரம்பத்தில் எப்படி இருந்தது? அதன் வரலாறு என்ன ? கூவம் நதியை ஒட்டி குடும்பம் நடத்தி வரும் மக்கள் எல்லாம் யார்? அவர்களை அந்த நிலைமைக்குத் தள்ளியது யார்? அவர்களுடைய நிலம் என்ன ஆனது ? போன்ற பல கேள்விகள் இப்போது நமக்குள் எழுகிறது. இந்தக் கேள்விகளை நமக்குள்ளே எழ வைத்ததில் பா. ரஞ்சித்திற்கு மிக முக்கிய பங்குண்டு.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை நிலமற்று வாழும் தமிழர்களைப் பற்றி நாம் சிந்தித்தது கூட கிடையாது! மலேசிய தமிழர்கள் பற்றி நாம் யோசித்தது கூட கிடையாது! காலாவும் கபாலியும் வரவில்லை என்றால் இந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் இப்படியொரு வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறார்கள் என்ற கசப்பான உண்மை நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிகம் பேசியிருக்கவும் வாய்ப்பில்லை. ஒரு சூப்பர் ஸ்டார் அந்த விஷியங்களை பற்றி பேசிய பிறகு தான் அட அப்படியா… என்ற ரீதியில் அவர்களைப் பற்றி அவர்களின் பிரச்சினையைப் பற்றி எதோ ஓரளவுக்காவது பேசத் தொடங்கியிருக்கிறோம்.
எந்த இயக்குனரும் செய்யாத ஒன்று பா. ரஞ்சித் செய்திருக்கிறார் என்பதால் உங்கள் வயிறு எரிந்தது என்றால் ” நீங்க அவ்வளவு தான்… ” டாட். ரஞ்சித்தாவது ரஜினியை கூவம் நதி பக்கம் அழைத்துச் சென்று அதன் பிரச்சினையை அந்தப் பகுதியில் வாழ்பவர்களின் பிரச்சினையை எடுத்துச் சொன்னாரே என்பதில் பெருமை கொள்வோம்! மகிழ்ச்சி!
Be the first to comment on "ரஜினியை சாக்கடைக்குள் தள்ளிவிட்ட ரஞ்சித்!"